ஸ்ரீ ருத்ரம் - யஜூர்வேதத்தின் சாரம்-II


இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://sundargprakash.blogspot.in/2012/07/blog-post.html

பெரியவராயும், சிறியவராயும்,
ஆதியில் ஹிரண்யகர்ப்பராய்த் தோன்றியவராயும்,
யுகங்களின் இறுதியில் காலாக்னியாய்த் தோன்றவிருப்பவராயும், இடைப்பட்ட காலத்தில் தேவர், மானுட்ர் வடிவங்களில் தோன்றியவராயும், நடுவயதினராயும், பக்குவமடையாத இளம் வயதினராயும்,
பிராணிகளின் இடைப்ரதேசத்திலிருந்து பிறப்பவராயும்,
மரங்களின் வேர்களிலிருந்து கிளைகளாய்த் தோன்றுபவராயும்,
இருவினை தொடரும் மானிட உலகில் பிறப்பவராயும்,
மற்ற ஜங்கமப் ப்ரபஞ்சமாய் உள்ளவராயும்,
யமலோகத்தில் பாபிகளை தண்டிப்பவராயும்,
ஸ்வர்க்க லோகத்தில் ஆனந்தமளிப்பவராயும்,
பயிர் நிறைந்த வயல்களில் இருப்பவராயும்,
களத்தில் இருப்பவராயும், வேதமந்திரங்களால் போற்றப்படுபவராயும்,
வேத முடிவில் வீற்றிருப்பவராயும், வனத்தில் மரங்களாய் இருப்பவராயும், புதர்களுக்கிடையே செடி கொடிகளாய் இருப்பவராயும்,
ஒலி வடிவில் இருப்பவராயும், எதிரொலி வடிவில் இருப்பவராயும் உள்ளவரான உமக்கு வணக்கம். 

விரைந்து செல்லும் சேனை வடிவில் இருப்பவராயும், விரைந்து செல்லும் தேரின் வடிவில் இருப்பவராயும், அரக்கர் வடிவில் இருப்பவராயும், அதர்மவான்களை அழிப்பவராயும், கவசமணிந்த வடிவினராயும், தேருக்குள் தேர்ப்பாகனைக் காக்கும் இடம் ( ரக்ஷண ஸ்தானம்) அளிக்கும் தன்மையினராயும், தலைப்பாகை அணிந்த வடிவினராயும், மந்திரத்தால் காக்கப்பட்ட வடிவினராயும், புகழ் மிக்கவராயும், கீர்த்திபெற்ற சேனையுள்ளவராயும், பேரி வாத்யத்தின் சப்த வடிவினராயும், சப்தம் எழுப்பும் கோல் வடிவிலிருப்பவராகவும், போரில் புறங்காட்டாதவராகவும், எதிரிகளின் ரகசியங்களைப் பரிசீலிப்பவராயும், தூதராயும், ஏவல்காரராயும், வாளேந்தியவராயும், அம்பறாத் துணியுடையவராயும், கூரிய பாணங்களையுடைவராயும், ஆயுதங்களையுடையவாராயும்
உள்ளவரான உமக்கு வணக்கம்.

சிறந்த ஆயதமுடையவராயும், சிறந்த வில்லையுடையவராயும், ஒற்றையடிப்பாதையிலும், நல்ல பாதையிலும் செல்லுபவராயும்,
கால்வாய் நீரிலும், அருவி நீரிலும் இருப்பவராயும்,
நதியின் நீரிலும், குளத்தின் நீரிலும் இருப்பவராயும்,
கிணற்று நீரிலும், சுனை நீரிலும் இருப்பவராயும்,
மழையிலும், மழையற்ற இடத்திலும் இருப்பவராயும்,
மேகத்திலும் மின்னலிலும் இருப்பவராயும்,
நிர்மலமான சரத்கால வானத்திலும்,
வெயிலின் இடையே பொழியும் மழையின் வடிவிலும் இருப்பவராயும்,
மழைக்காற்றின் வடிவிலும், கல்மாரியின் வடிவிலும் இருப்பவராயும்
உள்ளவரான உமக்கு வணக்கம்.  

மனையில் உள்ள பொருட்கள் தோறும் அந்தந்த வடிவில் உறைபவராயும்,
மனையைக் காக்கும் வாஸ்து புருஷராயும்,
உமாதேவியுடன் கூடியவராயும்,
உதயகாலச் சிவந்த சூரியனின் வடிவினராயும்,
உதித்தபின் சற்று சிவப்புக் குறைந்த ஒளியில் உறைபவராயும்,
இன்பத்தைக் கூட்டி வைப்பவராயும், பசுக்களைக் காப்பவராயும், விரோதிகளிடம் கடுமையாய் இருப்பவராயும், பயங்கரமாயிருப்பவராயும், எதிரிகளை முன்நின்று கொல்பவராயும், எட்டியிருந்து கொல்பவராயும், எல்லாவிடத்திலும் எதிரிகளைக் கொல்பவர்களின் வடிவிலிருப்பவராயும், சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவராயும்,
கர்மங்களாகிய பச்சிலைகளையே கேசமாகக் கொண்ட
சம்சார வ்ருக்ஷ வடிவானவராயும்,
ப்ரணவ ஸ்வரூபியாய் இருப்பவராயும்  உள்ள உமக்கு வணக்கம்.

விஷயசுகமாகத் தோன்றுபவராயும், மோக்ஷ சுகமாய்த் தோன்றுபவராயும், பித்ருக்களின் வடிவில் நின்று இகலோக இன்பத்தையளிப்பவராயும், ஆசார்யர்களின் வடிவில் நின்று மோக்ஷ இன்பத்தையளிப்பவராயும்,
மங்கள வடிவினராயும், தன்னையடைந்தவரையும் சிவமயமாக்கும் அதிமங்கள வடிவினராயும், புண்ணிய தீர்த்தங்களின் வடிவினராயும், நதிக்கரைகளில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளின் வடிவானவராயும், சம்ஸார சாகரத்துக்கப்பால் முனிவர்களால் போற்றப்படுபவராயும், சம்ஸாரத்துக்கிடையில் வேண்டுவோர் வேண்டும் பயனையளிப்பவராயும், பாவத்தினின்று கரையேற்றும் மந்திர ஜப வடிவினராயும்,
சம்ஸாரத்தினின்று கரையேற்றும் தத்துவ ஞான வடிவினராயும்,
கர்மானுஷ்டானத்தின் மூலம் ஜீவனை சம்ஸாரத்தில் புகுத்துவிப்பவராயும், கர்ம பலனைப் புசிக்கும் ஜீவனுடன் இருந்து 
அவனைத் தூண்டுபவராயும் உள்ள உமக்கு வணக்கம்.

நதிக்கரையில் உள்ள இளம்புல்லிலும் நீரின் நுரையிலும் இருப்பவராயும், மணல் திட்டிலும், ஓடும் நீரிலும் இருப்பவராயும்,
களர் நிலத்தில் வசிப்பவர்கள் வடிவிலும் , வழிநடப்பவர்கள் வடிவிலிருப்பவராயும், சுக்கான் பூமியிலும், நல்ல இடங்களிலும் வசிப்பவர்கள் வடிவிலிருப்பவராயும்,
சடைமுடியுடையவராயும், பக்தர்களைக் காக்க முன்நிற்பவராயும், மாட்டுக்கொட்டிலிலும், வீட்டிலும் உள்ளவர்கள் வடிவினராயும்,
கட்டிலிலும் உப்பரிகையிலும் இருப்பவர்கள் வடிவினராயும்,
கல்முள் நிறைந்த காட்டிலும் குகையிலும் இருப்பவராயும்,
ஆழமான மடுவிலும் பனித்துளியிலும் இருப்பவராயும்,
தூசுகளிலும் புழுதியிலும் இருப்பவராயும்,
காய்ந்த கட்டையிலும் ஈரக்கட்டையிலும் இருப்பவராயும்,
கட்டாந்தரையிலும் புல் தரையிலும் இருப்பவராயும்,
பரந்த பூமியிலும் அழகிய அலைகளுடன் கூடிய நதியிலும் இருப்பவராயும், பச்சிலைகளிலும் உலர்ந்த சருகுகளிலும் இருப்பவராயும் உள்ள
உமக்கு வணக்கம்.      

ஆயுதம் எடுத்தவராயும், எதிரிகளைக் கொல்பவருமாயும், சிறிதும் பெரிதுமாய்த் துன்புறுத்துபவராயும், அடியாருக்கு செல்வத்தையளிக்கும் வடிவில் இருப்பவராயும், எல்லா தேவர்களின் இதயங்களிலும் இருப்பவராயும், தேவர்களின் இதயங்களில் அழிவில்லாத வடிவமுடையவராயும், தேவர்களின் இதயங்களில் இருந்துகொண்டு வேண்டுவோர் வேண்டுவதை அருளுபவராயும், தேவர்களின் இதயங்களில் இருந்துகொண்டு பாவங்களை அறவே ஒழிக்கும் வடிவினராயும், தேவர்கள் இதயங்களில் இருந்துகொண்டு எங்கும் ருத்ர கணங்களாய்ச் சஞ்சரிப்பவராயும் உள்ள உமக்கு வணக்கம்.

இதுவரை ஆறு முதல் ஒன்பதாம் அனுவாகம் வரையிலான பொருளைப் பார்த்தோம்.

”எவர் சிறியர் எவர் பெரியர் எவருறவர்
எவர் பகைஞர் யாது முனையன்றி யுண்டோ
இகபர மிரண்டிலு முயிரினுக்குயிராகி
எங்கு நிறைகின்ற பொருளே”

என்று தாயுமானவ ஸ்வாமி பாடுவது போல உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும், தூங்கியபடியும், விழித்தபடியும், நின்றபடியும், ஓடியபடியும், தச்சர்களாயும், குயவர்களாயும், வேடர்களாயும், செம்படவர்களாயும், கள்வர்களாயும் என எல்லாமுமாய் அவரே இருக்கிறார். அற்பம் அற்பமன்று. அவரை ஆராதிக்க தும்பையைப் போலவே ஊமத்தையும் உதவும்.

ஆக இந்தப் ப்ரபஞ்சத்தின் எல்லா இயக்கமும், எல்லா இயக்கமின்மையும், எல்லா வினைகளும், இதுவும் அதுவும் எதுவும், எல்லா வடிவும் அவனேயன்றி வேறில்லை எனும் மிக எளிய சரணாகதி தத்துவத்தை அற்புதமான அனுபவமாக்கும் வழிதான் ஸ்ரீருத்ர பாராயணம். இதை காதுகளால் கேட்டபடியும், மனதால் உச்சரித்தபடியும் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்வோருக்கு எல்லாவற்றையும் அளிப்பவரிடம் எதையும் வேண்டாத ஓர் உன்னத நிலை கிட்டட்டும்.  

இதன் சங்கிலி போல இணை பிரியாத அங்கமான சமகம் பற்றியும் அதன் பொருளையும் இன்னொரு இடுகையில் எழுதக் கடவுளின் அருளை யாசிக்கிறேன்.

கருத்துகள்

G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
சம்ஸ்கிருத அறிவு சிறிதும் இல்லாதவன் நான். எதுவுமே புரியாத நிலையில் கருத்துக் கூற இயலவில்லை. ஆனால் உங்கள் பதிவின் தமிழாக்கம் மூலம் பொருள் தெரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் ருத்ரம் சமகம் போன்ற ஒலி நாடாக்களைக் கேட்கும் சமயங்களுண்டு. சப்தமே ஆகர்ஷிக்கும் சக்தி வாய்ந்தது. ஏன் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் கற்பிக்கக் கூடாது. அப்படி இல்லாததால்தானே இந்த பொக்கிஷங்கள் எல்லாம் ஒரு சிலரின் உடைமையாகி விட்டது.
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாமுமாய் அவரே இருக்கிறார். அற்பம் அற்பமன்று. அவரை ஆராதிக்க தும்பையைப் போலவே ஊமத்தையும் உதவும்./
அற்புத‌ம்...

/ஆக இந்தப் ப்ரபஞ்சத்தின் எல்லா இயக்கமும், எல்லா இயக்கமின்மையும், எல்லா வினைகளும், இதுவும் அதுவும் எதுவும், எல்லா வடிவும் அவனேயன்றி வேறில்லை./

அங்கு, இங்கு என்றில்லாம‌ல், எங்கும் பிர‌காச‌மாய், இருளாய் இருக்கும் நிறை எதுவோ அது இறை என அறைந்திருக்கிறிர்க‌ள்". என்னே‌ நுண்ணிய‌, தீர்க்க‌, ஊடேறிய‌ பார்வை.
சிவகுமாரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்ரீ ருத்ரம் ஒலி நாடா கேட்டிருக்கிறேன்.-பொருள் புரியாமல். இதைப் பிரதி எடுத்துக் கொண்டேன்.இனி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.( எனக்கு சமஸ்கிருதம் படிக்க வரும்- பொருள் புரியாது.) மிக்க நன்றி சுந்தர்ஜி. என் அருட்கவிக்கு வருகை தாருங்கள்- சிவாயநம கேளுங்கள்.

பிரபலமான இடுகைகள்