அகமும் புறமும் - III


பஜகோவிந்தத்தின் இறுதிப் பகுதி.

 21. யாரால் சிறிதளவாவது கீதை உணரப்பட்டதோ, துளியேனும் கங்கை பருகப்பட்டதோ, ஒரு முறையேனும் திருமாலின் நாமம் அர்ச்சிக்கப்பட்டதோ
அவனுக்குக் காலனுடன் விவாதிக்க எதுவுமில்லை.

22. கரையற்றதும், கடப்பதற்கு அரிதானதுமான இந்த வாழ்வில் மீண்டும் மீண்டும் பிறத்தல், மீண்டும் மீண்டும் இறத்தல், மீண்டும் கருவில் கிடத்தல் போன்றவற்றிலிருந்து முராரியே! கருணை கூர்ந்து காக்க மாட்டாயா!

23. கந்தையே ஆடையாகவும், புண்ணியம்-பாவம் இவற்றைக் கடந்தவனாகவும், யோகத்தில் நிலைத்த சித்தம் உடையவனாகவும் உள்ள யோகி சிறுவனைப் போலவும், ஒரு பித்தனைப் போலவும் ஆனந்தமுடையவனாக இருப்பான்.

24. நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் பெற்றோர் யார்? என்று சிந்தித்து இந்த உலகம் சாரமற்றதும், கனவைப் போன்றதும் என்று அலட்சியம் செய்வாயாக.

25. உன்னிடத்திலும், என்னிடத்திலும், எல்லோரிடத்திலும் திருமாலே நிறைந்திருக்கிறார். என்னிடம் சகிப்பின்றி வீணாகக் கோபம் கொள்ளாதே. எல்லோரிடத்தும் ஆன்மாவைக் கண்டு வேற்றுமையைக் கைவிடுவாயாக.

26. பகைவரிடத்திலும், நண்பரிடத்திலும், புத்திரர்களிடத்திலும், உறவினர்களிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சிக்காதே. திருமாலின் அருள் பெற விரும்புவாயானால் எதிலும் சமமான மனநிலை கொண்டிரு.

27. காமம், கோபம், லோபம், மதிமயக்கம் ஆகியவற்றைத் துறந்து நான் யார்? என்ற சிந்தனை செய். ஆத்மஞானம் அற்றவர்கள் மூடர்கள். அவர்கள் நரகத் தீயில் வீழ்கிறார்கள்.

28. கீதையையும், திருமாலின் ஆயிரம் நாமங்களையும் மனனம் செய். திருமாலின் உருவை இடைவிடாது தியானி. மனதை நல்லோர்களின் இணக்கத்தில் சேர். செல்வத்தை வறியவர்களுக்குக் கொடையளி.

29. பெண் போகத்தை சுகமாக ஒருவன் அனுபவிக்கிறான். வாழ்வின் இறுதியில் உடலில் நோயை அநுபவிக்கிறான். எல்லோருக்கும் மரணம்தான் முடிவு என்று அறிந்திருந்தும் பாவம் செய்வதை விடுவதில்லை.

30. பிராணாயாமம், வெளிப்புற நாட்டங்களில் இருந்து புலன்களைத் திருப்புதல், எது அழிவது? எது நிலையானது? என்று ஆராய்தல், தியானத்துடன் கூடிய சடநிலையில் ஆழ்தல் இவற்றை மிகுந்த கவனத்துடன் செய்.

31. குருவின் திருவடிகளில் திட பக்தி கொண்டு, பிறவித் தளையில் இருந்து விரைவில் விடுபடு. இப்படி புலன்களுடன் மனதையும் அடக்கி, உன் இதயத்தில் குடிகொண்ட இறைவனைக் காண்பாயாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புறநானூறுக்குப் போகலாமா?

கோவூர்க்கிழார் எழுதிய சவுக்கின் நுனியை நினைவுபடுத்தும் பாடல் இது. நலங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட, அவனுடன் போரிட பயந்து மதிற்கதவைப் பூட்டி மறைந்து ஒளிந்த சோழன் நெடுங்கிள்ளியைச் சாத்துகிறார் வார்த்தைகளால்.

இது 44வது பாடல்.

இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளுங்கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்

பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
அறவை யாயின் நினது எனத் திறத்தல்
மறவை யாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே!

