22.6.12

மயிலாப்பூரின் மூன்று சிலாசாசனங்கள்


மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசிக்கப் போயிருந்தேன். கபாலியின் சந்நிதிக்குள் எப்போதும் போல நுழைய நேர்கையில் இத்தனை நாள் என் பார்வையில் தப்பிய இரு சிலாசாசனங்கள் வலமும் இடமுமாகக் கண்ணில் பட்டன.

மேலோட்டமாகக் கவனித்துவிட்டு தரிசனம் முடித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்ளலாமென நினைத்தேன். அதே போல கற்பகாம்பாளின் சந்நிதியில் நுழைகையில் வலப்புறம் மற்றொரு சிலாசாசனம். ஆக தரிசனத்தை முடித்து வந்தபின் குறிப்பெடுத்துக் கொள்ள ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆனது.

முடிந்தபின் ஆளரவமற்ற நூறு வருடங்களுக்கும் முந்தைய தீவட்டிகளின் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் ருத்திர கோஷங்களுக்கு நடுவே இறைவனையும் இறைவியையும் வழிபட்டுமுடித்து அம்சை பண்ணப்பட்ட மிளகோரையை ருசித்தபடி ப்ரஹாரத்தில் என்னைக் கிடத்தியது போலுணர்ந்தேன்.

இந்த சிலாசாசனங்கள் பிழைகளோடும், அக்காலத்தைய மொழி உபயோகங்களோடும், நம் முன்னோர்களின் ஈரமிக்க மனதோடும் காலத்தின் சாட்சிகளாக யார் கண்ணிலும் படாமல் நின்றுகொண்டிருக்கின்றன.

அந்த மூன்று சாசனங்களையும் அதில் செதுக்கப்பட்ட உளியின் இசையோடு அதன் மொழியோடு படியுங்கள்.

கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் நுழைகையில் இடதுபுறம் முதலாம்
================================================
சாசனம்.
========


சிவமயம்

”ஸ்வஸ்திஸ்ரீ விஜயாற்புத கலியுகாதி 4997க்கு மன்மத வருஷம் பங்குனி 5 சோமவாரம் திருமயிலாப்பூர் வடகூர் இராச்சியப்ப முதலியார் வீதி 4வது நெம்பர் வீட்டிலிருக்கும் நல்வேளாள மரபு சிவகோத்திரம் ஆண்டி சுப்பராய முதலியார் குமாரர் ஆறுமுகம் முதலியார் எழுதிவைத்த சிலாசாசனம்.

செங்கல்பட்டு ஜில்லா சைதாப்பேட்டை தாலுக்கா 181வது நெம்பர் ஊரூர் கிராமத்தில் சர்வே நெம்பர் 36-38 பட்டா நெம்பர் 20ல் அடங்கிய ஏகர் 1.4 சமல் 40க்கு ரூபா 2500 மதிப்புள்ள என்னுடைய தென்னந்தோட்டத்தை திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் பிரம்மோற்சவத்தில் முதல்நாளாகிய துவஜாரோகணங் காலை மாலை மஹோற்சவங்களுக்கும், திருமயிலை நாட்டுசுப்பராய முதலியார் வீதி தென்னண்டை வாடை சர்வே நெம்பர் 251ம் டோர் நெம்பர் 18 சர்ட்பிகேட் நெம்பர் 1441ல் அடங்கிய மனை 1 குழி 23 3/8 உள்ள ரூபா 500 மதிப்புள்ள என்னுடைய வீடு, மனையை மேற்படி தேவஸ்தான அர்த்தஜாமபூஜையில் பிரதிதினம் மிளகோரை* அம்சை* பண்ணி தேசாந்திரிகளுக்கு வினியோகிக்கவும் தான சாசன சகிதம் நான் மனப்பூர்வமாக தத்தஞ் செய்து மேற்படி பூஸ்த்திகளை* தேவஸ்தான ஸ்வாதீனம் செய்துவிட்டேன்.

