4.10.12

நல்லது கெட்டது.


கொஞ்சம் உடல்நலம் பாதிப்பாகி, வெளியில் எங்கும் போகமுடியாது போய்விட, மூன்று நாட்கள் வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு தொலைக்காட்சி சேர்ந்தாற்போலப் பார்க்க, கேட்க வாய்த்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதிகையில் ஈரோடு தமிழன்பனுடன் ஒரு பேட்டி. வேறேதோ எழுதியபடியே பேட்டியைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஈரோடு தமிழன்பனின் எழுத்துக்களை நான் அதிகம் விரும்பி வாசித்ததில்லை. ஆனாலும் அவரின் வாசிப்பின் மீதும், அவரின் தமிழ் ஆர்வத்தின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. யார் பக்கமும் சாயாத நேர்மையான, மென்மையான மனிதர். அவர் நினைத்திருந்தால் சிபாரிசுகளை நாடித் தன்னை இன்னும் ஒரு பெரிய தளத்திற்கும், செல்வாக்கு நிறைந்தவராகவும் மாற்றிக்கொண்டிருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் அவர் விரும்பாதவராக இருந்திருக்கிறார். அவர் பேரனோடு வாழ்க்கையை இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது கேட்க சந்தோஷமாக இருந்தது.

நான் சொல்ல வந்தது வேறு. இரண்டு தடவைகள் அவர் எழுதிய புத்தகத்தின் பெயரைத் தப்பாகச் சொல்லியும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் மென்மையான குரலில் இரு முறையும் திருத்தினார். பொதிகையின் இந்தச் சறுக்கல் வியப்பளித்தது. பேட்டிகண்ட பெண்மணியும் அந்தத் தவறைப் பற்றிப் பெரிதாக வருத்தம் தெரிவிக்காமல் சிரித்தபடி இயல்பாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படி ஒரு பேட்டி இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். 

எழுத்தாளனாக, தமிழ் எழுத்தாளனாக இருப்பது விதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதிகையில் யு.எம்.கண்ணன் தயாரித்து அளிக்கும் ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பாகும் ”காற்றினிலே வரும் கீதம்” - இசை மேதைகள் வாழ்க்கை, அவர்கள் இசை தொடர்பான விஸ்தாரமான பேட்டிகள் ஒரு பொக்கிஷம். சமீபத்தில் வீணை மேதை சிட்டிபாபுவினதும், பாடகர் கே.வி.நாராயணசாமியுடையதும் பொக்கிஷம் ரகம். பலமுறை தவறவிட்டு விடுகிறேன். விடாமல் பார்க்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரேவதி ஷண்முகத்தின் சமையல் நிகழ்ச்சிகளையும் கண்ணில் பட்டால் தவறவிடுவதில்லை. மிக நேர்த்தியான, சமையலில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் சுவாரஸ்யமான செய்முறைகள். எதையும் வீணாக்காது உபயோகித்துக்கொள்ளும் சிக்கனம். கண்ணை உறுத்தாத ஒப்பனை. சரளமான பிழையில்லாத தமிழ்.(கண்ணதாசன் பெண்ணாச்சே சும்மாவா?).

பொதிகையின் சமையல் நிகழ்ச்சிகளில் வரும் கிஷோர்குமாரும், அவரின் சிரிக்காமல் அடிக்கும் கமெண்ட்டுகளும், அவரின் மெனுக்களுக்கான வித்யாசமான பெயர்களும் (ஆந்திரா அர்ஜெண்ட் சட்னி) ஸ்பெஷல்தான். அதுசரி சமையல் கூடத்தையே ஒரு கலக்குக் கலக்கிய இந்த மல்லிகா பத்ரிநாத் எங்கே போனார்? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செய்திகளை முந்தித் தருபவர்கள் எல்லோரும் செய்திகளை முந்தித் தந்தவுடன் அவற்றை அப்படியே மறந்துபோய் வேறேதாவது செய்திகளை முந்தித் தரமுடியுமா என்று தேடிப்போய் விடுகிறார்கள்.

போன வருடப் பேய்மழையில் உஸ்மான் சாலையில் சாக்கடைப் பள்ளத்தில் விழுந்து இறந்துபோனதாகச் சொல்லப்பட்ட ஒரு ஆசிரியையின் மரணத்துக்கு உண்மையிலேயே அந்தப் பள்ளம்தான் காரணமா? விசாரணை என்ன ஆனது?

வேளச்சேரி என்கவுண்டரில் ஒலித்த துப்பாக்கிச் சத்தம் ஒரு மாதத்துக்குள் அடங்கிப் போய் இருக்குமிடம் தெரியாது போய்விட்டது. அந்த வங்கிக் கொள்ளைகள் பற்றியும் எந்தச் செய்தியுமில்லை. வங்கிகள் இன்ஷ்யூரன்ஸில் இழப்பீடு வாங்கிக்கொண்டு அமைதியாய் முடங்கி விட்டார்கள்.

சுக்ராம் விவகாரம் போலக் காலம் கடந்து தன்னை எதற்காகக் கைது செய்கிறார்கள் என்று ராஜாவோ கூஜாவோ குழம்பும் அம்னீஷியப் ப்ராயத்தில் நீதி கிடைக்கும்போது, அடுத்த தலைமுறையின் மக்கள் இதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று வேறு ஒரு ஊழல் செய்தியில் மும்முரமாக இருப்பார்கள். 

மறதிக்குப் பெயர் பெற்ற என்னாலேயே, இவை எல்லாம் என்ன ஆனது? என்ற புருவ உயர்த்தலைத் தவிர்க்க இயலவில்லை. நிறைய நினைவாற்றல் உள்ளவர்கள் படும்பாடு பெரும்பாடுதான் என்று தோன்றுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தின் தலையாயப் ப்ரச்னைகளில் முதலிடம் வகிப்பது சூப்பர் சிங்கர் ஜூனியருக்கான தேர்தல் ப்ரச்சாரம். ஒரு நிகழ்ச்சியை சிறப்பான வியாபாரமாக்கும் நுட்பத்தை நமது சேனல்களுக்குக் கற்றுக்கொடுத்த மஹானுபாவன் யாரோ அந்தரிக்கு வந்தனமு.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் முடிவுக்கு வந்த எஸ்.எம்.எஸ். வியாபாரம், இப்போது சூப்பர் சிங்கரில் சூடுபிடித்துவிட்டது. நகர மின்சார ரயில்களில் எல்லாம் ஓட்டுக்கேட்டு விளம்பரப் போஸ்டர்கள். இன்னும் கொஞ்ச நாளில் கவுன்சிலர் தேர்தலைப் போல வார்டு வார்டாக சிங்கர்களையே அனுப்பினாலும் ஆச்சர்யப்பட்டு அப்போதும் அசறாமல் இடுகை எழுத வேண்டியிருக்கும்.

பேசும்போது பாவனாவின் தொண்டையில் விழுங்காமல் ஒவ்வொரு தடவையும் அடைத்துக்கொண்டிருக்கும் உணவுப்பொருள் எது? என்ற சந்தேகம் தீரவில்லை. தொண்டையில் புண் ஏற்பட்டால் வாயில் உப்புக் கலந்த வெந்நீரோடு தொண்டை நுனி வரை தங்கவைத்துக் கொப்பளிக்க நேரும்போது உண்டாகும் வினோதமான சப்தத்தை ஒப்பிடலாம். தமிழையே ஏதோ ஹீப்ரு மொழி போல அனாயாசமாய் அலட்சியப்படுத்துவதை சித்ரவதை என்று சொன்னால் அது சரியா? தப்பா?

அநேகமாக ப்ரகதி சூப்பர் சிங்கராவதற்கான முஸ்தீபுகளில் முன்னணியில் இருக்கிறார். வைல்ட் கார்ட் நுழைவில் புகுந்து ஆஜீத் இரண்டாம் இடத்துக்கு சுகன்யாவுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். கௌதமுக்கு மூன்றாம் இடமே அதிகம். அவன் ஜாதகத்தில் சுக்ரன் உச்சத்தில் இருப்பதாக சிவல்புரி சிங்காரம் நேற்று டீ சாப்பிடும் போது சொன்னார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறுதி ஆச்சர்யம். இத்தனை ஆண்டு கால சேனல்களின் இரைச்சல்களில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி, நேற்று ஜெயா சேனலுக்கு -சுஹாசினியுடன் - கொடுத்த பேட்டிதான் முதல் பேட்டியாம். ஒரு நடிகைக்கான பிம்பம் இல்லாதிருந்தமை, அழகான தமிழ் உச்சரிப்பு, தன்னுடனான பேட்டியையே வேறு யாருடைய பேட்டியையோ ரசிப்பது போன்ற ஒரு பாவம். பதினாறு வயதினிலேயில் பார்த்த அதே ஸ்ரீதேவியைப் பார்க்க முடிந்தது.

புளியங்குடியில் சாணிதட்டி விட்டு, ஒரே படத்தில் யாருக்கும் தெரியாத வேறேதோ காரணத்தால் (ஒய் திஸ் கொலவெரி?) உச்சாணிக்கு துரதிர்ஷ்டவசமாகப் போய், ரசிகர்களை உலுக்கி எடுத்து, உலகப் பந்தையே உலக பந்தாவாகக் காட்டும் நடிகர், நடிகைகள் சிரக்கம்பம் வைத்து ஸ்ரீதேவியிடம் பாடம் கற்றுக்கொள்ளட்டும்.

