6.10.12

நாயில்லாமல் நானில்லை.

நாய்களுக்கு சேகர், ராமு, மணி, கோபு, டைகர், ஜிம்மி என்று படு பொருத்தமில்லாப் பெயர்கள் வைப்பதிலாகட்டும் - 

கையைக் குவித்துக்காட்டி கையில் தின்பதற்கான வஸ்து ஏதோ இருப்பது போல் அவற்றைச் சூச்சூ என்று கூப்பிட்டு ஏமாற்றி வெறுப்பேற்றுவதாகட்டும் - 

அவற்றிற்கும் இங்க்லீஷ் கற்றுக்கொடுத்து மேஜர் சுந்தரராஜன் போல இங்கிலீஷிலும் தமிழிலுமாக அவற்றைக் கூப்பிடுவதாகட்டும் ( கம் ஹியர் ஐ ஸே- இங்க வான்றேன்ல) - 

பார்க்கவே சாதுவான ஒரு நாயைக் காட்டி ’சேட்டை பண்ணின அந்த ஜிம்மி கடிச்சுறும்’ என்று கொடூரமாகக் குழந்தைகளைப் பயமுறுத்துவதாகட்டும்- 

காலங்காலமாக நாய் நம் தினசரி 
வாழ்க்கையில் ஹிந்து பேப்பர் போலத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

அவற்றைப் பற்றி, அவற்றுடன் குப்பை கொட்டியவன் என்ற முறையில் ”இந்நாய் நாற்பது” என்று ஒரு வெண்பாக்கோவை எழுத நினைத்து, அதைக் கைவிட்டு ”என் நாய் முப்பது” என்று நிறுத்திக்கொண்டேன்.  

1.நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை, சில பல காரணங்களால், தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவிடும். அதற்குப் பின்னால் அவர்களின் உடல் உறுப்புக்களை சகட்டு மேனிக்கு நக்கித் தொலைக்கும். (அவற்றிற்கு உப்புச் சுவை மிகப் பிடிக்கும். உங்களுக்கு அதிகம் வேர்க்கும் என்றால் நீங்கள் அதற்கு ஒரு ட்ரீட்.)

2.நாய்களுக்கு பய உணர்ச்சி அதிகம். அது, நமக்கு அவை மேல் இருப்பதை 
விடக் கூடுதலானது.சில நாய்கள் முந்திக்கொள்கின்றன.சில நாய்கள் தைரியமாக இருப்பது போல நடிக்கின்றன.(அவற்றிற்குப் பழக்கமாகாத சில சப்தங்களுக்கு அவை உடனே எதிர்வினை காட்டும்)

3.குரைக்கும் நாய் கடிக்காது போகலாம் . ஆனால் கடிக்கும் நாய் கண்டிப்பாகக் கடிக்கும். (சுக்ரன் நீச்சமடைந்தவர்களை நாய் கடிக்கும் என்றொரு புரூடா உண்டு. நாய்க்கு ஜோஸ்யம் தெரியாது. சில சொல்லாமலே கடிக்கும். வேறுசில சொன்னாலும் கடிக்காது).

4. நாய்கள் தனக்கு ஒரு வஸ்து உபயோகமாகிறதோ இல்லையோ மற்றொரு நாய்க்கு அது கிடைக்கக் கூடாது என்ற உயரிய, தீராத விளையாட்டுக் குணத்தோடு திரிவதோடு, பொழுது போகாத புலவர்களின் உவமைக்கும் உதவும். ( நாய் பெற்ற தெங்கம் பழம்.)

5. வீட்டுக்கு வந்துவிட்டுப் போன ஒரு பிடிக்காத மனிதனின் முதுகுக்குப் பின்னால் அவனின் குணத்தைப் பற்றி இழிவு படுத்தவும் நாய் உபயோகப்படுகிறது. (சீச்சீ! சரியான நாய் குணம் அவனுக்கு)

6. காரணமற்று உபயோகமற்று அடுத்த கட்டம் என்ன? என்ற குழப்பத்தில் விடாது குரைக்கும் நாய்களின் குரைப்பை  தெரியாத்தனமாக சண்டையிலும், வசவுகளை வாறியடிப்பதிலும் ஈடுபட்டுள்ள அனைவருமே நினைவு படுத்தத் தவறுவதில்லை. (இப்ப என்னான்ற? என்ற ஒற்றை வரியோடேயே வெகுநேரம் தொடரும் சண்டைகள் இதற்கு உதாரணம்)

7. புலி மட்டுமல்ல. நாய்களும் பசித்தால் புல்லைத் தின்னாது. அவற்றை இளப்பமாக நினைத்து பொறை மற்றும் இருப்பதிலேயே நாய் கூடச் சீண்டாது என்ற வகையறா பிஸ்கோத்துக்களை அதன் முன்னே விட்டெறிந்து கவர்ச்சி காட்டினால் உங்களை அல்பமாகப் பார்த்துவிட்டு இரு முன்னங்கால்களிலும் தலையைத் தேமே (அது என்ன தேமே?) என்று சாய்த்துக்கொள்ளும்.

8. உடலுக்கு நோவு வந்தால் அவற்றிற்கு மிகப்பிடித்தமான எதை வைத்தாலும் திரும்பிக்கூடப் பார்க்காது. அவற்றிற்கு வைத்தியமும் தெரியும். ஏதோ ஒரு வகைப் புல்லைத் தின்று கக்கும். இந்த விஷயத்தில் இவை மனிதனின் குணத்துக்கு நேர் மாறானவை. உடல் சரியாகி விட்டதாக அது நினைக்கும் அடுத்த நொடி சாப்பிடத் துவங்கும். 

9. அவற்றின் குட்டிகளுக்குத் தேடிப்பிடித்துப் பாலூட்டும். அவை நடக்கத் துவங்கிவிட்டால் தலைகீழாக நின்றாலும் (நிற்காது) பால் கொடுக்காது. தேட் தேட் டாக் தேட் தேட் பொறைதான்.

10. குட்டிபோட்ட ஒரு வாரத்துக்குக் கண்ணைத் திறக்கவோ நடக்கவோ குட்டிகளால் முடியாது. ஒரு வாரத்துக்கும் பால் பூத்துக்கு (அம்மா) மோப்ப சக்தியை வைத்தே, நீந்தியோ உருண்டோ போய் தன் வேலையைத் தீர்த்துக்கொண்டு விடும்.

11. நான் நாய் டாக்டர் கிடையாது. ஆனால் என் வீட்டில் நாய் ப்ரசவமாயிருந்த இரு தடவைகளிலும் நான் சொன்ன நாளில் நாய் ப்ரசவித்தது. 

தன் ப்ரசவ நாள் நெருங்கும் தினங்களில் அவற்றின் உள்ளுணர்வு வேலை செய்து உணவை நிராகரித்துவிடும். தனக்கு வசதியாக மறைவாக உள்ள இடங்களைத் தேர்வு செய்யத் தொடங்கும். நம்மைத் திசை திருப்ப இரண்டு மூன்று இடங்களில் பள்ளம் பறிக்கும். 

யாரும் எதிர்பாராத இடத்தில் குட்டிகளை ஈன்று வசதியான ஒரு பள்ளத்திற்குக் குட்டிகளுடன் இடம் பெயரும். குட்டிகளை ஈன்ற பின் முதலில் ஒரு தட்டில் நீர் வைத்தால் தாகம் தணித்துக் கொள்ளும். அதன் பின் பால். திட ஆகாரம் ஒரு நாளைக்குப் பின்னர்தான்.


எந்தக் குட்டியையும் அதன் கண்ணெதிரில் எடுக்க விடாது. எஜமானனாக இருந்தால் சுமுகமாக நைச்சியமாக அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு தன்னுடன் வைத்துக்கொள்ளும். வேற்றாளாக இருந்தால் குட்டிக்குச் சமமான சதையை நம் உடம்பிலிருந்து குறைத்துவிட்டு, குட்டியை பிடுங்கிக் கொள்ளும்.

12. நாய்க்கு மழை பெய்வது பிடிக்காது. மழைக்கு முன்னால் சூறாவளிக் காற்றிருந்தால் இன்னமும் மோசம். ஊளையிட ஆரம்பித்து விடும்.

13. இரவுகளில் நாய்கள் தூங்காது. பயம்தான் காரணம். வழக்கப்படி விடிந்து எல்லாம் அதனதன் பாட்டில் இயங்கத்துவங்கும்போதுதான் இதமான வெய்யிலில் தூங்க விரும்பும்.

14. மிகக் குளிச்சியான மிகச் சூடானவற்றையும் அவை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தன் வாயைச் சுத்தம் செய்துகொள்வதில் ரொம்பவும் அக்கறை காட்டும்.

15. அவற்றைச் சுற்றியுள்ள இடத்தில் பாம்போ, பறவையோ எது வந்தாலும் கடித்துக் குதறிவிடும். குறிப்பாகப் பாம்பு. ( என் இரண்டு நாய்களும் சேர்ந்து ஒரு சாரைப் பாம்பைப் பந்தாடி விட்டது. மற்றொரு முறை அதன் குட்டியைத் தூக்க வந்த ஒரு வல்லூறையோ பெரும் போராட்டத்தில் சிறகை முறித்துக் கிடத்தி விட்டது. இவைகளுக்கும் முதுகில் நகம் கீறிப் பெருத்த காயம். மறுநாள் காலையில் எப்படி நம்ம சாமர்த்தியம்? என்பது போல என்னை நிமிர்ந்து பார்த்தது.)

16. நாய்கள் தரையோடு இருப்பதால் அல்லது நம்மை விட உயரம் கம்மி என்பதால், பூமியின் அதிர்வுகள் அதற்கு அத்துப்படி. பழக்கமான சப்தம் கேட்டவுடனே அதன் வாலை ஆட்டத் துவங்கிவிடும். அதன் காதுகள் இன்னும் துல்லியத்துக்காக முன்பக்கமாகக் குவியும். என் மகன்கள் தொலைதூரத்திலிருந்து எழுப்பும் சைக்கிள் மணியை முதலில் அவைதான் குரைப்பால் உணர்த்தும். சுனாமியையும் டீவிக்கு முன்னால் சொன்னவையும்  அவைதான்.

17. அவற்றின் எஜமானர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு என்றால் அவையும் மூட் இழந்துவிடும். சாப்பிடாது. ஓடிஆடி விளையாடாது.

18. அதேபோல வழக்கத்துக்கு மாறான உடையோடு யாராவது வந்தாலும் பிடிக்காது. உதாரணம் நீளமான குர்தாவுடன் ஜோல்னா பையர்கள், தலைக்கு மேலே முடியோ, பின்னே ஒளிவட்டமோ தேவலாம். தொப்பி மற்றும் குடை.... ஓ நோ.  

19. அவற்றிற்குக் கடிகாரத்தில் மணிபார்க்கத் தெரியாது. ஆனாலும் அவை வழக்கமாகச் சாப்பிடும், உபாதை கழிக்கும் நேரத்தை மிகச் சரியாக அறியும்.

20. வெகுநேரம் கட்டிப்போடப்பட்டால் குரலெழுப்பி, ஒன் பாத்ரூம் டூ பாத் ரூம் என்று குரைக்கும். அந்தக் குரைப்பு தனி தினுசு. அதுபோல இனவிருத்திக்கான குரைப்பும். அது புரியாத, சரியான பிராயத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற எதிர்வீட்டு மாமா, ’சனியன்! எப்பப் பாத்தாலும் என்ன கொரைப்போ’ என்று அலுத்துக்கொள்வார்.

21. நாய்களுக்கிடையே சண்டை வந்தால் ரத்தம் வரும் அளவுக்குக் கீறிக்கொள்ளும். ஆனாலும் பட்ட காயத்துக்கு மருந்துக்குக் கூட நம்மைப் போல் ஃபில்ம் காட்டாது. தானே நக்கிக் கொடுத்து புண்ணை ஆற்றிக்கொள்ளும்.

22. (அ) குரைக்கும் நாய் கடிக்காது (ஆ) நாய் விற்ற காசு குரைக்காது (இ) நாற்பதுக்கு மேல் நாய் குணம் (ஈ) நாயைக் குளிப்பாட்டி ........ (உ) ஆறு நிறைய ஓடினாலும் .... (ஊ) நாயைக் கண்டால் கல்லைக் காணோம் (எ) நாய் வாலை நிமிர்த்த முடியாது போன்ற சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும் அறுதப் பழசான பழமொழிகள் தன்னைப் பற்றியவை என்பது நாய்களுக்குத் தெரியாது. 

23. சாப்பிட ஆலாய்ப் பறக்கும். ஆனால் அதற்கு உணவிடாவிட்டாலும் அது லட்சியம் செய்யாது. அலட்டிக்கொள்ளாது பட்டினியாய் இருக்கும்.  

24. நாய்களும் கனவு காணும். அவை கலையும் போது சட்டென்று கண் விழித்து நிஜத்தோடு தன்னைப் பொறுத்திக்கொள்ள சிறிது குழம்பும். அதன் குரைப்பில் அதைக் கண்டுபிடித்துவிடலாம்.

