24.2.11

துளி


I
என் தோல்விக்கான
வியூகங்களும்
உன் வெற்றிக்கான
தந்திரங்களும்
புதையுண்டு
கிடக்கின்றன
ஒரே மண்ணில்.
II
புள்ளிகளால்
கட்டுண்டு கிடந்த
கோலத்தை
மெல்ல அவிழ்க்கின்றன
பெயர் தெரியாத
எறும்புகள்.
III
அதிகாலை ரயில்
நின்ற நடுவழியில்
கண்ணீர் மறைத்தது
மலம் கழிக்கும்
பெண்களின்
துயரத்தை.

31 கருத்துகள்:

RVS சொன்னது…

வாழ்த்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை..
அள்ளிக்கொண்டு போனது உங்கள் கவிதைகள் ஜி! ;-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//புள்ளிகளால் கட்டுண்டு கிடந்த கோலத்தை மெல்ல அவிழ்க்கின்றன பெயர் தெரியாத எறும்புகள்.//

இது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

கடைசி துளியில் கொஞ்சம் Bad Smell இருப்பினும் மூக்கைச் சுற்றி மல்லிகைச்சரத்தை முகர்ந்தவாறு ஒருவழியாக படித்து முடித்தேன்.

சிறு ”துளி”ப் பெருவெள்ளமாக தினமும் உங்கள் கவிதைகள். பாராட்டுக்கள்.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

எனக்கு இரண்டாவது கவிதை ரொம்ப பிடித்தது... அது அரிசிமாவுக்கோலமாய் இருந்திருக்கவேண்டும்...

இது ஒரு காட்சியை விரிக்கிறது... பெயர் தெரியாத என்ற வார்த்தைகள் தேவையில்லை தானே சுந்தர்ஜி!

தோல்விக்கான வியூகங்களுக், வெற்றிக்கான தந்திரங்களும் புதையுண்டு கிடக்கின்றன ஒரே மண்ணில்... இது கொஞ்சம் பயஸ்டா இருக்கு...

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் வார்த்தைகள் என்னைத் தைத்தன கோபு சார்.

அந்தப் பெண்களின் துயரை விடவா-வறுமையில் குளிக்கும் ஒவ்வொரு நாட்களையும் விடவா- மலம் நாற்றமுடையது?நான் கண்ணீரில் கரைந்த வரிகள் அவை.

அது சரி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில்தான் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒரே மண்ணில் புதைந்திருக்கும்
புதையல்...மீட்டெடுத்த வரிகள்.

G.M Balasubramaniam சொன்னது…

விவூகங்களும் தந்திரங்களும் இல்லாமலேயே வெற்றி தோல்விகள் நடந்தேற வாய்ப்புகள் இருக்கலாம் இல்லையா சுந்தர்ஜி.?ஆந்திராவுக்குப் பயணம் செய்கையில் க்ருஷ்ணா நதியோரம் பெண்களை நீங்கள் குறிப்பிடும் கோலத்தில் வாயில் சுருட்டுடன் மிக மகிழ்வாக காட்சியளிக்கக் கண்டிருக்கிறேன். நீங்கள் கூறுவது சரியே. எல்லாம் அவரவர் கண்னோட்டம்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள். உங்கள் கவிதைகளை நான் மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டேன்….

ரிஷபன் சொன்னது…

அழகியலும் துன்பியலும் கை கோர்த்த கவிதைகள்

Ramani சொன்னது…

சராசரித்தனம் கடந்த ஒரு சிந்தனை
ஒரு கவித்துவமான பார்வை
சகிக்கவொண்ணா ஒரு பெரும் அவலம்
மண் ஒன்றுதான் ஆயினும் பார்வை
மாறுபடுகையில்தான் எத்தனை மாறுதல்
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

துளி, குமிழி, காளான் என்று கவிதைகள் இருப்பையும் நிலையாமையையும் ஒரு சேர தோலுரித்து செல்கின்றன.
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் வெகுதூரம் சென்று விடுகிறீர்கள். மூச்சிறைக்க ஒடி வருகிறேன் உங்கள் புகைவண்டியின் பின்னாலேயே.

rajasundararajan சொன்னது…

Blogger ராகவன் said...

/அது அரிசிமாவுக்கோலமாய் இருந்திருக்கவேண்டும்../

வழிமொழிகிறேன் (சுண்ணாம்புப் பொடியில் கோலம் இடுகிற காலம் இது ஆகையால்).

//பெயர் தெரியாத// என்பது நம் பார்வையில் முக்கியத்துவம் அற்ற - அதாவது நாம் அற்பமாகக் கருதுகிற - என்னும் பொருள்தர வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

'புள்ளி' என்னும் சொல்லுக்கு 'முக்கியத்துவம் உள்ள' எனப் பொருள் வழங்குதலும் இங்கே ஒப்பிடத் தோன்றுகிறது.

'கோலம்' நமக்கொரு கலை வெளிப்பாடு; எறும்புகளுக்கு உணவு மட்டுமே. என் நூலகத்தில் புத்தகப் பூச்சிகளை என்ன செய்வேன்? 'புள்ளிகளால் கட்டுண்டு' என்பதில் கலைவெளிப்பாட்டைத் தாண்டிய முக்கியத்துவம் ஏதும் உள்ளதோ?

வினோ சொன்னது…

அண்ணா, வாழ்க்கை தளங்கள் மாறும் போது கவிதை உள்வாங்கலும் அதன் வீரியமும் மாறித்தான் போகின்றன... உங்கள் பார்வைக்கும் என் பார்வைக்கும் கவிதைகள் வேறு பொருள் தருகின்றன...

நிலாமகள் சொன்னது…

ஏற்கனவே 'சுந்தர்ஜி'யில் படித்து சிலாகித்திருப்பினும் எத்தனை முறையானாலும் முகத்திலறையும் அருவியின் வீச்சாய் வீரியமும் மகிழ்வான பிரம்மிப்புமாக தங்கள் எழுத்துக்கள்...!

காமராஜ் சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி..
வணக்கம். இந்த அதிகாலையின்
வசீகரத்தை மூன்று கவிதைகளும் அதிகரிக்ககின்றன.ஒவ்வொரு கவிதையும் அதனதன் இடங்களில் நின்று ஆட்டம் போடுகின்றன.நலம் விழைக.

vasan சொன்னது…

மண்ணின் ம‌கிமையை, முத‌லாய்,
அல்ங்கார‌த்தை அமிர்த‌மாக்குவ‌தாய், இடையாய்,
எதையும் பொறுத்து ஏற்ப‌தாக‌ முற்றாய்,
எண்ணி ம‌ண்ணை போற்றி வ‌ண‌ங்கிகிறேன்.
'எந்தையும் தாயும் ம‌கிழ்ந்து குழாவிய‌' ம‌ண்.

(புள்ளிக‌ளை க‌ட்டிக்கிட‌ந்த‌ கோல‌ம்!!)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஆர்விஎஸ்.

வேலை ஜாஸ்தியோ?

சுந்தர்ஜி சொன்னது…

முதலில் வாசித்தமைக்கு நன்றி நாக்ஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

அருமை.அருமை.ராஜராஜேஸ்வரி.

சுந்தர்ஜி சொன்னது…

அரிசி மாவுக் கோலம்தான்.அந்தக் கோலம் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும் ராகவன்.

பெரும் புள்ளியால் கட்டுண்டு கிடந்த கோலத்தைப் பெயரற்ற-சாதாரண எறும்பு அவிழ்த்து விடுவிக்கிறது என்று பொருள்படுத்தினேன்.

ஒரே மண்.ஒருவனுக்கு வெற்றி.ஒருவனுக்கு தோல்வி.இரண்டும் ஒரே மண்ணில்தான்.பார்க்கிறவனுக்கு வித்தியாசம்.அவ்வளவுதான்.

நான் சொல்வது சரிதானே?

நன்றி ராகவன்.

சுந்தர்ஜி சொன்னது…

வியூகங்களும் தந்திரங்களுமற்ற வெற்றி தோல்வியை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்வதுமில்லை பாலு சார்.

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

அப்பாடா!ரிஷபன் ஹைதராபாத்திலிருந்து திரும்பியாச்சு.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்க மாட்டேன் வெங்கட்.

நன்றிகளும்.

சுந்தர்ஜி சொன்னது…

மண்ணின் பரிமாணங்களை பார்வைகளால் வரைப்பித்த கோணம் அழகு.

நன்றி ரமணி அண்ணா.(இனி சார் இல்லை)

சுந்தர்ஜி சொன்னது…

நீங்க சிரமப் படக்கூடாதுன்னுதான் குட்டி குட்டியா எழுதினேன் சோப்புக் குமிழி போல.

ஆனாலும் நீங்க படிக்கலேன்னா மனசு தேட ஆரம்பிச்சுடுது என்னடா சிவாவைக் காணோமேன்னு.

சுந்தர்ஜி சொன்னது…

//'கோலம்' நமக்கொரு கலை வெளிப்பாடு; எறும்புகளுக்கு உணவு மட்டுமே.//

எறும்புகளுக்கு உணவு. நமக்கு கலைவெளிப்பாடு.இப்படித்தான் நான் பார்க்கிறேன் ராஜு அண்ணா.

//என் நூலகத்தில் புத்தகப் பூச்சிகளை என்ன செய்வேன்?//

வள்ளலாரின் குரலாய் ஒலிக்கிறது இந்த வரிகள்.

//'புள்ளிகளால் கட்டுண்டு' என்பதில் கலைவெளிப்பாட்டைத் தாண்டிய முக்கியத்துவம் ஏதும் உள்ளதோ?//

இல்லை ராஜு அண்ணா.

சுந்தர்ஜி சொன்னது…

அப்போதுதான் கவிதை அதன் சிருஷ்டியை உணர்கிறது வினோ.

இல்லையென்றால் ஒரே பொருளை மட்டுமே சொல்லும் ஒரு ஸ்டேட்மெண்ட் அல்லவா ஆகிவிடும்?

சுந்தர்ஜி சொன்னது…

நிறையப் பேர் இதையெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பின்றி இருந்ததால் மறுபடியும்.

எத்தனை முறையானாலும் வஞ்சனையின்றிப் பாராட்டும் உங்கள் அன்புக்கும் ரசனைக்கும் என் பணிவு நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

அதனதன் ஆட்டத்தை அழகாய் ரசித்த காமு அண்ணாவுக்கு ஒரு ஓ போடுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

மண்ணின் மாண்புணர்ந்து மற்றுமொரு கவி படைத்த வாசன்ஜிக்கு மற்றுமொரு ஓ.

பத்மா சொன்னது…

எனக்கு ரெண்டு ரொம்ப பிடிச்சுருக்கு ஜி இந்த கவிதைகள்ல
ஒன்னு அந்த படம் ...how sweet
சேராத வட்டம் கூட அந்த எறும்பை கம்பீரமாக ..ஆக்கி .
மற்றொன்று மெதுவாய் அழித்தல் ...அது எத்தனை உண்மை..சிறுவயதில் மதியம் கட்டாயமாக ஓய்வெடுக்க சொல்லும் பொது தூக்கம் பிடிக்காமல் இந்த எறும்புகளை தொடர்ந்ததுண்டு ..அவற்றிடம் பேசியவைகள் எத்தனை எத்தனை !நினைத்தால் சிரிப்பு வரும் ..ஒரு மரண ஊர்வலத்திற்கு மௌனம் கூட சாதிச்சு இருக்கேன் ...
நினைவுகளை கிளர்ப்பிய வரிகள் ..
மூன்றாவது கவிதை குறிக்கும் அவலத்திற்கு வருந்தி தலை குனிகிறேன் ...

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கும் இந்த அனுபவமுண்டு.

தூக்கத்துக்கு முன்னால் சுவருக்கு நெருங்கிப் படுத்தபடி அதில் தெரியும் வெவ்வேறு கறைகளுக்கு வெவ்வேறு பெயர் கொடுத்து ஒரு கதையை நிகழ்த்தி முடித்த பின்தான் தூக்கம்-சிறு வயதில்.

பகிர்வு மகிழ்ச்சி தந்தது பத்மா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...