என் நண்பர் ஆத்மாநாம்.

[ஸ்டெல்லா ப்ரூஸ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால் எழுதிய இறுதிக் கடிதம்:]

“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பது போல் என்னைப் பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து, பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான, இலக்கியத் தன்மையான காவியம். ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. தனிமைச் சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளைத் திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும் போது மரண விடுதலை பெறுகிறேன்.”

#

போன வருடம் என்னை அடைந்து என்னை அயரவைத்த புத்தக வரவு ஸ்டெல்லா ப்ரூஸ் கடைசியாக எழுதும்படியான “என் நண்பர் ஆத்மாநாம்” என்ற புத்தகத் தொகுப்புத்தான். நானும், தஞ்சாவூர்க்கவிராயரும் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குப் பயணித்த ஒரு ரயில் பயணத்தில் இருவருமாகத் தொடர்ந்து வாசித்து முடித்த புத்தகம்.

விருட்சம் சிற்றிதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
’என் நண்பர் ஆத்மாநாம்’, ‘சைவ உணவும் வேறு பல ஞாபகங்களும்’, ’கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள்’, ’ஜவஹர்லால் நேருவுக்கு நான் எழுதிய கடிதம்’, ’மரணங்கள்’ என்னும் தலைப்புக்களில் 103 பக்கங்களில் ஐந்து கட்டுரைகளும், அவர் மனைவி ஹேமாவின் சகோதரி ப்ரேமா த்யானேஸ்வரி எழுதிய “சாம்பல் நிறங்கள்” என்ற ஒரு சிறுகதையும், அவர் மனைவி ஹேமாம்புஜத்தின் ஆறு கவிதைகளும், ஸ்டெல்லா ப்ரூஸ் “ஹேமா இல்லை” என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதை என்று கணிக்க முடியாத கலவையாய் இந்தத் தொகுப்பு.

இதில் என்னை வசீகரித்தது ஸ்டெல்லா ப்ரூஸின் கட்டுரைகள்தான். நான் ஸ்டெல்லா ப்ரூஸை இதற்கு முன்னால் வாசித்தது இல்லை. அது என்னை அவரின் முந்தைய எழுத்துக்களைத் தேட வைத்தது. 

அவர் காளி-தாஸ் என்ற பெயரில் எழுதிய கணையாழியில், நானும் எழுதிய சில கவிதைகளின் மூலமாக சந்தித்திருக்கிறோம் என்பதையே அவரின் மரணத்துக்குப் பின்னரே அறிந்தேன். 

1970ல் ஜெயகாந்தனின் ஞானரதத்தில் அவரின் முதலாவது கதை ப்ரசுரமானது- ராம்மோகன் என்ற பெயரில். பொதுவாக எழுதுபவர்களைச் சந்திக்கப் பெரிய ஆர்வமற்ற நான், சந்திக்காது தவற விட்ட ஒரு ஆளுமையாக இவரை நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கட்டுரை ”சைவ உணவும் வேறு பல ஞாபகங்களும்”.

விருதுநகரில் ராம்மோஹன் என்ற பெயரில் பிறந்த காரணத்தில் தொடங்கி, தன் பரம்பரையின் உணவுப் பழக்கங்களுக்கு நேரெதிரான சைவ உணவுப் பழக்கம், தன் அப்பாவின் புத்தக வாசிப்பு, ஜே.கிருஷ்ணமூர்த்தி தொடர்பான தகவல்கள், தன் அப்பாவிற்கும், காமராஜுக்கும் உள்ள தொடர்பு, தன் மேல் ப்ரத்யேகமாக தன் அப்பா காட்டிய சிநேகம் என்று மிக அற்புதமான எழுத்து. மெல்லிய நகைச்சுவையோடு ஆரம்பிக்கும் இக்கட்டுரையின் சுடரை எடுத்துச் செல்கிறது தத்ரூபமான நுட்பமான பார்வை. நான் வாசித்த வரை தமிழில் எழுதப் பட்ட மிகச் செறிவான பத்து கட்டுரைகளில் இதற்கு மிக முக்கியமான இடமுண்டு.

40 வருடங்களாக மாமிசம் சாப்பிடாது தவிர்த்து வந்த அவரது அப்பா மறுபடியும் சாப்பிட ஆரம்பித்ததையும், 48 வயது வரை திருமணமே வேண்டாமென்றிருந்த ஸ்டெல்லா ப்ரூஸ், தன் 32 வயது வாசகியை மனைவியாக ஏற்றுக்கொண்டதையும் பொதுவான ஒரு சரடு இணைப்பதாகத் தோன்றியது. அந்தக் கட்டுரையின் முடிவை ஒரு அமானுஷ்யமான ஆன்மீக யூகத்துடன் முடித்த- எழுதினால் இப்படி ஒரு கட்டுரை நான் சாவதற்குள் எழுதிவிட வேண்டுமென பொறாமைப்பட வைத்த - ஸ்டெல்லா ப்ரூஸின் எழுத்துக்கு ஒரு சபாஷ்.

இதற்கு அடுத்த ஸ்தானத்தைப் பிடித்த கட்டுரை ”கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள்”. ஸ்டெல்லா ப்ரூஸின் ஆரம்ப கால வாசிப்பு ஆர்வம், அவர் சித்திக்கும் அவருக்குமான நேர்மையான உறவு, அவர் சித்தியின் எழுத்தார்வம், சித்தப்பாவின் கொச்சையான அணுகல் ஏற்படுத்திய எதிர்பாராத விலகல், மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு எழுத்தாளரான பின் சந்திக்க நேர்ந்த தருணங்கள் என மிக அற்புதமான விருதுநகர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய ஒரு கலைப் படைப்பு.

ஆத்மாநாமிற்கும், இவருக்குமிடையிலான உறவை பக்கம் பக்கமாக எழுதிச் செல்கிறது “என் நண்பர் ஆத்மாநாம்” கட்டுரை. வேறு யாருக்கும் ஆத்மாநாமுடன் இத்தனை நெருக்கமான உறவிருந்திருக்க முடியாது என்பதை இவர்கள் இருவருக்கும் இடையில் பகிரப் பட்ட உறவு சொல்கிறது. ஆத்மாநாமின் மனச் சிக்கல்கள் படிக்க நேரும்போது கண்களைக் கசிய வைக்கிறது. நவீன விருட்சத்தில் இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் இணைப்பைக் கீழே தருகிறேன்.

http://navinavirutcham.blogspot.in/2008/07/1.html
http://navinavirutcham.blogspot.in/2008/07/1983.html
http://navinavirutcham.blogspot.in/2008/07/blog-post_30.html

ஆத்மாநாம் 1984ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் தேதி தற்கொலை செய்துகொண்டதைத் தாங்கமுடியாத  மனதைக் கனக்க வைக்கும் துக்கமாக அனுசரித்த ஸ்டெல்லா ப்ரூஸ், 24 வருடங்களுக்குப் பிறகு 2008 மார்ச் 1ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஒரு யதேச்சையான, துயர் படிந்த ஒற்றுமை.

தற்கொலையின் கசப்பை ஒரு மிடறு சுவைக்கக் கூட விரும்பாத ஸ்டெல்லா ப்ரூஸை, வாழ்க்கை ஒரு கோப்பை ததும்பப் பருகச் செய்ததுதான் வினோதம்.

ஸ்டெல்லா ப்ரூஸுக்கும், அவர் மனைவி ஹேமாவுக்குமான உணர்வு ததும்பும் பதிவு ”மரணங்கள்”. ஒரு வாசகியின் தளத்திலிருந்து, ஒரு கூட்டுப் பறவை போல் மனைவியாகிச் சிறகடித்துப் பயணித்த தடம் ஒரு ஆன்மீக அனுபவமாய்ப் பரிணமித்து நெஞ்சைக் கனக்க வைக்கும் பதிவாய் நீண்டு,  அனைத்திலும் ஹேமாவைத் தேடியபடி முடிகிறது.

மற்றுமொரு யூகிக்க முடியாத கோணத்தில் பயணிக்கும் ”ஜவஹர்லால் நேருவுக்கு நான் எழுதிய கடிதம்” சுவாரஸ்யம். 1962ல் இவர் பம்பாயில் இருந்த காலத்தில், டி.ஹெச். லாரன்ஸின் ’லோலிடா’, அதன் திரைப்பட அனுபவம், அதற்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய-சீனப் போர்ப் பின்னணி, நேருவுக்கு இவர் எழுதிய கடிதம், நேருவின் மரணம் என்று செல்லும் விறுவிறுப்பான கட்டுரை முடிவதை மனம் ஏற்க மறுக்கிறது.  

இக்கட்டுரைகளைத் தாண்டிச் செல்லும் மற்ற 30 பக்கங்களின் வாசிப்பு ஒரு கலைடாஸ்கோப்பிக் அனுபவத்தைத் தந்தாலும், என் ஓட்டு முதல் நூற்றுச் சொச்சப் பக்கங்களில் சொர்க்கத்தைப் படைக்கும் கட்டுரைகளுக்கே.

அழகியசிங்கர் ஸ்டெல்லா ப்ரூஸைப் பற்றிப் பகிர்ந்துள்ள நினைவுகளும், தேவராஜன் எழுதியுள்ள ’மன ஆழங்களில் பயணித்தவன்’ என்ற கட்டுரையும் அதிகம் அறியப்படாத ஸ்டெல்லா ப்ரூஸின் உள் உலகத்தை வெளிக்காட்டும் மிக முக்கியமான உரைகளாகும்.

ஏராளமான அச்சுப் பிழைகளை ஸ்டெல்லா ப்ரூஸின் எழுத்துக்காகத் தாங்கிக் கொள்ளலாம். அதே போல் வாசிக்கத் தடையாய் உள்ள பத்தி அமைப்பு. இரண்டையும் அடுத்த பதிப்பில் சரி செய்து விடுங்கள் அழகியசிங்கர். அற்புதமான எழுத்தைப் பதிப்பித்த உங்களின் முயற்சிக்குத் துணையாக, வேண்டுமானால் நான் உதவுகிறேன்! 

நான் என்றாவதொரு நாள் உருவாக்கப் போகும் திரைப்படமாக ”சைவ உணவும், வேறு பல ஞாபகங்களும்’ என்ற கட்டுரையைப் பார்க்கிறேன். அதற்கான தார்மீக உரிமையை மானசீகமாக ஸ்டெல்லா ப்ரூஸிடம் கோருகிறேன். தருவீர்களா ஸ்டெல்லா ப்ரூஸ்?

நல்ல எழுத்தின் லாகிரியைப் பருக விரும்புபவர்கள் தவற விடக் கூடாத அனுபவம் “ என் நண்பர் ஆத்மாநாம்”. அவசியம் விலை கொடுத்து வாங்கிப் படிக்கவும், இந்த எழுத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளவும் முயலுவோம்.

ஸ்டெல்லா ப்ரூஸின் கண்ணுக்குப் புலப்படாத விரல்களுக்கு என் முத்தம்.

(என் நண்பர் ஆத்மாநாம்- கட்டுரைகள்- ஸ்டெல்லா ப்ரூஸ்- விருட்சம், +919444113205, 044-24710610- 152 பக்கங்கள்- விலை ரூ.100/=)

கருத்துகள்

அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்டெல்லா புரூஸ் படித்ததே இல்லை. அறிமுகத்துக்கும் இணைப்புக்கும் நன்றி.
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனந்தவிகடனில் அவர் மனைவி உடல் நலமின்றி இருந்தபோது அவர் எழுத்துக்கள் சில படித்த நினைவு. அவர் மரணம் பற்றியும் ஆனந்த விகடனில்தான் படித்த நினைவு. சில விஷயங்கள் மூளையின் எந்த அடுக்கிலோ சேமிக்கப்பட்டு இருக்கும். எல்லாவற்றைப் பற்றிய நினைவுகள் எப்போதும் வருவதில்லை. இது வரமா சாபமா தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.
ரிஷபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்டெல்லா ப்ரூசின் அது ஒரு நிலாக் காலம், ஒரு முறைதான் பூக்கும் படிக்க போட்டி போட்ட நாட்கள் இப்போதும் பசுமையாய் நினைவில்.
ஆத்மாநாம் பற்றி கேள்விப்பட்ட்டதும் அவரது கணையாழி எழுத்துக்கள் பாதித்ததை நண்பர்களுடன் பேசியதும்..
அந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க மனசு கனத்துத்தான் போகிறது சுந்தர்ஜி.
ப.தியாகு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல எழுத்தின் லாகிரியைப் பருக விரும்புபவர்கள் தவற விடக் கூடாத அனுபவம் “ என் நண்பர் ஆத்மாநாம்”. அவசியம் விலை கொடுத்து வாங்கிப் படிக்கவும், இந்த எழுத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளவும் முயலுவோம்.

ஸ்டெல்லா புரூஸ் எனக்கும் புதியவர்தான், நிச்சயம் அப்படியே வாசிக்கிறேன் சுந்தர்ஜி சார். நல்லதொரு பகிர்வுக்கு அன்பு நன்றி.
வெங்கட் நாகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
பத்திரிகைகளில் படித்த நினைவு. நிச்சயம் வாங்கிப் படிக்கத்தூண்டும் உங்கள் எழுத்து. வாங்கிப் படித்து விடுகிறேன் சுந்தர்ஜி!
நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
க‌திக‌ல‌ங்க‌ வைத்த‌ க‌ட்டுரைக‌ள். அகால‌ ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ந‌ண்ப‌ர் த‌னிமையில் வாடாதிருக்க‌ தானும் அவ்வ‌ழியையே தேர்ந்தாரோ ஸ்டெல்லா புரூஸ்...! புதைந்து கிட‌ந்த‌ இரு ஆளுமைக‌ளை ஒருசேர‌த் தூக்கி நிறுத்தி விட்ட‌து த‌ங்க‌ள் ப‌திவு.
santhanakrishnan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆங்காங்கே கவிதை மின்னலிடும்
ஸ்டெல்லாவின் தொடர்களை அரஸின்
அற்புதக் கோடுகளில் ஆ.விகடனில்
படித்ததுண்டு. ஆனால் இதை இன்னும்
படிக்க வில்லைல். நன்றி சுந்தர்.
ஆத்மாநாமை நினைவூட்டியமைக்கும்.
சே. குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அறிமுகத்துக்கும் இணைப்புக்கும் நன்றி.
மோகன்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதோர் அறிமுகம் சுந்தர்ஜீ! ஆத்மா நாமும் ஸ்டெல்லா புருசும் பாராட்டிய நட்பு உங்கள் எழுத்தில் அறிந்தேன். (இருவரையும் படித்திருந்த போதிலும்)

ஸ்டெல்லா ப்ரூசின் 'அது ஒரு நிலாக் காலம்' நினைவில் நிர்க்கிறது. அவர் எழுத்தை விட அவர் தேடிக் கொண்ட மரணமும் அதன் காரணமும் என்னை பாதித்திருந்தன.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு தொலைபேசிவழி உரையாடல் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசிய அற்புதமான மனிதர்
ஹேமா பற்றிய அவரது பகிர்வு வியக்க வைத்தது.அதனால் அவரது தற்கொலை வருத்தப்பட வைத்ததே தவிர
ஆச்சர்ய செய்தியில்லை.
ஸ்டெல்லா ப்ரூசின் அது ஒரு நிலாக் காலம், ஒரு முறைதான் பூக்கும் படிக்க போட்டி போட்ட நாட்கள் இப்போதும் பசுமையாய் நினைவில்.
ஆம் ரிஷபன்

பிரபலமான இடுகைகள்