25. நாய்களைப் பழக்குவதும் மிக எளிது. மிருகங்களைத் தனக்குச் சாதகமாகப் பழக்குவது மனிதனின் கேவலமான செயல். ஆனாலும் மிளகாய்ப் பொடி தூவி நாய்களின் மோப்ப சக்திக்கு வேட்டு வைக்கும் நவீனத் திருடர்களிடம் தோற்பதை உளவுத் துறை நாய்கள் விரும்புவதில்லை.

26. நாய்கள் காற்றில் மிதந்து வரும் கலப்படமில்லாத வாசனைகளை மூக்கைத் தூக்கி முகரும் அழகே அழகு. அதற்கு எல்லா பிஸ்கட்டுக்களையும் எழுதிவைத்துவிடலாம்.

27. அது தினமும் சிறுநீரோ, மலமோ கழிக்கும் இடத்தை முகர்ந்து பார்த்து அந்த இடத்திலேயேதான் கழிக்கும். தன் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதில் மிக்க ஆர்வமுடையவை. ஈரம் அடைவதையோ சொதசொதவென்ற பரப்பையோ அவை விரும்பாது.

28. குளிப்பது அவற்றிற்குக் கொஞ்சமும் பிடிக்காது. கட்டாயப் படுத்திக் குளிக்க வைக்கும்போது ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும். ஆனால் உடல் காய்ந்ததும் தூங்குமே பார்க்கலாம் அப்படி ஒரு தூக்கம். 

29. தனிமையை நாய்கள் விரும்புவதில்லை. எல்லோருடனும் தன்னை இணைத்துக் கொள்வதில் நாய்களுக்கு இணை மற்ற நாய்கள்தான்.


30. உங்கள் செருப்புக்களோ, ஷூக்களோ அவ்வளவாக அவற்றிற்குப் பிடிப்பதில்லை. பற்கள் நமநம என்று வரும்போது தன் எதிரியின் தோலாய் நினைத்துக் கடித்து உண்டு இல்லை என்றாக்கிவிடும். அல்லது உங்களின் பார்வைக்குத் தென்படாத தொலைவில் அதைக் கவ்விக் கொண்டுபோய்ப் போட்டுவிடும். நீங்கள் ரெண்டுகாலிலும் செருப்பில்லாமல் முணுமுணுத்துக்கொண்டே தேடியலைவதை அது வேடிக்கை பார்க்கும். 


நண்பனின் ஷூவைக் கால்விடக் கஷ்டப்படத் தேவையில்லாத அளவுக்குக், கால் நுழைக்கும் இடத்தைக் கடித்துப் பெரிது பண்ணியிருந்தன என் வீட்டு நாய்கள்.  மனதுக்குள் சிரித்துக்கொண்டே ’ஸாரிடா’ என்று கையைப் பிடித்தேன். அவனும் மனதுக்குள் என்னைத் திட்டிக்கொண்டே ’பாவம் வாயில்லா (பல்லுள்ள) ஜீவன்! அதுங்களுக்கு என்னடா தெரியும்? பரவாயில்லை’ என்று தத்தித் தத்தி வினோதமான நடையழகோடு நடையைக் கட்டினான். 

31. மனிதனை விடவும் பல மடங்குகள் உணர்வுப்பூர்வமானவை அவை. பிரிவை அவை விரும்புவதில்லை. எத்தனை திட்டினாலும், அடித்தாலும் அவை உங்களை நேசிக்கும். விட்டுவிட்டு ஊருக்குப் போவது இருக்கட்டும்- ஒரு நாள் அதைக் கொஞ்சாமல், தடவிக் கொடுக்காமல் நிராகரியுங்கள். மறுமுறை உங்களிடமே தீனமான குரலில் புகாரளிக்கும் என்று இந்த வரிகளை எழுதும்போது என் மனது பொங்குகிறது.

நாய்கள் கடவுளின் அற்புதமான படைப்பு. 

ஸ்ரீருத்ரத்தில் காலபைரவனாகிய சிவபெருமானையே நாயென்று (ச்வப்ய: ச்வபதிப்யச்ச வோ நம:) துதிப்பதைக் காட்டிலும் வேறொரு அற்புதமான இடத்தை நாய்களுக்கு நான் கொடுத்துவிட முடியுமோ?

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பைரவரின் தகவல்களுக்கு, விளக்கங்களுக்கு, சிறப்புகளுக்கு பைரவர்கள்->நன்றிகள்...

