23.7.12

ஹா! என்னமா ஒரு கவிதை!


நேற்றிரவு உறங்குவதற்கு முன்னால் சச்சிதானந்தனின் ”தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ?” என்ற அற்புதமான மலையாளக் கவிதையின் மொழிபெயர்ப்பை வாசித்தேன்.

மொழிபெயர்த்தது ப்ரபல எழுத்தாளரும், நண்பருமான இரா.முருகன். 

கவிதையின் மூலத்தைச் சிறிதும் சிதைக்காத அற்புதமான மொழிபெயர்ப்பு. மலையாள மொழிக்கும் தமிழுக்குமான நெருக்கமும், தத்துவச் செழுமையும் இந்தக் கவிதையை மறுபடி மறுபடி வாசிக்க வைத்தபடி இருக்கிறது. இந்தக் கவிதையை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை கடவுளே!

இந்த அனுபவத்தைத் தந்து என்னைக் கிளர்த்திய சச்சிதானந்தனுக்கும், இரா.முருகனுக்கும் மானஸீகமாக என் நமஸ்காரங்கள்.

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

வீட்டைப் பூட்டாதே.
விடியலின் பள்ளத்தாக்கில்
இளங்காற்றில் இலைபோல்
கனமில்லாமல் போ.

வெளுத்த மேனியென்றால்
சாம்பல் பூசி மறைத்துப்போ.
அதிகம் அறிவுண்டென்றால்
அரைத் தூக்கத்தில் போ.

வேகம் மிகுந்தது
வேகம் தளரும்.
மெல்லப் போ.
நிலைத்தது போல் மெல்ல.

நீர்போல் வடிவமற்று இரு. 
அடங்கி இரு. 
உச்சிக்கு உயர
முயலவே வேண்டாம்.

பிரதட்சிணம் செய்யவேண்டாம்.
வெறுமைக்கு இடம்வலமில்லை
முன்னும் பின்னுமில்லை.

பெயர்சொல்லி 
அழைக்க வேண்டாம்.
இவன் பெயருக்குப் பெயரில்லை.

வழிபாடுகள் வேண்டாம்.
வெறுங்குடத்தோடு போ.

நிறைகுடத்தைவிட 
சுமக்க எளிது. 

பிரார்த்திக்கவும் வேண்டாம்.
கோரிக்கையோடு 
வருகிறவர்களுக்கான 
இடமில்லை இது.

பேசியே ஆகவேண்டுமானால்
மவுனமாகப் பேசு.
பாறை மரங்களோடு 
பேசுவதுபோல்
மரங்கள் பூக்களோடு
பேசுவதுபோல்.

மிக இனிய ஒலி மெளனம்
மிகச் சிறந்த நிறம்
வெறுமையினது.

நீ வருவதை யாரும் 
பார்க்க வேண்டாம்.
திரும்பிப் போவதையும்
பார்க்க வேண்டாம்.
குளிரில் ஆற்றைக் கடக்கிறவன் போல்
சுருண்டு குறுகிக் கோபுரம் கடந்து போ. 

உருகும் பனித்துளிபோல் உனக்கு
ஒரு நொடிதான் நேரம்.

பெருமிதம் வேண்டாம்.
நீ இன்னும் உருவாகவே இல்லை.

கோபம் வேண்டாம்.
தூசித் துகள்கூட உன் அதிகாரத்துக்கு
உட்பட்டதில்லை.

துக்கம் வேண்டாம்.
அதனால் எதுவும் பயனில்லை.

புகழ் அழைத்தால் விலக்கி நட.
ஒரு கால்தடத்தையும்
விட்டுப் போகாதே.

கைகளைப் பயன்படுத்தவே வேண்டாம்
அவை எப்போதும்
துன்பம் செய்வது பற்றியே சிந்திக்கும்.

மகத்துவத்தைத் துறந்துவிடு.
மகத்துவமடைய வேறே வழியில்லை.

ஆற்று மீன் ஆற்றில் கிடக்கட்டும்.
பழம் மரத்தில் இருக்கட்டும்.

உறுதியானது ஒடியும்.
மென்மையானது நீண்டு வாழும்.
பல் நடுவே நாக்கு போல்.

ஒன்றும் செய்யாதவனுக்கே
எல்லாம் செய்ய முடியும்.

படி கடந்து போ.
உனக்காகக் காத்திருக்கிறது
இன்னும் உருவாகாத விக்கிரகம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனந்தம். பரமானந்தம்.

இந்தக் கவிதையின் ஆழமும், எளிமையும் ஒரு நதியையும், தஞ்சாவூர்க்கவிராயரின் கவிதைகளையும் நினைவுபடுத்துகிறது.

இந்தக் கவிதை இனி நம் சொத்து.

8 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஆற்று மீன் ஆற்றில் கிடக்கட்டும்.
பழம் மரத்தில் இருக்கட்டும்.

மிக அருமையான கவிதை அனுபவம். உங்கள் கண்ணில் பட்டு இதோ எங்களுக்கும் வாய்த்தது.

ப.தியாகு சொன்னது…

தாவோவின் கோவிலை அணுக சொல்லப்பட்டதான வழிகள்.. படிக்கும்போதே மனம் லேஸாகிறது, இன்னதென (எனக்கு) சொல்லத்தெரியாத உணர்வு உண்டாகிறது சுந்தர்ஜி சார். மெய்யாகவே ஒரு அற்புதமான கவிதை. பிசகாத மொழிபெயர்ப்பு இருந்ததினால்தான் இந்த பாதிப்போ!
ரிஷபன் ஜி சொன்னதுபோல இந்த கவிதானுபவம் பெறத்தந்தமைக்கு உஙளுக்கும் அன்பு நன்றிகள்!

எஸ்.வி.வி சொன்னது…

அன்பிற்கினிய சுந்தர்ஜி-
அற்புதம். அற்புதம்.

மெய்ப்பொருள் குறித்த காலகாலமான சித்தர்களின் குரல் இதில் இணைந்திருப்பதைக் கண்டேன்-
அத்வைதத்தின் வெளிப்பாடு கொஞ்சம் தூக்கல் என்றாலும்.

இலேசாகவும், அடங்கியும், கர்வமின்றியும், அமைதியாகவும் இருப்பது எப்படி? என்று கேட்டான் சீடன்.

ஏன் 'இருக்க' வேண்டும்? என்றார் குரு!

அப்படியாக்கும் இதன் செய்தி!

நன்றி சுந்தர்ஜி.

கவிதையின் தளத்தில் நுழையும் போது, தாவோ கோவிலை ஒட்டிய நதியினது சில்லென்ற நீரில் எனது பாதங்கள் தோய்ந்திருப்பதை உணர்ந்தேன்.

இரசிகை சொன்னது…

கோபம் வேண்டாம்.
தூசித் துகள்கூட உன் அதிகாரத்துக்கு
உட்பட்டதில்லை.


superb....

கே. பி. ஜனா... சொன்னது…

அற்புதமான கவிதை அனுபவம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்...
பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

சிவகுமாரன் சொன்னது…

கண்டிப்பாய் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். தங்களுக்கும் முருகனுக்கும்.

vasan சொன்னது…

"பின்னோட்ட‌ம்" என எதையாவ‌து கிறுக்கி, ந‌ம் தற்குறி த‌ன்மை க‌சிந்து வெளிப்ப‌ட்டுவிடுமோவென அஞ்சி, பின்னோட்ட‌ம் த‌விர்க்கிறேன் சுந்த‌ர்ஜி. என்ன‌வாய் ஆக வேண்டுமென்ப‌தில் அவா வேண்டாமோ? சுய‌மாய‌ இருத்த‌லே சுவ‌ர்க்க‌மா? வேணாம்ன்னாலும் கேட்காது (கைகளைப் பயன்படுத்தவே வேண்டாம் அவை எப்போதும் துன்பம் செய்வது பற்றியே சிந்திக்கும்) கீ போர்டை தட்டும் இந்த‌ கைக‌ளை என்ன‌ செய்ய‌? கொஞ்ச‌ம் நீரை கைக‌ளில் அள்ளிக் கொள்கிறேன்.‌

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator