20.5.11

சுண்டெலி

ஒரு கிராமத்தில் ஒரு குரு வசித்து வந்தார். பலரும் அவரிடம் வந்து ஞானம் பெறுவது வழக்கம்.

இதைக் கேள்விப்பட்ட ஓர் இளைஞன் ஆவலுடன் அவரிடம் வந்தான். அவனை எதுவும் விசாரிக்காமல் அவனை அங்கேயே இருக்கச் சொன்னார். நான்கு வருடங்கள் கழிந்தன.

ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு குரு விசாரித்தார்.

"எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார்.

"தீட்சை பெற வேண்டி தங்களிடம் வந்தேன்'' என்றான்.

அங்கிருந்த ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். அதை அவனிடம் கொடுத்து வெகுதூரத்தில் ஒரு விலாசம் கொடுத்து,

"அங்குள்ள ஒரு மகானைச் சந்தித்து இப்பெட்டியை அவரிடம் சேர்த்து விடு. திரும்பி வந்தவுடன் தீட்சை அளிக்கிறேன்'' என்றார்.

அந்த ஊரை நோக்கி இளைஞன் நடந்தான்.

வெயிலில் களைத்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். நடக்கும்பொழுது அவன் மனம் நடை மீதிருந்தது. பெட்டியைப் பற்றி நினைவில்லை. அது பூட்டப்பட வில்லை என்பதையும் அவன் கவனிக்கவில்லை.

உட்கார்ந்தவுடன் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது.

ஏன் இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்? எளிதில் திறக்கலாம் போலிருக்கின்றதே? இதனுள் என்ன இருக்கும்? பார்க்கலாமா? பார்த்தால் என்ன தவறு? என்று மனம் நினைத்தபொழுது,

"அது தவறு. இது குரு இட்ட ஆணை. அவர் பேச்சை மீறக் கூடாது. எதுவாய் இருந்தால் நமக்கென்ன?'' என்று மனத்தைச் சமாதானம் செய்தான். சிறிது நேரம் கழித்து மனம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டது. மீண்டும் அமைதியடைந்தான்.

பல நேரப் போராட்டத்துக்குப் பின், அவன் தோற்று, அவன் மனம் வெற்றியடைந்தது.

பெட்டியைத் திறந்தான். அவன் எதிர்பாராது திடீரென ஒரு சுண்டெலி குதித்தோடியது. இளைஞன் வருத்தப்பட்டான்.

மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்து, அந்த விலாசத்தைத் தேடிப் போனான். அவரிடம் பெட்டியைக் கொடுத்தான். திறந்து பார்த்தார். அவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தார்.

அவனுக்கு உபதேசம் செய்தார்.

"உன் குரு உன்னை நம்பவில்லை. உன் மனோதிடத்தைச் சோதிக்க இதைச் செய்திருக்கிறார். நீ தோற்றுவிட்டாய். உன் மனதை உன்னால் வெல்ல முடியவில்லை.” என்றார்.

வருத்தத்துடன் குருவை நாடி வந்து செய்த தவறையும், நடந்தவற்றையும் இளைஞன் சொன்னான்.

"உன்னால் ஒரு சுண்டெலியைக் காப்பாற்ற முடியவில்லை. ஞானத்தை உன்னை நம்பி எப்படிக் கொடுக்க முடியும்?'' என்றார்.

இளைஞன் தன் இருப்பிடம் சென்றான்.

காலங்கள் கரைந்தன. அவன் எதைத் தேடி நிம்மதியற்றுத் திரிந்தானோ, அது தன்னிடமே இருப்பதை உணர்ந்தான்.

எல்லாமே தேடலுக்குப்
பின்னரே கிடைக்கின்றன.
எவை கிடைக்கின்றனவோ
அவை கிடைத்த பின்னரே
தேடியவை அவையல்ல
என்கிற ஞானத்தையும் -
தேடாமலேயே கண்ணெதிரில்
தட்டுப்படும் ஆச்சர்யத்தையும்
பொதிந்து வைத்திருக்கிறது
இந்த வாழ்க்கை.

13 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கதையும் அருமை. கடைசியில் கொடுத்துள்ள விளக்கமும் அருமை,
சுந்தர்ஜி சார்.

//எல்லாமே
தேடலுக்குப்
பின்னரே கிடைக்கின்றன.
எவை
கிடைக்கின்றனவோ
அவை
கிடைத்த பின்னரே
தேடியவை அவையல்ல
என்கிற ஞானத்தையும்//

ஆஹா. உண்மை தான்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மகோன்னதமான கருத்துடன் கூடிய
கதையும் பின் வரும் விளக்கமும்
நிறைவு அண்ணா

எல் கே சொன்னது…

அஹம் பிரம்மாஸ்மி

santhanakrishnan சொன்னது…

சுண்டெலி சொன்னது
பெரிய விஷயம்.

நிலாமகள் சொன்னது…

ஆக... ஓய்விலிருக்கும் மனமே ஞானத்தின் எதிரி. சரியா ஜி?

முகப்பு படத்துக்கு என்று கடைசி நாள்? வை.கோ. சாரின் முந்தைய கருத்துரையை நினைவூட்டி மனக்குரங்கு சிரிப்பெழச் செய்கிறது.

மோகன்ஜி சொன்னது…

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்ற ஞானத் தங்கங்கள் அல்லவோ நாம்... அழகான பதிவு சுந்தர்ஜி!

ஹேமா சொன்னது…

படம் பிரமாண்டம்.தேடல் தத்துவம்.ஆனால் மனம் சொல்லுக் கேக்குதில்லையே !

ரம்மி சொன்னது…

தேடலே வாழ்வை
சுவாரஸ்யமாக்குகிறது!

தேடலே வட்டத்தின் வெளியே
நம்மை அழைத்து செல்கிறது!

தேடல் எதுவென்று
நம்மில் ஆரம்பித்து
எங்கே கிடைக்குமென்று
உள்ளும்வெளியும் தேடி
இதுதானே உன் தேடலென்று
ஞானமாய்
வெற்றியாய் திரும்புகிறது!

சுந்தர்ஜி! நடை மாற்றம் - பிரமாதம்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கருத்துள்ள கதை மற்றும் விளக்கம்.

தேடுதல்களுக்கு முடிவில்லாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம், சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல்…..

Nagasubramanian சொன்னது…

fantastic story followed by your trade mark poem!

ரிஷபன் சொன்னது…

ஞானம் எப்படி எப்போது யாரால் கிடைக்கும் என்று தெரியாதவரை..
தேடல் சுவாரசியம்தான்.

இரசிகை சொன்னது…

:)

G.M Balasubramaniam சொன்னது…

கவிதைக்குப் பொருளாக கதையை முன் எழுதி யாருக்கும் எந்த சந்தேகமும் வர இயலாதபடி....இந்த முறை தொடருமா சுந்தர்ஜி.?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...