இவைகள் தவிர ரூபா 3000 மதிப்புள்ள இறத்தன மகா கெண்டியும்* சமற்பித்திருக்கிறேன்.

1896 மார்ச்சு 16. ஆ.ஆறுமுகமுதலியார்.”

கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் நுழையுமுன் வலதுபுறம் இரண்டாம்
================================================
சாசனம்.
=======

சிவமயம்

”ஸ்வஸ்திஸ்ரீ விஜயாற்புத கலியுகாதி 5019க்கு காளயுக்தி கார்த்திகை மீ 17 சோமவாரம் திருமயிலாப்பூர் சாலை வீதி 5வது நெம்பர் வீட்டிலிருக்கும் சோழியவேளாள மரபு சிவமதம் காலஞ்சென்ற ஏ. ராமசாமி முதலியார் பாரியாள் அம்மாயி அம்மாள் யெழுதி வைத்த சிலாசாசனம்- மதராஸ் செங்கல்பட்டு டிஜிஸ்டிரேஷன் டிஸ்டிரிக்டு தென்மதறாஸ் சப் டிஸ்டிரிக்டைச் சேர்ந்த சென்னப்பட்டணம் திருமயிலாப்பூர் முத்துக்கிராமணி தெருவில் ராமசாமி செட்டியார் வீடு மனைக்கும் யென்னுடைய 17-18வுள்ள வீடு மனைக்கும் அதைச் சார்ந்த இரு கடைகளுக்கும் வடக்கு, செயிந்தோம்* ஸ்கூலுக்கு தெற்கு, வெங்கடாசலபிள்ளை தென்னந்தோப்பு மனைக்கு கிழக்கு, செயிந்தோம் ஐறோட்டுக்கு* மேற்கு இந்த நாற்பாங்கெல்லைக்குள்ளும் கலைக்டர் சர்ட்ட்பிகேட் நெம்பர் 837ம் பழய சர்வே நெ. 1681& 1682ம், புது சர்வே நெம்பர் 2574ம், முனிசிபல் நெம்பர் 17-18வுள்ள தென்னந்தோப்பு மனைக்கு மதிப்பு ரூபா 6000 வுள்ளதை திருமயிலாப்பூர் ஸ்ரீ கர்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வர சுவாமியார் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் காலை மாலை நடக்கும் மகோற்சவங்களுக்கு குறையில்லாமல் நடந்தேரி வரும் பொருட்டு தானசாசன சகிதம் நான் மனப்பூர்வமாக தத்தம் செய்து மேற்படி பூஸ்த்தியையும் அதின் தஸ்த்தாவேசுகளையும் மேற்படி தேவஸ்தான சுவாதீனம் செய்துவிட்டேன்.

இது தவிர சுமார் 500 ரூபா மதிப்புள்ள பொன் தாலிமாலையும், கல்லிழைத்த மோப்பும்* சமர்ப்பித்திருக்கிறேன்.

5019/1918
அம்மாயி அம்மாள் கைனாட்டு*.
மயிலாப்பூர்.

கற்பகாம்பாள் சந்நிதிக்குள் நுழைகையில் வலதுபுறம்
=========================================
மூன்றாவது சாசனம்:
==================


சிவமயம்
ஸ்ரீ கற்பகாம்பாள் ருத்திரவேத பாராயண பாடசாலை

1933ம் வருடம் மே மீ 17க்குச் சரியான கலியுகாதி 5034 ஸ்ரீமுக வருஷம் வையாசி மீ 4 புதவாரம் தாச்சி அருணாசல முதலி தெருவு 12ம் நெம்பர் வீட்டிலிருக்கும் மயிலை சின்னண்ண ஏகாம்பர முதலியார் இரண்டாவது குமாரர்.ம.சி.திருவேங்கட முதலியார் எழுதி வைத்த சிலாசாசனம். என் பாரியாள் ம.சி.துரை அம்மாள் அனித்திய காலத்தில் அபிப்பிராயப்பட்டபடி நானும் அதற்கு சம்மதித்து இன்று தேதியில் ஸ்ரீ.கற்பகாம்பாள் ருத்திர வேத பாராயண பாடசாலை என்ற பெயருடன் ஏற்படுத்தி ஸ்ரீ.கபாலீசுவரர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாகிய மகாஸ்ரீஸ்ரீ. அ.வெங்கடசுப்பு முதலியார், மகாஸ்ரீஸ்ரீ.ம.நா.அண்ணாமலை முதலியார் ஆகிய இவர்களிடம் சப்-ரிஜிஸ்டிரார் முன்னிலையில் பத்திரம் ரிஜிஸ்தர் செய்து மூலதனமாக ரூ.10,000.00 கொடுத்துவிட்டேன்.

மேல்கண்ட ரூபாய் பதினாயிரத்துக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.50.0.0 (ஐம்பதுக்கு) குரையாமலும் அதற்கு மேல்வரும் வரும்படி பூராவாகவும் மேல்கண்ட வேத பாராயண பாடசாலைக்கு உபயோகித்து ஸ்ரீ கபாலீசுவரர் தேவஸ்தானத்தில் நித்திய கட்டளையில் நடந்தேரி வரும் 4 கால அபிஷேக பூஜாகாலங்களில் 5 பேர்களுக்கு குறையாமல் ருத்திர பாராயணம் செய்யவேண்டியது.

மேற்கண்ட தர்மகர்த்தர்களும் அவர்களுக்குப் பின்வரும் தர்மகர்த்தர்களும் சந்திர சூரியாள் உள்ள வரையில் சரிவர நடத்த வேண்டியது. மேற்கண்ட தர்மத்தை சரிவர நடத்தாவிட்டால் என்னுடைய வார்சுகளும், தரிசனார்த்திகளும் கேட்க சகலவித பாத்தியதைகளும் உண்டு.

இந்தப்படிக்கு நான் அடியில் கண்ட சாக்ஷிகள் முன்னிலையில் என் மனப்பூர்வமாக கையொப்பமிட்ட சிலாசாஸனம்.

சாக்ஷிகள்: ம.சி. திருவேங்கடமுதலியார்
ம.சுப்ரமண்ய குருக்கள்
பரோபகார சிந்தாமணி ராவ் பஹதூர் A. கிருஷ்ண ஸாமி ஐய்யர்.
திருப்புகழ்மணி டி.எம். கிருஷ்ணஸாமி ஐய்யர்
கர்மரக்ஷாமணி. K. பாலசுப்ரமண்ய ஐய்யர்
ம.சி.சம்பந்த முதலியார்.

############
மூன்று சாசனங்களையும் அதன் காலவரிசைப்படியே காரணத்தோடேயே கொடுத்திருக்கிறேன்.

சில எண்ணங்கள்:

1. முதலிரண்டு சாசனங்களும் கலியுகத்தை முன்னிறுத்தியே காலத்தைச் சொல்ல வருகிறது.

2. மூன்றாவது சாசனம் துவக்கமே ஆங்கில வருடக் குறிப்புடன் துவங்குவதோடு, தேதி என்கிற பிரயோகத்துடன், ’அம்சை’ எனப்படும் வைணவ அடையாளம் கொண்ட வார்த்தையையும்
உபயோகப் படுத்துகிறது.

3. முதலிரண்டு சாசனங்களாலும் கோத்திரம் மரபு குலம் போன்ற தகவல்களை வலிந்து மறைக்காது இயல்பாய்ச் சொல்ல முடிகிறது.

4. முதலிரண்டு சாசனங்களில் எதிர்கால சந்ததிகளின் மேல் காணப்படும் நம்பிக்கை, மூன்றாவது சாசனத்தில் தேய்ந்து போய் சந்திர சூர்யாளையும் அதையும் கடந்து ஐந்து சாக்ஷிகளையும் அழைக்கிறது. அக்கௌண்டபிலிடியை உருவாக்க நினைக்கிறது.

5. தர்மகர்த்தர்கள் உருவாகி நிர்வாகத்தைக் கையிலெடுத்திருப்பதால் அந்த அவநம்பிக்கையா? தெரியவில்லை.

6. கடைசியாய் மயிலாப்பூரின் நூறு வருஷத்துக்கு முந்தைய பொருளாதாரம். தங்கம், ரத்தினம் சகட்டுமேனிக்கு சல்லிசான விலையில். நிலம், தென்னந்தோப்பு அடிமாட்டுக் கிரயத்துக்கு என பொறாமைப்பட வைக்கிறது என்றாலும் வழக்கம் போல அதற்கெதிர்ப்பதமாய் மாதவருவாய் கவைக்குதவாத ஐந்து ரூபாயாய் இருந்திருக்கும்.

இதுபோக இன்னும் என்னென்னவெல்லாமோ கற்பனை உதிர உதிரக் கோயிலைக் கடந்து வந்துகொண்டிருந்தேன். அக்காரவடிசலின் அடிநாக்குத் தித்திப்பாய் இன்னமும் இனித்துக்கொண்டிருக்கிறது சாசனங்களின் மொழி. இதோ சைக்கிளில் மெல்லிய தூறலில் நனைந்தபடி இரவின் கம்பளத்தில் மறைந்துகொண்டிருக்கிறேன்.

மேற்கண்ட சிலாசாசனங்களின் அபிலாஷைகள் அமலில் இருக்கின்றனவா அல்லது ஸ்வாஹா*வா என அடுத்தமுறை கபாலியைப் பார்க்கும் போது ஞாபகமாய்க் கேட்க வேண்டும்.

சில குறிப்புகள்:
=============
மிளகோரை- மிளகு சாதம்
அம்சை - நிவேதனம், படைத்தல்
மோப்பு - முகப்பு, டாலர், பதக்கம்
பூஸ்த்தி- நிலம், மனை போன்ற சொத்து (ஆஸ்த்தி-பணம்)
இறத்தன மகா கெண்டி- பெரிய இரத்தின கெண்டி
ஐறோட்டு- ஹைரோட், நெடுஞ்சாலை
கைனாட்டு- இடதுகட்டைவிரல் ரேகை பதித்தல்
செயிந்தோம்- சாந்தோம்.
ஸ்வாஹா- ஏப்பம், ஆட்டையைப் போடுதல்

21 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

சிலாசாசனங்கள் படித்து சிலிர்த்தேன். தங்களைப் போன்றோரால் வாசிக்கப்படும் பொருட்டு, காலத்தின் சாட்சியங்களாய், தர்மத்தின் சாட்சியங்களாய், தங்கள் வரிகளின் படி ஈரமனங்களின் சாட்சியங்களாய் காலம் காலமாய் காத்திருக்கும். நன்றி சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

முதலிரண்டு சாசனங்களில் எதிர்கால சந்ததிகளின் மேல் காணப்படும் நம்பிக்கை மூன்றாவது சாசனத்தில் தேய்ந்து போய் சந்திர சூர்யாளையும் அதையும் கடந்து ஐந்து சாக்ஷிகளையும் அழைக்கிறது. அக்கௌண்டபிலிடியை உருவாக்க நினைக்கிறது.

உங்களின் பொழிப்புரை புருவம் உயர்த்த வைக்கிறது.
மிளகோரை புளியோதரை அல்ல.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! மிகவும் பயனுள்ள பணி!பதிவும் கூட!---காஸ்யபன்.

நிலாமகள் சொன்னது…

மேற்கண்ட சிலாசாசனங்களின் அபிலாஷைகள் அமலில் இருக்கின்றனவா அல்லது ஸ்வாஹாவா என அடுத்தமுறை கபாலியைப் பார்க்கும் போது ஞாபகமாய்க் கேட்க வேண்டும்.//

:)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி. இன்னுமின்னும் இப்படிப் பட்ட சுவடுகளைத் தேடித் திரிவேன் உங்களைப் போல ஆராதகர்கள் இருக்கும் வரை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.

மிளகோரை புளியோதரை அல்ல.பலமுறை மிளகோரையைத் திருமடப்பள்ளியிலேயே ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமான் சேஷாத்ரி ஐயங்கார் கையால் நாவால் ருசித்திருந்தும் தெரிந்தே கையால் நேர்ந்த தவறு. திருத்திவிட்டேன்.

நள்ளிரவைத் தாண்டிய பதிவு. முடிக்கும்போது இரவு 1.30.கண்ணயர்ச்சி.

பாராட்டுக்கும் நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி காஸ்யபன் ஐயா.

உங்களின் ஆசி அயர்ச்சியை நீக்கிவிட்டது.

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, நானும் அந்த சிலாசாசனங்களைப் பார்த்திருக்கிறேன். படித்தும் இருக்கிறேன் ஆனால் என் சிந்தனை அதிகம் லயித்ததில்லை. உங்கள் பார்வையின் உன்னிப்பும் கவனத்தின் தீட்சண்யமும் எனக்கிருக்க வில்லை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்று நினைக்கிறேன். நுழைவின் இரு பக்கமும் சுவாமி விவேகாநந்தர் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்ட நினைவு. மனம் திறந்த பாராட்டுக்கள்

சுந்தர்ஜி சொன்னது…

நேரம் வாய்க்காமல் வேறேதோ வேலை உங்களை அழைத்துவிட்டதோ நிலாமகள்? :)))))யுடன் நழுவிட்டீங்களேப்பா!

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கு வரலாற்றின் மேல், நம் சுவடுகளின் மேலிருக்கும் ஈடுபாடு அதிகம். அவ்வளவுதான் பாலு சார்.

பார்த்தசாரதியும் இன்னொரு இடுகையில் வருவார். விவேகானந்தரின் சிகாகோ பயணத்துக்குப் பிந்தைய வரவேற்பு உரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதோடு இணைத்து ஒரு இடுகை எழுதுவேன் உங்கள் ஆசிகளோடு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிலாசனங்கள் ஒவ்வொன்றினையும் படிக்கும்போது ஆச்சரியம்.... எவ்வளவு பரோபகாரியாக இருந்திருக்கிறார்கள்.... கூடவே சந்திர சூரியர் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கவேண்டும் என எழுதி வைத்திருப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன்...

நமது கோவில்களில் எத்தனை எத்தனை சிலாசனங்கள்... பொக்கிஷங்கள் தான் இவை...

பத்மா சொன்னது…

சிலாசனம்னா முதல்ல என்னனே தெரில ..மூன்றையும் படித்து அதற்கு ஒரு பொழிப்புரையும் கொடுத்திருப்பது கிரேட் ஜி .தமிழ் நாட்டு கோவில் அனைத்திலும் இது போல் எத்தனை எத்தனை உள்ளனவோ? உங்கள் புளியோரையை சிதம்பரத்தில் சம்பா என்று சொல்வார்கள் ..அதற்கு கொஸ்து தான் ஜோடி ஹிஹிஹி ..

நிலாமகள் சொன்னது…

மிகமிக நுண்ணிய துகளாகிய //
மொழி ஒரு தடையாக//

இந்த சிலாசாசனங்கள் பிழைகளோடும், அக்காலத்தைய மொழி உபயோகங்களோடும், நம் முன்னோர்களின் ஈரமிக்க மனதோடும் காலத்தின் சாட்சிகளாக யார் கண்ணிலும் படாமல் நின்றுகொண்டிருக்கின்றன//

சிலாசாச‌ன‌ம் என்ப‌து க‌ல்வெட்டுக்கு அக்காவோ...
வ‌ல‌க்கை கொடுப்ப‌தை இட‌க்கை அறியாது த‌ர‌வேண்டுமெனினும் ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் த‌ம் த‌ர்ம‌ச்செய‌ல் ப‌ல‌ன‌ளிக்க‌ வேண்டுமென்ற‌ அவாவில் ந‌ம் முன்னோர் பெருமைக்க‌ன்றி (இன்ற‌ல்ல‌வா டியூப் லைட்டிலும் உப‌ய‌ப் பெய‌ர்க‌ளின் அடைச‌ல்) இப்ப‌டியான‌ சாச‌ன‌ங்க‌ளை செய்திருக்கின்ற‌ன‌ர்...! அவ‌ற்றில் பெண்க‌ளும் த‌ம‌க்குப் பாத்திய‌மான‌வ‌ற்றில் த‌ன்னிச்சையாய் த‌ர்ம‌ கார்ய‌த்துக்கு த‌ர‌ முடிந்த‌தை அறியும் போது பெண் சுத‌ந்திர‌மெல்லாம் அப்போதிருந்தே துளிர்த்து விட்ட‌தாய் தோன்றுகிற‌து ஜி!

மின்ன‌ஞ்ச‌ல் பார்க்க‌ வேண்டி இணைய‌ம் திற‌ந்த‌வொரு அவ‌ச‌ர‌ நொடியின் அதிய‌வ‌ச‌ர‌ மேய்ச்ச‌லின் நுனிப்புல்லாய் அந்த‌ ஸ்மைலி. துல்லிய‌மாக‌ க‌ண்டுபிடித்த‌ உங்க‌ நுண்ண‌றிவுக்கொரு ந‌ட்புநிறை ச‌ல்யூட்.

சித‌ம்ப‌ர‌ ச‌ம்பாவுக்கு சித‌ம்ப‌ர‌ கொத்சுவும் சேர்த்தா பிர‌சாத‌ம் வ‌ழ‌ங்குவார்க‌ள்...கோயில்க‌ளில்?!
சொல்லுங்க‌ ப‌த்மா:)

உமாமோகன் சொன்னது…

//இந்த சிலாசாசனங்கள் பிழைகளோடும், அக்காலத்தைய மொழி உபயோகங்களோடும், நம் முன்னோர்களின் ஈரமிக்க மனதோடும் காலத்தின் சாட்சிகளாக யார் கண்ணிலும் படாமல் நின்றுகொண்டிருக்கின்றன.//

ஆம் உண்மை. சென்னை விஜயங்களின் நேர இடுக்கின் துணுக்கில் கிடைத்த அவசர தரிசன வேளைகளில் காணக் கிடைக்காதவற்றைக் கண்டெடுத்துப் பொறுப்பாய்
அனுப்பியதற்கு பூஸ்தி ஏதும் எழுதித் தரலாம்.

அன்பின்
உமாமோகன்

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...


இன்றைய தலைமுறைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் கவனமும் கல்வித்திடடமும் கடைகட்டி வியாபாரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. நாம் இலக்கியத்தை மீட்டெடுக்கவேண்டாம். இதுபோன்ற சாசனங்களைக் குறிப்பிட்டுஅவற்றின் அறபுதத் தருணங்களைத் திறந்து காட்டினால் போதும். இன்னொரு வரலாறு இதுபோன்று கட்டமைக்கப்படவேண்டும் என்பதையே உங்களின் பதிவு வலியுறுத்துகிறது. மரபு இல்லாவிடில் நாமெல்ல மரத்துப்போனவர்களே மனித உரு கொண்டிருந்தாலும்.

அப்பாதுரை சொன்னது…

அவசரமா படிச்சுட்டுப் போனது.
இப்ப நிதானமா படிக்குறப்பவும் சில்லுனு இருக்குங்க - அந்த "மெல்லிய தூறலில் நனைந்தபடி இரவின் கம்பளத்தில்" வரி.

//தரிசனார்த்திகளும் கேட்க சகலவித பாத்தியதைகளும் உண்டு
போய் கேட்டா என்ன பதில் கிடைக்கும்னு நினைக்கிறீங்க? பாணியில அந்தக் காலத்துலயே public rights grant செஞ்சது பெரிய ஆச்சரியம்.

