27.5.13

அஷ்டாவக்ர கீதை

சாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு. அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம்.

இது அஷ்டாவக்ர கீதை. இது ஜனக மன்னருக்கும், அஷ்டாவக்ர முனிவருக்குமிடையில் நடந்த சம்பாஷணையில் வெளிப்பட்ட தத்துவக் கருத்துக்கள் இந்த முத்துக்கள். 

முன்னொரு காலத்தில் ஜனக மன்னர் தனது அரசவையில் தனது ஆஸ்தான பண்டிதருடன் அப்பியாசத்தில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஒரு புராதன வேதாந்த சாஸ்ரத்தில்- 

“குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் காலூன்றி, மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ப்ரும்ம ஞானம் உறலாம்” -

எனும் மஹா வாக்யம் இருந்தது. இமைப்பொழுதில் ஞானம் அடையலாம் என்பதே அதன் தாத்பர்யமாக இருந்தது. ஜனக ராஜாவால் அந்த வசனத்தைக் கடக்க முடியவில்லை. 

பண்டிதரிடம் " குதிரை கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று நேரடியாக அந்த வசனத்தின் நிரூபணத்தை அறிய ஆவல் கொண்டு வினவினார் மன்னர். அவருடைய ஆர்வத்தைக் கண்டு வெருண்ட பண்டிதரோ, அந்த ஞானானுபவத்தை நிரூபிப்பது தன்னால் முடியாதது என்று மறுத்தார்.

“ அப்படியென்றால் அந்த வசனம் பொய்யானதாக இருக்கவேண்டும். அல்லது மிகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்” என்று வாதிட்டார் மன்னர்.

“ என்னால் நிரூபிக்க இயலாத பெரும் ஞானமென்பதால், பெரியோரின் வாக்கு பொய்யானதாக எப்படி இருக்க முடியும்?” என்று பதிலளித்தார் பண்டிதர்.

மன்னர் அந்த பதிலால் த்ருப்தியடையவில்லை. அந்தப் பண்டிதரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு நிற்காமல், நாட்டின் அத்தனை பண்டிதர்களையும் ஒவ்வொருத்தராகப் பரிசோதித்து, பதில் கிடைக்காது போகவே சிறையில் இட்டார். நாட்டின் சான்றோர்கள் எல்லோரும் சிறைப்பட்டு, நாடே துயரத்தில் வீழ்ந்தது.


இந்தக் கட்டத்தில், வயதில் சிறியவரும் அறிவில் மூத்தவருமான ஒருவர் ஜனக ராஜனின் நாட்டில் காணப்பட்டார். தோற்றத்தில் எட்டுக் கோணலுடன் தென்பட்டதால் அவர் அஷ்டவக்ரர் என்று அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அரசனின் சந்தேகத்துக்கு நிரூபணம் அளிக்க முடியாமல் எல்லாப் பண்டிதர்களும் சிறைப் படுத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.

நேராக அரசனைச் சந்தித்து, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எல்லோரையும் விடுவித்து, அவரின் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பதாகவும் அந்த மக்களிடம் சொல்லவே அவரை ஒரு பல்லக்கில் சுமந்து அரண்மனைக்கு ஜனக மன்னனைச் சந்திக்க அழைத்துப் போனார்கள்.

ஜனகருக்கும் அவரின் உறுதியைக் கண்டு அவரால் நிச்சயம் தன் ஐயத்தைத் தீர்த்துவைக்கமுடியும் என்று தோன்றவே, சிறைப்பட்ட எல்லோரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

ஜனகருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. அடுத்த நொடியே அஷ்டாவக்ரரிடம், “குதிரையைக் கொண்டு வரச் சொல்லவா?என்று ஆவலுடன் கேட்க, சிரித்தபடியே, “ அரசே! அவசரப்படவேண்டாம். நாம் இருவருக்கும் யாருமற்ற தனிமைதான் இப்போது தேவை. அங்கே உமக்கு அறிந்துகொள்ள வேண்டிய உண்மையை உரைப்பேன்என்றார்.

ஒரு பல்லக்கில் அஷ்டாவக்ரரும், அரசன் குதிரையிலுமாக எல்லோரும் சூழக் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வனத்தை அடைந்ததும் அரசரிடம், உடன் வந்த பரிவாரங்கள் அனைத்தையும் திரும்பிப் போகச் சொல்லுங்கள். நாம் இருவர் மட்டும் தனித்திருக்கலாம்என்று வேண்டிக்கொண்டார்.

மன்னனும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குதிரையின் சேணத்தில் ஒரு காலும், தரையில் மறுகாலுமாக தயாராக நின்றபடி, “இன்னும் தாமதிக்கவேண்டாம் முனிவரே! உண்மையை எனக்கு அருளத் தயை புரிய வேண்டும்என்றார்.

அஷ்டாவக்ரர் அமைதியுடன், “அரசே! நீங்கள் அறிய விரும்பும் இந்த உண்மை, குருவினால் ஒரு சீடனுக்கு அருளப்பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது! நாம் இருவரும் அப்படி சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதானா?என்று கேட்டார்.

ஜனகரும் முனிவரை வணங்கி,நானே உங்கள் சீடன். அருள் புரியுங்கள்என்றார். மறுபடியும் முனிவர்,ஜனகா! உண்மையான சீடன் என்பவன் தன்னையும், தன் உடமைகளையும் குருவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமே?என்று கேட்டார்.

ஜனகரும், “அப்படியே அர்ப்பணிக்கிறேன்என்று தன்னையும், தன் உடமைகளையும் அர்ப்பணம் செய்தார். அஷ்டவக்ரரும், “அப்படியே இருப்பாயாகஎன்று சொல்லி, அடுத்த கணம் மறைந்து போனார்.

ஜனகர் (ஸ்தம்பித்து- வேண்டாமே) மரம் போல அசையாமல் நின்றார். சூரியன் மறையும் வரையும், மறைந்த பின்னும் அந்த இடத்திலேயே முனிவருக்கு அர்ப்பணித்தபடியே நின்றுகொண்டிருந்தார்.

நீண்டநேரத்துக்குப் பின்னும் அரசன் திரும்பவில்லையே என்ற கவலை கொண்ட அரசனின் பரிவாரங்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். காட்டுக்குள் மரம் போல நிற்கும் அரசரைக் கண்டு திடுக்கிட்டார்கள்.

மன்னரோ தன்னைச் சுற்றியிருந்தவர்களையோ, அவர்களின் கேள்விகளையோ கவனித்தவராய் இல்லாமல் அப்படியே உறைந்திருக்க, மக்கள் வேதனையுடன் அஷ்டாவக்ரரைத் தேடினார்கள். அவரையும் காணாது போகவே, பெருத்த கோபமும், ஏமாற்றமும் சூழ அந்தக் கோலத்திலேயே மன்னனைப் பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்குத் தூக்கி வந்து பள்ளியணையில் படுக்க வைத்தார்கள்.

மறுநாள் விடியலும் ஏமாற்றம் அளித்தது. மன்னனிடம் ஒரு மாறுதலும் தென்படாதது கண்டு, அஷ்டாவக்ரர் ஒரு மாயாவியாய் இருக்கக்கூடும் என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மந்திரிமார்கள் முடிவுசெய்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பினார்கள்.

அன்றைய நாள் முடிந்து, இரவு பிறந்த வேளையில் அஷ்டாவக்ரர் தென்பட்டார். அவரைத் தூதர்கள் அரசவைக்குக் கூட்டிவந்தார்கள். 

முதன்மந்திரிக்கு அவரைக் கண்டதும், கட்டுக்கடங்காத கோபம் வந்தாலும், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்ததை எல்லாம் விபரமாக அஷ்டாவக்ரரிடம் எடுத்துச் சொல்லி, “மன்னரை மறுபடியும் சுயநினைவுள்ளவராக ஆக்கவேண்டும். அரசரின் இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம்.  கண்டிப்பாகக் காட்டில் என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும். என்று கேட்டார்.

அஷ்டாவக்ரர் “ஜனகாஎன்று கூப்பிடவும், “ஸ்வாமி! வரவேண்டும்என்று வணங்கினார் மன்னர்.

அமைச்சர்களுக்கு பலத்த ஆச்சர்யம்.

“ஜனகா! நான் உன்னைப் பரிதாபமான நிலமைக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், நான்தான் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்றும் சொல்கிறார்களே? இது உண்மைதானா? நீயே சொல்!என்றார்.

“யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? சொல்லுங்கள்என்று வெகுண்டார் மன்னர்.

அரசனின் கோபத்தைக் கண்டு அரசவையே நடுங்கிற்று. அஷ்டாவக்ரரிடம், அரசரை எப்படியாவது சகஜ நிலைக்கு மீட்டுத் தாருங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.  

“அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள். மன்னனுடன் நான் தனியாக இருக்கவேண்டும்என்றார் அஷ்டாவக்ரர்.

எல்லோரும் சென்றபின் அஷ்டாவக்ரர் , “ஜனகா! நீ எப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? வழக்கம் போல இல்லையே நீ?என்று கேட்டார்.

“முனிவரே! நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உங்கள் ஆணைப்படி இனி நடப்பேன்என்று சொல்ல அஷ்டாவக்ரரும், “ ப்ரும்ம ஞானம் என்பது நன்கு பக்குவம் பெற்றவர்களுக்கே உபதேசிக்க உகந்தது. இதுவரை நான் உன்னை சோதித்தேன். இரவு உணவுக்குப் பின் நாம் சந்திக்கலாம்என்று சொல்லி, தனது கிரமங்களை முடித்துத் திரும்பினார்.

ஜனகரின் அந்த இரவு அதற்கு முந்தைய இரவுகளைக் காட்டிலும் அர்த்தம் பொதிந்திருந்தது.

“ ப்ரும்ம நிலை, அதை அடையும் வழி யாது?என்ற ஜனகரின் கேள்விக்கு, “ப்ரும்மம் என்பது நீயே அன்றி வேறில்லை. அதை உணர தேசம், காலம் எதுவும் இல்லை. அது எதுவோ அதுவே நீ. அதுவே எல்லையில்லா பரிபூர்ண ஆத்மாஎன்று உபதேசித்தார்.

அன்றிரவு முழுவதும் அவ்விருவருக்கும் நடுவே இடம்பெற்ற உரையாடல்களே அஷ்டாவக்ர கீதையாய்ப் பரிணமித்தது.

மறுநாள் மன்னர் இயல்பாய்த் தன் அரசவைக்கு வந்து, தன் அலுவல்களில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்வுற்றனர்.

அஷ்டாவக்ரரும், “கண நேரத்தில் ஞானம் உறுவது குறித்த உன் சந்தேகம் தெளிவு பெற்றதா? உன் அனுபவத்தைக் கற்றறிந்த இந்த சபையோருக்குச் சொல்என்று வேண்டினார்.

ஜனகரும், “ என் முதிர்ச்சியின்மையினாலேயே சாஸ்த்ர வாக்யத்தைத் தவறாய்ப் புரிந்துகொண்டேன். உங்களால் நான் தெளிவுபெற்றேன். அந்த வாக்யத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையேஎன்று ஒப்புக்கொண்டார்.

#####

அஷ்டாவக்ர கீதை மொத்தம் இருபது அத்யாயங்கள் கொண்டதாய் அமைந்திருக்கிறது. பதினொரு அத்யாயங்களில் அஷ்டாவக்ரரின் உபதேசங்களும், அவரின் உபதேசத்தால் ஜனகர் பெற்ற அனுபவங்களின் சாரமாக ஒன்பது அத்யாயங்களுமாக இதன் வடிவம் இருக்கிறது.

மொத்தமாக 298 வசனங்களில் நிறைவடையும் இந்த கீதையின் வியப்பில் ஆழ்த்தும் அம்சம், மிக எளிமையும், சிக்கனமான மொழி அமைப்பும், மிக ஆழமான உண்மைகளும்தான்.

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும், பின்னால் விவேகானந்தரும் இந்த கீதைக்கு மிக உயர்வான ஓரிடம் அளித்திருந்தார்கள். ரமண மகரிஷியின் வாழ்க்கையிலும் அஷ்டாவக்ர கீதைக்கு முக்கிய இடமுண்டு. பல இடங்களில் அஷ்டாவக்ர கீதையிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கிறார்.

இந்த அஷ்டாவக்ர கீதை தமிழில் 1937ல் திரு. ரா. விச்வநாதனால் சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட போதே ரமணரால் பார்வையிடப் பெற்றது. ஓஷோவும் இந்தப் புராதன போதனைக்குப் பல விரிவான வியாக்யானங்கள் அளித்து மிகச் சிறப்பான இடம் கொடுத்திருந்தார்.

மிகச் சிறப்பான தமிழில் இதை மொழிபெயர்த்த திரு. ரா. விச்வநாதனுக்கு நாம் என்றும் கடன்பட்டவர்கள். அவரின் இந்த மொழிபெய்ர்ப்பின் மேன்மைக்கு மூலத்தின் பங்கும் பெரிய அளவில் உண்டு என்பதை மறுக்கமுடியாது. 

உண்மை நிலை என்பது என்றும் எவர்க்கும் இயல்பாய் உள்ளது என்றும், அதைப் பெற பிற முயற்சி ஒன்றும் வேண்டியதில்லை என்றும், நினைப்புக்கு எட்டாத அந்த நிலை எதையும் நினையாது சும்மா இருப்பதினாலேயே விளங்கும் என்றும் சொல்லும் இந்த கீதையின் தளம் வேதாந்த விஷயத்தில் உண்டாகும் சந்தேகங்களுக்கெல்லாம் மருந்தென்றே சொல்லலாம். 

முழு கீதையும் ஒரு அற்புதமான தத்துவ தரிசனத்தின் வாயிலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்றாலும், என்னளவில் முதல் வாசிப்பில் என்னை உலுக்கிய சில வசனங்களை உங்கள் வாசிப்புக்காகத் தருகிறேன்.

#####

# தன்னை உணராமையால் உலகு தோன்றும். தன்னை உணரின் உலகு தோன்றாது. கயிற்றைக் காணாமையால் அரவு தோன்றும். காணின் அரவு தோன்றாது.

இந்த விளக்கமே மிக அற்புதமான வெண்பா வடிவத்தைத் தன்னுள் புதைத்து வைத்திருப்பது போலத் தோன்றியமையால், இப்படி ஒரு வெண்பா எழுதினேன்.

தன்னை உணராமையான் றோன்றும் உலகு;
தன்னை உணரின் றோன்றாது.- பின்னும்
காணாமையான் அரவாகத் தோன்றும் கயிறு
காணின் றோன்றா தரவு. 

#உருவுற்றது எல்லாம் பொய். உருவற்றதே மெய் என்றும் உணர். இவ்வுண்மை உபதேசத்துடன் இனி உனக்குப் பிறப்பில்லை.

# செய்பவன் நான் எனும் அகங்காரப் பெரும் நாகத்தால் கடிபட்டனை. செய்பவன் நானல்ல எனும் நம்பிக்கை அமுது அருந்தி இன்புறு.

# நான் அற்ற போது விடுதலை. நான் உற்ற காலை பந்தம் என்று விளையாடல் போல் அறிந்து, எதனையும் கொள்ளாது தள்ளாது இரு.

# எப்போது மனம் சில விஷயங்களில் பற்றுமோ, அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ்விஷயத்திலும் தொய்யாதோ, அப்போதே வீடு.

# நண்பரும், நிலமும், வீடும், மனைவியும், சுற்றமும், சம்பத்தும் நாலைந்து நாளைக்கே. இதனை ஓர் கனவு என, மாயத் தோற்றம் எனப் பார்.

# அவா அற்றுப் போன பின்பு, எனக்குச் செல்வமோ, நட்போ, விஷயப் பகையோ, நூலோ, அறிவோ எங்கு உள்ளது?

# கண்ணாடியுள் வடிவத்தின் உள்ளும், புறமும் எவ்வாறு அதுவேயோ, அவ்வாறே இவ்வுடலில் உள்ளும் புறமும் ஈசன்.

# என்னிடம் இருந்து வெளிப்பட்ட உலகு என்னிடமே ஒடுங்கும்; மண்ணில் குடமும், நீரில் அலையும்,  பொன்னில் அணியும் போல.

# பிச்சைக்காரனோ, அரசனோ எவன் அவா அற்று அனைத்திலும் நல்லது, கெட்டது எனும் எண்ணம் அற்றானோ, அவனே சிறந்தவன்.

# வான் உலகில்லை; நரகமும் இல்லை; ஜீவன் முக்தி இல்லவே இல்லை; மிக மிகக் கூறுதலேன்? யோக நோக்கில் யாதுமே இல்லை.

# வாதனையற்ற சிங்கத்தைக் கண்டு விஷய யானைகள் ஓசையின்றி ஓட்டம் எடுக்கின்றன. ஓட முடியாவிடில், கெஞ்சிப் பணிகின்றன.

4 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பொறுமையாக வாசித்தேன். அருமையாக உள்ளது.

இதுவரை இதை நான் படித்ததோ கேள்விப்பட்டதோ இல்லை.

பாராட்டுக்கள் ஜி, வாழ்த்துகள் ஜி, பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அஷ்டாவக்ரன் எனும் பெயரைக் கேள்விப் பட்டிருந்தாலும்,இதை முதல் முறை கேட்கிறேன்.

சிறப்பான கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்.....

இத்தனை சிறப்பான செய்திகளை தொடர்ந்து தந்து எங்களையும் தெளிவு பெறச் செய்யும் உங்களுக்கு எனது நன்றி!

G.M Balasubramaniam சொன்னது…


இதில் காணப்படும் உபதேசங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாராலோ கூறக் கேள்விப் பட்டதுதான். அஷ்ட வக்கிரக் கீதை பற்றி இதுவரைக் கேள்விப்படவில்லை. தேடி எடுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் சுந்தர்ஜி.

Annamalai சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி.பல நல்ல நூல்கள் ,விஷயங்கள் பற்றி எழுதுகிறீர்கள்.
படித்து வருகிறேன்.மீண்டும் நன்றி.இதமான கர்னாடக சங்கீத ராகங்களை பற்றி
முன்பு எழுதியிருந்தீர்கள் உபயோகமான பதிவு.அதை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்
முழு சங்கீத ரசிகராக மாறி வருகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator