2.2.11

இங்கிவனை யான் பெறவே...

 இரு சிறுவர்களைப் பற்றிய மற்றொரு இடுகை.

புதுச்சேரியில் வித்யாநிகேதன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் பயிலும் சகோதரர்களைப் பற்றிய பெருமைமிக்க பதிவு.

அவர்களின் பெற்றோர் மூன்று குழந்தைகளோடு துவங்கிய ஒரு புதிய பள்ளியில் இந்தச் சகோதரர்களைச் சேர்த்தார்கள்.

இன்று எண்ணூறுக்கும் மேல் மாணவர்களோடு விரிவடைந்திருக்கும் அந்தப் பள்ளியில் இன்று ஒன்பதாம் வகுப்பில் கற்கும் ரமணா மற்றும் பத்தாம் வகுப்பில் கற்கும் அரவிந் இருவரும் இணைந்து ஃப்ரென்ச் மொழிக்கான இலக்கண நூலைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மாதம் 7ம் தேதி அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஃப்ரென்ச் ஆசிரியரால் இந்நூல் வெளியிடப்பட இருக்கிறது.

நூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலைக் கொண்டுவர அவர்கள் இருவரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தச் சமூகம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்கும் கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் இந்தப் பணிக்கு நேரமொதுக்கி நினைத்ததைச் சாதித்திருக்கிறார்கள் இவர்கள். தவிரவும் இலக்கணம் குறித்து எழுதுவதென்றால் பொதுவாகவே வேப்பங்காயாக நினைக்கும் என் போன்றவர்களுக்கு மத்தியில் ஆழ்ந்த ஆர்வமும் மொழியின் மீதான ஆளுமையும் இருந்தால் மட்டுமே இலக்கணத்தின் அருகே செல்ல முடியும் என்பது என் எண்ணம்.

இவர்கள் இருவரும் அரசியல்-கலை-நவ சினிமா-அறிவியல்-ஓவியம்-இசை-தத்துவம் போன்ற வெவ்வேறு துறைகளிலும் ஆர்வம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.

இத்தனை நாள் எழுதியும் 46ம் வயதில் என் முதல் புத்தக முயற்சிக்கான பிள்ளையார்சுழி போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு 15மற்றும் 13வயதில் இவர்களின் புத்தக வெளியீட்டு ஆர்வம் பெருமையைத் தருவதாயினும் கூச்சமடையவும் வைக்கிறது.

பெருமையும் கூச்சமும் அடைவதற்கு இன்னொரு காரணம் இவர்களின் அப்பாவாக நான் இருப்பதும் கூட. இவர்களின் அம்மாவும் என் மனைவியுமான நித்யாவின் கடும் உழைப்பும் ஆர்வமும் இவர்களின் ஆர்வங்களுக்கு முழுக்காரணமாக இருக்கிறது.

நான் இம்மூவரையும் வணங்கும் போது என் கண்கள் பெருமையால் கசிகின்றன.

பின்குறிப்பு: 

குறித்தபடி பிப்ரவரி 7க்குப் பதிலாக ப்ரபல தமிழ் எழுத்தாளர் என் அபிமானத்துக்குரிய ஸ்ரீ.கி.ராஜநாராயணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்ததால் பிப்ரவரி 19ம் தேதியில் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ.கி.ரா. நூலை வெளியிட்டபோது பள்ளியின் அத்தனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடுவில் என்னுடைய பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் உடனிருந்து தங்களின் வருகையால் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்ததை விட எனக்குப் பெருமையான தருணம் வேறெது அமைந்திட முடியும்?

33 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் மகன்களுக்கு எனது வாழ்த்துகள். இச்சிறிய வயதிலேயே இலக்கணத்தில் ஆர்வம் இருக்கிறது என்பது பெரிய விஷயம்! “இங்கிவனை யான் பெறவே” சரியான தலைப்பு. உங்கள் மகிழ்ச்சியில் இந்த இடுகையின் மூலம் எங்களையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி சுந்தர்ஜி.

G.M Balasubramaniam சொன்னது…

தந்தையின் கடன் அவையத்து முந்தி இருப்பச் செயல். மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். இரு சாராருக்கும் உதாரணங்கள் நீங்கள் GOD BLESS YOU.

பா.ராஜாராம் சொன்னது…

அரவிந்த், ரமணா,

இந்த எங்கள் சுந்தர்ஜியை தலையில் நறுக்கென கொட்டுங்கள். அப்படி கொட்டும் போது, " நீர் இல்லாமலா இவ்வளவும்?" என கேளுங்கள்.

சத்தம் எங்கள் காதுக்கு கேட்க வேணும். கேட்டீர்களா?

அப்புறம், வாழ்த்துகளும் குட்டீஸ்கள்! மற்றும் குட்டீஸ்களின் அம்மாப்பா!

சிவகுமாரன் சொன்னது…

முதல் பத்தி படிக்கும் போதே புரிந்து போனது அவர்கள் உங்கள் வாரிசுகள் என்பது. தவம் செய்தது நீங்களா உங்கள் பிள்ளைகளா தெரியவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் தாய்க்கும் என் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லுங்கள்.

Ramani சொன்னது…

படிக்கவே மிகவும் சந்தோசமாக உள்ளது
இடைவிடாது ஊக்குவித்து வந்த
தாய் தந்தையர்கள் ஆகிய உங்களுக்கும்
தளராது முயன்று வென்ற குழந்தைகள்
இருவருக்கும் பதிவர்கள் அனைவரின் சார்பாகவும்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

அன்பும் வாழ்த்துக்களும்

ramanaa சொன்னது…

கூச்சம் வேண்டாம் அப்பா

காமராஜ் சொன்னது…

அன்பின் சுந்தர்ஜீ.....
இது எவ்வளவு கொடுப்பினை
அப்பாவுக்கு முந்தி பிள்ளைகள்
புத்தகவெளியீடு.

ஆமா,,
பிள்ளையார் சுழி போட்டதைச்சொல்லவே இல்லை.

ரெட்டை வாழ்த்து தோழா.

vasan சொன்னது…

அடுத்த‌வ‌ர்க‌ளை நாம் விஞ்சுவ‌து ஆன‌ந்த‌ம்.
த‌ன் குழ‌ந்தைக‌ள், நம்மை விஞ்சுவ‌து பேரான‌ந்த‌ம்.
குழ‌ந்தைக‌ளுக்கு மேலும் பெருமைக‌ள் சேர‌ பார‌ட்டுக்க‌ள்.
இத்த‌கு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் அதிக‌ம் உங்க‌ளுக்கு கிட்ட‌ வாழ்த்துக்க‌ள்.

Harani சொன்னது…

சுந்தர்ஜி...

எத்துணை பெருமையான செய்தி இது. ஒரு பேராசிரியராக நின்று பெருமைப்படுகிறேன். சாதாரணமாக இலக்கியம் எனும்போதே கசந்துகொள்ளும் இந்த சூழலில் இலக்கண நுர்லை எழுதுவது மிகவும் பாராட்டுக்குரியது. சத்தமாக உரக்கப் பெருமைப்படுங்கள். இதிலென்ன கூச்சம்? தலைப்பையும் படங்களையும் கண்டதுமே கண்டுகொண்டேன் தங்களின் செல்லங்கள் என்று. இனி நீங்கள் எழுதி என்ன செய்யப்போகிறீர்கள் சுந்தர்ஜி. அவர்கள் எழுதட்டும் நாம் மகிழ்ந்துகிடப்போம். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து. வாழ்க வளமுடன் ரமணாவும் அரவிந்தும்.

Aravind சொன்னது…

kan kalanga vachutta appa

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

அரவிந்த் & ரமணா இருவ்ருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

இவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் இருவரும் ’என்ன தவம் செய்து விட்டோம்’ எனக் குழப்பிக் கொள்ளவே வேண்டாம்.

தங்கள் ப்ளாக்கில் தங்களின் படைப்புக்களை தினமும் படித்து மகிழ்ந்து வியந்து போகும் எங்களுக்கு, உங்களை விட மிக நன்றாகவே தெரியும், உங்கள் வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்று..

இது தங்கள் குழந்தைகளின் முதல் சாதனையாக இருக்கும். போகப் போகப் பாருங்கள் !

//அடுத்த‌வ‌ர்க‌ளை நாம் விஞ்சுவ‌து ஆன‌ந்த‌ம். நம் குழ‌ந்தைக‌ள், நம்மை விஞ்சுவ‌து பேரான‌ந்த‌ம். //

திரு. வாசன் மிக அழகாகச் சொல்லி விட்டார், நான் சொல்ல நினைத்ததை..

kashyapan சொன்னது…

பேரன்கள் அரவிந்தன், ரமணன் இருவருக்கும் ஆயிரம் ஆயிரம் ஆசிகள்.மருமகள் நித்யாவிர்க்கும்.என்ன இருந்தாலும் தாமிரவருணி தண்ணிர் அல்லவா!வாழ்த்துக்கள் சுந்தர்ஜி---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சுந்தர்ஜி! உங்கள் செல்வங்களுக்கு என் ஆசிகள். உங்கள் பதிவைப் படித்த போது அவர்களை அணைத்து உச்சி முகரத் தோன்றியது. உங்கள் பூரிப்பில் எமக்கும் பங்குண்டு. அவர்கள் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள்..
என் புதுவை நாட்களும் அங்கு என் பிள்ளைகளுக்கு ஆயிரமாயிரமாய் நான் சொன்ன கதைகளும் மனதில் நிழலாடுகின்றன. புதுவை பொன் விளையும் பூமி.இந்த செடிகளுக்கு நல்ல உரமாய் இடுங்கள்.
சந்தோஷமாய் இருக்கிறது.

santhanakrishnan சொன்னது…

மனது சந்தோஷத்தில்
நிறைகிறது சுந்தர்ஜி.
உங்கள் செல்லங்களுக்கு
என் வாழ்த்துக்களைச்
சொல்லுங்கள்.
கண்ணாடி அணியாதப்
பையன் அச்சு அசலாய்
சின்ன வயசு
சுந்தர்ஜி.
மீண்டும் என் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

பெரியவகள் எல்லோருமே வாழ்த்துகிறார்கள்.நான் மிக மிக சந்தோஷப்படுகிறேன் சுந்தர்ஜி.

இராமசாமி சொன்னது…

கொடுத்து வைத்தவர் சுந்தர்ஜீ நீங்கள்.. உங்கள் மனைவியும், குழந்தைகளும் தான்.. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது படித்து முடிக்கும் பொழுது.. சீக்கிரம் உங்கள் புத்தகத்தயும் கொண்டு வாஙக ஜீ.. படிக்கறதுக்கு ஆவலா இருக்கு... அரவிந்த் ரமணா இருவருக்கும் வாழ்த்துகள் ஜீ...

எல் கே சொன்னது…

குழந்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்க பசங்க உங்களை மிஞ்சறாங்க

RVS சொன்னது…

தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தந்தை நீங்கள்... வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் செல்வங்களுக்கும். ;-)

பத்மா சொன்னது…

wow wow ......
arvind and ramana kaiezhuthu potta book enakku onnu plz ..

my hearty congratulations to arvind and ramana ji ....

nithaya ji ungalumm vaazhthu

நிலாமகள் சொன்னது…

உற்சாகமும் மகிழ்வும் ஒருங்கே வந்தமர்ந்து கொண்டது மனதில்...!! நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்... நிதர்சனம்!! திருமதிக்கு (தீம் பார்க்கில் எடுத்த படம் - தங்கள் செல்லப் பிள்ளையென அடையாளம் காட்டியது) எங்கள் வணக்கமும், நிறைவான வாழ்த்துகளும்! ரமணா, அரவிந்த் இருவரிடமும் தான் பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளப் போகிறேன். (சமீபத்தில் உங்க ஊர் பேராசிரியர் ராஜ்ஜா கிளப்பிய ஆவல்)

Vel Kannan சொன்னது…

என்ன ஜி இது எவ்வளவு பெரிய சாதனை இது.
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ....

Matangi Mawley சொன்னது…

Grammar! my goodness!
appreciating grammar is one thing... appreciating grammar at this age is another!
their 'small steps' now takes them towards their 'giant leap' real soon in their future!
I salute them!

kudos to their parents as well! :)

my best wishes to both of them...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா...புலிக்குப் பிறந்த புலிக் குட்டிகள்!!

அன்னு சொன்னது…

hats off...!!

your boys are really amazing ones. convey our regards and best, heartfelt wishes :)

Rajeswari சொன்னது…

அரவிந்த் & ரமணா இருவ்ருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
எனர்ஜி கொடுத்த சுந்தர்ஜி தம்பதியருக்கு வணக்கங்கள்.

முன்னோடி பெற்றோர்களாக

குழந்தைகளை அவயத்து முந்தியிருக்கச்
செய்த உங்கள் உழைப்பு சாதாரணமான்து
அல்ல.

சுந்தர்ஜி சொன்னது…

இதை எழுதும்போது சுபாவமாகவே உள்ள கூச்சம் என்னைத் தடுத்தது சுய தம்பட்டமாகிவிடக் கூடாது என.

அப்புறம் காஸ்யபன் சாரிடம் பேசியபோது இத நீ சொல்லலன்ன வேற யாருய்யா சொல்ல முடியும்னு கேட்டபின் சரின்னுதான் பட்டுது.

ஒரு மங்கலமான சுபகார்யம் நிறைந்தபின் விதவிதமான வண்ணங்களில் தரையெங்கும் சிதறிக்கிடக்கும் பூக்களையும் பொன்னிறத்தில் மயிர்க்கால்களுக்கிடையே மின்னும் மங்களாட்சதையும் தூவப்பட்ட பின்பு நான் என் குடும்ப சகிதம் உங்கள் எல்லோரையும் நமஸ்கரிக்கிறேன்.

என் செல்வங்கள் செய்த செயலுக்கு மகுடம் சூட்டிய செயல் உங்கள் எல்லோரின் பூரண ஆசிகள்.

அவர்கள் வாழ்க்கையின் சரியான தடத்தில் செல்ல இது உதவும்.

அரவிந்துக்கும் ரமணாவுக்கும் அவர்கள் ப்ளாக்கில் பின் தொடர்பவர்கள் எல்லாம் கிடைத்தபின் புதுவிதக் குஷியும் கும்மாளமும்தான்.

முதல்தடவை வந்த எல்.கே, அன்னு மற்றும் ராஜேஸ்வரிக்கு என் அன்பும் நன்றியும்.

எப்போவும் என் நிழல் போல இருக்கும் வெங்கட்-பாலு சார்-குட்டி மகிழ்ந்த பா.ரா.-சிவா-ரமணி சார்-திருநாவுக்கரசு-கொடுப்பினையை உணர்த்திய காமராஜ்-பின்னூட்டச் சக்ரவர்த்தி வாசன்-என்னை ஓரங்கட்டச் சொன்ன ஹரணி-அன்பால் கோப்பையை நிரப்பும் கோபு சார்-அன்பால் என்னை மகனாய் வரித்த காஸ்யபன் சார்-உச்சி முகர்ந்த மோகன்ஜி-என் இளவயதை அடையாளம் சொன்ன நண்பன் ச.கி.-பெரியோர்கள் பின்னால் ஒதுங்கிகொண்டு மலர் தூவிய ஹேமா-கொடுத்து வைத்ததைக் கேட்ட சாத்தூர் ராம்ஸ்-ஆர்.வி.எஸ்-வௌவ்விய ஃப்ரென்ச் மேதை பதமா-சிவாஜியின் தங்கப்பதக்கம் பாடலால் வாழ்த்திய நிலாமகள்-வாழ்த்துக்களைக் கோரஸாக ரிப்பீட்டிய வேல்கண்ணன்-மாதங்கி-என்னைப் புலியாயும் என் செல்வங்களைப் புலிக்குட்டியாயும் உறும விட்ட ஆர்.ஆர்.ஆர்.சார்-இத்தனை பேருக்கும் விதவிதமாய் இனம்பிரித்து எழுதினாலும் முடிவில் நையப்புடைத்த அறுந்து கந்தலாய்த் தொங்கும் நன்றி என்கிற மூன்றேழுத்துக் கெட்ட வார்த்தைக்குப் பதிலாய் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.(ஹப்பா-இவ்வளவு நீளம் எழுதினதில்லைங்க-மூச்சு வாங்குது)

நிலாமகள் சொன்னது…

//ஒரு மங்கலமான சுபகார்யம் நிறைந்தபின் விதவிதமான வண்ணங்களில் தரையெங்கும் சிதறிக்கிடக்கும் பூக்களையும் பொன்னிறத்தில் மயிர்க்கால்களுக்கிடையே மின்னும் மங்களாட்சதையும் தூவப்பட்ட பின்பு நான் என் குடும்ப சகிதம் உங்கள் எல்லோரையும் நமஸ்கரிக்கிறேன்.//

இதைப் பணிவு என்பதா... பவ்யமென்பதா.... தன்னடக்கம் என்பதா...

'நிலை உயரும் போதும் பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்' மறுபடியும் சிவாஜி மனதுக்குள் இழுத்துப் பாடுகிறார்.

'அப்போதே நான் சொன்னேன் அல்லவா... அடக்கம் அமரருள் உய்க்கும்' என்கிறார் குமரிக் கடலன்னை நடுவே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் வள்ளுவப் பெருந்தகை!!
முன் ஏருழவு அனுபவமும் திறமையும் நிறைந்தவர்களால் தான்!

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாம் உங்களின் அன்பும் ஆனந்தமும்தான் நிலாமகள்.

மீண்டும் மீண்டும் பணியவைக்கிறது உங்களின் வார்த்தைகள்.

நன்றி நிலாமகள்.

கிருஷ்ணப்ரியா சொன்னது…

ஆச்சரியமாய் இருக்கிறது ஜி, படிக்கவே திணறும் பிள்ளைகளுக்கு நடுவில், புத்தகம் எழுதும் குழந்தைகள் நிச்சயம் வரம் தான்... என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள், அந்த தங்கமான பிள்ளைகளுக்கும், அவர்களின் பெற்றோரான உங்கள் இருவருக்கும். மென்மேலும் வளரட்டும் செல்வங்கள்....

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் மனதின் ஆழம் தொட்டுவரும் வார்த்தைகளில் பெருமையும் அடக்கமும் கொள்கிறேன் க்ருஷ்ணப்ரியா.

நன்றிகள் பல.

raji சொன்னது…

எனக்கும் ஆனந்தத்தில் கண்ணீர் கசிகிறது ஜி.
தாமதமாக தெரிந்து கொண்டேன் என்றாலும் இந்த அத்தையின் வாழ்த்துக்களை
குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.இறைவனின் திருக்கரத்தால் ஆசிர்வாதம்
பெற்று குழந்தைகளும் பெற்றவர்களும் உயரங்களுக்கு செல்ல ப்ரார்த்திக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சகோதரி ராஜி. உங்கள் வார்த்தைகள் என்னை நெகிழ வைக்கின்றன.அவர்களுக்கு உங்களின் ஆசிகள் பெரும் நிறைவைத் தரட்டும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...