கோவிலுக்குப் போனமா கும்பிட்டு வந்தமானு இல்லாம உங்களுக்கு மட்டும் இதையெல்லாம் பாக்கணும்னு தோணுது பாருங்க.. அது!

அப்பாதுரை சொன்னது…

//.. அவ‌ச‌ர‌ நொடியின் அதிய‌வ‌ச‌ர‌ மேய்ச்ச‌லின் நுனிப்புல்லாய் அந்த‌ ஸ்மைலி.
nice.

vasan சொன்னது…

//செங்கல்பட்டு ஜில்லா சைதாப்பேட்டை தாலுக்கா 181வது நெம்பர் ஊரூர் கிராமத்தில் சர்வே நெம்பர் 36-38 பட்டா நெம்பர் 20ல் அடங்கிய ஏகர் 1.4 சமல் 40க்கு ரூபா 2500 மதிப்புள்ள என்னுடைய தென்னந்தோட்டத்தை திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர் பிரம்மோற்சவத்தில் முதல்நாளாகிய துவஜாரோகணங் காலை மாலை மஹோற்சவங்களுக்கும், திருமயிலை நாட்டுசுப்பராய முதலியார் வீதி தென்னண்டை வாடை சர்வே நெம்பர் 251ம் டோர் நெம்பர் 18 சர்ட்பிகேட் நெம்பர் 1441ல் அடங்கிய மனை 1 குழி 23 3/8 உள்ள ரூபா 500 மதிப்புள்ள என்னுடைய வீடு,

சென்னப்பட்டணம் திருமயிலாப்பூர் முத்துக்கிராமணி தெருவில் ராமசாமி செட்டியார் வீடு மனைக்கும் யென்னுடைய 17-18வுள்ள வீடு மனைக்கும் அதைச் சார்ந்த இரு கடைகளுக்கும் வடக்கு, செயிந்தோம் ஸ்கூலுக்கு தெற்கு, வெங்கடாசலபிள்ளை தென்னந்தோப்பு மனைக்கு கிழக்கு, செயிந்தோம் ஐறோட்டுக்கு மேற்கு இந்த நாற்பாங்கெல்லைக்குள்ளும் கலைக்டர் சர்ட்ட்பிகேட் நெம்பர் 837ம் பழய சர்வே நெ. 1681& 1682ம், புது சர்வே நெம்பர் 2574ம், முனிசிபல் நெம்பர் 17-18வுள்ள தென்னந்தோப்பு மனை.//

இந்த‌ ம‌னையும் தோட்ட‌ங்க‌ளும், என்ன நிலையில் யாரிட‌ம் இருக்கிற‌து?
திருமிகு கற்பகாம்பாளையும், திரு கபாலீஸ்வரரையும்,தவிர்த்து ம‌ற்ற‌வ‌ர் அறிந்திருக்க‌, அறிந்தாலும் தெரிவிக்க‌, சாத்திய‌முல்ல‌தா சுந்த‌ர்ஜி? ப‌ய‌னுள்ள‌ த‌ரிச‌ன‌ம். நாங்க‌ள் கோவிலுக்கு போவ‌தெல்லாம் ஒரு விஸிட், இல்லை வெஸ்ட்.

சிவகுமாரன் சொன்னது…

அதி அற்புதமான பணி .
இலக்கியம்,ஆன்மிகம் ,வரலாறு, ஆராய்ச்சி போன்ற பல பரிமாணங்களோடு இந்தப் பதிவு மனதைக் கொள்ளை கொள்கிறது.

Anonymous சொன்னது…

Thiѕ іnformation іѕ invaluable. Whеn can
Ι fіnd out morе?

Мy web page csmetropolitan.ro
Also see my site: augenlasern

Anonymous சொன்னது…

My brοtheг recommenԁed I mіght like thiѕ website.
He waѕ totallу right. This poѕt actually made
mу day. You cann't imagine simply how much time I had spent for this info! Thanks!

Here is my page - Chemietoilette
My webpage - Chemietoilette

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator