விவேகானந்தரின் சுடர்
தொடர்ச்சியாய் ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து விவேகானந்தரின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கொழும்பு முதல் அல்மோரா வரை மற்றும் விவேகானந்தரின் கடிதங்கள் குறித்த விரிவான பதிவு ஒன்றை நினைவிலிருந்து அகலாத ஒரு கட்டுரையாய் எழுதுவேன்.

நேற்று விவேகானந்த மகரிஷியின் நினைவு நாள். எனக்கு அவரின் நினைவு நாள் குறித்த சடங்காய் இதை செய்யத் தோன்றாததால் இன்றைக்கு இதை எழுதத் தோன்றியது. எத்தனை உரம் மிக்க வார்த்தைகள்! இவரின் தொடர்ச்சியாய் பாரதியைப் பார்க்க முடிகிறது. வார்த்தைகளில் எத்தனை உத்வேகம்! எத்தனை நம்பிக்கை!

உதாரணத்துக்கு இது.

“ இருள் உன்னைச் சூழ்கின்ற போதெல்லாம் உன் உண்மை இயல்பை வலியுறுத்து. பாதகமானவை எல்லாம் மறைந்தே தீரவேண்டும். ஏனெனில் இவை எல்லாம் வெறும் கனவுகள். 

துன்பங்கள் மலையளவாகத் தோன்றலாம். ஆனால் எல்லாம் வெறும் மாயை. பயப்படாதே. மாயை மறைந்துவிடும். நசுக்கு. அது ஓடிவிடும். காலால் மிதி. அது இறந்துவிடும். பயத்திற்கு இடம் கொடுக்காதே. எத்தனை முறை தோல்வி அடைந்தாய் என்பதை எண்ணிக்கொண்டிருக்காதே. முன்னேறு. திரும்பத்திரும்ப உன் உண்மை இயல்பை வலியுறுத்து. ஒளி வந்தே தீரும்.

நான் எத்தனையோ முறை முழுப் பட்டினியால் சாகும் நிலையில் கிடந்திருக்கிறேன். சிறிது சிறிதாக உயிர் பிரிந்துகொண்டிருப்பது போல் தோன்றும். என்னால் பேசவோ சிந்திக்கவோ இயலாது. கடைசியில் மனத்தில் இந்த எண்ணம் எழும். 

’எனக்குப் பயமோ சாவோ இல்லை. எனக்குப் பசியோ தாகமோ இல்லை. நானே அது. நானே அது. தேவதேவனான மஹாதேவனான நீ உன் பலத்தை வலியுறுத்து. இழந்த பேரரசை மீட்டுக்கொள். எழுந்து நட. எங்கும் நிற்காதே.’ உடனே புத்துணர்ச்சி பெற்று எழுந்துவிடுவேன்.

எல்லா நோய்க்கும் மருந்து, சாவைப் போக்குகின்ற அமுதம் அதுவே. ‘நானே அது. நானே அது. எனக்குப் பயமோ சந்தேகமோ மரணமோ இல்லை’ என்று திரும்பத் திரும்பக் கூறுவோம். 

மையிருட்டுக்கு இடையிலும், பொறுக்கமுடியாத சித்ரவதைகளுக்கு நடுவிலும், முற்றிலும் நம்பிக்கை இழந்து தவிக்கின்ற நிலையிலும் இதனை ஒருமுறை, இருமுறை, பலமுறை சொல்லுங்கள். 

ஒளி மென்மையாக வருகிறது. மெதுவாக வருகிறது. ஆனால் வந்தே தீரும்.”

உள்ளத்திலே ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்பதற்கு இதை விடவும் ஒரு சத்யமான சாட்சி இருக்ககூடுமோ? 

நம் ஒவ்வொருவரின் துன்பங்களும் விலகட்டும். பறவைகளின் இனிய கூவலுடன் சூர்யனின் கிரணங்கள் வெளிப்பட இருக்கும் பொன்மயமான அதிகாலை வெகு விரைவாய் உதயமாகட்டும்.

நம் ஒவ்வொருவரிலும் விவேகானந்தரின் வைரத்தையொத்த சொற்கள் ஒளி பாய்ச்சட்டும். 

நம் ஒவ்வொருவரிலும் அவநம்பிக்கை எனும் இருள் விலகி நம்பிக்கை எனும் சுடர் பரவட்டும்.

கருத்துகள்

G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுந்தர்ஜி, என் சின்ன வயதிலிருந்தே சுவாமி விவேகாநந்தர் மேல் எனக்கு விவரிக்க முடியாத ஈடுபாடு. அவரைப் பற்றி நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் அவரது “செருக்கினாலும் அரசியல் அதிகாரத்தின் விளைவாகவும் நம் நாட்டுக் கல்வியும் அறிவும் ஒரு சிலரிடமே குவிந்து போயின. நமது நாட்டின் அழிவுக்கு இதுவும் ஒரு காரணம்.” கருத்துத்தான் நான் கல்வி குறித்து எழுதிய சில பதிவுகளுக்கு கிரியா ஊக்கியாக இருந்திருக்க வேண்டும்.தாழ்ந்த மக்களுக்கு பண்பாட்டையும் கல்வியையும் அளித்து, அவர்களை அறியாமை இருளிலிருந்து வெளிக் கொணர வேண்டும். நிச்சயம் அவர்கள் விழித்தெழுவார்கள். நாடும் முன்னேறும். பதிவுக்குப் பாராட்டுக்கள்.
raji இவ்வாறு கூறியுள்ளார்…
great sharing ji!

நீண்ட நாள் கழித்து வந்தாலும் நல்லதொரு பகிர்வை படித்தேன்.ஒவ்வொரு வரிகளும் நிறைய சிந்தனைகளைத் தூண்டுகிறது

நான் விவேகானந்தரின் எழுத்துக்களை வெகு சிலவே வாசித்திருக்கிறேன்.ஆனால் இன்றைய வாசிப்பு இன்னும் நிறைய தேடுதலை ஏற்படுத்துவதாகவே உள்ளது.பகிர்விற்கு நன்றி
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
"சகோத‌ர‌, சகோதரிகளே" என விழித்து சிகாகோவில் ஆற்றிய‌ உரை,
"தன்ந‌லம‌ற்ற‌ இளைஞ‌ர்க‌ள் சிலரே, இந்தியாவை மீட்க‌" போதுமானது
போன்ற‌ நுனிப் புற்க‌ளை ம‌ட்டுமே இதுவ‌ரை பார்த்திருக்கிறேன்
(மேய‌க் "கூட‌வில்லை" என் பிராப்த‌ம்).மாய‌ மோ(போ)க‌ங்க‌ளை
விலக்கி சூரிய‌ சுட‌ரை காண‌வைத்திருக்கிறீர்க‌ள்.
இருன்மை காட்டில் சிக்கிய‌வ‌னுக்கு கிடைத்த‌ மின்ன‌லின்
ஒளியின் காட்டின் த‌ட‌ம்பார்த்து ஊர‌டையும் ந‌ம்பிக்கையாய்
உங்க‌ள் விவேக‌னந்த‌ர் ப‌திவு. ஒளிக்க‌திர்க‌ளை நோக்கி காத்திருக்கிறேன்.
ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
சுந்தர்ஜி...

எப்போதும் எனக்கு விவேகானந்தர் மனதுக்கு பாந்தமானவர். முன்மாதிரி என்னுடைய வாழ்வின் நம்பிக்கையில். நன்றி. செறிவான பதிவு.
Matangi Mawley இவ்வாறு கூறியுள்ளார்…
It is only in the recent times, that I have developed an ear and mind for such words... Recently, I happened to do this 'research' for collecting material for an essay contest. I came across his writing- "Education is the manifestation of the perfection already in man"-- what profound words! It is my greatest regret that we have not been able to achieve - what he calls- the "man making"/"character building" education. It requires a caliber to even think of such things!
When the west woke up to eastern spirituality- it is regrettable to find that the east has already closed its shops!
kashyapan இவ்வாறு கூறியுள்ளார்…
சுந்தர் ஜி! சங்கரரின் உபநிஷத்துக்கள்,ராமகிருஷ்ணரின் வாழ்க்கை,விவேகானந்தரின் பொதனைகள் இவற்றை நாம் ஏன் பாவிக்கவில்லை! சங்கரமடமும்,ராமகிருஷ்ணமடமும்,விவேகானந்த கேந்திரமும் காரணமாக இருக்கலாமோ! யோசிப்போம்! தத்துவத்திலிருந்து வாழ்க்கையா?வாழ்க்கையிலிருந்து தத்துவமா?விவாதிக்கநிறைய உள்ளது!---காஸ்யபன்
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலு சார். உங்களின் மகிழ்ச்சி என் ஆனந்தம்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராஜி. எனக்கும் விவேகானந்தருக்குமான உறவு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வாசிக்கையில் புதிய பரிமாணத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கிறது.எல்லாவற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களின் ஆத்மார்த்தமான எழுத்துக்களுக்கு என் நன்றி வாசன்.

நம் தேசத்தின் அசல் வித்துக்களை நாம் தொலைத்துவிட்டு எதுவுமே நம்மிடம் இல்லாத பிச்சை புலம்பலாய் இருக்கிறது எல்லாத் துறைகளிலும். நிச்சயம் மிகச் சிறந்த தடத்தில் நம்மை இட்டுச் செல்லும் விவேகானந்தரின் சிந்தனைகள் இந்த நூற்றாண்டில்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஹரணி. தொடர்வாசிப்புக்கு நன்றி.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நுண்மையான பெற்றோர்கள் உங்களின் சுயசிந்தனைக்கு ஓர் அடையாளம் மாதங்கி.

எல்லாவற்றிலிருந்தும் ஒன்றிற்கும், ஒன்றிலிருந்து எல்லாவற்றிற்கும் என இரண்டுமே நம் பாதைதான்.

அடுத்த இடுகையையும் வாசியுங்கள்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
வயதிலும் வாசிப்பிலும் அனுபவத்திலும் சிகரத்தில் நிற்கும் காஸ்யபன் ஐயா! உங்களுக்குத் தெரியாத ஒன்றையா நான் சொல்லிவிடப் போகிறேன்.

எப்போதுமே எல்லா போதகர்களுக்குப் பின்னும் நிகழும் நிர்வாகக் குழப்பங்கள், பேராசைகள், நிறுவனங்களாய் மாறிவிடும் பொருள் சார்ந்த தன்மைகள் காலங்காலமாய் நிகழ்வதுதானே. சங்கரமடமோ ராமக்ருஷ்ணா மிஷனோ விவேகானந்தா கேந்திரமோ எல்லாம் அப்படித்தான்.

நம்மிடம் ஒரு சங்கரனும், ஒரு ராம்க்ருஷ்ணரும், ஒரு விவேகானந்தரையும் தானே இந்த சமூகத்தால் தர முடிந்திருக்கிறது.

ஜீசஸோ, ப்ளேட்டோவோ, ஓஷோவோ, பாரதியோ அவர்களின் காலத்துக்குப் பின்னால் அவர்களின் எழுத்துக்களில்தான் நமக்கு தெளிவு கிடைக்கிறதே தவிர அவர்களை முன்னிறுத்தும் இயக்கங்களில் இருந்தல்ல.

தத்துவ ஆசிரியர்களின் வாழ்வுதான் வாழ்க்கைக்கான தத்துவத்தை நமக்குத் தருகிறதாய் நான் பார்க்கிறேன்.ஆனால் அதை நாம் உணரவும் பயிலவும்தான் காலம் போதாது போய்விடுகிறது.
Nagasubramanian இவ்வாறு கூறியுள்ளார்…
எப்பொழுதும் பொய் சொல்லி தப்பிக்க முயலாதே. உண்மையை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், உண்மை உன்னை சாக விடாது. பொய் உன்னை வாழ விடாது.
எனக்கு மிகப் பிடித்த விவேகானந்தரின் வாசகம் இது.
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
காஷ்யபன் அய்யாவின் கேள்விக்கு தங்கள் விளக்கம் அருமை.

பிரபலமான இடுகைகள்