17.10.12

என்னோடு நீந்த வாங்க!

போன வாரம் சதுரகிரிக்குப் பயணப்பட்டேன். ப்ளாக்கின் அமைதிக்குக் காரணம் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். ஒருவேளை அந்தப் பயண அனுபவத்தை எழுத நேரிடலாம். 

ரயிலில் இரவு முழுவதும் இரு புஸ்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். 1.நாலடியார் 2. வெ. சாமிநாத சர்மா எழுதிய “வரலாறு கண்ட கடிதங்கள்”. 

நாலடியாரைப் பாடமாகப் படித்தபோதும், வேண்டா வெறுப்பாக என் முப்பதுகளில் படித்தபோதும் உணராத பல விஷயங்கள் இப்போது கண்ணில் படுவதை என்ன சொல்ல? என் நண்பன் செல்லத்துரையுடன் பகிர்ந்துகொண்டே வந்தேன்.

பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் மிக முக்கியமான ஒரு தொகுப்பு நாலடியார். நாலடிக்கு மிகாத பாட்டுக்களை உடைய நூல்கள் எல்லாம் கீழ்க்கணக்கில் வந்துவிடும். பெயர் தெரியாத சமணத் துறவிகளால் நாற்பது அதிகாரமும், அதிகாரத்துக்கு நாற்பது வெண்பாக்களும் என மொத்தம் நானூறு வெண்பாக்கள். மொத்தமும் ரத்னங்கள்.

பதுமனார் என்ற புலவரால் கி.பி.250ஐ ஒட்டிய களப்பிரர்களின் காலத்தில் தொகுக்கப்பட்டது. அறத்துப் பாலில் 13 அதிகாரங்களில் 130 பாட்டுக்கள். பொருட்பாலில் 24 அதிகாரங்களில் 240 பாட்டுக்கள். காமத்துப்பாலில் 3 அதிகாரங்களில் 30 பாட்டுக்கள் என்று பெயர் தெரியாத நானூறு தனித்தனிப் புலவர்களால் எழுதப்பட்டிருந்தாலும், அதன் தொனி ஒன்றாகவே இருப்பது சிறப்பு.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழியில் நாலின் இடம் நாலடியாருக்கு வழங்கப்பட்டிருப்பதில் இருந்து திருக்குறளுக்குச் சமமான இதன் மேன்மை புரியும்.

பொதுவான என் குணம் பின்னாலிருந்து கவிதைகளை வாசிப்பது. ஆக முதலில் வருவது காமத்துப்பாலில் என்னைக் கவர்ந்த ஐந்து சுவாரஸ்யங்கள். பஞ்ச ரத்னங்கள்.

பாடல் :1.

அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன் - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.                                      ( நாலடியார் - 372 )

என்ன சொல்கிறார் கவிஞர்?

பொருள்:

”அழகிய அல்குல்லை உடைய பொதுமகள் ஒருத்தி, என்னிடம் செல்வம் மிகுதியாய் இருந்தபோது, அன்பால் ஒன்றுபட்டு ஒரு கணமும் என்னைப் பிரிய விரும்பாதவள் போல, அவசியமானால் ‘நாம் மலைமீதேறிக் குதிப்போம்’ என்றாள். செல்வம் எல்லாம் வற்றிப்போன பின், காலில் வாதநோய் வந்துவிட்டது என்றழுது நடித்து, என்னுடன் மலையுச்சிக்கு வாராமல் விலகிச் சென்றாள்.”

மலையுச்சிக்கு வா என்று நினைவாக பொதுமகளை வந்து கூப்பிட்ட எள்ளல் எத்தனை சுவை?

பாடல் :2. 

கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.                                                        ( நாலடியார் - 387 )

பொருள்:

”ஒரு கிராமத்தான் ருசியில் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என்று வாங்கிக் கொண்டானாம். 

அது போல, முழுதும் என்னோடு ஒத்துவராத, அழகிய நெற்றியை உடைய பொதுமகளை அனுபவித்த மலை போன்ற மார்பை உடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான்.”

இந்தப் பாட்டு எழுதப்பட்ட காலத்தின் கண்ணாடி.

அவன் பொதுமகளை அனுபவித்துவிட்டுத் தன்னிடம் குளிக்காமல் சேர வருகிறான் என்றெழுதும் தலைவியின் மனம் வெகு ஆச்சர்யமானது. கணவனின் அகத்தூய்மையில் (ஒருவேளை திருந்தாத பூட்ட கேஸ்?) கோபம் கொண்டு புகார் அளிக்காமல், அவனின் புறத்தூய்மை பற்றி மட்டும் அலுத்துக்கொள்ளும் தொனி கொண்ட இந்தப் பாடல் கவிஞரின் டிலைட். ’தோய’ என்ற கிளர்ச்சியூட்டும் வார்த்தைப் ப்ரயோகம் கொண்ட இந்தப் பாடல் என் ஃபேவரிட்.

பாடல் :3.

எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.                                            ( நாலடியார் - 385 )

பொருள்:

”நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவிச் சேர்ந்தாலும், முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகிறோம். ஆனால் பொருளுக்காகப் பலருடைய மார்புகளையும் தழுவிக் கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணம் இன்றித் தழுவிக் கொள்கிறார்களோ?” 

தனி மகளிரின் நாணம் குறித்தும், பொது மகளிரின் நாணமின்மை குறித்தும் வியப்படையும், பெண் மனம் சொல்லும் இந்தப் பாடலிலும் காலம் வெளிப்பட்டிருக்கிறது.

பாடல்: 4

சாய்ப்பறிக்க நீர்திகழும் தண் வயலூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.                                   ( நாலடியார் - 389 )

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரக்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊர்க்காரனான என் தலைவன் மீது முன்பொரு நாள் ஈ பறந்தாலும் அதைப் பார்த்து வருத்தப்பட்டவளும் நான்தான்.

இப்போது, தீப்பொறி பறக்க பொதுமகளிரின் முலைகள் மோதுவதால் என் தலைவனின் மார்பில் பூசப்பட்ட சந்தனம் கலைந்ததைப் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருப்பவளும் நான்தான்.

இந்தப் பாடல் திருவிளையாடலில் நாகேஷ் சொல்லும் ’ஓஹோ! அப்டீன்னா இங்கே எல்லாமும் நீர் ஒருவர்தானா?’ என்ற வசனம் நினைவுக்கு வருகிறது. பொதுமகளிருடன் தன் கணவன் கூடுவதைக் ஒரு கவிதையில் பொருத்திப் பார்க்கும் இந்தப் பொறுமை எழுதப்பட்ட காலத்தால் பழதானாலும், உள்ளடக்கத்தால் நவீன கவிதையின் பாடுபொருட்களுக்குச் சமமானதாய் இருக்கிறது.

பாடல் :5.

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.                                                    ( நாலடியார் - 371 )

பொருள்:

விளக்கின் ஒளியையும், பொது மகளிரின் அன்பையும் ஆராய்ந்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கின் ஒளி எண்ணெய் வற்றியபோது எப்படி நீங்குமோ, அதேபோல் நாடுவோரின் செல்வம் வற்றிப்போக பொதுமகளிரும் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள்.

”உற்று நோக்குகிறோம்
தீபத்தின் சுடரை நீயும்
திரி உறிஞ்சவிருக்கிற
தைலத்தை நானும்.” 

என்ற என் கவிதை வரிகளும் இப்போது நினைவுக்கு வருகின்றன.

சரி. இந்த ஐந்து பாடல்களோடு மட்டும் நான் நிறுத்தினால், நாலடியாரைத் தேடிப் படிக்க ஆர்வம் உண்டாகலாம். உண்டாகாமல் இருக்கலாம். 

ஆனாலும் வரக்கூடிய இடுகைகளில் நிறைய என்னைக் கவர்ந்த நாலடியார் பாடல்களை உங்களுக்காக எழுதுவேன்.

6 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பள்ளியில் படித்த பிறகு படிக்காமல் விட்டுவிட்ட பலவற்றில் இவையும்......

தொடருங்கள் ஜி! உங்கள் பக்கம் மூலமாகவாது படிக்கிறேன் இனி!

சென்னை வரும் போது உங்களைச் சந்திக்க இயலவில்லை. புதுவை சென்றிருப்பதாக அறிந்தேன்....

சமீபத்தில் தான் ரிஷபன் ஜியும் சதுரகிரி சென்று வந்த அனுபவத்தினை பகிர்ந்திருந்தார். நானும் செல்ல நினைத்திருக்குமிடம்... பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறதென....

Arvind Venkatraman சொன்னது…

Very good Sir. I enjoyed it.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மறந்து போனதை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்... தொடர்கிறேன்...

நன்றி ஐயா...

G.M Balasubramaniam சொன்னது…


நாலடியாரில், நான்கைந்து பாடல்கள் படித்திருப்பேனோ என்னவோ நினைவில்லை. பாடல்களின் பொருளும் எண்ணங்களு எக்காலத்துக்கும் பொருந்திப் போவதே பாடல்களின் சிறப்பு. வாழ்த்துக்கள். பள்ளிகளில் இவையெல்லாம் பாடங்களில் இடம் பெறுகிறதா.?தமிழில் பதங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி இருக்கிறதா சுந்தர்ஜி.?

vasan சொன்னது…

காம‌த்துப்பாலின் நான்கு நால‌டியார் பாட‌ல்க‌ளிலும், விலைம‌க‌ளீர் நீக்க‌ம‌ற‌ நிறைந்திருக்கின்றன‌ர்.
செல்வ‌ம் வ‌ற்ற‌ ப‌ற‌க்கும் கொக்குக‌ளாயும், நாண‌ம‌ற்றும், த‌ன்ன‌ல‌ப் பண்புட‌ன் தான் காண‌க்கிடைக்கிறார்க‌ள். ச‌முதாய‌ம் இன்னும் இவ‌ற்றிலிருந்து இன்றுவ‌ரை எதையுமே க‌ற்றுக் கொள்ளவில்லையோ? துணைவிய‌ரும், ப‌ல‌தார‌ ம‌ண‌த்தால் வ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளாலும் வரும்‌ சரித்திர‌, இதிகாச‌ சிக்க‌ல்க‌ள் இன்றும் ஆண்டான் முத‌ல் அடிமைவ‌ரை அனைவ‌ரையும் அலைக்க‌ழித்துக் கொண்டேதானிருக்கிற‌து.

சுந்தர்ஜி சொன்னது…

நாலடியாரின் மொழி மிகவும் எளிமையானது பாலு சார்.

இருந்தாலும் பொழிப்புரையுடன் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றையும் வாசித்த பின்னரே எழுதுகிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...