7.10.10

அழிசக்தி


கலவரத்தில்
உடைபட்ட கண்ணாடியின்
வழியாய் வழிகிறது
என் தேசத்தின் குருதி.
எரியும் பேருந்துகளில்
வேகிறது நாளைய
தலைமுறைக்கான
சவுக்கின் விளார்.
தகர்க்கப்படும்
பாலங்களிலும்
இருப்புப்பாதைகளிலும்
பொசுங்குகிறது
முகமற்ற குழந்தைகளின்
முதிராத கனவு.
வெட்டி வீழ்த்தப்படும்
மரங்களில் சொட்டுகிறது
பறவைகளுக்கும்
மனிதர்களுக்குமான
நிழல் தோய்ந்த பிசுபிசுப்பு.
ஆக்க காக்க அழிக்கக்
கடவுள்கள்.
அழிக்க அழிக்க அழிக்க
மனிதர்கள்.

8 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

படம் ஏதோ செய்கிறது ஜி
கனமாய் ... உணர்கிறேன்.
//வெட்டி வீழ்த்தப்படும்
மரங்களில் சொட்டுகிறது
பறவைகளுக்கும்
மனிதர்களுக்குமான
நிழல் தோய்ந்த பிசுபிசுப்பு//
இதுவே தனிக்குறுங் கவிதை.
முகத்தில் அறையும் உண்மை
{பிற்சேர்க்கை : //அழிக்கக்
கடவுள்கள்.//
ஒ. இங்கிருந்து வந்ததுதான் இவனும் செய்கிறானா ..?
சரிதான். அப்பனுக்கு(அப்பனா, அம்மையா) பிள்ளை தப்பாமல் பிறத்திருக்கிறது.}

சைக்கிள் சொன்னது…

//பாலங்களிலும்
இருப்புப்பாதைகளிலும்
பொசுங்குகிறது
முகமற்ற குழந்தைகளின்
முதிராத கனவு//
என்ன சொல்ல...வன்முறை மற்றும் அதன் செயல்பாடு குறித்து புரியவும், வினையாற்றவுமான நேரம் நெருங்கி விட்டது எல்லோருக்கும்.

ரிஷபன் சொன்னது…

பறவைகளுக்கும்
மனிதர்களுக்குமான
நிழல் தோய்ந்த பிசுபிசுப்பு.
இந்த வரியில் புலனாகிறது வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களும் நமது பெருமூச்சும்
கவிதையல்ல.. நிஜம்

ஹேமா சொன்னது…

படம் வதைக்கிறது.நினைவுகளைக் கிளறுகிறது வரிகள்.எந்தக் கடவுள் ஆக்க காக்க ?அழிக்க மட்டும்தான் அல்லது அழிப்பவர்களுக்கு ஆயுதம் கொடுக்க !

பத்மா சொன்னது…

முதிராத கனவு வாட்டப்போகிறது நாள் முழுவதும் என்னை !வருத்தம் மேலோங்குகிறது ஜி

கமலேஷ் சொன்னது…

வாசிக்க கூடாத சில நல்ல கவிதைகளை
வாசிக்க நேர்ந்து விடுகிற பொழுது
அந்நாட்களை நிரப்புகிறது சாம்பல்.

இந்த சாம்பல் பொழுது
வதை.... கொடு வதை.....

Harani சொன்னது…

சுந்தர்ஜி..

சமீபமாக உங்கள் கவிதைகளில் என்னை இழந்து
கொண்டிருக்கிறேன். வேறு நினைவின்றி என்னை
சில மணித்துளிகள் இறுக்கிவிடுகிறது. வன்முறையின்
முகம் எப்படியிருப்பினும் அது வலுக்கட்டாயமாகப் புகட்டப்படும்
விடமாகவே வழங்கப்படுகிறது அப்பாவி மனித ஜாதிக்கு.
கலக்கமுறுகிறது மனம் சாக்கடையில் விழுந்துவிட்ட ஒரு ஏழையின்
கடைசி நாணயத்தைத் தேடுதல்போல...

vasan சொன்னது…

இதை நீங்க‌ள் பதிவ‌தால் ம‌ட்டும் இந்த‌ப் பாத‌ங்க‌ளிலிருந்து த‌ப்ப‌முடியாது.
கொழுந்துக‌ளை வொட்டும் கோடாலியை தூக்காவிடினும், அதைத் த‌டுக்காததாலும்
கொழுந்துவிட்டெறியும் தீயை ப‌ற்ற‌ வைக்காவிடினும், ப‌ற்ற‌ வைத்த‌வர்க‌ளைப் ப‌த‌ற‌ வைக்காத‌தாலும், நீங்க‌ளோ, நானோ,நாமோ, நாடோ, யாரும் இத்தீவினைக்கு ப‌தில் சொல்லாம‌ல்
த‌ப்ப‌வோ முடியாது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...