8.8.12

ஒரு படு பழைய கடிதம்


கோபாலி,

ப்ரகாஷுக்கு லெட்டர் எழுதியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமையின் சுகத்தில்.அது சாப்பிடும் முன்.இது சாப்பிட்ட பின்.புதன்கிழமை மாலையும் இரவும் கூடும் ஒரு விதமான மனதைக் கலங்க வைக்கும் நேரத்தில் லக்ஷ்மியோடு உங்களைப் பார்த்தது.

ப்ரகாஷால் புதன்கிழமை வர முடியவில்லை.அதனால் நீங்கள் சொன்னபடி என் ப்ளானை மாற்றிக்கொண்டு (முதலில் வியாழக்கிழமை இரவே பாண்டிச்சேரி புறப்படுவதாக இருந்தேன்)வியாழக்கிழமை இரவு நீங்கள்/ப்ரகாஷ்/நான்/சிவசு மற்ற நண்பர்களோடு Bertolucciயின் “தி லாஸ்ட் எம்பரர்” பார்த்துவிட்டு நள்ளிரவே பாண்டி புறப்பட முடிவு செய்தேன்.வியாழக்கிழமையன்று நானும்,ப்ரகாஷும் மட்டுமே மீதமாகிப் போக அருள் தியேட்டர் போய்(அதற்கு முன்னால் வெங்கடா லாட்ஜ் ஏ/சி ரூமின் கனத்த தனிமையை எங்கள் சிரிப்பாலும் பேச்சாலும் விலக்கி ஓட்டி சாப்பிட்டோம்)”த க்வெஸ்ட் ஃபார் ஃபயர்” சினிமா பார்த்தோம்.ப்ரகாஷ் சொல்லியிருக்கக்கூடும்.

நள்ளிரவு 2மணி வரை ப்ரகாஷும் நானும் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம்.மனசுக்கு வருத்தமான சூழலைத் தந்தது அந்த இரவு.பொதுவாகவே ரயில்வே ஸ்டேஷனின் இரவுக்கும் பஸ் ஸ்டாண்டுகளின் இரவுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.ரயில்வே ஸ்டேஷனின் இரவு கல்யாணச் சத்திரத்தின் ராத்திரி போலவும்,பஸ் ஸ்டாண்டின் இரவுகள் நமக்குப் பிடிக்காத ஒரு விருந்தாளியின் வீட்டில் கழிக்கும் இரவு போலவும் இருக்கும்.

என்னமோ எனக்கு இப்படியே தோன்றும்.ஒவ்வொரு கிழமையின் பகலும் தனித்தனியானது.வெள்ளிக்கிழமை காலைதான் வாரநாட்களிலேயே மனதுக்கு நிம்மதியான நேரம் போலவும்,சனிக்கிழமை மதியம் போல மனசை சோகமாக்கும் பகல் எதுவும் கிடையாது என்றும். இன்னும் இப்படியே நிறைய.இப்படியெல்லாம் பிரித்துப்பார்க்கலாமா?கூடாதா?தெரியவில்லை.

ஆனால் பிரித்துப் பார்க்கும் போது ஒரு பெரிய சிடுக்கு நூலை சிடுக்கெடுத்து முடித்தவுடன் கிடைக்கும் த்ருப்தி போல இது ஒரு விதம்.நமக்குள்ளே எத்தனை பைத்தியக்காரத்தனங்கள்!காதம்பரி சொல்லுவார்-”எல்லாப் பயல்களும் எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்கானுங்க?நம்ம மட்டும் ஏன் ஸார் எப்பவும் கஷ்டப்பட்டுண்டே இருக்கோம்”னு.இதில் எனக்கு முழுக்க உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொல்ற பாவம் ரொம்பப் பிடிக்கும்.

ரெண்டு மணிக்கு ப்ரகாஷ் கையில்/காலில் வலியோடு எனக்குக் கையசைத்துவிட்டு தன் பாட்டுக்குத் தனியாகவும், நான் பஸ்ஸில் தனியாகவும் போனபோது அழுகையை அடக்க முடியவில்லை.ரொம்ப மனது கஷ்டப்பட்டது.ரித்விக் கட்டக்கின் “மேக் தாக் தாரா”பார்த்த ஒரு இரவில் குலுங்கிக் குலுங்கி இதுபோல அழுதிருக்கிறேன்.அழுதபடியே எப்போது தூங்கினேன்?தெரியவில்லை.

அடர்த்தியான புகை மூட்டத்துக்கும்/பனிக்கும் நடுவே மீதியாகிப் போன கரும் சாலையில் பஸ் போய்க்கொண்டிருந்தபோது விழித்தேன்.பாண்டிச்சேரியை அடைய இன்னும் பத்து கி.மீ. என்று தெரிந்தது.தஞ்சாவூருக்கும்,பாண்டிச்சேரிக்குமான இடைவெளியை நீட்டல் அளவையால் சுமார் இருநூறு கி.மீ. என்று அளந்துவிட முடியாது.இடைவெளி இன்ஃபினிடிவ்.வெள்ளி/சனி வேலைக்குப் போனேன்.

வழக்கம் போல ஃபாக்டரி மேனேஜர் பெரிய ஸீரோ.அக்கௌண்டன்சி துணையோடு கி.பி.1950ல் வசித்துக்கொண்டு/அடிக்கடி இருமிக் கொண்டு/தொப்பையிலிருந்து நழுவுகிற பேண்டை அலட்சியமாகத் தூக்கிவிட்டுக்கொண்டு/இரு புருவத்துக்கிடையில் ஸ்ரீசூர்ணம் தீற்றிக்கொண்டு/பக்கத்தில் இருக்கும் லக்ஷ்மி என்கிற என் சக ஊழியரியான தெலுங்கு ப்ராம்மண ஸ்ரீமதியைத் தனியாய் நேரங்கிடைக்கும் போது தொட்டுத்தடவிக்கொண்டு அலைகிறார்.அடிக்கடி என்னை”மீனாக்ஷிசுந்தரம்,இங்க வாங்கோ”என்று கூப்பிட்டுத் தன் பைத்தியக்காரத்தனமான புராதனத் தூசி படிந்த அக்கௌண்டன்சியை என் மேல் சுமத்துகிறார்.

நேற்று சொல்லிவிட்டேன்-”மாடர்ன் மெதட் இப்படி இல்லை ஸார்.இடது கையில் பேனாவைப் பிடித்துக்கொண்டு ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு எண்ட்ரி போடும் சுலபம் உங்களை இன்னும் எப்படி எட்டவில்லை?என்று தொனிக்க.அதன் முகம் சுருங்கிப் போயிற்று.ஆனால் ஜாக்ரதையாகிவிட்டார்.

அதன் பின் வெகு நிதானமாக என்னை அணுகுகிறார்.அடிக்கடி”உள்ளே நம்ம கம்பெனி ப்ரொட்யூஸ் பண்ற பாட்டில் மௌத் ஸ்டாப்பர்ஸ்(ரப்பர் கார்க்குகள்)கறுப்பு. நீ சிகப்புய்யா”என்ற அர்த்தத்தில் நான் சிரிக்கிறேன்.அவருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.

என் பக்கத்தில் ரெங்கராஜன் என்கிற மதுராந்தக 34வயது அக்கவுண்டண்ட்,வலது பக்கம் லக்ஷ்மி,அவர்கள் எல்லாரும் ஒரே க்ரூப்.மேனேஜரை ஏமாற்றிவிட்டு ஆஃபீஸ் ஃப்ளாஸ்க் டீயை இரண்டு,மூன்று தடவை குடித்து விடுகிறோம்.நாங்கள் குடிக்கும் நேரத்தில் மேனேஜர் ஒண்ணுக்குப் போயிருப்பார்.தொண்டைக்குள் ’மேனேஜருக்கு நீரிழிவோ?’ என்ற சந்தேக தாகம் மையம் கொண்டிருக்கிறது.

சரி.ஆஃபீஸ் புராணம் ஜாஸ்தியாப் போச்சு.நிறுத்திக் கொள்கிறேன்.

பாண்டிச்சேரியின் பரந்த எல்லையில் 136B, கீழ ராஜ வீதி என்ற முகவரி கிடைக்காது என்ற ஏமாற்றத்தைப் போக்கிக்கொள்ளக் கைவசம் இருப்பது பழைய ஞாபகங்கள்-கொஞ்சம் புஸ்தகங்கள்-கடற்கரை-இன்னும் கொஞ்ச நாளில் என்னை அடைய இருக்கிற என் நண்பனான சைக்கிள்-நான் இன்னும் போகாத லைப்ரரிகள்-ஆஸ்ரம்-பார்க்க நேரமில்லாத தொலைவில் இந்திராபார்த்தசாரதி/ராஜு/மாலதி.இது தவிர இப்போதைக்கு சுந்தர்ஜியை மறக்கடித்து மீனாக்ஷிசுந்தரத்தை ஞாபகப்படுத்துகிற என் அலுவலகம்.வேறென்ன?

