6. ஆங்கீரஸ- தக்ஷிணாயனம்

# 25 ஜூன் 1975: அவசரநிலை ப்ரகடனம்.தணிக்கை அமல்.முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது.

#  5 ஆகஸ்ட் 1975: மிசா சட்டத்துக்கு (The Maintenance of Internal Security Act) பாராளுமன்றம் ஒப்புதல்.

 # 26 செப்டெம்பர் 1975: பிரதமரின் தேர்தலில் நீதித்துறை தலையீட்டுக்கு ஒப்புதல் மறுக்கும் 39வது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல்.

# 9 ஜனவரி 1976: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 19ஆல் வழங்கப்பட்ட முக்கியமான ஏழு சுதந்திரங்களுக்குத் தடை.

# 4 ஃபெப்ருவரி 1976: நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல்.

# 2 நவம்பர் 1976: மக்களின் அடிப்படையான கடமைகளை வரையறுத்து இந்தியாவை ஒரு சமத்துவ சமயசார்பற்ற குடியரசாக ஆக்கும் 42ஆவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

#18 ஜனவரி 1977: குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

# 21 மார்ச் 1977: 21 மாதங்களுக்குப் பிறகு அவசரநிலை விலக்கிக்கொள்ளப் பட்டது.

# 22 மார்ச் 1977: ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது.
----------------------

அவசரநிலை ப்ரகடனப் படுத்தப்பட்ட மறுநாள் 26.06.1975ம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பம்பாய்ப் பதிப்பில் வெளியான ஒபீச்சுவரி விளம்பரம்:

"D.E.M O'Cracy beloved husband of T.Ruth, father of L.I.Bertie, brother of Faith, Hope and Justica expired on 26 June"

---------------------------
டந்துபோன நூற்றாண்டில் ஜூன் 25ம் தேதியை இரண்டு காரணங்களுக்காக இந்தியர்களால் மறக்கமுடியாது. 

நாட்டின் வரலாற்றை விரைவாக மறந்துவிடும் அல்லது நாட்டின் வரலாற்றில் பெரிய அக்கறையற்ற மிக அதிகமான என் போன்ற இந்தியர்களுக்கு இந்தியா 1983ல் ஆங்கிலேயர்களின் தேசிய விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றது மட்டுமே நினைவில் இருக்கும். 

வாசல் திண்ணைகளில் உட்கார்ந்து கரகரவென விதவிதமான சப்தங்களோடு மர்ஃபி ட்ரான்ஸிஸ்டரில் லார்ட்ஸ் மைதானத்திலிருந்து குரல் மூலமாகக் கேட்டு ஆனந்தித்தவர்களுக்கு அந்த நம்ப முடியாத திருப்புமுனை வெற்றியை நினைவிருக்கும்.ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் யாரோடும் இதைப் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல் போன ஒரு தென்கோடித் தமிழக கிராமத்துத் தெருவில் புதைந்து கிடக்கிறது என் நினைவுகள்.

ஆனால் அதையும் புறந்தள்ளி மாரிமுத்துவின் நினைவு பறப்பது 1975ன் ஜூன் 25க்குத்தான். அன்றைய கருப்பு நள்ளிரவைப் பற்றிப் பேசாமல் இதை நகர்த்த முடியாது. தன்னுடைய சுய லாபத்துக்காக இந்திரா அலஹாபாத் உயர்நீதிமன்றம் தனக்கெதிராய் அளித்த தீர்ப்புக்குப் பணியாமல் தன் நாற்காலியைக் காத்துக்கொள்ள எல்லா எதிர்ப்புகளையும் மீறி சித்தார்த்த சங்கர் ரேயும்அரசியல் முதிர்ச்சியில்லாத 28வயது இளைஞன் சஞ்சய் காந்தியையும் மட்டுமே ஆலோசித்து மந்திரிசபை ஒப்புதலுக்கு மறுத்தும்சொன்ன இடத்தில் கையொப்பமிடும் ஃபக்ருத்தீன் அலி அஹமதுவிடம் ஒப்புதல் வாங்கி இரவோடு இரவாக அமல்படுத்திய நெருக்கடி நிலையை மாரிமுத்துவால் எப்படி மறக்கமுடியும்?

##################
ரு நாடோடியாக தில்லியின் தெருக்களை நாற்பது வயதுகளில் தஞ்சமடைந்தார் மாரிமுத்து. வாழ்க்கையின் மேடுபள்ளங்களில் சிக்கி வதைபட்டு ஒரு சாலை விபத்தில் தன் குடும்பத்தைப் பறிகொடுத்து யாருமற்ற அநாதையாய் மாறியபோது அவருக்கு முப்பது வயது. கூடவே இருந்த சுற்றத்துக்கும் நட்புக்கும் அவரின் சொத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்து அவரை நடுத் தெருவில் நிறுத்த பத்து வருடங்கள் போதுமானதாக இருந்தது. 

பாரம்பரியமாக செய்து வந்த விவசாயத்தொழில் அவரைக் காப்பாற்றினாலும் யாருமற்ற துரோகிகளால் சூழப்பட்ட தன் சொந்த கிராமம் அவருக்கு அந்நியமாய்த் தெரிந்தது. பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விலகி தலைநகரின் சாலைகளில் தன் எதிர்காலத்தைக் கழிக்கலாம் என்ற முடிவை ஒரு அமாவாசை நள்ளிரவில் எடுத்தார். ஆனால் அது எத்தனை வலி மிகுந்தது என்று சொந்த மண்ணை இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குப் புரியக்கூடும்.

மாடுகளும் உழவுக்காக விவசாயிகளும் அதிகாலையிலேயே எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு நாளின் துவக்கத்தில் தில்லிக்குச் செல்லும் ஒரு ரயில் வண்டியில் தன்னிடம் இருந்த துணிமணிகளோடும் நம்பிக்கைகளோடும் பயணித்துக்கொண்டிருந்தார். தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மண் தன் காலடியிலிருந்து நழுவி உதிர்ந்து அவர் பார்வையிலிருந்து கரைந்து பரந்த நீலவானத்தின் கீழே ஒரு புள்ளியாய் மறைந்துபோனது. 

மறுபடியும் சில காலங்களுக்குப் பின் சொந்த கிராமத்துக்கு வரவேண்டும் என்ற ஆசையோ இலக்கோ நிச்சயமாக அவரிடம் அப்போது இல்லாதிருந்தது. கண்களின் விளிம்புகளில் ஈரம் கசிந்திருந்தது. கண்களை மூடிக்கொண்டு தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு தன்னைவிட்டுப் போய்விட்ட மனைவிகுழந்தைகளின் முகங்களை நினைத்தபடி  உறங்கிப்போனார்.

################
ன்றைக்கு மிக வினோதமான ஒரு அமைதியை அதிகாலையில் உணர்ந்தார் மாரிமுத்து. சாலைகளில் போதுமான நடமாட்டம் இல்லை. தேநீர்க்கடைகளில் மக்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு ஏதோ புதிர் போல சூழல் மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. தன்னுடைய சிற்றுண்டிக் கடையை நாடி வருபவர்களை இன்று அதிகமாய்க் காணவில்லை.

சாலைகளில் திரியும் நாய்களிடம் கூட ஒரு பீதியும்குழப்பமும் தெரிகிறது. அமைதியான தில்லிக்கு என்னதான் ஆனதுஆம்புலன்ஸ் செல்லும் கண்மூடித்தனமான வேகத்தில் அரசு வாகனங்கள் செல்கின்றன. எல்லாக் காவலர்களும் கையிலுள்ள கைத்தடியை சுழற்றிக்காட்டியபடியே விரைகின்றனர். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் யார் யாரெல்லாமோ கைது செய்யப்பட்டிருப்பதாய் வதந்திகள் பரவினாலும் வானொலி தனக்கெதுவும் தெரியாததாய்க் கைவிரிக்கிறது. பத்திரிகைகளில் வரும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வெளியிடப்பட்டு மக்களை மகிழ்வித்தன. மாலை நெருங்கும்போது எல்லோர் மனதிலும் இனம்புரியாத ஒரு பயமும் எப்போது விடியுமோ என்ற தவிப்பும் இருந்ததாய்ச் சொன்னார் மாரிமுத்து.  

திடீரென ஊளையிட்டபடி ஒரு காவல்துறை வாகனம் ஹிந்தியில் எச்சரித்தபடி வருகிறது. சாலைகளில் கூட்டம் கூடக் கூடாது என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் எந்த விசாரணையின்றியும் கைது செய்யப் படுவார்கள் என்றும் அவரவர்கள் தத்தம் வேலைகளைப் பார்க்கச் செல்லவேண்டுமென்றும் அறிவிப்பு திரும்பத் திரும்ப ஒப்புவிக்கப் படுகிறது.மக்களின் முகத்தில் காவல்துறை அறிவிப்பின் மீது உண்டான வெறுப்பு காறிஉமிழ்தலில் முடிகிறது.

##################
சாக்கடையில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. பன்றிகள் உருமிக்கொண்டிருக்கின்றன. குடிசைகளில் குழந்தைகள் பசியால் கதறுகின்றன. அறுவை சிகிச்சையின் வேதனையும் வெறுப்பும் ஆண்களைக் குலைத்திருக்கின்றன.குடிசைகளை ஒழித்து பிச்சைக்காரர்களையும் ஏழைகளையும் கண்காணாத இடத்துக்குக் கொண்டு விட்டுவிட்டு வரும் திட்டத்தின் படி அநேகமான குடிசைகள் அல்லும் பகலுமாய் ஈவிரக்கமின்றி பிய்த்தெறியப்படுகின்றன.

நாளைக்கென்ன என்றும் எங்கேயென்றும் தெரியாத குடிசை மக்கள் தங்களின் மிச்சமிருக்கும் சொத்துக்களான தட்டுமுட்டுச் சாமான்களையும்துணிமணிகளையும் கட்டிச் சுமந்து வேறொரு புறம் நகர எத்தனிக்கையில் இங்கே வராதே போ என்ற மிரட்டல் அவர்களை யாரின் பார்வையும் படாத இன்னொரு மூலைக்குக் கொண்டு சென்று கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்துகிறது. 

சற்றைக்கெல்லாம் மற்றொரு கண்ணுக்கு அருவெறுப்பான இந்தக் கூட்டத்தின் மீது பார்வை விழுகிறது. பகலிலும் இரவிலும் வானத்தின் கீழ் வாழ்க்கை என்பதாய் எதிரில் தெரிகிறது எதிர்காலம். நேரம் காலம் தெரியாமல் சனியன் பிடித்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை பசிவேறு வந்துவிடுகிறது. மற்றொரு புறம் காய்ச்சலும் வயிற்றுப்போக்கும். 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல எதையும் பற்றிய கவலையின்றிப் பிசாசு போலப் பிடித்துக்கொண்ட மழை இடிமின்னலுடன் அவர்களை நனைக்கிறது. காலம் நகர்கிறது. இருள் சூழ்கிறது. 

##########################
ற்றுத் தொலைவில் அதே நகரின் மற்றொரு எல்லையில் குடியரசுத் தலைவரின் பரந்து விரிந்த மாளிகையின் புற்பரப்பில் ஸ்வீடனின் அதிபருடன் குடியரசுத்தலைவர்பிரதம மந்திரி உள்ளிட்ட நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது குடிமகன்களும்மகள்களும் தேநீர் விருந்துக்கு முந்தைய பரஸ்பர அறிமுக விழாவில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

ஆட்சியாளர்களின் கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் வறுமையும்ஏழ்மையும் காலங்காலமாக மறைத்துவைக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இருப்பிடம் தரப் போதுமான பரப்பில் அமைந்த குடியரசுத் தலைவரின் மாளிகைத் தோட்டங்களிலிருந்து அவர்களின் நாசிகளைத் துர்நாற்றம் தாக்காத வகையில் பெயர் தெரியாத விதவிதமான பூக்களும் அவற்றிலிருந்து பரவும் நறுமணமும் பரவியிருக்கின்றன. எந்த மாசும் மருவுமற்ற வெண்ணுடைகளில் காலணியின் மெருகு கலையாத நளினமான நடையுடன் கைகளில் உறை அணிந்த அதிபர்களின் உதட்டைக் காயப்படுத்தாத குமட்டும் மென் புன்னகை கொத்துக்கொத்தாக மிதக்கிறது. 

