4.1.12

வல்வில் ஓரியும் புறநானூறும்

முந்தைய இடுகையில் பார்த்த அதே வல்வில் ஓரி இன்றைக்கும் தொடர்கிறார் புறநானூறு வழியாக. 

புறநானூற்றில் புலவர் வன்பரணரால் பாடப்பட்ட ஒரு பாடல் எத்தனை தூரம் கொடையில் சிறந்திருந்தாலும் சரியான முரட்டுப் பயல் போலக் காட்சி தரும் ஓரியின் வில்வன்மையைக் குறித்துப் பாடுகிறது. 

வேழம் வீழ்த்த விழுத் தொடப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகாக்கலை உருட்டி, உரல்தலைக்
 கேழற் பன்றி வீழ, அயலது
 ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன் 

குறி தவறாது எய்யப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் பாய்ந்து நின்றது. 

இத்தனை உயிர்களை ஒரே குறியில் கொன்று வீழ்த்திய ஓரியின் வன்செயல் வன்பரணரால் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடலை ஓரங்கட்ட வைத்தாலும் ஓரியின் விற்பயிற்சி மேல் திகைப்பும் ஆச்சர்யமும் வன்பரணர் மேல் ஓரி தரவிருக்கும் பரிசைக் குறிவைத்துப் பாடல் புனைந்திருக்கலாமோ என்று கொஞ்சம் சந்தேகமும் ஒரே நேரத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அதேபோலக் கழைதின் யானையார் எனும் புலவர் வல்வில் ஓரியைக் குறித்துப் பாடிய ஈ என இரத்தல் எனத் தொடங்கும் ப்ரபலமான இந்தப் பாடலும்   வல்வில் ஓரியிடம் பரிசுக்காக வந்தாலும் கொடையையும் யாசித்தலையும் அதனதன் ஏற்ற இறக்கங்களுடன் பார்த்த பாடலையும் இப்போது பார்க்கலாம்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;


ஒருவனிடம் சென்று யாசிப்பது எத்தனை இழிவானதோ அதை விடவும் இழிவானது யாசித்தவனுக்கு எதுவும் தராது மறுப்பது. அதேபோல் ஒருவன் யாசிப்பதற்கு முன்னமே கொடுத்து மகிழ்விப்பது எத்தனை உயர்ந்ததோ அதைவிடவும் மிக உயர்ந்தது கொடுத்ததை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று 
மறுப்பது. 

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்; 

எத்தனைதான் தாகத்தின் வயப்பட்டாலும் பளிங்கு போல மின்னும் நீரான கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் பிற விலங்குகளும் நீர் பருகியதால் சேற்றுடன் கலங்கிய நீர் சொற்பமாய் இருந்தாலும் அதைப் பருக ஒருபோதும் எவரும் தயங்குவதில்லை. 

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்!  

தமக்குக் கொடை கிடைக்காதே போனாலும் தாங்கள் கிளம்பிய நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே தவிர, உன்னைப்போல் ஓய்வு ஒழியாது கொடுக்கும் வள்ளல்களைப் பழிக்க மாட்டார்கள். அதனால் நீ எனக்கு ஒருவேளை கொடை தராது போனாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். வானத்துக் கருமேகம் பொழியும் மழை போல் வற்றாது கொடையளிக்கும் வள்ளல் ஓரியே, என்றென்றும் நீ வாழ்க! 


இந்தப் பாடல் மிகச் சிறப்பாக அறம் சார்ந்த கருத்துக்களை எளிமையான அருமையான கவிதை நயத்துடன் சொன்னதோடு மட்டுமில்லாமல் ஓரி பரிசு தருவானோ மாட்டானோ என்கிற பதைபதைப்பும் உள்ளுக்குள் ததும்பும் பாடலாகத்தான் இது தெரிகிறது.

இத்தனை வில்வன்மையும் பராக்கிரமும் உடைய ஓரி மற்றொரு குறுநில மன்னனான காரியிடம் தோற்றதின் பின்னணியை மற்றொரு இடுகையில் பார்ப்போம்.

2 கருத்துகள்:

மதுமதி சொன்னது…

சங்க இலக்கிய பாக்களைக் கொண்டு பதிவிடும் பதிவர் ஒரு சிலரே..அதில் நீங்களும் ஒருவர்..ஓரியின் வில் வித்தையை பறை சாற்றும் பாடலை நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னை படிக்க வைத்ததற்கு நன்றி..தொடரட்டும் உங்கள் இலக்கிய பதிவுகள்..வாழ்த்துகள்..

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி..

நல்ல முயற்சியைத் தொடங்கியிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய தமிழ் வணக்கமும் நன்றியும். வல்வில்ஓரியாண்ட கொல்லிமலை அவன அரசாட்சிகாலத்தின் எத்தனை வளமை பெற்றிருந்தது என்பதைப் படிக்க ஆனந்தமாகஇருக்கும்.
சுரபுன்னைகளும் மணம் வீசும் இனிய பூக்களும் பழுத்த சுவையான பலாக்கனிகளும் என செழிப்பாக இருந்த மலையது, வன்பரணர் அதனால்தான் மழை அணி குன்றத்துக் கிழவன் என்று பாராட்டுவர். மழை வளத்தைக் குறிப்பிடுவது இது. குமிழ மரத்தின் கனிகள் முற்றிக் கீழே விழுந்து அங்குள்ள மான்களுக்கு உணவாவதும். அதிக யானைகளைக் கொண்டதால் அத்ன் தந்தங்கள் அங்குள்ள மக்களின் வாழ்வியலாகவும் இருந்ததையும் படிக்கப்படிக்கப் பரவசம் மிகும்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல பொருளுக்காகப் புலவர்கள் பாடினாலும் அதற்குத் தகுதியுடையவர்களையே பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் வல்வில்ஓரி வளமான மலைகளையும் சுரபுன்னைகளையுமுடைய பல நாடுகளைக் கூத்தர்களுக்குப் பரிசிலாக வழங்கியதை அறியமுடிகிறது.

ஒரு தலைவன் தலைவிமேல் கொண்ட ஈர்ப்பால் ஓரிகொடுக்கும் பெரும் பரிசிலைவிடத் தலைவியின் காதல் பெரிது என்று பாடும் பாங்கும் காணப்படுகிறது.

பலமுறை ஓரிக்கும் காரிக்கும் போர் நடைபெற்றிருந்தாலும் காரியால் கொல்லப்பட்டதன் பின்னர் கொல்லிமலையில் காரியின் ஊர்வலத்தில் ஓரியைவிட காரியின் வீரம் கீழானது என்று மக்கள் நகைத்த தன்மையையும் காணமுடிகிறது.

அருமையான தமிழ்ப் பதிவைத் தருவதற்கு மகிழ்ச்சிகள். பெருமிதம். வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...