31.7.12

9. யுவ - தக்ஷிணாயனம்


தீக்ஷை கொடுப்பதில் மூன்று விதமுண்டு. 

1.ஸ்பர்ஸ தீக்ஷை. 2. நயன தீக்ஷை. 3.மானஸ தீக்ஷை.

சீடனைத் தொட்டு ஆசிர்வதித்து தீக்ஷை கொடுப்பது ஸ்பர்ஸ தீக்ஷை. 

வார்த்தை எதுவும் உதிர்க்காமல் ஞானம் ததும்பும் பார்வையால் தீக்ஷை கொடுப்பது நயன தீக்ஷை. 

எங்கோ இருந்துகொண்டு எல்லாம் நல்லதாக அமையவேண்டும் என மனதால் நினைத்து தீக்ஷை கொடுப்பது மானஸ தீக்ஷை.

இவற்றிற்கு கோழி, மீன், ஆமை ஆகியவை முட்டையிட்டு 
அடைகாப்பதை உவமையாகக் கூறலாம். 

கோழி தன்னுடைய முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாக்கும். இது குக்குட தீக்ஷை. (குக்குடம்-கோழி)

மீன் முட்டையிட்டுவிட்டு முட்டைகளை உற்று நோக்கியவாறு அங்கு 
மிங்கும் நீந்திக்கொண்டிருக்க குஞ்சுகள் முட்டை பொறிந்து வெளிவரும். இது மத்ஸ்ய தீக்ஷை.(மத்ஸ்யம்- மீன்)

ஆமை ஏதோ ஒரு கடற்கரையில் குழிதோண்டி முட்டையிட்டு 
விட்டுக் கடலில் இறங்கி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் 
தன்னுடைய இருப்பிடம் நோக்கி நீந்திச்செல்லும். அப்போது மனதால் தான் இட்ட முட்டைகளை நினைத்தபடியே இருக்க முட்டைகள் பொறிந்து குஞ்சு வெளிவரும். இது கமட தீக்ஷை.(கமடம்-ஆமை)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்களுக்கு தெலுங்கு அட்சர சுத்தமாக வாசிக்கமுடிந்தால் மட்டுமே இந்த அத்யாயத்தை வாசிக்கமுடியும். தெலுங்கு வாசிக்கத் தெரியாதவர்கள் போனால் போய்த் தொலைகிறதென்று இந்த ஒன்பதாவது அத்யாத்தை விட்டுக் கடாசி விடுங்கள்.

மாலை நேரத்தின் வெயில் சரிவாக விழுந்துகொண்டிருக்கும்போது நெல்லூரில் நீங்கள் இந்தத் தெருவில் நுழைந்திருக்கக் கூடாது. ஒரே இரைச்சலும் தூசியும் தும்பட்டையும்.

எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காமல் தெருவில் மாடுகளைக் கட்டி பால் கறந்தபின் மாடுகளை அவிழ்த்துக்கொண்டு போகும் பால் வியாபாரிகள்- சாயங்காலம் சந்தைக்கான ஆயத்த வேலைகளில் இறங்கும் சந்தைக் கடைக்காரர்கள் இவர்களுக்கு நடுவில் சிக்கிக் கொள்வது ஒரு என்.டி.ராமராவின் வண்ணப் படத்தில் சிக்கிக் கொள்வதற்குச் சமமானது.

பரவாயில்லை. மூக்கை- தோளில் கிடக்கிறதே துண்டு- மூடிக்கொண்டு தெருவெல்லாம் கிடக்கும் எருமைச் சாணியை மிதிக்காதவாறு தாண்டி வந்து வலது புறம் திரும்பிவிட்டால் என் வீடு தெரியும்.

வாசலில் இருக்கும் அழைப்புமணியை அழுத்தினீர்களா? இல்லையென்றால் இதைப் படித்த பின் அழுத்தவேண்டாம். அது வேலை செய்யாது. ரெண்டு தரம் முஷ்டியை மடக்கி கதவில் தட்டினால் யாராவது திறக்க வருவார்கள். வெளியிலிருந்துதான் ஒரு கதவு. கதவு திறக்கப்பட்டு விட்டால் அது பத்து குடித்தனங்களுக்கான பரமபத வாசல்.

நிச்சயமாக நான்கைந்து குழந்தைகள் மூக்கை உறிஞ்சியபடி ஒன்றோடு ஒன்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கலாம். பூட்டியிருக்கும் ஏதாவது ஒரு குடித்தனத்து வீட்டு விவகாரங்களை சத்தமாக சுதந்தரமாக வம்பளந்து கொண்டிருக்கும் இன்னொரு கும்பல். அதெல்லாம் இருக்கட்டும். காய வைத்திருக்கும் விறகுக் கட்டைகள்,  சாம்பார் பொடிக்கு அரைக்க முறத்தில் வைத்திருக்கும் சாமான்கள் சூழ கடைசியில் கிணற்றடி. அதற்கெதிரே வெந்நீர் போடுவதற்கான இருட்டறை போல ஒரு பாகம் தெரிகிறதல்லவா அதில்தான் சாமிநாத ஐயரின் ஜாகை. செல்லமாக சாமாண்ணா.ரொம்பவும் ஆசைப்பட வேண்டாம். நாம் இப்போது சாமாண்ணாவின் வீட்டுக்குள் நுழையப்போவதில்லை.

சாமாண்ணா சமையல்வேலை செய்யக்கூடிய ஒரு ஜெகஜ்ஜாலக் கில்லாடி. அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் சில சமயம் நீங்கள் மறைந்துபோய் அவர் மட்டுமே இருக்கக் கூடிய காட்சிகளை உருவாக்கி விடுவார். மனிதர் சரியான போஜனப் ப்ரியர். வக்கணையாக அவர் விவரிக்கிற ஒவ்வொரு மெனுவையும் கேட்கும்போது ‘என்ன இப்படி நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலயறீங்களே?’ என்ற கேள்வியை யாராவது கேட்டுவிட்டால் சிரித்துக்கொண்டே- 

“நான் விதரணையா சாப்ட்டு ரொம்ப நாளாச்சுடா. ஒரு கை மோருஞ்சாதம்.அவ்ளவுதான். எப்பிடிச் சமைக்கணும்-சாப்டணும்னு பேசறதுல ஒரு அலாதி போதையிருக்குடா.அது ஒனக்குத் தெரியாது.  மனுஷன் ஒழைக்கிறதே அதுக்குத்தானே? ரசிச்சு ருசிச்சு சாப்ட்றதுல என்ன வெக்கம் வேண்டிக்கெடக்கு?” என்று எதிர்க்கேள்வி மூலமாக பதில் சொல்லி வாயை அடைத்து விடுவார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாமாண்ணாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை. பண்ணிக்கொள்ள ஆசையில்லை. ஒரு தேசாந்திரி மாதிரி அலையக்கூடிய அவரிடம் எந்தப் பொண்ணும் சிக்கிக் கொள்ளாமல் போனதும் ஒருவிதத்தில் நல்லதுக்குத்தான் என்று அக்கம்பக்கத்தினர் அவர் இல்லாத போது பேசிக்கொள்வார்கள். ஆனால் சாமாண்ணா இந்தியா முழுதும் சுற்றி வருவதற்காகவே சம்பாதிக்க வேண்டியிருந்தது. கையில் காசு குறைவது போலத் தோன்றினால் நெல்லூரில் டேரா அடித்து மறுபடியும் கல்யாணம் கார்த்திகையென்று காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதித்துக்கொண்டு மறுபடியும் ஊர்சுற்றக் கிளம்பி விடுவார்.

அவர் கைக்கென்று தனி மணம் இருக்கத்தான் இருந்தது. ஆனாலும் அவருக்கென்று இருக்கும் கிராக்கியைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர் விரும்பியதில்லை. ஆர்டர் கிடைத்தால் போதும். அவரிடம் வேலை செய்ய நான் நீயென்று போட்டிபோட்டுக்கொண்டு வந்துவிடுவான்கள். உட்கார்ந்த இடத்திலேயே வேண்டிய சாமான்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, சமையல் பாத்திரங்களுக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு ஜாரிணிக் கரண்டியோடு கிளம்பிவிடுவார். 

அடுப்பில் நெருப்பைக் குறை பருப்பு தீயறது பார்- தேங்காயை சரியா அரைச்சு விட்டியா- பாகுபதம் வந்தாச்சா?- அப்பளத்தை வெளுப்பாப் பொரிச்செடு--வடைக்கு மொழுக்குன்னு அரைக்காதே-கொஞ்சம் கரகரப்பா அரை-வடையைப் போட்டதுக்குப் பின்னாடி அந்த எண்ணையிலேயே கடைசியா மோர்மொளகாவப் பொரிச்சுடு- கூட்டுக்கு பருப்பு நன்னா வெந்திருக்கா பாரு-சாதத்தை நன்னா வேகவிட்டு வடிச்செடு-மணிக்கு ஒரு கைக்கு நாப்பது ஜாங்கிரின்னு ரெண்டு கையால எண்பது ஜாங்கிரி புழிவேன். கோழி பேண்டது கணக்கா நீ என்னடா தடவறாய்?  என்று சகட்டுமேனிக்குக் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். 

இலையில் பரிமாறும்போது கண்பார்வையிலேயே யாருக்கு என்ன வேண்டுமோ அதுக்கான உத்தரவு பறக்கும். பந்தில ரெண்டாவது வரிசை அந்தத் தாத்தாவுக்குத் தெளுவா ஒரு டம்ளர் ரசம் கொடு. அந்த மாமிக்கு டயாபட்டீஸோ என்னவோ ஏதுக்கு ஸ்வீட்டை வேஸ்ட் பண்றாய்? அங்க ஒரு புள்ளையாண்டன் விக்கறான் பாரு ஜலம் இருக்கா பாரு- ரசத்துக்கப்புறம் பாயசம் விடு சீக்கிரம் என்று அந்த உத்தரவுகளைக் கேட்க ரெண்டு காது போதாது.

எல்லாம் முடிஞ்சுதா. கட்டுசாதக்கூடைல மொளகாப்பொடி தடவின இட்லி. புளியஞ்சாதம், தயிருஞ்சாதம், பொறிச்ச வடாம், நார்த்தங்கா ஊறுகா, கூடவே கொஞ்சம் புளிக்காச்சலும் வெச்சுருக்கேன் மாமா. ரயிலுக்கு முன்னாடியே போறவா அம்பது பேருக்கு தனியா கைல கட்டிக்கொடுத்துட்டேன். எல்லாம் நெறைவா இருந்ததுன்னா நான் உத்தரவு வாங்கிக்கறேன் என்று வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் மணக்க பவ்யமாகக் கேட்கும் போது ஒரு தாம்பாளத்துல வெத்தலை பாக்கோட அவர் கேட்டதை விட ஒரு ஆயிரம் ரூபாய் கூட வெச்சுக் கொடுங்கோன்னா என்று வீட்டுப் பெண்மணிகளின் நிறைந்த மனதுடனான வார்த்தை இறுதியாய் ஒலிக்கும்.  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சாமாண்ணாவின் இரவுகள் மிகவும் புதிரானதாய் இருக்கும் என்றும், அவரின் ஜாகையில் அவர் தங்கியிருக்கும் நாட்களில் விதவிதமான சப்தங்களும், குரல்களும் கேட்பதாய் இரவில் உறக்கம் வராத பெரியவர்கள் மறுநாள் பேசிக்கொள்வார்கள். எனக்கென்னவோ பொழுதுபோகாமல் அவர்கள் அப்படிப் புரளி கிளப்புவதாகத் தோன்றும். 

சாமாண்ணாவுக்குச்  சமையல் போலவே சங்கீதத்திலும் அலாதியான ஈடுபாடு. த்யாகராஜ பாகதவர், கிட்டப்பா, மஹாலிங்கம், சுந்தராம்பா பாட்டுக்கள்தான் அவரின் பரம இஷ்டம். ஒரு பழைய க்ராமஃபோன் உண்டு. ஏராளமான எல்.பி. இசைத்தட்டுக்கள் வைத்திருப்பார். அவர் க்ராமஃபோனில் சங்கீதம் கேட்பது அத்தனை மதுரமாயிருக்கும். அவர் கேட்பது வெளியில் யாருக்கும் கேட்காது அத்தனை பரம ரகஸ்யமாய் அத்தனை சௌக்யமாய் இருக்கும் அவர் ரசனை. கூடவே மெல்லிசான ஒரு குரலில் ஸ்ருதி விலகாது அவர் குரலும் இழைந்துகொண்டிருக்கும். அப்படி சாவி கொடுக்காமல் குரல் இழுத்தபடியே அவரும் உறங்கியிருக்க இரவுகள் விழித்திருக்கும் அற்புதமாய்.

ஒருநாள் அவருடன் தூக்கம் வராமல் நானும் பேசிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பழைய கடிகாரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். மங்கலான வெளிச்சம். என்னடாம்பி! தூக்கம் வல்லியோ என்றார். தலையாட்டினேன். ஒனக்கு பேய் பிசாசுகள் மேலே நம்பிக்கையுண்டோ? என்றவாறு என்னை நிமிர்ந்து பார்க்க எனக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. 

என்ன பதில் சொல்லவென்று தோன்றாமல் விழிக்க, ”அதுகள் எதையாவது பாத்துருக்கையா” என்றார் தொடர்ந்து.பேச்சு போகும் திசை பிடிக்காமல் மெல்ல எழுந்து தண்ணீர்ப் பானையிடம் போய் தண்ணீர் குடித்துவிட்டு வெளியே நழுவப் பார்த்தேன். ஒரே எவ்வலில் என்னை எட்டிப் பிடித்தார். ஒக்காருடா நழுவப் பாக்கறியே எம்ட்டனாட்டமா என்று பிடித்திழுத்து உட்காரவைத்தார். 

அது க்ருஷ்ண பட்சத்து இரவு. அதாவது தேய்பிறை. மைபோல அப்பியிருந்தது இருள். வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிற பனியின் ஊடே எந்த வெளிச்சமும் தராமல் ஒரு பத்து வாட் விளக்கொன்று மினுங்கிக் கொண்டிருந்தது. யாரோ கிணற்றில் தண்ணீர் சேந்திவிட்டுப் போன ஜகடை சப்தம் தேய்ந்திருந்தது. நான்கு குடித்தனம் தாண்டி அந்தப் புடவை வியாபாரியும் கீச்சிடும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டுவந்து நிறுத்திவைத்ததும் கேட்டது.

நிமிர்ந்து சாமாண்ணாவைப் பார்க்க அவர் அங்கு இல்லாததை அப்போதுதான் கவனித்தேன். பக்கத்து அறையில் ஏதோ மெலிதான பேச்சுக்குரல் கேட்டது. மெல்ல எட்டிப் பார்த்தேன். ஐயோ! ஏழடி உயரத்துக்கு ஒரு பருத்த உடல்வாகு கொண்ட பெண் வெற்றிலைக்காவி படிந்த பற்களுடன் என்னைப் பார்த்து சிரிப்பது கண்டு சப்த நாடியும் அடங்கிப்போய் கத்திவிடக் கூடாது என்று வாயைக் கையால் பொத்திக்கொண்டேன். எதிரே உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு சாமாண்ணா மெலிதாக அழுதுகொண்டிருந்தார். அந்தப் பெண் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பை என்னால் மறக்க முடியாது. அது முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விகாரமான சிரிப்பு. இல்லை இளிப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன வாரம் நான் வேறேதோ கல்யாணத்துக்காக விஜயவாடா வரைக்கும் போய்த் திரும்பியிருந்தேன். சாமாண்ணா வீட்டின் கதவை எதேச்சையாகப் பார்த்தபோது பூட்டியிருந்தது. ஊரில் இல்லை.ஹரித்வார் போயிருக்கிறார். வீட்டுச் சாவியை நான் ஊரிலிருந்து வந்த பின் என்னிடம் கொடுக்கச் சொல்லியிருந்ததாக பக்கத்து வீட்டு பீமாராவ் வந்து கொடுத்தார். சாவி ஜில்லென்றிருந்தது. 

வெளியில் இருந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ட்ரங்க் ரோட் கோமள விலாஸில் சாப்பிட்டு விட்டு எதிரில் பீடா போட்டுக்கொண்டு வீடு திரும்பியிருந்தேன். அப்படி என்னதான் நடக்கிறது சாமாண்ணாவின் இரவுகளில்? சாவிதான் கையில் இருக்கிறதே! தைர்யமாய்த் தங்கித்தான் பார்த்துவிடுவோமே என்று முடிவு செய்து என்னிடம் இருந்த சைகால் மன்னாடே இசைத்தட்டுக்களை எடுத்துக்கொண்டு ஒரு செம்பில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு சாமாண்ணாவின் வீட்டுக் கதவைத் திறந்தேன்.

க்ராமஃபோனில் மன்னாடே மெலிதாய்ப் பாடிக்கொண்டிருக்க குப்புறப் படுத்த படி விட்டுப்போன ஒரு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். கோமளவிலாஸின் ரசம் ப்ரமாதம். சாமாண்ணா இருந்தால் அவரிடம் இதைப் பற்றிப் பேசலாம். ரசத்துக்குத் தூக்கலா கொத்தமல்லிய அரைச்சு விட்ருக்காண்டா!இதென்ன ப்ரமாதம்! நாளைக்கி நான் வெச்சுக்காட்றேம் பாரு. அப்றம் சொல்லு ஒன்னோட கோமளவிலாஸத்து புராணத்தை! என்று விறைப்பாய் ஒரு பதில் வரும்.

நினைத்துக்கொண்டிருக்கும் போது பின்னறைக் கதவை யாரோ சுரண்டுவது போல ஒரு மெல்லிதான கீறல் சப்தம். உற்றுக் கவனித்தேன். முதலில் எலியாய் இருக்கலாம் என்று அலட்சியப் படுத்திவிட்டு மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

காது கேக்கலியா கூப்பிட்றது? என்று கட்டையான பெண்குரலில் உலுக்கினாற் போல எழுந்தேன். தலை இடிக்காமல் வளைந்து குனிந்தபடி அதே ஏழடிப் பெண்மணி. ரத்தச் சிவப்பில் புடவைக்குப் பொருத்தமாய் உக்ரமான பார்வையும், விகாரமான இளிப்புடனும். சாப்பிட என்ன இருக்கு? என்றாள். என் நாக்கு புரளவில்லை. சாமாண்ணா ஊரில் இல்லை என்ற தகவல் அவளுக்குத் தெரியாதோ? சொல்லிவிடலாம் என நினைத்து வாயைத் திறக்க நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது.

அவளுக்குப் பின்னால் சிரித்தபடி கையில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடிக்கு சாமாண்ணா நின்று கொண்டிருந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு இரண்டு நாட்களாகவே நல்ல காய்ச்சல். ஒரே உளறலோடு நினைவே இல்லாமல் அனத்திக்கொண்டிருந்ததாக பீமாராவ் சொல்லித் தான் தெரிந்தது. வாயெல்லாம் வறண்டு போயிருந்தது. நாக்கெல்லாம் பித்தக் கசப்பு. கண் எரிச்சல் ஒரு புறம். உடலெல்லாம் முறுக்கிப் போட்டது போல அப்படி ஒரு வலி. 

ஜன்னல் வழியாக இரவு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமியிடம் சொல்லி அரிசிக் குருணையில் கஞ்சி போட்டுக்கொண்டு வந்து குடிக்கும்படி வற்புறுத்தினார் பீமாராவ். ருசி தெரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. ஆனால் அந்தச் சூடான கஞ்சி தொண்டையில் இறங்குவது பிடித்திருந்தது.

வாசலில் ஒரே இரைச்சலாயிருந்தது தலையை வலித்தது. யாரோ வண்டிக்காரனிடம் சொன்ன வாடகையை விடக் கூடுதலாய் கேட்கிறானென்று கூப்பாடு. புடவை வியாபாரியின் குரல்தான் உரத்துக்கேட்டது.

 மெல்லச் சாய்ந்து கட்டிலில் உட்கார்ந்தபடி இருக்கையில், என்னுடைய வீட்டைக் கடந்து யாரோ செல்வது போலத் தெரிந்தது. திடீரென என்னைக் கண்டதும் திரும்பி உள்ளே வந்தால் அது சாமாண்ணா.

என்னாச்சு மாதவா? ஜொரமா? இப்படிக் கொதிக்கறதே? என்று நெற்றியில் கைவைத்துப் பார்த்தவர், ”கொஞ்சம் இரு. நெத்திலயும், மார்லயும் சுக்குப்பத்துப் போட்டா சரியாப் போய்டும். அரைச்சு எடுத்துண்டு வரேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவருக்குப் பின்னால் யாரோ கூடவே செல்வது போலவும், சடாலென்று திரும்பி என்னைப் பார்ப்பது போலவும் உணர்ந்தேன்.

சற்றைக்கெல்லாம் அலறி அடித்துக்கொண்டு பீமாராவ் ஓடிவந்தார்.

”மாதவா! சாமாண்ணா ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹரித்வார்ல காலமாயிட்டாராம். பாடிய வாங்கிக்கிறீங்களா? இங்கேயே தகனம் பண்ணிடலாமா?ன்னு கேட்டு தந்தி வந்திருக்குப்பா!”

10 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை... படிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை வேறெதையும் நினைக்க முடியாத பதிவு..

தொடரருங்கள்...

Ramani சொன்னது…

அவருக்குப் பின்னால் யாரோ கூடவே செல்வது போலவும், சடாலென்று திரும்பி என்னைப் பார்ப்பது போலவும் உணர்ந்தேன்.

சற்றைக்கெல்லாம் அலறி அடித்துக்கொண்டு பீமாராவ் ஓடிவந்தார்.

”மாதவா! சாமாண்ணா ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹரித்வார்ல காலமாயிட்டாராம். பாடிய வாங்கிக்கிறீங்களா? இங்கேயே தகனம் பண்ணிடலாமா?ன்னு கேட்டு தந்தி வந்திருக்குப்பா!”


சாமண்ணா இன்னமும்
அங்கேதான் இருப்பார் எனத் தோன்றுகிறது
படித்து முடித்து அந்த் நிகழ்வுகளில் இருந்து இன்னமும்
முழுமையாக விடுபட முடியாததால்
என்ன பின்னூட்டமிடுவது எனவும் புரியவில்லை
இன்னொரு முறை படிக்கவேண்டும்

விஸ்வநாத் சொன்னது…

சுந்தர்ஜி, அருமை !

நிலாமகள் சொன்னது…

தீக்ஷை ப‌ற்றிய‌ விவ‌ர‌ணைக‌ள் அர்த்த‌முள்ள‌வை. த‌த்தாத்ரேய‌ர் ஆசானாக‌ வ‌ரித்த‌ இருப‌த்தி நால்வ‌ர் ம‌ட்டுமின்றி ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொருவ‌ரிட‌மிருந்தும் ஒவ்வொரு தீக்ஷை பெற‌ முடிந்தால்...!!

சாம‌ண்ணா க‌தை திகிலூட்டிய‌து. அவ‌ர‌து ச‌மைய‌ல் திறனும் ருசிக்கும் ம‌காத்மிய‌மும் வெகு ஜோர்.

vasan சொன்னது…

/உங்களுக்கு தெலுங்கு அட்சர சுத்தமாக வாசிக்கமுடிந்தால் மட்டுமே இந்த அத்யாயத்தை வாசிக்கமுடியும். தெலுங்கு வாசிக்கத் தெரியாதவர்கள் போனால் போய்த் தொலைகிறதென்று இந்த ஒன்பதாவது அத்யாத்தை விட்டுக் கடாசி விடுங்கள்/

தெலுங்கு, அப்ப‌டியே அட்ச‌ர‌ சுத்த‌மாய் த‌மிழ் போல‌வே இருக்கே.
என்ன்மாய் வாச‌க‌னை, வ‌சிய‌ப்படுத்தி,(எழுத்துச்)சித்த‌னாய் உங்க‌ள் இஷ்ட‌ப்ப‌டி இழுத்துத் செல்கிறீர்க‌ள். மாய‌ வித்(ந்)தைதான்.
அம்மாடி... என்ன‌ ப‌ய‌ங்க‌ர, அருவருப்பான இளிப்பு அந்த பெண்ணிட‌மிருந்து‌. நானும் ப‌த‌றிட்டேன்.

Matangi Mawley சொன்னது…

க்ருஷ்ணபக்ஷ இரவு, 7 அடி உயர பெண் உருவம்... :) அப்பா சொல்லும் "சத்யமூர்த்தி" கதை/பாட்டியின் பில்லி-சூனிய/மந்திர-தந்திர-பேய்-பிசாசு-மோகினி-பிரம்மராக்ஷஸ கதைகளை நினைவு படுத்தி விட்டது! மல்லிகை பூ வாசம், மோர்சிங், ஊஞ்சல், சிரிக்கும் அழகான பெண்... ஆஹா!

அப்பாதுரை சொன்னது…

எப்படி தண்டவாளங்களை இணைக்கப் போகிறீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

தெலுங்கு நன்றாகத் தாளித்துக் கொட்டியிருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன், முத்தாய்ப்ப்பான வரியைப் படித்ததும்.
(வாசனுக்கு ஜே! )

க்ரேஸி மோகன் சொன்னது…

திகிலான தி.ஜானகிராமன் கதை வாசித்த அனுபவம்.

சபாஷ் சுந்தர்ஜி.

அரவிந் சுவாமிநாதன் சொன்னது…

அருமை அருமை.

ஒரு மாய உலகுக்குள் நுழைந்து பார்த்த பிரமை. தொடருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator