‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.

 காவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர்.
ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா கிராமத்தின் பக்கத்தில் கலுவராயி என்கிற ஊரில் 1878ல் பிறந்து, சமஸ்க்ருத மொழியின் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மேதையாக விளங்கினார்.

பத்து வயதுக்குள் சமஸ்க்ருத காவியங்களையும், கணக்கியலையும், வானவியலையும் கற்றுத் தேர்ந்தார். கோள்களின் சஞ்சாரத்தையும், பலன்களையும் துல்லியமாகக் கணக்கிட்டார். ஜோதிடக் கலையில் ஒரு பெரும் பண்டிதரானார்.

தன் பத்து வயதில், ஒரு மணி நேரத்துக்குள் 34 ஸ்லோகங்கள் கொண்ட “பாண்டவ த்ருதிராஷ்ட்ர சம்பவம்” என்ற சிறு காவியத்தை சமஸ்க்ருதத்தில் எழுதி எல்லோரையும் வியக்க வைத்தார்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அளவிட முடியாத மொழித் தொண்டும், ஆன்மிகத் தொண்டும் ஆற்றினார். தன் ஆன்ம குருவைத் தேடியலைந்த கணபதி முனி, 18.11.1907 அன்று திருவண்ணாமலையை வந்து சேர்ந்து, விரூபாக்ஷ குகையில் ரமணரைக் கண்ட நொடியில் அவர் பாதங்களில் விழுந்து உண்மயான தவம் என்னவென்று போதிக்கக் கேட்டுக்கொண்டார்.

அப்போது ப்ராம்மண ஸ்வாமி என்றறியப் பட்ட ரமணர், சற்று நேரம் அமைதியுடன் இருந்தார். பின் கணபதி முனியைப் பார்த்து மெல்லப் பேசினார்.

“ நான் நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்வனி எங்கேயிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்”

இந்த போதனையால் தன் குருவையடைந்த கணபதி முனி, அவருக்கருகே இருக்க அனுமதிக்குமாறு கேட்க, ரமணரும் விரூபாக்ஷி குகையில் அமர்ந்து தவம் புரிய அனுமதித்தார்.

ப்ராம்மண ஸ்வாமியின் பூர்வாசிரமப் பெயர் ‘வேங்கடராமன்’ என்றறிந்த கணபதி முனி, அதைச் சுருக்கி, ரமணர் என்ற பெயர் அமையுமாறு ”பகவான் ரமண மஹரிஷி” என்று அழைப்பதென முடிவெடுத்து, மற்றவர்களிடமும் கூறினார். உடனே தன் குருவினைப் புகழ்ந்து, ஐந்து சமஸ்க்ருத ஸ்லோகங்களை எழுதி ரமணரிடம் கொடுக்க, ரமணரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல ரமணரும், கணபதி முனியை “நாயனா” என்றழைக்க ஆரம்பித்தார். அதுவே கணபதி முனியின் பெயராக நிலைத்து விட்டது.

ஸ்ரீ அரவிந்தரின் “ஜனனி”க்கு நாயனா எழுதிய முன்னுரையைப் பற்றி ’அது மூலத்தை மிஞ்சி விட்டது’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். நாயனாவின் உமாசஹஸ்ரத்தைப் படித்த ஸ்ரீ அரவிந்தர் அதை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அரிய செயல் எனப் புகழ்ந்து, நாயனாவைச் சந்திக்கும் தன் ஆவலை வெளியிட்டார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆச்ரமத்திலிருந்து சுதன்வா திருவண்ணாமலைக்கு வந்து நாயனாவை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றார். அரவிந்தரும் நாயனாவும் சந்தித்தார்கள். அன்னையும் தன்னுடன் தியானம் செய்ய நாயனாவை அழைத்தார். கணபதி முனிவர் சுமார் ஒரு மாதம் ஆச்ரமத்தில் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கினார்.

தீண்டாமைக்கு எதிரான அவரின் துணிச்சலான கருத்துக்களை ஆதரித்த தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி அவரின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அதற்கு நாயனா சம்மதித்து 1923ல் உறுப்பினர் ஆனார்.

பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய நாயனாவின் பேச்சை காந்தி, மதன்மோஹன் மாளவியா மற்றும் அன்னிபெஸண்ட் ஆகியவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

தான் சந்திக்க விரும்பும் காஞ்சி பரமாச்சார்யர் தன்னைச் சந்திக்க ஒப்புவாரா என்ற தயக்கம் நாயனாவுக்கு இருந்தது. ஆனால் அவரை சந்திக்க அழைத்த காஞ்சிப் பெரியவர் கரக்பூரில் கணபதி முனியுடன் சுமார் 50 நிமிடங்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடினார். அவருடன் உரையாடியதில் மகிழ்ந்த பெரியவர், விலைமதிப்பு மிக்க தங்க ஜரிகைகளால் மின்னிய பொன்னாடையால் நாயனாவை கௌரவித்தார்.

நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாக்ருஷ்ணன் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது தன் வீட்டில் தங்கி, மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற நாயனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய இப்படிப் பட்ட வ்யக்திகள் நூலாம்படை பிடித்து ஒரு மூலையில் கிடக்க, வழக்கம்போல் வெற்றுவேட்டுக்களின் ஆரவாரம்தான் பலமாக இருக்கிறது. கணபதி முனியின் வாழ்க்கையோ, அவரின் படைப்புக்களோ, கருத்துக்களோ அதிகம் எழுதப்படவோ பேசப்படவோ இல்லை.