ப்ரகாஷின் உடல்நலத்தைத் தயவு செய்து கவனித்து அவரை ஆபரேஷனுக்கு உட்படுத்துங்கள்.தயவு செய்து அவரிடம் இதைச் சொல்லி அடுத்த மாதத்துக்குள் ஆபரேஷனை முடித்து விடுங்கள்.

எதிர்வீட்டில் ஒரு பெண் என்னை இன்று காலையில் இருந்து சைட் அடிக்கிறாள்.என்ன செய்ய?உங்கள் மனைவி/பெண் லக்ஷ்மி/பயல் பாரதி/அப்பா நலம்தானே?அன்பழகன்/ரமேஷ்பாபு/சுப்பராயலு/மு.ராமசாமி/ராமானுஜம் நலம்தானே?

ஒரு வாரத்துக்குள் பாண்டிச்சேரியில் ரூம் வாடகைக்குக் கிடைத்துவிடும்.அதுவரை ஆஃபீஸ் முகவரிக்கு லெட்டர் போடுங்கள்.என் மாமாவின் நண்பரின் ரூமில் தற்போது வாசம்.

காதம்பரிக்கு என் விபரம் தெரியப்படுத்தவும்.ஒரு வாரத்துக்குள் அவருக்கு லெட்டர் எழுதுவேன் என்றும் சொல்லவும்.அவர் வீட்டு நம்பர் 34ஆ?அல்லது 43ஆ?விவரம் தேவை.எழுதுங்கள்.

சுந்தர்ஜி,
20.02.1989

(என் 27 வருட மெ(மே)ன்மையான நட்பு கோபாலியுடன் -தஞ்சாவூர்க்கவிராயர்- பாறை போல் இறுகியிருக்கிறது. கிட்டத்தட்ட 22 வருஷங்களுக்கு முன்னால் எனக்கு முதன்முதலில் வேலை கிடைத்தபின் என் 24வது வயதில் எழுதப்பட்ட என் கடிதத்தின் உணர்வுகளில் இருந்து வெகுவாக நான் மாறியிருக்கிறேன்.

இன்றைக்கு என்னால் எழுதப்படும் ஒரு கடிதத்தில் மனிதர்களின் அடையாளங்கள் குறித்த விமர்சனங்கள் இடம் பெறாது.அன்று எழுதப்பட்ட கடிதத்தால் யாரின் மனதும் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

ஆனாலும் அந்த வயதின் அடையாளமாய் இந்தக் கடிதத்தின் சருகு என்னை வருடிச் செல்கிறது.)

14 கருத்துகள்:

இரசிகை சொன்னது…

kadithangal kaathalukkuriyavai.....!

பத்மா சொன்னது…

என்ன ஒரு இயல்பான நடை .வாத்சல்யம் , ப்ரியம் ,சிநேகங்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

நிலா மகள் சொன்னது…

ரயில்வே ஸ்டேஷன்-ல் கழிக்கும் இரவுக்கும், பஸ் ஸ்டாண்ட்-ல் கழிக்கும் இரவுக்குமான நுட்பமான வேறுபாடு தத்ருபம்!
பள்ளி செல்லும் பிள்ளைகளின் திங்கட்கிழமை வயிற்றுவலி போல கிழமைகளின் மயக்கம் நமக்கும் உள்ளமை நிதர்சனம்!
'சுந்தர்ஜி'-ல் முன்பே படித்திருந்தும், மறுபடி மறுபடி வாசிக்கும் தோறும் சுகமளிப்பவை ஆயிற்றே காலங்கள் கடந்து நிற்கும் கடிதங்கள்... !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில கடிதங்கள் நம்மையே மேம்படுத்தும்...

தங்களின் கடிதத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி ஐயா....

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

நன்றி...

ஹ ர ணி சொன்னது…

உங்கள் 24 வயது காலத்திற்குப் போய் தஞ்சையில் நிற்கிறேன். மனசு கணக்கிறது ஆசானை எண்ணி.

சங்கவி சொன்னது…

அழகான நடை...

G.M Balasubramaniam சொன்னது…

எப்படி இருந்த சுந்தர்ஜி, இப்படி ஆகிவிட்டேனே என்று எப்போதாவது யோசிப்பீர்களா சுந்தர்ஜி. உங்கள் கடிதமும் மனதை திறந்து கொட்டும் உங்கள் பதிவு போல்தான் இருக்கிறது. எனக்கென்ன தோன்றுகிறதென்றால் நிறைய சொல்ல நினைக்கிறீர்கள், சொல்லியும் சொல்லாமலும் விட்டுப் போய் விடுகிறது. ( நான்கு வயது குழந்தைக்கு ஏற்படுவது போல.) அது உங்கள் இப்போதைய எழுத்துக்களிலும் த்லை காட்டுவது கண்டிருக்கிறேன். உங்கள் இந்தப் பதிவு நான் அந்தக் காலத்தில் எழுதி இன்னுமிருக்கும் ஒரு சிலவற்றையும், எனக்கு என் தந்தையார் எழுதி, நான் பொக்கிஷமாய் வைத்திருக்கும் சில கடிதங்களையும் படிக்க வைத்தது. மாற்றங்கள் தான் மாறாதது என்று நினைக்கத் தூண்டுகிறது.

அப்பாதுரை சொன்னது…

இதை நினைவிலிருந்து எழுதுகிறீர்களா? வாவ்!
எனக்கென்னவோ பஸ் நிலையத்தின் பரபரப்புக்கு ரெயில் நிலையம் கிட்ட வரமுடியாது என்று தோன்றும். பஸ் ஜன்னலோரமாக உட்கார்ந்து எதிர்புறத்தில் சிலர் பிக்பாகெட் அடிக்கும் லாவகத்தை கவனித்த அனுபவம் உண்டா? பஸ் நிலையத்தில் நிறைய சோகங்களும் திகிலும் இருப்பதாகத் தோன்றும்.

அப்பாதுரை சொன்னது…

ஹா! மன்னிக்கவும். நம்முடைய குக்கட்பள்ளி பஸ்பயணம் நினைவுக்கு வந்து வாட்டுது.

அப்பாதுரை சொன்னது…

பதிவின் குறுக்கே தொடரும் splash இடையூறாக இருக்கிறது சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

அப்படி இருந்ததால்தான் இப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பெரிய சந்தோஷம்தான் பாலு சார்.

ஒருவேளை உடல்ரீதியாக அப்போது இருந்த வேகமும் பரபரப்பும் இப்போது சற்றுத் தளர்ந்திருக்கலாம்.

இல்லை அப்பாஜி. 1989ல் கோபாலிக்கு எழுதிய கடிதத்தின் நகல்தான் இது.

என்னை ரயில் நிலையம்தான் அதிகம் ஈர்க்கிறது உங்களை பஸ் நிலையம் ஈர்ப்பதைப் போல.

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான நடை!

உங்க‌ள் ப‌திவின் மெல்லிய‌ சோகம், கண்ணீர் அப்படியே மனதினுள் இறங்குகின்ற அசத்தல் நடை!

பழைய தஞ்சாவூரும் அதன் சந்துக்களும் விடியற்காலைப்பொழுதில் மணக்கும் தஞ்சாவூர்க் கதம்பமும் கல்லணைக்கால்வாயில் நீச்சலடிக்கும் சிறுவர்களும் இப்படி நிறைய நினைவுகள் சுகமாக வந்து மறைகின்றன!

vasan சொன்னது…

இந்த‌ கோபாலிதான் ப‌த்து நாட்க‌ளுக்கு முன் ந‌ம்முட‌ன் சுண்ட‌ல் காபி ப‌கிர்ந்து கொண்ட‌ த‌ஞ்சாவூர் க‌விராயார் என் அறிந்து ம‌கிழ்கிறேன் சுந்த‌ர்ஜி. ஆஹா, எத்த‌னையாண்டு கால‌ ந‌ட்பு!! வெள்ளிவிழாக்க‌ள் தாண்டிய‌ ஆண்டுக‌ள். கோபாலி சார், அப்போ, இந்த‌ சுந்த‌ர் என்ற‌ மீனாக்ஷிசுந்தரத்தோடு சுற்றிதிரிகையில் "ஏன் இப்ப‌டிச் சிறுப‌ய‌லோட‌ சேர்க்கை?" என கேட‌ட‌துண்டா? ஒரு "நாஷ்டால்சியா' சுருளுக்காக...

தினேஷ்-பாரதி சொன்னது…

கடுதாசி என்பது காலத்தின் அடையாளம் காதலின் அடையாளமும்தான்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...