6.3.11

ப்யார் கியா தோ டர்னா க்யா? (காதல் கொண்டாலே பயமென்ன?


இன்று காலை எப்போதும் போல் விடியவில்லை.

பா.ரா.வின் சித்தப்பா திரு.அண்ணாத்துரை சிவசாமியின் http://azhutham.blogspot.com/2011/03/mughal-e-azam-pyar-kiya-to-darna-kya.html தளத்தில் மேயப் போனவன் வசமிழந்து போனேன்.

அங்கே என் மரியாதைக்குரிய ராஜு அண்ணாவின் அற்புதமான கவிதையின் சாரமாக மொகல்-ஏ-ஆஸமின் ப்யார் கியா தோ டர்னா க்யா என்ற பாடலைக் கண்டேன்.

கண்ணீர் கசியும் என் நினைவுகளோடு அண்ணாத்துரை சித்தப்பாவின் ரசனைக்கு சலாம் சொல்வதா? அல்லது ராஜு அண்ணாவின் விமர்சன மழைக்கும் மொழிபெயர்ப்பின் வீர்யத்துக்குப் பணிவதா? என்று புரியாது திரிகிறேன்.

என் போன்றோரின் தலைமுறையை அர்த்தப்படுத்த, அப்போது 80களின் இறுதியில் சென்னையின் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கத்தில் வந்திருந்தது மொகல் ஏ ஆஸம். இரண்டு இடைவேளைகளுடன் மிக நீண்ட ம்யூஸிகல்-க்ளாஸிகல் மற்றும் ஹிஸ்டாரிகல் என்று இதைச் சொல்லலாம்.

மருகி மருகி ஒருவாரம் விடாது ராத்திரிக் காட்சி பார்த்து மயங்கிக் கிடந்தோம். திலிப் குமாரின் அண்டர் ப்ளேயா, ப்ருத்விராஜ் கபூரின் கம்பீரமா, சாகடித்த மதுபாலாவின் மயக்கும் அழகா, நௌஷாத்தின் காலங்களால் அழிக்கமுடியாத இசையா-சொல்லத் தெரியவில்லை எனக்கு. அல்லது சொல்லித் தீர்வதில்லை.

அந்தப் படம் த்யேட்டரை விட்டுப் போன பின்பு நெடுநாட்க் காதலியை அவள் முறைமாமனிடம் தாரை வார்த்த ஒரு பிரிவின் வலி. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையே வெறுமையாய்த் தெரிந்தது வெகு நாட்களுக்கு.

நடிக்கத் தெரியும், பாடத் தெரியும், எழுதத் தெரியும் என்று சொல்பவர்களும், சொல்லாதவர்களும் அவசியம் பார்த்துத் தீர வேண்டிய ஒரு சுகமான தொல்லை இது.

மொகல்-ஏ-ஆஸம் பற்றி விரிவாய் இன்னொரு பதிவில் எழுதுவேன்.

மொகல்-ஏ-ஆஸம் தமிழில் அக்பர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லாப் பாடல்களும் தமிழில் கம்பதாசனால் அற்புதமாகப் பொருத்தப் பட்டிருந்தன.

காட்சியின் ப்ரும்மாண்ட அமைப்பும், சுழன்று சுழன்று விரியும் நடன அமைப்பும், ஒரு பேரரசனின் முன் பாடும் பாடலில் வெளிப்படும் காதலின் வீரம் என்று அணுஅணுவாக ருசித்துத் தீராத பாடலும், காட்சியும்.  

அக்பர் படத்தின் தமிழ் வடிவில் எழுதப்பட்ட பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன். இசைக்குப் பொருத்தமாய் என்ன ஒரு வார்த்தை வடிவம்? நௌஷாத்தின் இசையில் இந்த அமர கானத்தை ரஸியுங்கள். லதாவின் குரலில் மயக்கும் இப்பாடல், தமிழில் சுசீலாவின் குரலில் அபாரமாய் இருந்தது. 

இனி இங்கே வார்த்தைகள் பொருத்தமானவையல்ல.

விருத்தம்

ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே
ஒரு முறையேதான் காதல் கொள்வாளே
இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே
இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே.

(பல்லவி)

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

(அனுபல்லவி)
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை

(கோரஸ்)

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிரானாலும் பயமென்ன?
உண்மைக்காதல் கொண்டாலே பயமென்ன?

(சரணம்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.

(கோரஸ்)

இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் இரேனே.
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அஞ்சி அஞ்சியே சாதல் என்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

(கோரஸ்)

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.
காதலே வாழ்வே காதலே சாவே
காதலே வாழ்வே காதலே சாவே
காதல் இன்றேல் கதி வேறென்ன?

உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?
காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

அணையாது எந்தன் காதலின் தீபம்.
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்

(கோரஸ்)

அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மனிதர்கள் முன்னால் திரையென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை.
விதி எதிர்த்தாலும் பயமென்ன?

காதல் கொண்டாலே பயமென்ன?
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன?

இதன் விருத்தம் இடம்பெறாத தமிழ் வீடியோ வடிவமும் கிடைத்தது. 

https://www.youtube.com/watch?v=NKG3JGgOQeg

சுசீலாவின் தெலுங்கு தூக்கலான உச்சரிப்பு, ’பயமென்ன’வை ’பயமென்னா’ வாக்கியிருக்கிறது. 

நெஞ்சில் அவர்தன் நினைவே தான் பாடும்
கண்ணில் அவர்தன் கனவேதான் ஆடும்.

இதை ’நினைவே தன்’ என்று பாடும் இடங்கள் தவிர அநேகமாக அற்புதம் இதுவும்.

இந்தப் பாடலைப் பற்றி ராகவனிடம் ப்ரஸ்தாபித்து எழுதச் சொல்லிக் கேட்க வேண்டும் என ராஜு அண்ணா எழுதியிருந்தார். ராகவன்! நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள் என ராஜு அண்ணாவுடன் நானும் சேர்ந்து கேட்கிறேன்.

17 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

தமிழிலும் சரி இந்தியிலும் சரி திரை இசை அதன் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்த இனிய நாட்கள் அவை.. ம்ம்.. எதையெல்லாம் இழந்து விட்டோம் என்று பட்டியலிட்டால் இதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் அற்புத கானம்.

Harani சொன்னது…

சுந்தர்ஜி...

எனக்கு இந்தி தெரியாது. ஆனால் நிறைய இந்திப் படங்கள் பார்த்திருக்கிறேன். பல பாடல்களில் மனம் பறிகொடுத்திருக்கிறேன் மொழி புரியாமல். இசைக்கு மொழி தேவையில்லை. இந்தப் பதிவின் இசையில் மனம் கிறங்கிப்போனேன். வெண்ணெய் உருகல்போல் மனதில் உருக்கமும் மகிழ்ச்சியும். அருமை.

RVS சொன்னது…

பம்பரமாய் சுழன்று ஆடும் போது... பின்னால் ஜதியும்.... ஒவ்வொரு அடி முடிந்ததும் வரும் வயலினும்.... தபலாவும்... நாமும் முகலாய மன்னர்களின் தர்பாரில் உட்கார்ந்து கேட்டது போன்ற உணர்வு... உங்களது சுவாரஸ்யமான விவரிப்பும்.. தமிழ்ப் படுத்திய விதமும் அபாரம்.. நன்றி சுஜி.... ;-)))

komu சொன்னது…

mohale azam patam super movie. pyarkiya tho darna kya pattukalari varum mathupaala nalla dance atiyirupangka. ella patalkalume kalarthan. nallapattu. nallapatam.

rajasundararajan சொன்னது…

//அந்தப் படம் த்யேட்டரை விட்டுப் போன பின்பு நெடுநாள் காதலியை அவள் முறைமாமனிடம் தாரை வார்த்த ஒரு பிரிவின் வலி.//

என்ன ஓர் உணர்வு வெளிப்பாடு! ஆஹா!

2004-இல்தான் வாய்ப்புக் கிட்டியது. ஒரே இடைவேளையுடன் கூடிய குறுக்கப்பட்ட வடிவம். காக்கிநாடா சினிமா ரோடு அரங்குகள் ஒன்றில் பார்த்தேன். உரத்தொழிற்சாலை ஒரு பணியில் எனக்கு உதவியாளராக வந்திருந்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் இப் படத்தைப் போய்க் காணும்படி பரிந்துரைத்தார். கூடவே, "உர்தூ வார்த்தைகள் அதிகம். உங்களுக்குப் புரியுமோ என்னவோ!" என்றும் சொல்லி அனுப்பினார்.

இந்தப் பாடல் முடிவதோடு இடைவேளை வருகிறது. இஸ்ரவேலர்களிடமிருந்து கொலைவாளை எடுத்து யெஹோவிடமே திருப்பிச் சமர்ப்பிக்கும் இயேசு பெருமானை மதுபாலாவில் கண்டேன். அவருடைய மனக்களிப்பும் எள்ளலும் துள்ளலும் என்னையும் தொற்றிக்கொண்டது.

என்னா இசை யாப்பு! என்னா நடன அசைவுகள்! என்னா camera placements! நடிகர்களின் திறமை வெளிப்பாடுகளை என்ன சொல்ல!

அரங்கை விட்ட இடைவேளையில் நெஞ்சு பதைபதைக்க, ஒரு டீயும் வேணாம் காப்பியும் வேணாம் என்று தனிமைப்பட்டு, இக் காட்சிகளின் ஈரம் சொட்ட நின்றிருந்தேன்.

எனது மொழிபெயர்ப்பிலும், அன்று பெற்ற அவ் உணர்வின் விவிலிய வாசனை அடிக்கக் காணலாம். இப் படம் தமிழிலும் மொழிமாற்றம் பெற்று வந்தது என்பது தெரியாது. நீங்கள் எழுதித்தான் அறிகிறேன். நன்றி!

Matangi Mawley சொன்னது…

Sir! What do I say?

'Madhubala'-ngara per-e enakku kannoramaa oru chinna thuli kanner-rai tharum... enakku pothuvaa comment ezhuthum-pothu ennoda entha post-um link panna pidikkaathu. but ennaala intha idaththula resist panna mudiyala! So , mudinjaa intha post padikkavum, time kidaikkum pothu...

http://musicmethodandmadness.blogspot.com/2011/02/muted-music_04.html

degree coffee-la itha paththi naan future-la ezhuthuven...

mughal-e-azam cinema naan chinna vayasila 1st time paaththa pothu- dilip kumar-oda under play laam rasikka theriyaathu. but madhubala-va paaththuttu- "Cha.. ivvalo azhagaana pennukku ivvvalo kashtamaa..." nnu nenaichchen! one of the finest dialogues ever written... enna azhagaa deliver pannirukkaanga atha! ovvoru character-kum jeevan koduththirukkaanga!

i have no words!

pl. read the above mentioned post.. whenever u can...

மோகன்ஜி சொன்னது…

என்ன மேன்மையான பதிவு இது சுந்தர்ஜி!
மொகல்-ஏ-ஆஸம் படமேன்னில் ஏற்ப்படுத்திய பாதிப்பை இப்படித்தான் எழுதியிருப்பேன்.. தெருவும்,
தியேட்டருமே மாறியிருக்கும்...

அந்தப்பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு அட்சரலட்சம் பெறும்.

vasan சொன்னது…

"நெடுநாள் காதலியை அவள் முறைமாமனிடம் தாரை வார்த்த ஒரு பிரிவின் வலி."

WOW, What a great words!! Nothing else can fill that feel as the only drop of burning tear(s).

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ரசனையும் உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிறது ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

ரசனைக்கு ஏது மொழி ஹரணி? இதே போல் அப்படியே தொடர்ந்தால் எல்லையைத் தொட்டுவிடலாம்.கூடவே வாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

ரசனையின் மன்னனல்லவா ஆர்விஎஸ்?

ரசித்த பாங்கில் தெரிகிறது உங்கள் ஆழம்.

தமிழ் நான் படுத்தவில்லை. ஏற்கெனவே படுத்தப் பட்டதுதான். அந்தக் கைகளைத் தேடியபடி இருக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கோமு.

நீங்கள் சொன்னதுபோல எல்லாப் பாடல்களுமே அதில் அருமையானவை.

சுந்தர்ஜி சொன்னது…

சாம்பல் பூத்திருந்த நெருப்பை ஊதியது நீங்கள் தான் ராஜு அண்ணா.

நானும் விவிலிய மணத்தை உணர்ந்தேன். முகலாயப் பின்னணி கொண்ட முகல்-ஏ-ஆஸமுக்கு இந்தப் பின்னணி ஒரு ஜுகல்பந்தியைக் கேட்பதான மயக்கம் தந்தது.

விரிவான பகிர்வுக்கு நன்றி அண்ணா.
அடிக்கடி வாருங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

இசை மேல் உங்களார்வத்தைப் பற்றி நான் என்ன புதுசாய் சொல்லிவிடப் போகிறேன் மாதங்கி?

உங்கள் இடுகையையும் படித்துவிட்டேன்.அங்கே வந்து பொறுமையாய் எழுதுவேன். அதுதான் சரி.

இசை குறித்த எனக்குத் தெரியாத புது அறிமுகங்களையும் உங்கள் மூலமாய் அறிகிறேன் மாதங்கி.அதற்கும் நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

சரியாய்ச் சொன்னீர்கள் மோஹன்ஜி.

அந்தக் காலத்தில் வந்த பல மொழிபெயர்ப்புப் பாடல்கள் இசைக்குள்ளும் அமர்ந்து மொழிக்குள்ளும் அமர்ந்தது பெருத்த பாக்யம்.

சுந்தர்ஜி சொன்னது…

எரியும் கண்ணீர்!

இதை விடவா வாசன்?

அண்ணாதுரை சிவசாமி சொன்னது…

"நடிக்கத் தெரியும் பாடத் தெரியும் எழுதத் தெரியும் என்று
சொல்பவர்களும் சொல்லாதவர்களும் அவசியம் பார்த்துத்
தீர வேண்டிய ஒரு சுகமான இம்சை இது.."....இந்த வார்த்தைகள்
போதும்..நீங்கள் இந்தப் பாட்டை எவ்வளவு தூரம் ரசித்திருக்கிறீர்கள்
என்பதைச் சொல்ல.இன்றுதான் ராஜாவின் பதிவினை எனது தளத்தில்
பார்த்தேன்.உங்களின்..அருமையான பதிவுகளைப் படிக்க சந்தர்ப்பம்
ஏற்படுத்திகொடுத்த ராஜாவிற்கு எனது நன்றிகள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...