அப்பாதுரை சொன்னது…

எங்கெங்கு காணிலும் டைகரடா!

சக்தி சொன்னது…

சுவாரஸ்யமான ஒரு பதிவு.பத்து வரை படித்துக்கொண்டே வந்தபோது
என் மனதைப் படித்து விட்டது போல ,நான் நாய் டாக்டர் இல்லைன்னு
வரவும் சிரித்தே விட்டேன் ....

நிலாமகள் சொன்னது…

பிரிவின் ப‌ரிவு?! ஆற்ற‌ மாட்டாம‌ல் பொங்கித் த‌வித்து எழுத்திலாவ‌து இற‌க்கி வைத்து விட முடிகிற‌து ந‌ம‌க்கேனும்... அது என்ன‌ செய்யும் பாவ‌ம்! ஈச‌னோடாயினும் ஆசை அறுமின் என்றெதையெதையோ நினைவுப‌டுத்தி ஆற்றிக்கொள்ள‌ வேண்டிய‌து தான்.

ப.தியாகு சொன்னது…

நாய்கள் மீதான பரிவு எப்போதும் என்னில் மேலோங்கியே இருக்கிறது சுந்தர்ஜி சார், முந்தைய நாளில் நாயின் குரைப்புகளை வகைப்படுத்தி நீங்கள் செய்த கவிதையும், இந்த இடுகையும் உங்களுக்கும் அவைகள் மீதிருக்கும் அன்பை காட்டுவதாகவே எடுத்துக்கொள்கிறேன். நல்ல பதிவு சுந்தர்ஜி சார்!

G.M Balasubramaniam சொன்னது…


நானும் ஒரு நாய் வளர்த்தேன். அதைப் பற்றி நிறைய பீற்றிக் கொள்ளவும் செய்திருக்கிறேன் செல்லி என்று பெயர் வைத்து என் பிள்ளைகள் செல்லம் கொண்டாடினார்கள். அது இறந்த பிறகு வேறு நாய்களிடம் நாட்டம் காண முடியவில்லை. நாய்கள் புல் தின்னாது என்று எழுதி இருக்கிறீர்கள் . அவற்றுக்கு வயிறு சரியில்லாமல் போனால் ஏதோ ஒரு வகைப் புல்லைத் தின்னும் செல்லியின் நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு. என் மனைவிக்குப் பிடித்த கடவுள் கால பைரவர்.

ஆ.செல்லத்துரை சொன்னது…

என்நாய் எண்பதே’ எழுதியிருக்கலாம் நண்பா! என் நெஞ்சில் கிடக்கும் நாய்கள், உன் நாய்களைப் பார்த்ததும் வாலாட்டுகிறது.

யாரைப் பின்தொடர என் எதிர்வரும் கால்களையெல்லாம் தேடித் தவிக்கும் தூக்கியெறியப் பட்ட நாய்க்குட்டிகள்.

பயணம் போகும் எசமானனைப் பின்தொடர்ந்து டவுன்பஸ்களில் நைந்துபோகும் சாலை விதியறியா நாய்கள். இன்னும் எத்தனை எத்தனையோ?

அழியாதிருக்கிறது, இருபது ஆண்டுகளுக்கு முன்னே டெல்லியில் நான் பார்த்த ஒரு நாய்.டெல்லி ஸ்டேடியத்தை ஒட்டி ஒரு சேரி. சேலத்திலிருந்து பிழைக்கச் சென்ற தமிழ்க்குடிகள். இருநூறு முன்னூறு சாக்குத் திரைக் குடிசைகள்.எதிரெதிர் வீடுகளுக்குயிடையே ஆறடித்தெரு.

தன்வீட்டு முற்றத்தில் அமர்ந்து முழங்கால் வரை சேலை ஒதுக்கி கால்களுக்கிடையே தன்பிள்ளையை அம்ர்த்தி வெளியேயிருக்க வைத்துகொண்டிருந்தாள் ஒரு நலிந்த இளம்பெண்.வீட்டு முற்றமா (?)அல்லது தெரு நடுவா(?) என்று பிரித்தறிய முடியாது.எதிர்த் திண்ணையில் காவலுக்கு இருந்தது ஒரு வக்கட்ட நாய்.

தோவென்ற ஒரு அழைப்பில் விடுதலையுற்று குழந்தை மலம் தின்று தெருவைச் சுத்தம் செய்தது.

அதன் பசியறியாது நடுத்தெருவில் ஊளையிட்டுக் கொண்டே ஓடி வந்த வில்லன் பொன்னம்பலத்தைக் கத்தியபடி துரத்திக்கொண்டே தெரு நடுவே ஓடி வந்தார் நடிகர் சத்யராஜ், சேரிக்குப் பொருந்தாத கோட் சூட்டோடு.

மலம் தின்று வளர்ந்தாலும், திடுக்கிட்டு ஒதுங்கினாலும், நடிகரென்று பாராது ஓடிய இருவரையும் குரைத்தபடியே துரத்தியது தமிழ்க்குடி நாய். யாரோ சிலர் நடிகர்களின் நல விரும்பியாய் நடித்து நாய் மீது பாய, மணி என்று கூவி வாரியணைத்தாள் பிள்ளைக்காரி.

சண்டைக் காட்சிக்காக ஓடத் துவங்கிய நடிகர்களின் ஓட்டம், நாயின் துரத்தலுக்காக ஓடிய ஓட்டமாகக் காட்சி முடிந்தாலும், ஏர்போர்ட் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது அந்நாய்.

சாக்கடையோரம் ஒதுங்கிய எம் தமிழரின் விளிம்புநிலை வாழ்வில் கூட, குழந்தை மலத்திலேயே மனம் நிறைந்து வாலசைத்து நிற்கும் அன்பு நிறைந்த ஈன நாய்களுக்கு எப்போதும் இடமிருக்கிறது.

நாய்களின் உலகில் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவதும், அதிசயிக்கச் செய்வதும் இந்த உலகிற்கு நாய்கள் தரும் மாபெரும் செய்தி இதுவாகவே இருக்குமோ என்று நான் வியப்பது ஒன்றுண்டு.அது எல்லையில்லா அவைகளின் நன்றி உணர்ச்சியல்ல.

ஒரு பெண்ணை வன்மமின்றி, பொறாமையின்றி, ஏக காலத்தில் எப்படி அவைகளால் பகிர்ந்து கொள்ளமுடிகிறது? ஒரு பெண்ணால் தன்னைச் சுற்றும் எல்லா ஆண்களுக்கும் வஞ்சனையில்லாமல் எப்படிக் காதலை வாரி வழங்கமுடிகிறது? கூச்சமோ தயக்கமோ இன்றி வீதிகளில் உறவாட முடிகிறது? உரிமை கோராமல் வாழும் வாழ்வை இயற்கை எப்படி அவைகளுக்குச் சாத்தியப்படுத்துகிறது? கற்புநிலை, வேசித்தனம் இவைகளுக்கான அர்த்தமும், வெளிப்பாடும்தான் அவைகளிடையே என்ன?

ஒன்று நாயைப் போல் வாழக்கூடாது.அல்லது நாயைப் போல வாழ வேண்டும்.ஒரு பார்வையில் நாய்களின் சுதந்திரம் மனிதர்களை விட மேலானதாக இருக்கிறது. அவைகளை விட ஒழுக்க நியதிகள் ததும்பும் மனிதர்களின் வாழ்வோ நாயை விடக் கேவலமாக இருக்கிறது. நாய்களின் பரிபூரண சுதந்திரத்திற்கும், மனிதர்களின் கௌரவத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிரது வாழ ஏங்கும் மனித வாழ்க்கை.

உடைந்த காலிக் கழுநீர்க் குடங்களின் கழுத்தைச் சுமந்தலையும் நாய்களின் வாழ்விலிருந்தா படிப்பினைகள்?. அதுவும் ஒரு நாய்வாலாகத்தான் இருக்கிறது.

நாய்களின் வாலசைப்பில் கற்றுக்கொள்ள உண்டெனில் கற்றுக்கொள்ளக் கூடாததும் முடியாதும் ஒன்று உண்டு.

ஈன்ற நாய்கள், பேறு கால நோவறிந்தோ, மடிசுரக்கும் பாலறிந்தோ, தின்பதாய்ச் சொல்கிறார்கள் குட்டிகளை.

உண்மையில் அவலமும் பயங்கரமும் சரிசமமாய்க் கலந்த வாழ்வுதான் நாய்களின் வாழ்வும் மனிதர்களைப் போல.இதில் கற்றுக்கொள்ளவும்,கற்றுக்கொடுக்கவும் ஏதெனுமிருக்கிறதா? தெரியவில்லை

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator