18.8.12

வள்ளலாரின் நித்ய கர்ம விதி

வள்ளலாரின் வாழ்க்கை எப்படி அமைந்தது? எப்போது பிறந்தார்? அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன?இந்த மாதிரி மனதில் எழும் கேள்விகளுக்கு இந்த இடுகையைப் பயன்படுத்தப் போவதில்லை. 

ஆனால் அவர் ஒரு மிகப் பெரிய சித்தர் என்பதிலும், தன்னுடைய வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தான் இதுவரை நம்பிய விஷயங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தன் புதிய நம்பிக்கையை முன்வைக்கும் இடத்திலும் அவர் மற்ற ஆன்மீகவாதிகளைக் கடந்து செல்கிறார். உருவ வழிபாட்டைக் கடந்து ஜோதி வழிபாட்டை நோக்கி நகர்கிறார்.        
                             
 //நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. 

நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.//-(வள்ளலார்- பேருபதேசம்)

அதுபோலவே, மூலிகைகளின் உபயோகம் குறித்தும், உடலைக் காப்பது குறித்தும், மூச்சுப் பயிற்சி குறித்தும் மிக விரிவாகவே வெளிப்படையாக நிறையப் பேசியிருக்கிறார். இவருக்கு முன்னால் வேறு எந்த சித்தரும் இப்படி வெளிப்படையாக இத்தனை சூட்சுமங்களைத் தெரிவித்ததில்லை.

ஆகவே வள்லலாரின் நித்ய கர்ம விதி என்பது ஒரு ரஸவாதம் போல மிக மிக அபூர்வமான ஒரு பயிற்சிக்கான விதியாகத்தான் நாம் கொள்ள வேண்டும். இந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்து முறைக்கும் மேல் ஆதியோடந்தமாக வாசித்து விட்டேன். 

அவர் உபயோகித்திருக்கும் மொழியும், தன்னையே பரிசோதித்து அவர் கண்டு சொல்லியிருக்கும் விஷயங்களும் இன்னும் முழுமையாக சோதித்துப் பார்க்கப் படாமல், ஒரு குறிஞ்சி மலர் போலக் காத்து நிற்கிறது. இன்னும் 500 வருடங்கள் போன பின் மெல்ல விழித்தெழுந்து ஆஹா! 1800களிலேயே எப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார் வள்லலார் என்று நாம் வியந்து கொண்டிருப்போம். 

வழக்கம்போலவே கைக்கெட்டும் தூரத்தில் அமுதமே கிடைத்தாலும் நேரமில்லை என்ற சால்ஜாப்போடு அதைத் தவிர்த்துவிட்டு, பின்னால் நாம் தவிர்த்த விஷயத்தைப் பற்றியே நேரெதிராக விமர்சனமும் பண்ணுவோம்.  

இனி அவரின் நித்ய கர்ம விதியை முழுதுமாக ஊன்றிப் படியுங்கள். வேறு வழியில்லை. இது நீளமான பதிவென்றாலும் இதைப் பிரித்து எழுதினால் அதன் ஆர்வம் குறைந்து போகும். அதற்கடுத்து பொது விதியும், சிறப்பு விதியும் பற்றி இன்னொரு பதிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

கீழே இருக்கும் சாதாரண விதி அப்படியே வள்ளலாரின் நூற்றாண்டுக்கு முந்தைய சுவாரஸ்யமான மொழியில்.

1. சாதாரண விதி

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு,முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.*

பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும்.பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும். மலங்கழிக்கின்றபோது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். 

மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். ஜலம் தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்.


மலஜல வுபாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய் தொப்புள் - இவைகளில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றறத் துடைத்தல் வேண்டும். 

பின் வேலங்குச்சி, ஆலம்விழுது - இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து**, அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுளையிலை***முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு - இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.



காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது^^ மிகுந்த தீவிரமுமாகாது^^, முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும். 

அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்^. பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். 

பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. 

உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்#. அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். 

தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். 

வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். 

இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். 

வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். 

சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். 

புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். 

புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. 

மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும். 

சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, மேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. 

எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது##. 

சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம்^^^ பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். 

பகற் போஜனஞ் செய்த சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். 

பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது. பகற்போஜனஞ் செய்த பின், சற்று நேரங் கடவுளைத் தியானித்திருக்க வேண்டும். அதன் பின் எந்த வேலை செய்யினுந் தேக கரணங்களுக்கு மெலிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும் சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை - இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்###. 

இரவில் தயிர்*^, கீரை, வாயுவான பதார்த்தம், குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். 

சுமார் 12நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக் கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். 

தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். 

புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. 

தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்^*.

பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும். அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம். 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம். 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம் பக்ஷம். 

அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். 

தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும். புகைக்குடி, கஞ்சாக்குடி, கட்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக்குடி களாகா. 

மலஜலத்தைச் சிறிதும் அடக்கப்படாது#^. சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப்பழக்கஞ் செய்யக்கூடாது. எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ்செய்தல் வேண்டும்; சிவபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; அவசியம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* 1.இது இல்லத்தார்க்கு மட்டுமே விதித்தது. துறவறத்தார்க்குத் தாம்பூலம் தரித்தல் விலக்கு.

வெற்றிலையில் நுனியையும், காம்பையும் கிள்ளியெறிந்து விடவேண்டும். முதுகு நரம்பை நகத்தால் எடுத்து விட வேண்டும். பல் துலக்குமுன் தாம்பூலம் தரிக்கக்கலாகாது.

காலையில் பாக்கு மிகுதியாகவும், உச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ளவேண்டும். மென்றவுடனே முதல் இரண்டுமுறை ஊரும் நீரை விழுங்காது உமிழ்ந்து விடவேண்டும்.

தாம்பூலம் தரிக்கையில் முதலில் பாக்கைப் போட்டுக்கொள்ளாமல், முதலில் வெறும் வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, பிறகே பாக்கைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

** 2.இல்லத்தார் வேம்பு, வேல், பூல், ஆல், மா, அத்தி, தேக்கு, நாவல், ஆத்தி, கடம்பு, விளா, அசோகு, குருக்கத்தி, சண்பகம் முதலியன. இவை தாது புஷ்டியைத் தரக் கூடியவை.

துறவிகளுக்குப் பெருவாகை, நொச்சி, மருது, மகிழ், பெருங்குமிழ், புங்கு, நாயுருவி, கருங்காலி, கையாந்தரை, காட்டாமணக்கு முதலியன. இவை போகத்தில் இச்சையைக் குறைக்கக் கூடியவை.

பட்டமரம், பாளை, கைவிரல்கள், செங்கல், மண், மணல், சாம்பல், கரி ஆகிய எட்டும் இரு பிரிவினருமே பல் துலக்குவதற்கு ஆகாதன.

*** 3.கையாந்தரையும், தூதுளையும் ஞானப் பச்சிலைகள். இவற்றை வள்ளலார் அடிக்கடி வற்புறுத்துகிறார்.

 ^^4.ஆலசியம்-தாமதம். தீவிரம்- விரைவு. 

^ 5.மன்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்- பதார்த்த குண சிந்தாமணி. 

#6.உப்பு, புளி, மிளகாய் இவை உடலுக்குக் கேடு. புளிக்குப் பதில் எலுமிச்சையும், மிளகாய்க்குப் பதில் மிளகும் மிக உகந்தது.

## 7.பகல் உணவுக்குப் பின் -ஆழ்ந்த உறக்கமாக அன்றி-சற்றே துயில்வதும், இரவு உணவுக்குப் பின் சற்று உலாவுதலும் வேண்டும். (பகலுறக்கஞ் செய்யோம்- பதார்த்த குண சிந்தாமணி)

^^^8. 1ம் குறிப்பைப் பார்க்கவும்.

### 9.பகல் உணவிற் பாதியளவே இரவில் புசிக்க வேண்டும். அதுவும் 10 நாழிகைக்குள் புசிக்க வேண்டும்.

*^ 10.காலை மாலை யுறங்குவர் காரிகை
     கோலமேனி குலைந்தபின் கூடுவர்
     சாலி ராத்தயிர் சாதமொ டுண்பவர்
     மாலை நேரினும் மாது பிரிவளே.       -தனிப்பாடல் திரட்டு.

காலை மாலை உறங்குவோரும், விதவைகளையும் தம்மில் மூத்த பெண்களையும் சேர்வோரும், இரவு தயிர்சாதம் உண்போரும், திருமாலைப் போன்ற செல்வமுடையவராயினும் திருமகள் அவர்களை விட்டு நீங்குவாள்.

^* 11.இடது கையிற் படுப்போம்- பதார்த்த குண சிந்தாமணி

#^ 12.இரண்டடக்கல் செய்யோம்- பதார்த்த குண சிந்தாமணி.

( அந்தக் கதவுகளுக்குப் பின்னால்தான் வள்ளலார் முக்தி அடைந்தது)

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பகிர்வு ஐயா...

வாழ்த்துக்கள்... நன்றி...

G.M Balasubramaniam சொன்னது…


வள்ளலாரின் சாதாரண விதி...!தெரிந்து கொள்ள எழுதப் பட்டதா, பின் பற்றஎழுதப் பட்டதா.?தெரிந்துகொண்டேன். பின்பற்ற முடியாதது. வசன நடைக்கும் பாடல் வரிகளுக்கும் அப்பப்பா எவ்வளவு வித்தியாசம். ? பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

G.M Balasubramaniam சொன்னது…


வள்ளலார் இல்லறத்தவரா, துறவறத்தவரா. ?நான் வலையில் தேடவில்லை. தேக சம்பந்தப் பட்ட குறிப்புகள் காணப் படுகிறதே. !

Kuppu Veeramani சொன்னது…

வள்ளலார் மானுட மேன்மை குறித்து சிந்தித்தவர். எல்லை கண்டாரா , இதுவே நிறை என்று சொன்னாரா என்றெல்லாம் ஆராய தேவை இல்லை. உகந்ததெனில் கைகொள்ளல் பயன் ..வருணம் வள்ளலாரை இருட்டில் வைத்திருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

தேகசம்பந்தம் interesting. முயற்சி செய்து பார்க்கத் தோன்றுகிறது - இடது பக்க விவகாரம் தான் புரியவில்லை. okay,மூச்சை உள்ளேயும் வைக்காமல் வெளியேயும் விடாமல் - what?

அவர் கால உணவு வகை அறிவுரைகள் சுவாரசியம். பழம் சாப்பிடக்கூடாதெங்கிறாரே?

மலஜலம் கழிப்பதில் கண்ணாயிருக்கவேண்டும் என்கிறார் - அப்புறம் இடது கையை அங்கே வை வலது கையை இங்கே வை என்கிறார்.. கையை எங்கே வைக்கிறோம் என்றக் கலவரத்தில் கண்ணாயிருப்பது எப்படி?

சுழித்து ஒடும் ஆறுகள் இருந்த காலத்தில் வாழ்ந்தவர் வென்னீர் பற்றி எழுதியிருப்பது வசதியானவர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

eccentricity எல்லாருக்கும் பொது என்பது mildly consoling.

அப்பாதுரை சொன்னது…

இவர் தானே ராமலிங்க அடிகளார்?

சிவகுமாரன் சொன்னது…

அற்புதமான பகிர்வு . திருவருட்பா படித்திருக்கிறேன். ஆனால் இது புதிது. திருமந்திரத்தில் இந்த விசயங்கள் படித்திருக்கிறேன். இன்னும் படிக்கிறேன்.
நன்றி சுந்தர் ஜி.
அப்பாஜி... வள்ளலார் தான் இராமலிங்க அடிகளார். இந்திரா பார்த்தசாரதி வள்ளலார் வரலாற்றை நாடக் வடிவில் எழுதியிருக்கிறார். படித்திருக்கிறீர்களா ?

Sivamjothi சொன்னது…

நன்றி அய்யா.. இதனால் பலர் பயன் பெறுவார்கள்!!!

Unknown சொன்னது…

அப்போதிருந்த சூழலில் விதவைகள் பாதுகாப்பு கருதி அப்படி சொல்லப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். வேறு எதாவது காரணம் இருந்தால் தெளிவு படுத்த முடியுமா...?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...