6.12.10

தூரிகையின் மௌனம்-II


தூரிகையின் மௌனம்- I ன்தொடர்ச்சி-

கிட்டத்தட்ட நீங்கள் விலகி தனித்துப் போய்விட்டீர்களா?
-இல்லை. அப்படி நான் தனித்துப் போய்விடவில்லை. நானே தனிமையாகிவிட்டேன்.

இப்படி எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்?
-தில்லிக்கு நான் வந்தது முதல்.

எப்போது அது?
-1972ல்.

அப்போது முதலே இப்படித்தானா?
-ஆம்.1972ல் இருந்து. ஆனால் ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக கண்காட்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் போய்க்கொண்டிருந்தேன். என் உடல்நிலையை அது மோசமாகப் பாதிக்கத் தொடங்கியது. அது முதல் எங்கேயும் போவதைக் கட்டுப்படுத்தி கொள்ள முடிவெடுத்தேன். நிசப்தம் என்னைக் கவர்ந்துகொண்டது அப்போதுதான்.

ஆனால் மௌனம் என்பது சிருஷ்டியின் இறுதிப்படி இல்லையே? மௌனத்திற்கும் அதற்கேயுரிய கலாப்பூர்வமான மொழி உண்டுதானே?
-ஆமாம்.ஆனால் பரிபூர்ண மௌனத்தின் போதுதானே தவிர ஒருவன் தன் வாயை மூடிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் மௌனத்தால் அல்ல. ஒரு படைப்பில் அது வெளிப்படும் நேரத்தில் மௌனத்துக்கு சிருஷ்டிப்பூர்வமான ஒரு பரிமாணம் இருக்க வேண்டும். ஒரு கலாப்பூர்வமான ப்ரகடனத்தை அந்த மௌனம்தான் உருவாக்குகிறது. அங்கே நீங்கள் பேசத்தேவையில்லை. ஒரு சிறு வார்த்தையைக்கூட நீங்கள் உதிர்க்கத் தேவையிருக்காது.அந்த மௌனத்தை உங்கள் சிருஷ்ட்டியில் உருவாக்கிவிடமுடியும். என் நிசப்தம் வேறுவகையானது.

உங்கள் சிருஷ்ட்டியின் மூலம் உங்களின் நிசப்த மொழியை உங்களால் பேச முடியாதா? படைப்பிலிருந்து முழுமையாய் விலகியிருப்பதை விட அது நல்ல வழியில்லையா?
-மௌனம் என்பது ஒன்றுதான். வடிவம்தான் வேறு வேறு.

ஒரு ஓவியனால் நிசப்தத்தைக் கலாபூர்வமாக மொழிபெயர்ப்பது சாத்தியமா?
-வலிந்து அது சாத்தியமில்லை. ஒரு கான்வாஸில் வலிந்து ப்ரக்ஞையுடன் வெளிப்படுத்த சாத்தியமேயில்லை. ஆனால் ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது உங்களால் நிசப்தத்தை உணர முடியும். தங்கள் மௌனத்தை அற்புதமான தொடர்பை உண்டுபண்ணும் கவிதைகளில் சாதித்த தாமஸ் மெர்ட்டன் போன்ற வாய் திறவாத துறவிகளும் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பேசுவதில்லை. ஒரு போதும் பேசாதவர்கள். நான் பேசுவேன். நான் பரிபூர்ணமாகத் தனித்துப் போனவனில்லை. நான் மக்களைச் சந்திப்பதுண்டு. பேசுவதுண்டு. நான் ஒரு போதும் வெளியே போவதில்லையே தவிர என்னை பார்க்க வருபவர்களிடம் பேசுபவன். ஒருவேளை நிறையப் பேசாமலிருக்கலாம். அது பேசாமலிருப்பதைப் போன்றதல்ல. மக்களிடம் நான் பேசுகிறேன். அரசியல் சினிமா போன்றவற்றை ஒருபோதும் விவாதிப்பதில்லை. ஆனாலும் பேசுவேன். அவ்வப்போது என்னைப் பார்க்க வருபவர்களிடம் பேசுவேன். நான் பேசுவதற்கு அதிகமாக எதுவுமில்லை என்பதும் எனக்குத் தெரியும். என்னை நம்புங்கள்-நிஜமாகவே நான் சொல்வதற்கு அதிகமாக எதுவுமில்லை. அதனாலேயே நிசப்தத்தில் அமிழ்வதை நான் அனுபவிக்கிறேன். இன்னொருவருடன் நீண்ட நேரத்திற்கு மௌனமாக ஒரு வார்த்தை கூட உதிர்க்கும் அவசியத்தை உணராது இருக்க என்னால் முடியும். ஒருவருக்கொருவர் மற்றவரின் மௌனத்தை அனுபவித்தபடி இருக்க முடியும்.

நீங்கள் கடைசியாக ஒரு முழு ஓவியத்தை வரைந்தது எப்போது?
- எல்லா கான்வாஸ்களும் எல்லை நிர்ணயத்துக்குட்பட்டவை. ஒவ்வொரு பிரச்சனையும் வெவ்வேறானவை. ஒவ்வொரு ஓவியமும் வெவ்வேறான ஓவியங்கள்.

ஆனால் நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது?
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என நினைக்கிறேன். கூடவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

அதன் பின்னே எதுவும் ஓவியங்கள்?
- கொஞ்சம் செய்தேன். ஆனால் எதுவும் இங்கில்லை. எல்லாம் விலைபோய் விட்டன.இங்கே எதுவுமில்லை. நீங்களே பாருங்கள் என் அறையின் வெறுமையை.

இந்த ஓவியங்கள் சொல்வது அல்லது தேடுவது எதை?
- இயக்கத்தை-லயம் நிறைந்த இயக்கத்தை.

இயக்கத்தை வெறுக்கும் நீங்கள் உங்கள் ஓவியங்களில் ஏன் இயக்கத்தை நாடுகிறீர்கள்? அல்லது நீங்கள் நேரடியாக நிறைவேற்ற விரும்பாத உங்கள் தேவைகளை உங்கள் ஓவியங்கள் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
-ஆமாம். வாழ்க்கையை இப்படித்தான் சமாளிக்கமுடியுமென நான் நினைக்கிறேன்.

(தொடரும்)

4 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அதனாலேயே நிசப்தத்தில் அமிழ்வதை நான் அனுபவிக்கிறேன். இன்னொருவருடன் நீண்ட நேரத்திற்கு மௌனமாக ஒரு வார்த்தை கூட உதிர்க்கும் அவசியத்தை உணராது இருக்க என்னால் முடியும். ஒருவருக்கொருவர் மற்றவரின் மௌனத்தை அனுபவித்தபடி இருக்க முடியும்.

ரமணரை நினைவூட்டும் வரிகள்.

சைக்கிள் சொன்னது…

//இயக்கத்தை வெறுக்கும் நீங்கள் உங்கள் ஓவியங்களில் ஏன் இயக்கத்தை நாடுகிறீர்கள்? அல்லது நீங்கள் நேரடியாக நிறைவேற்ற விரும்பாத உங்கள் தேவைகளை உங்கள் ஓவியங்கள் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
-ஆமாம். வாழ்க்கையை இப்படித்தான் சமாளிக்கமுடியுமென நான் நினைக்கிறேன்.//
அவதாரம் படத்தில் நாசர் பாடும் ''அரிதாரம் பூசிக் கொள்ள ஆசை..." என்றொரு பாட்டு வரும். அதில் கூத்து வேண்டாம், அது நிலையற்றது என்ற வாதத்திற்கு பதிலாக அது வேணும் ஏன்னா ''காசுக்கா பேருக்கா ஆசை நான் பட்டது, வேற ஏதும் சொல்லத் தெரியலியே" என வரும் தவிப்பு நிரம்பிய இளையராஜாவின் குரலில். அந்த 'வேற ஏதும்' என்பதற்கான பதிலை கண்டது போல இருந்தது மேல குறிப்பிட்ட வரிகளில். நல்ல பதிவுக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

ஆழ்ந்த ரசனைக்கு உதாரணமாய் இருக்கிறது ரிஷபன்.

இப்படி இருக்க முடிந்தவர்களின் பெயர் காலத்தோடு கலந்து சரித்திரத்தில் நிலைத்துவிடுகிறது.

நன்றி ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

ஹா!என்ன அருமையான இடத்தை நீங்க சொல்லிட்டீங்க தோழி.நானும் அவதாரம் போனவாரம் பார்த்துக்கொண்டிருந்த போது உணர்ந்த அதே உணர்வு நீங்களும் அதைச் சொல்வது என்னை ஆனந்தப்படுத்துகிறது.

ரசனைக்கு என் பணிதல்கள் தோழி நன்றிகளுடன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...