###########################
றிமுகம் முடிந்தபின் நன்கு குளிரூட்டப்பட்ட அறையில் புதையும் இருக்கைகளில் எல்லோரும் அமர்ந்து கொள்ள அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஒரு திரைப்படம் திரையிடப்படுகிறது.

பதினைந்தடி நீளமுள்ள காரிலிருந்து நாட்டின் பட்ஜெட்டையும் மிஞ்சும் தொகைக்கான கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும் இன்னும் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படாத தலைவர் மலர்ச்சியுடன் வந்திறங்கநாட்டின் பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகைக்கும் சற்றே கூடுதலான தொகைக்கான ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைச்சாலையில் நீண்ட வேதனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்து தன் அரசியல் பணியை விட்ட இடத்திலிருந்து தொடரும் மந்திரி வந்து புன்னகை மலர வரவேற்கிறார். 

இப்படித் துவங்கும் திரைப்படம் வெளிநாட்டிலிருந்து வரும் அதிபருக்கு தன் சாகஸங்களை நம் நாட்டின் அரசியல்தலைவர் பயிற்றுவிப்பது போலத் தொடர்ந்து ஒரு பெரிய சாகஸவீரனின் முன்னே அந்த அதிபர் தலைவணங்கிப் பணியும் இறுதிக்காட்சியுடன் திரைப்படம் முடிய மிகுந்த கரவொலியுடன் திரைப்படம் முடிந்தது.

அதிபர் ஸ்வீடிஷ் மொழியில் திரைப்படம் மிகுந்த பிரமிப்பைத் தருவதாகவும்இந்தத் திரைப்படத்தால் உருவாக இருக்கும் எந்தப் பெரிய கறுப்புப் பணத் தொகையையும் தன் நாடு வரவேற்குமெனவும்இப்போது போலவே ரகசியம் எப்போதும் காக்கப்படுமெனவும் துபாஷியிடம் கூற ஹிந்தியில் அதைப் பிரதமருக்கு மொழிபெயர்த்தார் துபாஷி.

துபாஷியின் மொழிபெயர்ப்பை ஒட்டுக்கேட்ட மாரிமுத்து ”அடங் கொக்கா மக்கா?” என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாலும் அது தமிழ் அதிகம் தெரியாத அரசியல் வாதிகளிடம் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. 

###########################
நாட்டின் எல்லாச் சிறைகளும் துரோகிகளாலும் தீவிரவாதிகளாலும் நிரம்பிவழிகின்றன. அலுவலகங்கள் சரியான நேரத்துக்கு இயங்குகின்றன. யாரும் விடுப்பெடுப்பது இல்லை. யாரும் தேநீர்க் கடைகளில் கூடி அரட்டையடிப்பதில்லை. ரயில்களும் பேருந்துகளும் குறித்த நேரத்தில் இயங்குகின்றன. 

உணவுநிலையங்களில் உணவுப்பொருள்களின் தரம் முன்னெப்போதுமில்லாத வகையில் சிறப்பாக இருக்கின்றன. குடிமைபொருட்கள் சரியான எடையும் தரமும் கொண்டவையாய் இருக்கின்றன. 

நாம் மிகக் கடுமையான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். நம் அண்டை நாடுகளிடமிருந்து கடுமையான சவாலையும் நெருக்கடியையும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அவரவர்கள் கடமையை உணர்ந்து நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க அயராது உழைக்கவும் தியாகம் செய்யவும் தயாராக வேண்டும். நாட்டின் பதுக்கல்காரர்களையும் கறுப்புப்பண முதலைகளையும் வேட்டையாட அரசு இயந்திரங்கள் முழுமூச்சாக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. நம் நாடு உற்பத்தியிலும் பொருளாதார மேம்பாட்டிலும் தன்னிறைவு அடையும் வகையில் இருபது அம்சத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. 

இதைக் கடும் ஒழுக்கத்துடன் நாம் பின்பற்ற வேண்டும். வங்கிகள் நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க லோன்மேளாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.ஜனார்தன் பூஜாரி- இதைக் கொஞ்சம் கவனியுங்கள். எல்லோருக்கும் ஏன் என்னவென்று கேட்காமல் கடன் அளியுங்கள். ஒவ்வொரு வங்கியிலும் இருபது அம்சத் திட்டத்தின் கட்டளைகள் கண்பார்வையில் படும்படித் தொங்கவிடப்படவேண்டும். இந்திராதான் இந்தியா. இந்தியாதான் இந்திரா.

ஒலிபெருக்கியின் முன்பாக மாநிலம் தவறாது அந்தந்த மொழிகளில் மேற்கண்ட உரை முழங்கப்படவிவரம் தெரியாது ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்த உரைகளைக் கேட்பதற்காகப் பயணம் மேற்கொண்ட மாரிமுத்து ஒரு மாதத்துக்குப் பின் ஒரு நிருபர் அவரின் பயண அநுபவம் பற்றிக்கேட்டபோது இப்படிப் புலம்பினார்.

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் விதம்விதமாக நமது கரன்ஸித் தாட்களில் இடம்பெற்றிருந்தாலும் எப்படி ஒரே மதிப்பைத் தருமோ அதுபோல நெருக்கடி நிலை பற்றிய விளக்கக்கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி விளக்கப்படுகிறது என்றறிய பத்தாயிரக் கணக்கான ரூபாயைச் செலவழித்த எனக்கு இந்த தண்டனை தேவைதான்.” 

##########################
ண்டன் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் டேவிட் சல்போர்னை நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது ஒரு வெளிநாட்டுப் ப்ரதியை வரவழைத்து அவரை நன்றாக கவனித்து உலக நாடுகளின் வாயை அடைக்கமுடிவெடுத்து - ராஜபக்ஸ செய்வது மாதிரி- இந்திய அரசு வரவழைத்தது. 

இந்திய அரசின் செலவில் அவர் நாடுமுழுவதையும் சுற்றிப் பார்த்தார். தாயகம் திரும்பும்போது இந்திய அரசால் அளிக்கப்பட்ட ஒரு மாலை விருந்திலும்பின்னர் லண்டன் பர்மிங்காம் அரங்கிலும் அவர் உரையாற்றினார். பி.கே.பிர்லாஆர்.கே.தவன் முன்னிலையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆற்றிய அவருடைய உரையின் ஒரு பகுதியை மாரிமுத்து நமக்காக இங்கே மொழிபெயர்த்துத் தருகிறார்.

பி.கே. பிர்லா அவர்களேஆர்.கே.தவான் அவர்களேஇந்திய நாட்டின் செலவில் எங்களை வரவழைத்தீர்கள். கடந்த மூன்றுமாதமும் காஷ்மீரிலிருந்துகன்யாகுமரிவரை சுற்றிப்பார்க்க வாகன வசதிஉண்ண உணவுதங்குமிடம் கொடுத்து எந்தக்குறைவுமின்றிப் பாதுகாத்தீர்கள். இந்த நெருக்கடிநிலை சம்பந்தமாக உலக அரங்கில் பேச வாய்ப்பும் அளித்தீர்கள். 

எங்களை இவ்வளவு நேர்த்தியோடு கவனித்த உங்களிடையே சில உண்மையான செய்திகளைக் கூறிவிடுவதுதான் எனக்குச் சரியென்று படுகிறது. இந்த மாலை விருந்தில் என்னுடைய உரையைக் கேட்டபின்னால்நான் ஒரு நன்றிகெட்டவன் என்று நீங்கள் கருதுவீர்களேயானால்அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்யமான அமைதியே தோன்றுகிறது. அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதி. 

இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளாலும்சமூகக் குற்றவாளிகளாலும் நிறைந்து இருக்கவேண்டியவை. மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும்அவர்களின் இயக்கங்களும் முடக்கப்பட்டுஅதன் ஊழியர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறைப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. 

சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும்வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள் சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்தது. இதை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்

(தொடரும்)

கருத்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தியாவில் அந்தக்காலக்கட்டத்தில் இருந்த நெருக்கடி நிலைமையைப் பற்றி வெகு அழகாகக் கோர்வையாக புட்டுப்புட்டு வைத்துள்ளது மிக அருமையாக உள்ளது.

மாரிமுத்துவின் கதாபாத்திரம் சூப்பர்.

தொடரும்....
வை.கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்யமான அமைதியே தோன்றுகிறது.

அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதி.

இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளும், சமூகக் குற்றவாளிகளும் நிறைந்து இருக்கவேண்டியவை.

மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும், அவர்களின் இயக்கங்களும் முடக்கப்பட்டு, அதன் ஊழியர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறைபட்டிருப்பதைக் காணமுடிந்தது.

சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும், வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள், சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்தது.

இதை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்”//

எவ்வளவு தில்லாக இதை அவர் சொல்லியுள்ளார்! ;)))))

பாராட்டப்பட வேண்டியவர் தான்.

மிக நல்ல பதிவாக, உண்மையை உண்மையாக எழுதியுள்ள, தங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இன்றைய இளைஞர்களுக்கு இவையெல்லாம் சரிவரத் தெரிய வாய்ப்பில்லை. தங்களின் இந்தப் பதிவினைப்பார்த்தாவது தெரிந்து கொண்டால் நல்லது.

தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், சார். சமீபகால சரித்திரத்தை அனைவரும் உணரட்டும்.

ஆனால் இவ்வளவு பெரிய நீண்ட பதிவாக இல்லாமல் 2 பதிவுகள் ஆக்கி தொடரும் போட்டுவிட்டால் படிக்க சற்று அயர்வு இல்லாமல் இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

தப்பாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

வாழ்த்துகள்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
முதல் பின்னூட்டமிடும் சுறுசுறுப்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி வை.கோ. சார்.

நெருக்கடிநிலை குறித்து நிறையத் தகவல்கள் இருந்தாலும் அதை வேறொரு கட்டுரையில் பயன்படுத்தலாம் என்று ஆசைப்படுகிறேன்.ஆனால் நிச்சயம் எழுதுவேன்.

ஒவ்வொரு அத்யாயமாக 60 அத்யாயங்கள் திட்டமிட்டிருப்பதால் ஒரு அத்யாயத்தையும் இரண்டாகப் பிரிக்க மனம் வராது அதே நீளத்துடன்.

பொறுத்துக்கொள்ளுங்கள்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நம் நட்புக்கும் அனுபவத்துக்கும் இடையில் நாகரீகமான அபிப்ராயங்களை கருத்துக்களைச் சொல்லும்போது மன்னிப்பு என்ற வார்த்தை கொல்லன்பட்டறையில் ஈ மாதிரி பொருத்தமில்லாப் பொருத்தமாகத் தெரிகிறது.

உங்கள் அபிப்ராயங்கள் எத்தகையதாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிவிக்க எந்த நிபந்தனையும் இல்லை வை.கோ.சார்.
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னிக்கு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன் பார் என்று என் மாமா என் கையைப் பிடித்து அழைத்துப் போவார். என்ன இடமென்று கடைசிவரை சொல்லமாட்டார். மெரினா பீச், திருநீர்மலைக் கோவில் குகை, திரிசூலம் பல்லாவரம் மலைச் சுரங்கப்பாதை, கனிமரா நூலகம், தன்னுடைய போர்ஜிங்க் கம்பெனியின் லேத்... பெரும்பாலும் பிரமிப்பூட்டும் இடமாகவே இருக்கும்.
அந்த உணர்வோடே தக்ஷிணாயனம் தொடர்கிறேன்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களைப் போன்ற முதிர்ந்த ரசனை பெற்றவர்களின் வார்த்தைகள்தான் என்னை வழிநடத்திச் செல்லும் இன்னுமொரு 55 அத்யாயங்களுக்கு என திடமாக நம்புகிறேன் அப்பாஜி.

தொடர்தலுக்கு அநேக நன்றிகள்.

பிரபலமான இடுகைகள்