3.5.13

அகமும் புறமும் - II


பஜகோவிந்தம் (தொடர்ச்சி)

11. முதுமையின் பின்னே காமவிகாரம் ஏது? வற்றியபின் குளம் ஏது? செல்வம் அழிந்தபின் உறவேது? தத்துவத்தை உணர்ந்த பின் குடும்பம் ஏது?

12. செல்வம், பந்தம், இளமை இவைகளால் கர்வம் அடையாதே. காலன் ஒரு நிமிடத்தில் அனைத்தையும் கொண்டு போய்விடுவான். மாயைகளான இவற்றைத் துறந்து கடவுளின் பதத்தை நாடு.

13. பகல்-இரவு, காலை-மாலை, குளிர் காலம்-வசந்த காலம் இவை மீண்டும் மீண்டும் வருகின்றன. காலம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. ஆயுள் கரைகிறது. என்றாலும் ஆசாபாசம் நம்மை விடுவதில்லை.

14. காற்றைப் போல் திரிபவனே! மனைவி, செல்வம் இவற்றைப் பற்றியே ஏன் எப்போதும் சிந்தனை? இந்த நினைவுகளில் இருந்து மீண்டவர் யாருமில்லையா? நல்லோரின் உறவே பிறவிக்கடலைக் கடக்க உதவும் படகாகும்.

15. சடை வளர்த்தவன், சிகையை மழித்தவன், கேசத்தைக் கத்தரித்துக் கொண்டவன், காவித்துணி உடுத்தி வேஷம் போடுபவன்- இவர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்கள். இவர்களின் வேஷம் அத்தனையும் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

16. உடல் தளர்ந்து போனது. சிகை நரைத்துப் போய்விட்டது. பற்கள் விழுந்து விட்டன. கோலை ஊன்றித்தான் நடக்கமுடிகிறது. இருந்தும் ஆசை மட்டும் நிழலாய்த் தொடர்கிறது.

17. பகலில் நெருப்பின் முன்னே சூரியன் பின்னே இருக்க தவம் செய்கிறான். இரவிலோ குளிர் தாங்காது முழந்தாளில் மோவாயைப் பதித்து அமர்ந்தபடி, கைகளால் யாசித்து உண்கிறான். மரத்தடியில்தான் வசிக்கிறான். என்றாலும் ஆசை விட்டபாடில்லை.

18. கங்கை, சேது என்று தீர்த்த யாத்திரை ஒருபுறம். விரதங்கள் மறுபுறம். தானங்கள் இன்னொரு புறம். என்றாலும் ஞானம் பெறாதவன் நூறு பிறவிகள் கடந்தாலும் வீடுபேற்றை அடையமாட்டான் என்றே எல்லா மதங்களும் சொல்கின்றன.

19. ஆலயங்களின் அருகே மரங்களின் அடியில்தான் இருப்பு. மண்தரையில்தான் உறக்கம். தோல்தான் உடை. எல்லா உடமைகளையும், போகங்களையும் துறந்தால் யாருக்குத்தான் வைராக்கியம் சுகம் அளிக்காது?

20. யோகத்தில் மகிழ்பவனோ, போகத்தில் சுகிப்பவனோ, நல்லோரின் நட்பில் ஆனந்திப்பவனோ, தனிமையில் மகிழ்பவனோ.யாரானாலும், எவனுடைய மனது ப்ரும்மத்தில் மகிழ்கிறதோ அவனே மெய்யான ஆனந்தம் அடைகிறான். அவனே ஆனந்தம் அடைகிறான்.

(தொடரும்)
______________________________________________

புறநானூறு

இன்றைக்கு பாடல் 82ஐப் பார்க்கலாம். இந்தப் பாடல் ஒரு ஒளிப்பதிவாளனின் கண்ணால் காட்சியை விவரிக்கிற அழகைச் சொல்லி முடியாது.

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியை நோக்கி சாத்தந்தையார் எழுதிய பாடல் இது. ஒரு போரில் எத்தனை சீக்கிரமாக நற்கிள்ளி வென்றான் என்பதை எத்தனை அழகாய் உவமிக்கிறார் கவிஞர்? பார்ப்போம்.

சாறுதலைக் கொண்டெனப் 
பெண்ணீற்று உற்றெனப்
பட்டஞாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

ஊரில் திருவிழா.
மனைவிக்குப் பேறுகாலம்.
விடாத மழை வேறு.
மாலை நேரம் கரைகிறது.
கட்டில் ஒன்றைக் 
கட்டிக்கொண்டிருக்கிற
ஒரு புலையனின் கை ஊசி
எவ்வளவு விரைவாய்
வாரைச் செலுத்துமோ
அவ்வளவு விரைவாக 
முடிந்தது-
“ஆமூரைக் கைப்பற்றலாம்”
என்று வந்த மல்லனோடு
ஆத்தி சூடிய கிள்ளி
நடத்திய போர்.

பாடல் 356ல் கதையங்கண்ணனார் என்ற கவிஞர் காட்டும் காட்சி மனதை உருக்குகிறது. வாழ்வின் நிலையாமையைப் பிளந்து காட்டுகிறது.

களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூவும் கூகையோடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்

என்புபடு கடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்த்
தன்புறும் காண்போர்க் காண்பறி யாதே!

கள்ளிச் செடிகள்
பரவிக்கிடக்கும் காடு.
பகல் பொழுதிலும் 
கோட்டான்கள் கூவும்.
பிணம் எரியும் ஒளியில்
வாயகன்ற 
பெண்பேய்கள் உலவும்.
புகை மண்டி
பயந்தரும் இடுகாட்டில்
மனமொத்த காதலர்கள்
வடித்த கண்ணீர்

எரிந்த உடலின்
சாம்பலை அவிக்கும்.
தன்னை வெல்வார் இன்றி
எல்லோரும் புறமுதுகிட்டு ஓட
இவ்வுலகுக்கே தலைவனாய்
நிற்கிறது
பரந்த இக் கள்ளிக் காடு.
________________________________________________________     

வ.உ.சி. எழுதிய ”மெய்யறம்” நூல் பற்றி பழைய இடுகையில் எழுதியிருந்தேன். அவரின் 100வது அதிகாரத்தின் பத்து நீதியும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.

அதிகாரம் 100- காலம் அறிதல்.

1. வலிமிகு கூகையைப் பகல் வெல்லும் காகம்.
2. ஆகும் காலத்து அரியவும் ஆகுமாம்.
3. ஆகாக் காலத்து தெளியவும் ஆகா.
4. தனக்கு ஆகுங் காலம் சார்ந்தமர் தொடங்குக.
5. பகை கெடும் காலம் பார்த்தமர் தொடங்குக.   
6. பருவம் வரும் வரை பகைவர்க்கு அடங்குக.
7. பருவம் வரின் உடன் பகைவரை அடக்குக.
8. கூம்பும் பொழுது கொத்கொத்து அமர்க.
9. அடர்க்கும் பருவத்து அது போற் குத்துக.
10. காலம் அறிந்தே செயின் ஞாலமும் உடன் எய்தும்.

(கூகை - கோட்டான், கூம்பும் - அடங்கியிருக்கும், அடர்க்கும் - கொல்ல எழும்)

__________________________________________

18 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

இதையெல்லாம் தேவ பாஷையில் ஓதினால் தான் இறையருள் கிட்டுமா?

தமிழ்-தமிழ் பெயர்ப்புக்கு ஒரு சல்யூட்.
சிலாகிக்க வைக்கும் உவமைகளாக தேடித் தேடி ஊட்டுகிறீர்கள்.

வ.உ.சி.யின் இலக்கியப் பணியை வெளிச்சமிடுவது நன்று.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எளிமையாய் இனிமையாய்.
பள்ளி நூல்களில் தமிழ் இவ்வாறே இடம் பெறுமானால், தமிழ் வளரும், வளம் பெறும் அய்யா நன்றி

கே. பி. ஜனா... சொன்னது…

'காலம் அறிதல்' மிக நன்று. படித்து மகிழ்ந்தோம்.

G.M Balasubramaniam சொன்னது…


பஜகோவிந்தம் பாடல்களில் கூறப் பட்டுள்ள செய்திகள், காலங்காலமாய்க் கேட்டுவரும் உபதேச மொழிகள். ஒரே பாடலில் ஒருங்கிணைத்துக் கூறப்பட்டுள்ளதைத் தமிழ்படுத்திக்கூறி தெளிவு தருகிறீர்கள். பொருள் தெரிந்து பாடினால் அதன் சுவையே வேறுதானே,. வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

பஜ கோவிந்தம்... அற்புதமான தமிழ் நடை சுந்தரா... தகுந்த வார்த்தைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

புறநானூற்றுக் காட்சிகள் இதம்.. வசீகரமான காட்சிப் படுத்தல் அதன் மேன்மை.

வ.உ.சியின் மெய்யறம் பற்றி சென்னையில் சந்தித்த பொது சொன்னீர்கள். முழுதுமாய் படிக்க ஆவல்.. அற்புதம்.

வானவில்லுக்கு வந்தீங்கன்னா தத்த்தியை சந்திக்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

இப்பத்தான் அங்கே எழுதிட்டு வரேன்.. இன்னொரு காணாமப் போனவர் கிடைச்சாருனு இங்கே எழுதணும் :)
வருக வருக.

பஜகோவிந்தம் எனக்குப் பிடிக்கும். நிறைய ஆழம், தோண்டத்தோண்ட குழுக்குள் விழுந்ததே தெரியாமல் தோண்டச் சொல்லும் ஆழம்.

புறநானூற்று அசல் பாடலைத் தேடிப்படிக்கத் தோன்றுகிறது. அதன் ஒரு வரி எழுதியிருக்கலாமே? உங்களைப் போல் யாராவது சொன்னால் தான் உண்டு.

நிறைய படித்திருக்கிறீர்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள். நல்லாருக்கீங்களா? பாரதி நலமா? சிபிக்கு நெல்லூர் கோமளவிலாஸில் சாப்பிட வாய்த்ததா? பொன்மகள் நலமா?

சமஸ்க்ருதத்தை விடுங்கள். தமிழே நம் தேவ பாஷைதான். பல்லை உடைக்கும் நடை. விரிக்க விரிக்க விரியும் ஆழமும் அகலமும்.

சுந்தர்ஜி சொன்னது…

மெல்ல இனித் தமிழ் சாகும்.

அப்புறம் மீண்டும் பிறந்து உலா வரும்.

நன்றி ஜெயக்குமார்.

சுந்தர்ஜி சொன்னது…

காலம் கருதி காலத்தோடு படித்த ஜனா சாருக்கு ஒரு ஓ.

சுந்தர்ஜி சொன்னது…

நூறு பேரின் பின்னூட்டத்திலும் உங்களைத் தனியே அடையாளப் படுத்துபவை உங்கள் பின்னூட்டம்.

சௌக்கியமா பாலு சார்? மாமியும்?

சுந்தர்ஜி சொன்னது…

தத்தித் தத்தி விரைவில்(!) வருவேன். வானவில்லைத் தொடுவேன்.

வளமான வார்த்தைகளுக்கு வாரிசின் நன்றி.

(அந்தக் கோட்டும் சூட்டும் கண்ணுலியே நிக்குதுங்ணா.)

சுந்தர்ஜி சொன்னது…

எதுவும் படிக்கவில்லை என்று மண்டியிட வைக்கிறது வாசிக்கத் திறக்கும் ஒவ்வொரு புத்தகமும்.

எனக்குப் பிடித்தவைகளாக வாசிக்க முயல்கிறேன் அப்பாதுரை.

நீங்கள் சொன்னது போல் இடுகையிலேயே புறநானூற்றின் மூலத்தை நுழைத்திருக்கிறேன்.

32 வயது வாழ்ந்த சங்கரனின் காலைக் கவ்விய முதலையிடம் என் கால் இப்போது.பல் படாத கவ்வல். மீள விரும்பாத கவ்வல்.ரசிக்கிறேன் சிறைப்பட்டதை.

நிலாமகள் சொன்னது…

மனசுக்கு இதமான விசாரிப்புகள்! நன்றி ஜி!
கோமள விலாஸ் தொடங்கி முரளி கிருஷ்ணா, மயூரி, சுப்ரபாத் என நீளும் அவனது நாவின் ருசி.
உங்க செல்லங்கள் எப்படி இருக்கின்றன?

//விரிக்க விரிக்க விரியும் ஆழமும் அகலமும்.//

நெல்லிக் கனியல்லவா!!

மணிஅஜித் சொன்னது…

http://maniajith.blogspot.in/2013/03/blog-post.html

ஆதி சங்கரரின் மனிஷா பஞ்சகம் தோன்றிய கதை சார் இது

சுந்தர்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி மணிஅஜீத்.

இலக்கண வியாகரணத்தை உருப்போட்டுக்கொண்டிருந்த ஒரு சீடனைக் கண்டபோது பிறந்தது பஜகோவிந்தம்.

ஒரு சண்டாளனை எதிர்கொண்டபோது பிறந்தது மனிஷா பஞ்சகம்.

இதையும் விரைவில் எழுதுவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

என் மனைவி குழந்தைகள் நலம் நிலாமகள்.

தாமதமான பதில். பொறுத்துக்கொள்க.

இரா.முருகன் சொன்னது…

புறநானூறை அழுத்தமாக நறுக்கென்று புதுக்கவிதை ஆக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

சாத்தந்தையார் பாடலில் மனதைக் கீறும் ஒரு சொல் இழிசினன்.

பழங்காலத் தமிழ் சமுதாயம் ’தீண்டத் தகாத’ சமூகத்தையும், கைம்பெண்களையும் ஈவிரக்கமின்றித் தான் நடத்தியிருக்கிறது. புல்லரிசி சாப்பிட்டு வாழும் கைம்பெண்களை புறநானூற்றில் காணலாம்.

என்ன செய்ய, கலாசாரமும் இலக்கியமும் அழகும், கனவும் மட்டும் இல்லை, கசடும் அழுக்கும் கூடக் கவிந்ததுதான்.

இழிசினனுக்குக் கிட்டத்தட்ட ‘புலையர்’ சரியான மொழியாக்கம் தான். இன்றைக்கும் கட்டில் கட்டுகிற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ‘கட்டில் கட்டி’ என்ற சாதிப் பெயரோடு இருக்கிறார்கள்.

ஹரிகிருஷ்ணன் சொன்னது…

புறநானூறை அழுத்தமாக நறுக்கென்று புதுக்கவிதை ஆக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள் சுந்தர்.

மூலத்தின் அழகும் சிதையாமல், புதுக்கவிதையின் பாணியும் கெடாமல், பளிச்சென்று இருக்கிறது. நல்வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator