
அடைவதை விடவும் இழப்பதில்-
பெறுவதை விடவும் கொடுப்பதில்-
அண்மையை விடவும் தொலைவில்-
உருக்கொள்கிறது நிம்மதியின் உறைவிடம்.
ஒலியை விடவும் நிசப்தத்தில்-
ஒளியை விடவும் இருளில்-
பாய்ச்சலை விடவும் பதுங்குதலில்
வெளிப்படுகிறது நிதானத்தின் பேரெழில்.
இணைவதை விடவும் பிரிவில்-
களிப்பை விடவும் துயரில்-
ஆரவாரத்தை விடவும் எளிமையில்
வலுப்பெறுகிறது அன்பின் நீள்சுவர்.
பொய்மையை விடவும் வாய்மையில்-
அழிவை விடவும் ஆக்கத்தில்-
தண்டித்தலை விடவும் மன்னித்தலில்
இசைக்கப்படுகிறது கடவுளின் சங்கீதம்.
8 கருத்துகள்:
எழுதுவதை விடவும்
வாசிப்பதில் கிட்டுகிறது
பேரானந்தம்.
படைப்பதை விடவும் படிப்பதற்கு,
கிடைத்ததை விடவும் தேடலுக்கு,
அடையும் "தளம் கைகளில் அள்ளிய நீர்".
சுந்தர்ஜி, நீரதன் ஊற்று.
`எடுப்பதிலா இல்லை கொடுப்பதிலே இன்பம்` என்றே சொல் தோழா
இந்த இருமை உங்கள் கவிதைகளின் அடிநாதமாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.
//ஆரவாரத்தை விடவும் எளிமையில் வலுப்பெறுகிறது அன்பின் நீள்சுவர்//
அன்பு நீள் சுவராக வலுப்பெறுகிறது இக்கவிதையிலும்...
காண்பதினும் காணாதிருக்கும் உயிர்த்தலின் வலிமை அழியாதது. பூமிக்குக் குடைபிடிக்க நீளும் நிழலின் கருணை அலாதியானது. இறைமையானது.
நல்ல கவிதை.சிந்திக்கத் தூண்டுகிறது
கடவுளின் சங்கீதத்திற்கான
நோட்ஸ் எழுதிய சுந்த்ர்ஜிக்கு
ஒரு சல்யூட்.
மனதிற்கு நிறைவான விஷயங்களை நிறைத்துவிட்டு கடவுளின் சங்கீதமென்றிருக்கிறீர்கள் ஜி !
கருத்துரையிடுக