நான் பாண்டிச்சேரி வாசி என்று பெருமைப்பட்டுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.
1. மணக்குள விநாயகர்
2. மஹாகவி பாரதி.
3. அரவிந்தர்
4. அற்புதமான கவிதை எழுத வைக்கும் கடற்கரை
5. மேன்மையும் கண்ணியமும் நிறைந்த ஃப்ரென்ச் கலாச்சாரம்
6. தெருவெங்கும் நிழல் விரிக்கும் மரங்கள்
7. எதிர்காலத்தில் தன் நாட்குறிப்புக்கள் எப்படியெல்லாம் சிலாகிக்கப் படப்போகிறது என்று அறியாமலே 25 வருடங்கள் எழுதித் தள்ளிய ஆனந்த ரெங்கப்பிள்ளை.
மேலேயுள்ள வரிசையில் ஏழாவதாய் வரும் ஆனந்த ரெங்கப்பிள்ளையைப் பற்றித்தான் இந்த இடுகை.
ரெங்கப்பிள்ளையின் நினைவாக ஒரு வீதியே ரங்கப் பிள்ளை வீதியென அழைக்கப் படுகிறது. அன்றைய ஃப்ரென்ச் அரசின் ஆளுநராக இருந்த ஜோஸஃப் ஃப்ரான்க்வா தூப்ளேவுக்கு துபாஷியாகப் பணியாற்றிய ரெங்கப் பிள்ளை பிறந்தது மார்ச் 30,1706ல் சென்னை பெரம்பூரில். 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த வணிகரான பிள்ளை இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாதவர்.
அவரின் நாட்குறிப்புக்களில் அன்றைய அரசியல் சமூகம் பொருளாதாரம் மக்களின் குணாதிசயங்கள் ஆள்பவர்களின் மனநிலை போன்ற பலவிஷயங்களை மிகவும் சுவாரஸ்யமான தமிழில் அறியமுடிகிறது. அப்படியே ஒவ்வொரு பக்கமாய்த் திருப்பி நகரும்போது கண்ணில் பட்ட ஃப்ரென்ச் அரசின் ஓர் ஆணையை படித்ததும் மனம் அன்றைக்கும் இன்றைக்குமாய் அலைபாய்ந்த்து.
பாண்டிச்சேரியையும் அதன் ஆன்மாவையும் அறியாதவர்களும், அறிய விரும்பாதவர்களும் அடையாளப் படுத்திக்கொள்ளும் முதல் விஷயம் மலிவான விலை போதைதான்.
எப்படி அதிகாலையிலேயே காஃபியும் தேநீரும் குடிப்பது போல இளநீரை விரும்பிக் குடிக்கும் பாண்டிச்சேரி மக்கள் நினைவுக்கு வருகிறார்களோ அதுபோல பொழுது விடிந்ததுமே சரக்கில்லாமல் எதுவும் ஆகாது எனும் அடித்தட்டு மக்களும் அவர்களைக் குடிக்க வைத்தே பிழைக்கும் ஆட்சியாளர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.
கள்ளுக்கடை வாசல்களிலும் தென்னந்தோப்புக்களிலும் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு கையிலுள்ள கடியாரம் மோதிரம் முதல் தன் சட்டைப் பையிலுள்ள பணம் வரைக்கும் என்ன களவு போனாலும் ப்ரக்ஞையின்றி குப்புறக் கிடக்கும் குடிமகன்கள் ஒரு வகை என்றால்-
வெளியூர்களிலிருந்து குடிப்பதற்காக மட்டுமே வருகை தந்து முட்ட முட்டக் குடித்து விட்டு சாலைகளில் எட்டுப் போட்டுக்கொண்டே போகுமிடம் தெரியாது செக்குமாடு போலச் சுற்றிவருபவர்கள் இன்னொரு வகை என்றால்-
பேருந்துகளில் பக்கத்திலிருக்கும் பயணி தன் மித மிஞ்சிய குடியால் எந்த நிமிடம் வாந்தியெடுத்து தன்னை நாசப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தோடு இருக்கையைக் காலி செய்து இடம்மாறி விடும் அப்பிராணிப் பயணிகள் மற்றொரு வகை.
இதிகாசங்களின் சோம பானங்களில் தொடங்கி கள்ளுண்ணாமை பற்றிச் சொன்ன வள்ளுவரைக் கடந்து காலம் காலமாக மனிதனின் வாழ்வை நிழல் போலத் தொடரும் இந்த மதுவர்க்கங்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன.
களி, கவ்வை, நரவு, ஈழம், பானம்,பனாட்டு, தாளயம், தோப்பீ, மது, நாற்றம் இவற்றில் சில. தேனிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளிற்கு மாதவம்- வெந்நெல்லிலிருந்து தயாரிக்கும் கள்ளிற்குத் தொண்டி- தென்னங்கள்ளிற்குக் குங்கு- பூக்களிலிருந்து பெறப்படும் கள்ளிற்கு மது, மதுகம், தேரல்- கல்கண்டியிலிருந்து தயாரிக்கப் படும் கள்ளிற்குக் கெடம் என்றும் பெயர்கள் எக்கச் சக்கமாக இருக்கின்றன.
அதேபோல் சுமார் 300 வருடங்களுக்கு முன்னால் பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாயி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம், சுளுக்குச் சாராயம் என்றெல்லாம் பல வகையான சாராயங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
இது இப்படியிருக்க சுமார் 270 வருடங்களுக்கு முன்னால் அப்போது பாண்டிச்சேரியை ஆண்ட, உலகிலேயே உயர்ரக மதுவகைகளின் தயாரிப்புக்களுக்குப் பெயர் பெற்ற ஃப்ரென்ச்சுக்காரர்களால் ஆளப்பட்ட அரசால் 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையைப் பார்ப்போம்.
"லாகரி வஸ்த்துவாகிய பலவித சாராய வகைகள் கோடைக் காலமாகிய உஷ்ண காலத்திலே வாய்கட்டாமல் மிகுதியாக குடிக்கிறவர்களுக்கு மிகுதியாக வியாதி சம்பவிக்கிற படியால் இந்த அவசரமான வேலையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம். நிற்க. உத்தாரமாக கட்டளையிட்டதாவது.
எந்த சாதியில் எப்பேர்பட்டவராயிலும் மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரையிலும் பிராந்தி சாராயங்கள் விற்றாலும், விற்பித்தாலும் கொஞ்சமானாலும், ரொம்பவானாலும் பின்னை எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும் ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது".
ரெங்கப்பிள்ளையின் மொழி புரியவில்லை என்று சொல்பவர்களுக்காக இந்த மொழிபெயர்ப்பு-
கோடைப் பருவத்தில் மது அருந்துபவர்களுக்குப் பல வியாதிகள் வருகின்றன. குடிகாரர்களின் உடல்நலனைக் கருதி மார்ச் முதல் செப்டெம்பர் வரை மதுவகைகளைத் தயாரிக்கக் கூடாது. விற்கவும் கூடாது. பிறர் மூலமாக விற்பனையும் கூடாது. தவறினால் ரூ.15 லட்சம் (1500 வராகன்) அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படும்.
இந்த ஆணை ஃப்ரென்ச்சிலும், தமிழிலும் வெளியிடப்பட்டது. ஒரு வெள்ளைக்காரர் குதிரையில் ஏறி ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஃபிரென்ச்சில் படித்தார். அவருக்குப் பின் வந்த ஒரு கணக்குபிள்ளை அதைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த ஆணை பாண்டிச்சேரி முழுவதும் தண்டோரா போடப்பட்டு ப்ரகடனப் படுத்தப்பட்டது.
இவ்விதம் அபராதமாய்ப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பங்கை பிச்சைக்காரர்களின் மேம்பாட்டுக்குப் பயன் படுத்தியிருக்கிறார்கள். சாராய விற்பனையிலோ கொள்முதலிலோ தயாரிப்பிலோ ஒருவன் எந்தவிதமாய் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைச் சாவடியில் கட்டிவைத்து அடித்து வலது தோளில் முத்திரை குத்தி அனுப்பிவிடுவார்கள். இது சாராயம் குடிப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால் கள் இறக்குபவர்கள் மட்டும் அதை உணவுப்பண்டங்கள் கெடாமல் இருக்க உதவும் காடியாக்கி விற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை முன்பே தங்கள் வீட்டில் சாராயம் சேர்த்து வைத்திருந்தவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப் படக் கூடாது என்பதையும் யோசித்து அவர்களுக்குக் கால அவகாசமாக மூன்று நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தக் கெடுவுக்குள் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் தங்களிடம் மீதமிருக்கும் இருப்பைக் கூறி ஒப்புதல் பெறவேண்டும். அப்படி பெறத்தவறினால் அவர்களிடமிருந்த சாராயம் முழுவதும் பறிக்கப்படும்.
ஒரு ஆணையை வெறும் ஏட்டுச்சுரைக்காயாய் விட்டுவைக்காமல் மிகக் கடுமையான கண்டிப்புடன் அதைச் செயல் படுத்திய ஃப்ரென்ச் அரசாங்கத்தையும் இன்றைய ஆளும் அரசாங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏனோ இலுப்பைப் பூவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
5 கருத்துகள்:
இது வரை அறியாத அரிய தகவலைப்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
அந்த கால அரசு ஆணை படிக்க
வித்தியாசமாகவும்ஆச்சரியமாக இருந்தது
பகிர்வுக்கு நன்றி
இந்த அரசாணை ஃப்ரென்ச் மக்களுக்கும்
(பாண்டிச்சேரியில் வசித்த)பொருந்தியதானால் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியதுதான். ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரி பற்றி எப்பவோ படித்தது. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. நிறைய படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
அறியாத தகவல்கள்.
நன்றி சுந்தர்ஜி
// குடிக்க வைத்தே பிழைக்கும் ஆட்சியாளர்களும்
நமது அரசாங்கம் திருந்தாது,
மக்களைப் பற்றியும் கவலைப்படாது;
மக்களாப் பாத்து குடிக்கறத நிப்பாட்டணு,
நடக்குமா ?
பிள்ளைப்பிராயக் காரைக்கால் நினைவுகளை வைத்துப் பார்க்கையில் எழுபதுகள் வரை பாண்டிச்சேரிப் பிரதேசம் சொர்க்கமாக இருந்தது என்று நினைக்கிறேன். பிறகு நிறைய மாறிவிட்டது என்று நினைக்கிறேன். அத்தனை வருடங்கள் - இன்னமும் சென்னை வரும் பொழுது என் சித்தி வீட்டுக்குப் போகிறேன் - பாண்டிச்சேரி போயிருந்தாலும் ஒரு தடவை கூட பாரதி வீட்டுக்குப் போனதில்லை என்ற வருத்தம் கொஞ்ச நாளாய் தலைகாட்டிக் கொண்டிருக்கிறது.
நிறைய நினைவுகளைக் கிளறிவிட்டப் பதிவு.
கருத்துரையிடுக