17.2.11

இடைவெளி


வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை.

80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஜன்னலின் பக்கத்தில் ஒரு சாய்வு நாற்காலியில். முகமெல்லாம் சுருக்கம். அவரது மனைவி வீட்டின் உள்புறத்தில் கையில் ஒரு புத்தகத்துடன். கனத்த நிசப்தம் கவிழ்ந்த முன்காலை.

நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகன் லேப்-டாப்பில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்கிறான்.

திடீரென ஒரு காகம் முதியவரின் பக்கத்து ஜன்னலில் வந்து உட்கார்ந்தது.
“என்னது இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விலக்கிப் பார்த்து ஒரு அஸ்வாரஸ்யத்துடன் மகன் சொன்னான் “அது காக்காப்பா”.

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன சொன்னே இதோட பேரு?” “இப்பத்தானே சொன்னேம்ப்பா. அது காக்கா” -மகன்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன சொன்னே?”. சற்று எரிச்சலான குரலில் மகன் சொன்னான்- “அது ஒரு கா-க்-கா; புரிஞ்சுதா? கா-க்-கா”.

அவரால் புரிந்து கொள்ள முடியாதது போல சிறு நெற்றிச் சுருக்கம். கண்களை இடுக்கி உன்னிப்பாய் அவனையே பார்த்தார். இப்போது உள்ளேயிருந்த அவர் மனைவியின் கவனமும் புத்தகத்திலிருந்து மகனிடம் திரும்பியது.

சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார், “அது என்னன்னுதானே கேட்டேன்?”. மகனோ பொறுமையை இழந்து அவரைப் பார்த்துக் கத்தினான், “ஒரே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்க? எத்தனை தடவைதான் பதில் சொல்றது காக்கான்னு? வயசாச்சு.இதுகூடவா உன்னால புரிஞ்சுக்க முடியாது?”

முதுமையின் விளிம்பிலிருந்த அந்தத் தந்தையின் முகத்தில் எந்தவிதச் சலனமும் வெளிப்படவில்லை. உள்ளே இருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் புராதனமான நாட்குறிப்பு ஒன்றிருந்தது.

அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. அவருடைய மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் குறிப்புகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த அவன் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

“என் செல்லக் குட்டிக்கு இன்றைக்கு மூணு வயசு. அவனோட ஒவ்வொரு கேள்வியும் ஆனந்தம்தான்.

இன்றைக்கு என் பக்கம் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. உடனே அவனுக்குக் கேள்வி கேட்கும் ஆர்வம். எத்தனை அழகு அவன் கேள்வி? “அது என்னதுப்பா அது என்னதுப்பான்னு”

‘அது ஒரு புறாடா செல்லக்குட்டி’ என்று நான் சொல்ல விடாமல் எத்தனை தடவை கேட்டிருப்பானோ? எண்ணமுடியாமல் பதில் சொன்னபடியே போனது பொழுது. என் மடியில் படுத்தபடியே தூங்கும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்விதான் என்னை எத்தனை குதூகலப் படுத்தியது? இந்தக் குழந்தையின் வடிவில் ஆனந்தத்தின் மொழியைப் புரிய வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னேன்.”

லேப்டாப்பிலிருந்த கையை எடுத்து அப்பாவின் கைகளைக் கோர்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டான் மகன். கனக்கும் மனதுடன் கலங்கும் கண்களுடன் அந்த விரல்களில் வாஞ்சையுடன் முத்தமிட்டான்.

விதையிலிருந்து
விழுதுகளாய்
விரிந்து செல்கிறது
வாழ்க்கை.
விழுதுகளைப்
பார்க்கும் கண்கள்
புதைந்திருக்கும்
வேர்களைப்
பார்ப்பதில்லை.

51 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

கவிதை பிரமாதம்!!!

G.M Balasubramaniam சொன்னது…

கதையும் கவிதையும் பிரமாதம் சுந்தர்ஜி.மனசில் எங்கோ தைக்கிறது.

Harani சொன்னது…

மதுரையிலிருந்து இதை எழுதுகிறேன். கண்களைக் கலங்க வைத்துவிட்டது. கதையல்ல உங்களின் உயிரை உருகவைக்கும் நடையும் சொற்களும். மொழி உங்களிடம் சரண் புகுந்திருக்கிறது சுந்தர்ஜி அடைக்கலம்போல. அபாரம். ஆயிரம் முறை ஊருக்கே கேட்க உரக்கச் சொல்லலாம் அபாரம்.

Harani சொன்னது…

காலத்திற்கு நிற்கும் பதிவு சுந்தர்ஜி.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சுந்தர்ஜி! வேர்களைத் தேடத் துடிக்குது மனம்,உங்கள் பதிவைப் பார்த்த பிறகு. ஆற்ஆற்றொழுக்காய் நகர்கிறது உங்கள் தமிழ்..

இப்போது தான் நினைவு பிறழும் முதியவரைப் பற்றி ஓர் கதை எழுதி முடித்தேன். இங்கும் அதன் எதிரொலி. சிவகுமாரன் அடிக்கடி என்னிடம் ஆச்சரியப்படுவது போல்,நாம் இருவரும் கூட ஒன்றாய் நினைக்கிறோம்... நன்றாய் நினைக்கிறோம்!

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

நல்லாயிருந்தது... இந்த பதிவு... எனக்கு எங்கப்பா ஞாபகம் வந்தது... நான் குழந்தையாய் இருக்கும் போது எல்லாம் தெரிந்த மேதையாய் எனக்கு தெரிந்தவர், அவருக்கு வயதான பிறகு ஒன்றுமே தெரியாத குழந்தையாய் தெரிந்தார்...

தந்தைமை...

அன்புடன்
ராகவன்

Matangi Mawley சொன்னது…

Sometimes when people say- "I don't know what to say...", I get really confused. How can they hear out everything and have no view on it? It feels really dumb, actually.
Sometimes- there is something happening and you feel like you are a part of the whole Act- you have felt what the people in the Act have felt. But there is this blur- that which you have felt is yours- but it was theirs' as well. That which they have said are your words. And yours were theirs'. There is blend; some form of 'oneness'. That moment of 'oneness', when asked about- however can you put that in words? A moment of complete understanding- with each shrinking and expanding of the tissues and muscles- heart and soul. Something similar to the verse that goes like-- "Gurosthu mounam vyakyanam sishyastu chinna samchaya..."

Sir, I have no words...

Kalidoss சொன்னது…

மனம் நெகிழ வைத்து விட்டீர்கள்.
நெஞ்சு வலிக்குதுங்க ..

கிருஷ்ணப்ரியா சொன்னது…

என்ன ஒரு அற்புதமான கதை... கண்கள் கலங்கி போனது ஜி. அப்படி ஒரு குழந்தையாக இருந்தவர்கள் தான் நாம் என்பதை "அறிவு" வளர்ந்ததும் மறந்து தான் போகிறோம். எளிமையான, அதே சமயம் கனமான கதை. சிகரம் வைத்த மாதிரி கவிதை... பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை பிரமாதம்... வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சார், இதே கருத்தை ஒரு வீடியோ காட்சி மூலம் திரு. ரிஷபன் அவர்கள் 11.07.2010 அன்று ”அப்பா” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். அவருக்கு யார் மூலமோ மெயிலில் வந்ததாம்.

தங்களுடைய இந்தப் பதிவு போலவே அதுவும் மிகச்சிறப்பாக உள்ளது. காக்கை & புறா விற்கு பதிலாக குருவி Sparrow என்று உள்ளது.

முடிந்தால் அதையும் பார்த்து மகிழவும்.
rishaban57.blogspot.com/2010/07/blog-post_11.html

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...மண்டையில் அடிக்கிற உண்மை.இதுபோல ஆங்கிலத்தில் 3-4 நிமிடக் காணொளி பார்த்த ஞாபகம் !

ஓலை(Sethu) சொன்னது…

Heard this story before. Your poem is apt.
Nice one.

சுந்தர்ஜி சொன்னது…

இது என் தாத்தாவால் எனக்குச் சொல்லப்பட்ட கதையாகத்தான் பார்த்திருக்கிறேன்.

கோபு சார் சுட்டிய ரிஷபனின் இடுகையிலுள்ள வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன்.முடியும் தருணத்து இசை என்னை அழ வைக்கிறது.அற்புதம்.நன்றி ரிஷபன்.

என் சிறிய மகன் ரமணாவை நினைவுறுத்தும் விடாது கேட்கப்படும் கேள்விகள்.

என் அப்பாவை நினைவுறுத்தும் கேட்கப்படாத கேள்விகள்.

rajasundararajan சொன்னது…

பத்துக் கட்டளைகளில் ஒன்றான, "பெற்றோரைக் கனம் பண்ணுவாயாக!" என்னும் கட்டளைக்கான கதை இது.

இதற்கான உங்கள் கவிதை, இன்னும் ஒரு படி மேலே போய், கடந்த காலம் (வேர்கள்), நிகழ்காலம் (கண்கள், மரம்), எதிர்காலம் (விழுதுகள்) என மூறையும் இணைக்கிறது.

//வேர்களைப் பார்ப்பதில்லை// என்னும் குற்றச்சாட்டு உண்மைதான். அது பொருட்பாலுக்குள் இல்லறவியலையும் கொண்டுவந்துவிட்டதால் ஆன கோளாறு.

எனது 'நாடோடித் தடம்' நூலின் ஓர் அத்தியாயம், 'மரபு எனப் படுவது வேரல்ல, விழுது' என்றே வழக்காடுகிறது. அது, பழைமை நமக்குள் விசயமாக (சாராம்சமாக) ஊடுருவி நிற்காமல் கால்விலங்காய்க் கனத்துக் கிடக்கும் inertia-ஆல் வந்து நேர்ந்த தேவை.

('காகித ஓடம்' பத்மாவின் இப்போதையப் பதிவான கவிதை ஒன்றிற்கு இதுவே வேறு கோணத்தில் எனது பின்னூட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.)

சுந்தர்ஜி சொன்னது…

ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த சமஸ்க்ருத மேற்கோளோடு முடிக்கும் மாதங்கிக்கு தமிழில் என் உதவியாய் இது. இதை நான் செய்யலாம்தானே மாதங்கி?

”Chitram vadatharor moole vruddha sishya gurur yuva
Gurosthu mounam vyakyanam sishyastu chinna samchaya!”

”இளம் குருவும் முதிய சீடர்களும் அமர்ந்த அந்த ஆலமரத்தின் அடியில் மௌனம் பொதிந்த எதுவுமே சொல்லப்படாத குருவின் வியாக்யானம் சீடர்களின்
எல்லாச் சந்தேகங்களையும் வேரறுத்தது” என்று தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சொல்லும் வரிகள் இவை.

மொழிபெயர்ப்பு மூலத்துக்கு நெருக்கமாய் இருக்கிறதா என நீங்கள்தான் சொல்லணும் மாதங்கி.

எல் கே சொன்னது…

முதுமை வாழ்வின் இரண்டாம் குழந்தைப் பிராயம் :)

Matangi Mawley சொன்னது…

may be i should keep writing such verses with my comments!
That's the most beautiful translation, ever!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி உங்கள் தொடர்வாசிப்புக்கு நாகசுப்ரமணியன்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் வார்த்தைகள்தான் அடுத்தபடிக்கு என்னை எடுத்துச்செல்கின்றன பாலு சார்.

நன்றிகள் பல.

சுந்தர்ஜி சொன்னது…

இதே போல இன்னும் ஆறேழு கதைகள் இருக்கின்றன ஹரணி.அவர் சொன்ன மொழியை நான் மாற்றி என் பாஷையில் எழுதினேன்.அவ்வளவுதான்.

நன்றி ஹரணி.

சுந்தர்ஜி சொன்னது…

மோகன்ஜி!இந்த டெலிபதி அடிக்கடி நடக்கட்டும்.

என் மனைவிக்கும் எனக்கும்-என் மகனுக்கும் எனக்கும் என நிறைய இப்படி ஆனதுண்டு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற ஒருமிப்பு நிலையன்றி வேறென்ன இது?

சுந்தர்ஜி சொன்னது…

என்ன அழகான வார்த்தை தந்தைமை?

நாம் குழந்தையாய் இருந்த போது உணர்ந்த அப்பாவை அதை விடச் சிறப்பாக ஒரு போதும் உணர்வதில்லை.

நன்றி ராகவன்.

சுந்தர்ஜி சொன்னது…

வார்த்தைகளற்ற மௌனத்தை அளித்ததற்கு வார்த்தைகளால் நன்றி மாதங்கி.

நீங்களே சொன்னது போல் உங்கள் பின்னூட்டத்தில் சம்ஸ்க்ருதமும் இணையட்டும்.மொழிபெயர்த்துப் பார்க்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

மிக்க நன்றி காளிதாஸ் சார்.

மற்ற கதைகளையும் விரைவில் பதிவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நெகிழ்வித்த பாராட்டுக்கு என்ன பதில் சொல்ல க்ருஷ்ணப்ரியா?

தெரியாது விழிக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுரை சரவணன்.நல்லா இருக்கீங்களா?

சுந்தர்ஜி சொன்னது…

உங்களுக்கு இது அரைத்த மாவு போலப் புளித்துவிட்டிருக்கலாம்.

பொறுத்தருளியமைக்கு நன்றி கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

வார்த்தைகளுக்கு நன்றி ஹேமா.

அந்த வீடியோவை இன்றுதான் ரிஷபன் தளம் மூலம் பார்த்தேன்.

நான் எழுதியது ஒன்றுமில்லையென உணர்ந்தேன்.

சுந்தர்ஜி சொன்னது…

கவிதையைப் பார்த்த ரசனைக்கு நன்றி சேது சார்.

சுந்தர்ஜி சொன்னது…

கவிதையை எழுதும்போது அதன் சாரத்தைக் கவிஞன் உணர்ந்து எழுதுவதில்லை.அது ரசிக்கப்படும்போதுதான் வெவ்வேறு தளங்கள் தென்படத்துவங்குகின்றன என்கிற உண்மை மறுபடியும் நிரூபணமாகியிருக்கிறது ராஜசுந்தரராஜன் சார்.

ஒரு இடைவெளிக்குப் பிந்தையதானாலும் உங்கள் வருகையால் என் தளம் மகிழ்ந்தது.

சுந்தர்ஜி சொன்னது…

மொழிபெயர்ப்பைச் சிலாகித்துவிட்டீர்களே மாதங்கி?இனி அவ்வளவுதான் படிப்பவர்கள் பாடு.

RVS சொன்னது…

சுந்தர்ஜி! இதே கதையை ஓரிடத்தில் வீடியோவாய் பார்த்ததாக ஞாபகம்!
இருந்தாலும் உங்களின் உயிரோட்டமான எழுத்தில் கண்களை குளமாக்கியது! நன்றி ;-)
நீங்களும் மோகன்ஜி இருவரும் பாசக் கதைகள் போட்டு பின்னறீங்க! நா என் ஸ்டைலுக்கு போய்டறேன்! இன்னிக்கி முடிஞ்சா ஒரு அனுபவப் பதிவு! ;-)

மொழிபெயர்ப்புக்கு என்ன குறைச்சல்! பிரமாதம் சுந்தர்ஜி! ;-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//சுந்தர்ஜி said...
உங்களுக்கு இது அரைத்த மாவு போலப் புளித்துவிட்டிருக்கலாம். பொறுத்தருளியமைக்கு நன்றி கோபு சார்.//

அடை எங்கள் வீட்டில் மாதம் மும்முறையாவது செய்யப்படும் பலகாரம். எனக்கு மிகவும் பிடித்தமான ஐட்டமும் கூட. வீட்டில் உள்ள பெண்கள் உடல் நலமின்றியோ, வேறு ஏதேனும் காரணமாக சமையல் அறைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தாலோ, நானே விரும்பி அடை மாவு தயார் செய்து மனைவி, மருமகள்கள், வீட்டுக்கு விருந்தினராக வரும் சம்பந்தி மாமிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதும் உண்டு.

புதிதாக அரைத்த அந்த மாவை, ஓரிரு நாட்களுக்குப்பின், சற்றே புளித்தபின், நிறைய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு, சூடாக வார்த்து, நல்ல காரமான, எங்கள் வீட்டில் செய்யப்படும் ஸ்பெஷல் தோசை மிளகாய்ப்பொடி + கசக்காத SUNDROP எண்ணெய் போட்டுக் குழைத்து, அதில் தோய்த்து அந்த எங்கள் வீட்டு ”புளிச்சமா அடை” யை வாயில் போட்டு சுவைத்தால் ஏற்படும் இன்பம் உள்ளதே [அதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து சுவைத்துப் பார்த்தால் தான் தெரியும்] அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது சார். அது ஒரு இன்பம் மட்டும் அல்ல பேரின்பம் என்றால் அது தான்.

திரு ரிஷபன் அவர்கள் அனுப்பி வைத்த வீடியோ படத்தை ஒரு நூறு முறையாவது நான் மிகவும் ரஸித்து பார்த்திருப்பேன். ஒரு நூறு பேர்களுக்காவது நான் அதை அனுப்பியிருப்பேன்.

இருப்பினும் தாங்கள் அதைப்பற்றி எழுதியதும், மீண்டும் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்த “எங்க வீட்டுப் புளிச்சமா அடையை எங்க வீட்டு மிளகாய்ப் பொடி ஆயில் கலவையில் தோய்த்து ருசித்தது போல” மிகவும் சுவையான பேரானந்தம் தான் அடைந்தேன்.

நான் எங்கள் வீட்டில் செய்யும் அடை + தோசை மிளகாய்ப்பொடி PROCESS பற்றி சுவையாக ஒருசிறுகதையாக எழுதி பதிவு இடலாமா என்றும் இப்போது தோன்றுகிறது.

சிவகுமாரன் சொன்னது…

அருமை. கைகூப்பி தொழுகிறேன் வேர்களையும் எழுதிய விரல்களையும்.

அன்னு சொன்னது…

ஏற்கனவே படித்த காணொளியில் பார்த்த கதைதான் எனினும், உங்களின் மொழி நடை அதை இன்னும் புதியதாக்கியுள்ளது.

//கனத்த நிசப்தம் கவிழ்ந்த முன்காலை.//

அழகிய சொற்றொடர். வாழ்த்துக்கள் :)

எல் கே சொன்னது…

ஏற்கனவே யாரோ சொல்லக் கேட்டிருந்தாலும் உங்கள் நடை படிக்கத் தூண்டியது. இன்றைய இளையத் தலைமுறை இப்படிதான் உள்ளதோ ??

அவர்களுக்கு சரியான வழி காட்ட மறந்து விட்டோமோ ???

ramanaa சொன்னது…

இது தலைமுறைனால வர்றதில்ல. ஒரு மனுஷன் பொறக்கும்போது குழந்தையாப் பொறந்து கடைசி காலத்துல மறுபடியும் குழந்தையாயிடறான்.

அவனுக்கு சின்னச் சின்ன விஷயங்கள்ல கவனிப்பும் அக்கறையும் தேவைப்படுது.

மறுபடியும் அவன் ஒரு குழந்தையாகி வாழ்க்கைன்னா என்னன்னு முழுசா கத்துக்கறான்.

இது மூலமா வயசானப்புறம் மறுபடியும் குழந்தையா மாறி கத்துக்கவேண்டிய அவசியமில்லாமப் புரிய வெச்சதுக்கு நன்றி அப்பா.

சிவகுமாரன் சொன்னது…

குட்டி பதினாறு அடி பாயுதுங்கோ

vasan சொன்னது…

க‌'விதை' வேர்க‌ளும், விழுதும்
தாங்கிய‌ க‌ற்ப‌கத் தருவாய்
முக்கால‌மும் தொட்டு ப‌ரவிக்கிட‌க்கிற‌து.
நல்ல‌ கருத்தான, க‌தைகளின் 'மூல‌ம்'
காண முடிவ‌தில்லை.
அவைக‌ளும் ந‌திக‌ளுட‌னும், ரிஷிக‌ளுட‌னும்
சேர்ந்து அலைந்து திரிய‌ட்டும்.

நிலாமகள் சொன்னது…

ரமணாவும் வாசனும் வியப்பிலாழ்த்துகிறார்கள்... புரிதலின் வீரியத்தால்!!

vasan சொன்னது…

சுந்த‌ர‌வ‌ரிக‌ளையும் தாண்டி, பின்னோட்ட‌ங்க‌ளை நோட்ட‌மிட்டு, அத‌னையும் பாராட்டும் த‌ங்க‌ளின் த‌ன்மை விய‌க்க‌ வைக்கிற‌து ச‌கோத‌ரி. கைக‌ள் அள்ளிய‌ நீர் தேடி வ‌ருப‌வ‌ர்க‌ள் தேன் ப‌ருகி, ப‌கிர்ந்தும் செல்லும் பூச்சோலையாய், சுந்த‌ர்ஜியின் வ‌லைம‌னை.

சுந்தர்ஜி சொன்னது…

//முதுமை வாழ்வின் இரண்டாம் குழந்தைப் பிராயம்//

அதுதான் சரியான புரிதல் எல்.கே.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ரசனை என் பாக்யம் ஆர்.வி.எஸ்.

அப்பப்ப என்னோட மொழிபெயர்ப்புக்களையும் எடுத்துவிடறேன் சரியா?

சுந்தர்ஜி சொன்னது…

விட்டா என்னோட ப்ளாக்லயே அடை வார்த்து மிளகாய்ப்பொடி எண்ணெய் குழைத்து எல்லோருக்கும் ஊட்டி விட்டுடுவீங்க போலிருக்கே கோபு சார்.

எது எப்படியோ மிளகாய்ப் பொடியை நல்லெண்ணெய் தவிர வேற யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் நான்.(என்னோட அடையை ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா நீங்க குடுத்த வாக்குமூலத்தை மாத்திக்கவேண்டியிருக்கும்.பாக்கலாம் .முடிஞ்சா ரிஷபன்-ஆர்.ஆர்.ஆர். இவங்களையெல்லாம் ஜட்ஜா உசுப்பேத்திவிட்டு நாம ரெண்டு பேரும் ஒரு கை பாத்திடலாம்.ரெடியா சவாலுக்கு?)

சுந்தர்ஜி சொன்னது…

முதல் கருத்து கரெக்ட் எல்.கே.

ரெண்டாவது கருத்துக்கு ரமணாவோட பின்னூட்டத்த உங்களுக்கான பதிலா ஃபார்வேர்ட் பண்ணிடறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இந்தப் பின்னூட்டத்தை மிக முக்கியமான பார்வையாக நான் பார்க்கிறேன் ரமணா.

நீ போகவிருக்கும் பாதையை என்னால் யூகிக்க முடிகிறது.

நாய்கள் பற்றி உன் ப்ளாக்கில் எழுதியிருந்த பதிவுகளில் அந்த வீச்சை உணர்ந்தேன்.

சுயமான சிந்தனைதான் உண்மையான கல்வி. என் சிந்திக்கும் எல்லைகளை நீ கடக்கத் துவங்கியிருக்கிறாய். அதுதான் பெருமை.

இந்த இடுகையினால் எனக்குக் கிடைத்த ஆனந்தத்தையும் விட மேலானது உன் பின்னூட்டம்.

நீ என் மகன் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.இனி நீ தமிழில் எழுதத் துவங்கலாம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சிவகுமாரன். உங்கள் அன்புக்கும் வாசிப்புக்கும் உரியவனாக என்னை வைத்துக்கொள்வேன்.

பதினாறு மட்டுந்தானா சிவா?அளவுகளை ரமணா மீறுவான் என்று தோன்றுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

அந்தக் கதையையும் தாண்டி என் உரைநடையை ரசித்த உங்கள் ஆழ்பார்வைக்கு நன்றி அன்னு.

உங்களின் கூரான பார்வை என் பாதையைச் செழுமைப்படுத்தும்.

சுந்தர்ஜி சொன்னது…

இந்த இடுகை குறித்த எல்லாத் திசைகளையும் தொட்டுச் செல்கிறது பின்னூட்டப் பிதாமகனாகிய உங்களின் பின்னூட்டம் வாசன்.

பாருங்க நிலாமகள் எத்தனை ஆச்சர்யத்தோட சிலாகிக்கறாங்கன்னு.

வெற்றிவேல் ஷண்முகம் சொன்னது…

super Sir.

Experianced writing and while reading it gives new experiance.
Thank you Sir for sharing.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...