அவர் எழுதிய ஏராளமான நூல்கள், அவரின் ஆன்மீக அமானுஷ்ய அனுபவங்கள், அவரின் சீர்திருத்த சிந்தனைகள், ரமண மகரிஷிக்கு அவர் எழுதிய கடிதங்கள், ”கால ஞான விசாரம்” என்று ஒவ்வொரு யுகங்களின் கணக்கையும் கணித்து அவர் 1930ல் நிகழ்த்திய மிக முக்கியமான சம்ஸ்க்ருத உரையை ரமண மகரிஷி மொழிபெயர்த்தது, நாயனாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிசயமான சம்பவங்கள், நாயனாவின் அகால மரணம், அதை முன்கூட்டியே அறிந்தது என்று நாயனா குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு இடுகையில் அவற்றை எழுத நினைத்திருக்கிறேன்.

”காவ்ய கண்ட கணபதி முனிவர்” என்ற தலைப்பில் ஸ்ரீரமணாச்ரமம் வெளியிட்டிருக்கும் நூல் அற்புதமான பல தகவல்கள் நிரம்பிய ஒரு புதையல்.  தவற விடாதீர்கள்.

கருத்துகள்

வெங்கட் நாகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தகம் தில்லி ரமணாஷ்ரமத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்....

சிறப்பான பகிர்வு.
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

சில பல அரிய மகான்களையும் , எழுத்துக்களையும் தேடிப் பிடித்துப் பதிவிடும் சுந்தர்ஜி, நீவிர் வாழ்க, தொடர்க உம் பணி. பாராட்டுக்கள்.
ஆ.செல்லத்துரை. இவ்வாறு கூறியுள்ளார்…
காவ்ய கண்ட கணபதி முனிவர்.சிறப்பான நினைவுகூறல்.ஞானியர்களோடு,பாமரராய் வாழ்ந்து கடந்துபோன ஞானியர்தன் எத்தனை எத்தனை? நாயனாவின்,”கால ஞான விசாரம்” குறித்து விரிவாக எழுதினால் எல்லோர்க்கும் பயன் நண்பா!
கவிநயா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வணங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்குமா?
அரவிந்த்@பா.சு.ரமணன் இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதமான தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.

காவ்ய கண்ட முனிவருடன் தியானம் செய்யும் பொழுது, அறையுள் இருந்த தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடுவதையும், ஒரு சக்தி அவரைக் காத்து வருவதையும் ஸ்ரீ அன்னை உணர்ந்தார். 'தான் வேறு எவருடன் தியானம் செய்த பொழுதும் இவ்வளவு ஆழ்ந்த நிலைகளை எட்டியதில்லை' என ஸ்ரீ அன்னை பின்னர் கூறினார்.

கண்பதி முனிவரும், " ஸ்ரீ அன்னையின் கால் முதல் தலை வரை ஒரு அருள் ஒளி வீசியது. அது சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடியதாகவே இருந்தது. மிகப் பெரிய பரவச நிலை ஸ்ரீ அன்னையுடன் தியானம் செய்யும் பொழுது எனக்கு ஏற்பட்டது" என்று கூறினார்.

இது மட்டுமல்ல. காவ்ய கண்ட முனிவருக்கு “சதாவதானம்” செய்யும் ஆற்றலும் இருந்தது. ரமணர் முன்னே சிலமுறை சில அவதானங்களை அவர் செய்து காட்டியிருக்கிறார். இதுபற்றி ரமணர் தேவராஜ முதலியார், சூரி நாகம்மா உள்ளிட்டோருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

//இந்தியக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய இப்படிப் பட்ட வ்யக்திகள் நூலாம்படை பிடித்து ஒரு மூலையில் கிடக்க, வழக்கம்போல் வெற்றுவேட்டுக்களின் ஆரவாரம்தான் பலமாக இருக்கிறது. கணபதி முனியின் வாழ்க்கையோ, அவரின் படைப்புக்களோ, கருத்துக்களோ அதிகம் எழுதப்படவோ பேசப்படவோ இல்லை.//

100% சத்தியமான, உண்மையான, மனம் வருந்தக் கூடிய விஷயம் இது.

//”காவ்ய கண்ட கணபதி முனிவர்” என்ற தலைப்பில் ஸ்ரீரமணாச்ரமம் வெளியிட்டிருக்கும் நூல் அற்புதமான பல தகவல்கள் நிரம்பிய ஒரு புதையல். தவற விடாதீர்கள்//

நானும் அதைப் படித்திருக்கிறேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான நூல்தான்.
க்ரேஸி மோகன் இவ்வாறு கூறியுள்ளார்…
பிறவிப் பிணியை அறவே அகற்றி
துறவுக்கும் அப்பால் திகழ்ந்த -பரிசுத்த
ஆவியைக் கண்டதால் அர்ச்சிப்பீர் 'பகவனாய்'
காவிய கண்டமுனி கூற்று.

பிரபலமான இடுகைகள்