13.3.11

கோடையின் முழக்கம்


வரலாற்றின் எழுதாப் பக்கங்களுக்காய்க்
காத்திருந்த ப்ரளயத்தின் கொழுந்தோ
கலவரத்தின் முணுமுணுப்போ
வீழும் அருவியின் பேரொலியோ
திறக்கப்பட்ட மதகுகளை
நொறுக்கிச் செல்லும் நீரொலியோ
அடக்குமுறையின் நுகத்தடியை
உலுக்கும் கிளர்ந்தெழலோ
பெருமரங்கள் சூழ் வனத்தில்
மரம் வளைக்கும் பெருங்காற்றோ
அணைந்தே போயிற்று ஊழியின் சுடர்
எனும்போது கிளைபரப்பிப்
படர்ந்த கொடுந்தீயோ

இல்லை இல்லை
தரைபாராக் குழந்தையின் பாதங்களோ
பிறந்து துள்ளக்கற்கும் பசுங்கன்றோ
வார்த்த நீருக்கும் வளைத்த காற்றிற்கும்
தலையசைக்கும் இளஞ்செடியோ
உனை நேசிக்கும் பெண்
கனிந்தூட்டும் இதழ் முத்தமோ
பாலூற்றியவனின் பக்கத்தில்
படுத்துறங்கும் நாய்த்துணையோ
போகுமிடம் கூட்டிச்செல்லும்
ஒற்றையடிப் பாதையின் நெடுங்கோடோ
அதிகாலை ஆளற்ற ஆலயத்தின்
பனி குளித்த மணியொலியோ

என்ன சொல்வேன் என்ன சொல்வேன்?

(இத்தாலியின் அண்டேனியோ விவால்டி மிக முக்கியமான இசைமேதை. அவரின் நான்கு பருவங்கள் (Four Seasons ) இசைப் பயணத்தில் ஓர் மைல்கல்.

கோடைக்காலம்-குளிர்காலம்-இலையுதிர்காலம்-வசந்தகாலம் என்று பெயரிடப்பட்ட நான்கு பிரிவுகள் இசையின் மாபெரும் ப்ரளயங்கள். நான்கையும் வரும் நாட்களில் முழுமையாய் இடுகையிட முயல்கிறேன்.

நீங்கள் கேட்பது கோடையின் ஓர் அறிமுகம்.  வாசிக்கும் அந்தப் பெயர் தெரியாக் கலைஞர்களின் விரல்களை முத்தமிடுகிறேன்.

நடுவில் நின்று சோலோவாக வாசிக்கும் கலைஞனின் அலட்சியமும் அந்தத் தந்திகளின் மேல் அவன் வடிக்கும்   இசையின் உருவத்தைக் கண்களால் நேரே காண்பது போலான பாவமும் எத்தனை நேர்த்தியும் பயிற்சியும் இருந்தால் சாத்தியமாகக்கூடும்?

இதைக் கேட்டு முடிக்கையில் எழும் படபடப்பு அடங்க வெகு நேரம் பிடிக்கலாம். இந்தப் படபடப்பை நேசிக்கிறேன். நன்றி விவால்டி. ) 

7 கருத்துகள்:

இராமசாமி சொன்னது…

நன்றி சுந்தர்ஜீ .. பகிர்ந்தமைக்கு

வினோ சொன்னது…

நன்றி அண்ணா, சொல்ல தெரியா ஒரு உணர்வு....

ஹேமா சொன்னது…

இசை கேட்டு முடிந்தபின்னும் செவிக்குள் இன்னும் அதிர்வலைகள் தொடர்ந்தபடி !

சிவகுமாரன் சொன்னது…

பொக்கிஷங்கள் சுந்தர்ஜி.
காத்திருக்கிறேன் மீதமும் சுவைக்க .
இசையை தூக்கி சாப்பிட்டு விட்டது உங்கள் கவிதை .

G.M Balasubramaniam சொன்னது…

இசை கேட்டேன். விளக்கம் படித்தேன். அருமை, சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

இசை பயிலா உறுத்தல் ஒரு புறம்.. ரசனையின் மூழ்கடிப்பு மறுபுறம்.. என்னையும் பந்தாடி விட்டன அந்த விரல்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”கோடையின் முழக்கம்”
குளிர்ச்சியாய்க் கேட்டோம்.

இணைகிறதே கைவிரல் அசைவுகள்:

இசையில் அவர்களுக்கும் !
இடுகையில் உங்களுக்கும் !!

பாராட்டுக்கள் ஐயா.

பேரெழுச்சியுடன் வாருங்கள் என் பக்கம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...