2.3.11

தோல்வித் தேன்



தோற்றபடி இருக்கிறேன்
தோழி நெடுங்காலமாய்.

பள்ளியில் தோற்ற மாலை
நண்பனின் பல்லுடைத்தேன்.

கல்லூரியில் தோற்ற நாளில்
கனவுடைந்து உருக்குலைந்தேன்.

சகாவிடம் தோற்றுப்போய்
ஆடையற்றதாய் உணர்ந்தேன்.

காதலியிடம் தோற்ற
மறவாத ஓரிரவில்

உயிரற்ற ஓருடலைச்
சுமந்தபடிக் கரைந்திருந்தேன்.

மனைவியிடம் தோற்றவேளை
கொஞ்சமாய் மனமுடைந்தேன்.

மகளிடம் தோற்ற மதியம்
துள்ளிக் குதிக்கலானேன்.

எழுதித் தோற்ற காலம்
எழுதாதிருக்கக் கற்றேன்.

வாழ்க்கையில் தோற்றுத்தோற்று
புத்தனின் ஞானம் உண்டேன்.

பெயரனிடம் தோற்ற நாளில்
பிறவாப் பயனடைந்தேன்.

உடலிடம் தோற்ற கணம்
முதுமையின் முகமணிந்தேன்.

காலத்திடம் தோற்ற நொடி
சிரித்தபடி உதிர்ந்திருந்தேன்.

23 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

தோல்வி என்ற வார்த்தையே அகராதியில் இருக்கக்கூடாது, சுந்தர்ஜி. விழுவது எழுவதற்கே. அப்படியே தொல்வியானாலும் அதனை “ தோல்வித்தேன் “ என்று கூறுவது சுந்தர்ஜியின் ஸ்பெஷாலிடி.

க ரா சொன்னது…

சுவைத்தேன் ::)

ஹேமா சொன்னது…

இத்தனையையும் தாண்டி வந்திருக்கிறீர்கள்.பிறகென்ன தோல்வி.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி.தோல்வித் தேன் !

தனலக்ஷ்மி பாஸ்கரன் சொன்னது…

தோற்பதில் வெல்லப்படுகிறது வாழ்க்கையின் சவால்கள் படிப்படியாய்.வென்று விட்டது வரிகள்.

வி.விநாயகமூர்த்தி சொன்னது…

மிக மிக மிக அற்புதமான ஆழமான படைப்பு. நேர்த்தியான வரிகள்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயற்கைசிவம் சொன்னது…

தோல்வி தரும் அனுபவங்களை ரசிக்க பழகுகையில் வாழ்க்கை அலாதியானதாகிறது.நல்ல பதிவு சுந்தர்ஜி.

யாழி சொன்னது…

தோற்றலின் பரிணாமம் பூர்ணத்தின் அடையாளம்.அருமை ஜி.

உஷாராணி சொன்னது…

தோல்வியின் சரிதை சொல்லும் வரைபடம்.இது தோல்வியின் வெற்றி. தோல்விகள் விரிகையில் யோசிப்பும்,புன்னகையும்.

அதுவும் மகளிடமும்-பெயரனிடமும் தோற்ற நொடிகள் அற்புதம்.பண்பட்ட அடுக்குகளில் ஏறி கவிதை சூல் கொண்டிருக்கும் வசீகரம் இறுதி வரியில் குப்பெனப் பூத்துவிடுகிறது.

நிறை வாசிப்பின் த்ருப்தியுடன் என் மகிழ்வு.

கா.அண்ணாமலை சொன்னது…

தோல்விகள் ஒவ்வொன்றும் உணர்ந்து (உணர்ந்தாலே அடுத்து வெற்றிகள்தானே அண்ணா) கவிதை படைத்தது அருமை அண்ணா.பாராட்டுக்கள்.

மீனாதேவி சொன்னது…

தோல்வியில் ஒரு வெற்றி இக்கவிதை.

RVS சொன்னது…

படித்தேன்.. ரசித்தேன்... சுவைத்தேன்... தேன்..தேன்.. (அதெப்படி உங்களால் மட்டும் தோல்வியில் கூட தேன் தடவ முடிகிறது.... ) ;-)))

தவறு சொன்னது…

நன்று வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

Ramani சொன்னது…

வெற்றி
மகிழ்ச்சி தரும்
போதை தரும்
ஆணவம் கூட அள்ளித்தரும்
தோல்வி
அனுபவம் தரும்
படிப்பினை தரும்
ஞானம் கூடசேர்த்துத் தரும்
அதனால்தான்
தோல்வித்தேன் என
சொல்லியிருக்கிறீர்கள்
என நம்புகிறேன்
வழக்கம்போல
அருமையான பதிவுவாழ்த்துக்கள்

vasan சொன்னது…

மரியொ புஷோ "GodFather" ன், ஆத்மார்த்த‌ க‌தாநாய‌க‌னின் வாழ்வை க‌விதையில் வ‌டித்து விட்டீர்க‌ள்.
(நோ)தோற்றபடி இருக்கிறேன்
தோழி நெடுங்காலமாய்.
பள்ளியில் தோற்ற மாலை
நண்பனின் பல்லுடைத்தேன்.
(எனக்கோ மூக்குடைய‌)
கல்லூரியில் தோற்ற நாளில்
கனவுடைந்து உருக்குலைந்தேன்.
(உரு மாற‌த் தொட‌ங்கிய‌து அப்போது)
சகாவிடம் தோற்ற
ஓர் பகல் பந்தயத்தில்
ஆடையற்றவனாய்
எனை நானுணர்ந்தேன்.
(உடுக்கை இழந்த‌வ‌ன் கையாய்)
காதலியிடம் தோற்ற
மறவாத ஓரிரவில்
உயிரற்ற ஓருடலைச்
சுமந்தபடிக் கரைந்திருந்தேன்.
(கண் +'நீர்' க‌ரைந்த‌ காண்ட‌ம்)
மனைவியிடம் தோற்றவேளை
கொஞ்சமாய் மனமுடைந்தேன்.
(கொஞ்சிக் கொஞ்சி..பின்)
மகளிடம் தோற்ற மதியத்தில்
துள்ளிக் குதிக்கலானேன்.
(இது தோற்ற‌ ம‌ய‌க்க‌ம்)
எழுதித் தோற்ற காலம்
எழுதாதிருக்கக் கற்றேன்.
(ஆனாலும் விட‌மாட்டேங்கிறாங்க ம‌க்க‌ள்)
வாழ்க்கையில் தோற்றுத்தோற்று
புத்தனின் ஞானம் உண்டேன்.
(துற‌ந்த‌வ‌னிட‌ம், பிட்சு)
பெயரனிடம் தோற்ற நாளில்
பிறவாப் பயனடைந்தேன்.
(இப்பிற‌வியிலேயே மறுபிற‌வி)
உடலிடம் தோற்ற கணம்
முதுமையின் முகமணிந்தேன்.
(முக‌மூடி க‌ழட்டிய‌து மன‌சு)
காலத்திடம் தோற்ற நொடி
சிரித்தபடி உதிர்ந்திருந்தேன்.
(வாழைய‌டி வாழையாய்)

அன்புடன் அருணா சொன்னது…

/மகளிடம் தோற்ற மதியத்தில் துள்ளிக் குதிக்கலானேன்/
தோல்விகள் இனிக்கும் தருணங்கள்!

காமராஜ் சொன்னது…

aruna said
/மகளிடம் தோற்ற மதியத்தில் துள்ளிக் குதிக்கலானேன்/
தோல்விகள் இனிக்கும் தருணங்கள்!

இரட்டை ஆமாம்.தோல்வியின் பட்டியல் சொல்லி வெற்றிபெற்ற பதிவு இது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தோல்வித் தேனும் இனிக்கக் கண்டேன் உங்கள் வரிகளில்.

பிடித்த வரிகள்:
//மகளிடம் தோற்ற மதியத்தில்
துள்ளிக் குதிக்கலானேன்.//

என்னால் ஒத்துக் கொள்ள முடியாத வரிகள்:
//எழுதித் தோற்ற காலம்
எழுதாதிருக்கக் கற்றேன்.//

[அதற்கு சமீபத்தில் நடந்ததொரு சம்பவமே சாட்சி, விளக்க எனக்கு இங்கு இடம் பத்தாது.]

மோகன்ஜி சொன்னது…

அன்பு சுந்தர்ஜி! தோல்வித்தேன் இனித்ததொடல்லாமல் கொஞ்சம் கரித்தது மனத்தின் மூலையில்...

நீ ஏதாய் இருக்கிறாய் என்பதை உன் வெற்றிகள் தீர்மானிக்கின்றன
.
நீ யாராய் இருக்கிறாய் என்பதை உன் தோல்விகள் தீர்மானிக்கின்றன .

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

மனிதன் தோற்கத்தான் வேண்டும். தோற்றலில் வலி இருக்கும். அதுவும் சுகம். அடுத்த தோல்வியைச் சந்திக்காமல் இருப்பதற்கு அல்லது எதிர்கொள்வதற்கான திறனை அது அளிக்கும். இன்னொன்று தோற்றல் ஒரு விவரிக்கமுடியாத கிளர்ச்சி. அது மனதால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்க முடியும். நீங்கள் தோற்று ஞானத்தேன் உண்டிருக்கிறீர்கள். அருமை.

Nagasubramanian சொன்னது…

என்னங்க சொல்ல?
வெற்றி, தோல்வி - இது ஒரு சமூக வழக்கு.
எனக்கு அதில் உடன்பாடில்லை.

ஹ ர ணி சொன்னது…

வாசன்...

சுந்தர்ஜி பதிவிற்கு உங்கள் கருத்துரை வெகு ஆழமானது. அற்புதமானது. அலுக்காத சோர்வடைய வைக்காத கருத்துரை வாசன்.

சிவகுமாரன் சொன்னது…

”தோல்வித் தேன் - தலைப்பே ஒரு கவிதை.
தோல்வியையும் சுவைக்க ஒரு மனம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

ரிஷபன் சொன்னது…

நண்பனின் பல்லுடைப்பில் ஆரம்பித்து சிரித்தபடி முடியும் தோல்வி வெற்றிதான் புரிதலுள்ள வாழ்க்கைக்கு..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...