ஸ்ரீதேவியின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை என்பது ஆச்சர்யப்படுத்தும் உண்மை. உங்களை உண்மையிலேயே இழந்துவிட்டோம் ஸ்ரீதேவி.(சில நாட்களில் யூட்யூபில் வந்துவிடும். தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு இங்கே இடமில்லை.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் பள்ளிநாட்களில் இருந்து க்ரிஸ்துவத்துடனான தொடர்பு உண்டானது. பழைய புதிய ஏற்பாடு, மலைப்ரசங்கம் போன்றவற்றின் மொழி துவக்கத்திலிருந்தே எனக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டாக்குவதாய் இருந்தது.

பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி மாணவனாக இருந்த அற்புதமான அனுபவம், ’அன்றன்றைக்கான அப்பத்தை எமக்கு அன்றன்றே தாரும் ஆண்டவரே’ என்று ப்ரார்த்தனையில் முடியும்.

அமைதியான காலைகளில், ஆல் இந்தியா ரேடியோவின் பக்திப்பாடல்கள் மூலம் தினமும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த க்ரிஸ்துவ, இஸ்லாமியப் பாடல்கள் எல்லோரின் வாழ்விலிருந்தும் பிரிக்கமுடியாத ஒன்றாக இருந்தது.

தமிழகத்து தர்க்காக்களைப் பார்த்து வருவோம், உம்மை ஒருபோதும் நான் மறவேன், சர்வாலோகாதிபா நமஸ்காரம், அன்பே பிரதானம், கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் போன்ற பாடல்கள் எல்லாம், மதத்தின் எல்லைகளைக் கடந்து, எளிமையாய் அவை சொன்ன போதனைகளாலும், ஆன்மாவை வருடிச் செல்லும் இசையாலும், மதங்களை அறிந்தும் பேதங்களை அறியாதவனாக என்னை வளர்த்தன.

ஒரு மாறுதலுக்கு இந்த ஐந்து பாடல்களையும் கேளுங்கள். உங்களுக்குள் உண்டாகும் சுகானுபவம் இன்றைக்கு என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காதது.


நீ இந்துவா? முஸ்லீமா? க்ரிஸ்தவனா? ஸொராஸ்ட்ரியனா? என்ற பேதங்கள் பார்க்காத மக்கள் அதிகமாக நிரம்பியிருந்த காலம். ரம்ஜானுக்கும், தீபாவளிக்கும், க்ரிஸ்துமஸுக்கும் தெருவின் ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும் இனிப்புக்களையும் பகிர்ந்து கொண்டாடிய காலம். நம் அறியாமையாலேயே நல்லிணக்க அப்பத்தைப் பூனையிடம் மெல்ல மெல்லக் கொடுத்து விட்டோம். அந்த அப்பத்தைப் பூனைகள் ஓட்டாக மாற்றி நாட்டையே சீரழித்து மதம், ஜாதி என்று இன்னும் சூடேற்றி விட்டார்கள்.  

ஒரு பெருமூச்சின் பின்னால், மேலேயுள்ள பத்திகள் தற்காலிகமாக மறைந்துகொள்ளட்டும்.

நான் எழுத நினைத்தது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். யோசேப்பு, தோமா, யாக்கோபு, சவேரியார், யோவான், மத்தேயு, தானியேல், லூக்கா, பேதுரு, ஆந்திரேயர், பவுல் போன்ற இந்தப் பெயர்களின் மூலப் பெயர்கள் என்ன? பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு ஒரு சபாஷ். இந்தப் பெயர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்க்கத் துவங்கிவிட்டோம். இப்போதெல்லாம் க்ரிஸ்துவர்களே இந்தத் தமிழ்ப் பெயர்களை உபயோகிப்பதில்லை என்பது அதனினும் பெரிய சோகம்.

ரொம்ப எழுதிவிட்டேனோ?.இது போதும் இப்போதைக்கு.

6 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது, பொழுது போக்கவும், ஏதாவது நல்ல நிகழ்ச்சிகள் வராதா என்ற நப்பாசையிலும்தான். கிரிக்கெட் ஆட்டம் பார்க்கவென்றே முதலில் டி.வி. வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக அது வாழ்வில் இல்லாது இருப்பது கஷ்டம் என்றாக்கி விட்டது. இப்போது அது இல்லாமலிருந்த காலம் நன்றாயிருந்ததோ என்று எண்ண வைக்கிறது. தொலைக்காட்சி நம்மை உலகின் ஒரு அங்கமாக நினைக்கச் செய்கிறது. ஒரே நேரத்தில் வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. அது சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் தெரிய என்ன செய்ய வேண்டும் சுந்தர்ஜி. ?

இரசிகை சொன்னது…

:)

vaazhthukalum anbum.
nalla pathivunga.

kadaisiya ketta kelvikku pathil vemaa sollunga.

revathi shanmugam-yenakkum remba pidikkum
yethaavathu seithuttu,"revathi shanmugam ippadithaanma sonnaga"avungalukku mattum nalla vanthuchunnu solleetu iruppen
:)
amma vukkum avungalai ishttam.

yellaam ok..
udambukku yennaachu?
ippo nalamaa?

takecare sundarji

சக்தி சொன்னது…

நலம் அறிய ஆவல்.அதுசரி நலமில்லைஎன இத்தனை பார்த்துக்கொண்டு,இத்தனை ஆராய்ச்சி செய்து கொண்டு
இருக்கலாமா...
விஜய் டிவி துரத்தித் துரத்தி விளம்பரம் செய்கிறார்கள் என்றாலும் மற்றவர்கள் இவர்கள் அளவுக்கு சுவாரசியம்
செய்வதில்லை என்பதும் உண்மை .
கடைக்கு சாமான் வாங்கப்போகும் சிறுவன் விளம்பரம் நினைவிருக்கிறதா ...
யோசேப்பு ஜோசப்பா ?
தோமா தாமஸ்?
தானியேல் டேனியல் ?
பவுல் பால்?
சிறுவயதில் பக்கத்து வீட்டு பாக்கியம் அக்காவுடன் பிரார்த்தனை சென்றதுண்டு.
நிற்க.இப்போதும்,அகில இந்திய வானொலியில் ,நீங்கள் குறிப்பிட்டுள்ள
சர்வமதப் பாடல்களைக் கேட்கலாம்

ரொம்ப எழுதிவிட்டேனோ?.இது போதும் இப்போதைக்கு.ha ha.take care

சுந்தர்ஜி சொன்னது…

வேறொன்றில் ஈர்ப்பு அதிகமானால் தொலைக்காட்சி விலகிவிடும் பாலு சார். நான் வெகுதூரம் விலகிவிட்டேன் தொலைக்காட்சியிலிருந்து. செய்தித்தாட்களிலிருந்து. புஸ்தகங்கள் மற்றும் இசை இவை மட்டுமே என் துணை. அது சரி. தொலைக்காட்சியில் தெரிவதற்கு உங்களுக்கு மிக ஆழமான ஈடுபாடு இருக்கும் ஆர்வத்தோடு முயற்சி செய்தால் கதவு திறந்துகொள்ளும்.

உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி ரசிகை.இப்போ எழுதிவிடுகிறேன் பெயர்களை.

நலமடைந்து விட்டேன். அன்புக்கு நன்றி உமாமோகன்.காக்கிலோ கருப்புப் புளி மஞ்சத் தூளுடா என்னோட ஆல்டைம் ஃபேவ்ரிட்.

கொஞ்சங் கொஞ்சமாக விஜய் டி.வியும் தன் வட்டத்திலிருந்து விலகி சன் போட்ட பாதையில் செல்லத் தொடங்கிவிட்டது. ஒரிஜினலான நிகழ்ச்சிகளை பொதிகையும், மக்கள் தொலைக்காட்சியுமே தருவதாய் நான் நினைக்கிறேன்.நான் இப்போதும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டே வருகிறேன்.அது பழைய நினவின் பதிவு.

யோசேப்பு, தோமா, யாக்கோபு, சவேரியார், யோவான், மத்தேயு, தானியேல், லூக்கா, பேதுரு, ஆந்திரேயர், பவுல்.

ஜோஸஃப், தாமஸ், ஜேக்கப், சேவியர், ஜான், மேத்யூ, டேனியல், லூகஸ், பீட்டர், ஆண்ட்ரூஸ் மற்றும் பால்.

நாலைச் சொன்ன உங்களால் மீதியையும் சொல்லியிருக்க முடியுமே உமா?

சக்தி சொன்னது…

கொஞ்சம் பொறுமை கொஞ்சம் திறமை கொஞ்சம் நினைவு
மிக்சிங் கொஞ்சம் மிஸ்ஸிங் ....
பிறந்தவீட்டுப் பெருமை வேணாம்னு நெனச்சேன் (பொதிகை)

அப்பாதுரை சொன்னது…

வசதியாக படிக்க/டிவி பார்க்க ஒரு சாக்கா உடல் நலக்குறை? எப்படியோ சுவாரசியமான பதிவு கிடைக்கிற வரை சரியே எனும் என் சுயநலப்பார்வையைச் சற்றே ஒதுக்கி.. நீங்கள் நலமென நம்புகிறேன்.

//இந்துவா? முஸ்லீமா? க்ரிஸ்தவனா? ஸொராஸ்ட்ரியனா? என்ற பேதங்கள் பார்க்காத மக்கள் அதிகமாக நிரம்பியிருந்த காலம்
இனிமேல் தான் வரவேண்டும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...