I
நீண்டு வளர்ந்த
மரத்தின் உச்சியில்
ஒற்றைக் கொக்கை
மலையில் அமர்ந்திருக்கையில்
தரிசிக்கிறேன் நான்.
பாயும் நதியின்
மடியில் உருளும்
கூழாங்கற்களை
நீரில் மூழ்கி
கைகளில் அள்ளிக்
கன்னங்களில் பதிக்கிறேன்.
அரிதான
ஒன்றைத் தரிசிக்க
அதற்குச்
சமமான உயரம்.
அல்லது
சமமான தாழ்வு.
கடவுளோடு
உரையாடுகையில்
உதிர்ந்த முதல் பாடம்.
II
இருப்பிலிருந்து
உதிர்ந்து
வெளிகளில் மிதந்து
மெல்ல மெல்ல
நிசப்தத்தில்
பதிய இருக்கின்றன
பழுப்பு இலைகளின்
சுவடுகள்.
பறவைகளின் கூவல்கள்
நிரம்பிய பள்ளத்தாக்குகளில்
எங்கோ
ஓடிக் கொண்டிருக்கும்
நதியின் இசை
காதுகளில் பாய்கிறது
தரிசனங்கள்
பல சமயங்களில்
கண்களால்.
சில சமயங்களில்
மனதால்.
III
பல கதவுகளால்
மூடப் பட்டிருக்கிறது
அந்த குகை.
வெவ்வேறு
கதவுகளை
மறுபடி மறுபடி
மாற்றித் திறந்தபின்னும்
எதையும் காணாது
திகைக்கிறேன்.
அவனோ
ஒரே கதவைத்
திறந்தும் மூடியும்
பேரானந்தத்தில்
திளைக்கிறான்.
சில பயணங்களைப்
பாதைகள்
தீர்மானிக்கின்றன.
வேறு சிலவற்றைப்
பார்க்கும் கோணங்கள்.
7 கருத்துகள்:
மேலிருப்பதைக் கீழிருந்தே தரிசிக்க முடியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.தரிசனங்கள் மனதால் தெரிவதே நிலைத்து இருக்கும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். பயணிப்பவன் முதலில் தீர்மானிக்க வேண்டும். மனதில் தோன்றியதை எழுதினேன். காணும் கோணங்கள் மாறலாம் அல்லவா. .இப்போதெல்லாம் வலையில் அடிக்கடி காண முடிவதில்லையே சுந்தர்ஜி.விகடனில் நீர் பற்றிய கவிதை பேஷ் பேஷ். வாழ்த்துக்கள்.
நன்றி பாலு சார். நலம்தானே?
மன்னியுங்கள்.உங்களுடைய இதற்கு முந்தைய கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாது ஓடிக்கொண்டிருந்தேன்.
ஜனவரி 10ல் இருந்து மோகன்ஜியுடன் சபரிமலை யாத்திரை சென்று 20ம் தேதிதான் திரும்பினேன்.
இனி அடிக்கடி வருவேன். மோகன்ஜியுடன் மேற்கொண்ட அந்த யாத்திரை என்னை இன்னும் சில படிகள் மேலே எடுத்துப்போனது.அற்புதம்.நாலைந்து இடுகைகள் எழுத இருக்கிறேன்.
தரிசனங்கள்
பல சமயங்களில்
கண்களால்.
சில சமயங்களில்
மனதால்.
சபாஷ்
உரையாடலைக்
கண்களால் அல்ல
மனதால்
தரிசித்தேன்.
// இருப்பிலிருந்து
உதிர்ந்து
வெளிகளில் மிதந்து
மெல்ல மெல்ல
நிசப்தத்தில்
பதிய இருக்கின்றன
பழுப்பு இலை //
இப்படித்தான் பதிந்திருக்கிறேன் நானும் தற்சமயம்.
என்னோடு பொருந்தி, மனதை தொட்ட வரிகள் இவை சுந்தர்ஜி சார்.
உரையாடல் மூன்றும் அருமை!
சில பயணங்களைப்
பாதைகள்
தீர்மானிக்கின்றன.
வேறு சிலவற்றைப்
பார்க்கும் கோணங்கள்.//
கடவுளோடு உரையாடும்போதும் அவருக்கிணையாக நாமிருக்க வேண்டியிருக்கிறது... இல்லையா ஜி...? அன்பு, காருண்யம், தயை என ஏதேனுமொரு கோணத்தில் அவரவருக்குள்ளிருக்கும் இறைத் தன்மையை துலங்கச் செய்ய வேண்டியிருக்கிறது.கவிதைகள் திறக்கும் கதவுகள் வழியே கசிந்து வழியும் பரிவின் இசை ரம்யமாயிருக்கிறது.
கடவுளை நெருங்கிய அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி !
கருத்துரையிடுக