கரிய பெண் யானைகள் 
நீர் நிலைகளில் 
விளையாடாது நிற்கின்றன.
நெய்ச்சோற்றுக் கவளங்களை 
உண்ணாது- 
கட்டிய கம்பங்களை முறித்து
துயரோடு நிலத்தில்
பிளிறியபடி புரள்கின்றன யானைகள்.
பாலின்றிக் கதறுகின்றன
குழந்தைகள்.
பூச்சூடாது வெறும் கூந்தலை
முடிக்கின்றனர் பெண்கள்.
மனைகளில் குடிநீரின்றிக்
கூவும் கூக்குரல் கேட்டும்
நீ மட்டும் இங்கே
இனிமையோடிருப்பது சரியன்று.
வலிமையான குதிரையுடைய
தலைவனே!
‘கோட்டை உன்னுடையது”
என்று நலங்கிள்ளிக்கு
மதிற்கதவைத் திற.
இல்லையெனில் 
போரில் இறங்கு.
இரண்டையும் விட்டு
மூடிய கதவுகளுக்குப் பின்னே
ஒரு மூலையில் 
பதுங்கிக் கிடப்பது
வெட்கங்கெட்ட செயல்.

அடுத்தது  பாடல் 299. குதிரையின் குணாதிசயத்தைச் சொல்லும் பாடல். இதிலும் எத்தனை நுட்பமான உவமைகளின் உபயோகம் பாருங்கள்.

பொன்முடியார் என்ற பெண்புலவர் பாடிய பாடல். அதிலும் ”கலம் தொடா மகளிர்” என்ற பதம் வீட்டுக்கு விலக்கான பெண்கள் என்பதைக் குறிப்பதோடு, அவர்கள் கோவிலுக்கும் சுதந்திரமாய் வந்திருக்கிறார்கள் என்பதும் ஆரோக்யமான தகவலாய் ஆச்சர்யப் படுத்துகிறது. பெண்ணே பெண்நிலை குறித்துக் கொடுத்த வாக்குமூலமாய்க் கொள்ளலாம்.

பருத்திவேலிச் சீறூர் மன்னன்
உழுத்த அதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.

பருத்திக் காட்டையே
வேலியாய்க் கொண்ட
குறுநில மன்னனின்
உளுத்தம் பொட்டை உண்ட
தளர்நடைக் குதிரை
-கடலைக் கிழித்துப் பாயும்
தோணியைப் போலப்-
பகைவரை அழித்தது.

நெய்யுணவு உண்டு
பிடரிமயிர் அலங்கரித்த
தண்ணடை பேரரசனின் 
குதிரையோ
-முருகன் கோயிலில்
மாதவிலக்கான பெண்கள்
ஒதுங்கி ஒருபுறமாக
நிற்பது போலப்-
பின் வாங்கி நின்றது.

(உளுத்தம் பொட்டு - உளுந்தின் தோல். தண்ணடை- மருத நிலம் சார்ந்த ஓர் ஊர்)

கருத்துகள்

ரமேஷ் வெங்கடபதி இவ்வாறு கூறியுள்ளார்…
முருகன் கோவிலுக்கு சென்று வர எப்போதும் தடையில்லை..ஏனெனில் அவன் தமிழ் கடவுள் ! ஆரியம் வந்தபின்னரே கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கும் என பெரியவர்கள் சொல்லக் கேள்வி !

பொருள் கலந்த செய்யுள் அறிமுகங்கள் அறிவுக்கு இனிது.நன்று..வாழ்த்துக்கள் !
G.M Balasubramaniam இவ்வாறு கூறியுள்ளார்…

பஜகோவிந்தம் 25-ம் பாடல் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது. மாதவிலக்கு என்பது உடற்கூறின் ஒரு இயல்பு. அந்த நாட்களில் எல்லா நற்செயல்களுக்கும் விடுமுறை கொடுத்து விடுகின்றனர். காலம் மாறுகிறது என்று நம்புவோமாக. தேர்ந்தெடுத்துப் பதிவிடும் உங்கள் செய்கை மகிழ்ச்சி தருகிறது சுந்தர்ஜி.
கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆண்டவன் அனைவரும் சமமே. எவரும் எப்பொழுதும் செல்லலாம் வணங்கலாம்.முன்னோர் வழி முற்போக்கான வழிதான். பழமையை மறந்தோம்
நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
கலம் தொடா மகளீர்-உடல் ரீதியான ஓய்வுக்கு தரப்பட்ட சலுகை. சந்நிதிகளின் மூலை முடுக்குகளில் அப்பியுள்ள அசுத்தங்களை விஞ்சி ஒன்றுண்டா?!

இருட்டிப்பை வெளிச்சப்படுத்தும் முயற்சி ... பாராட்டுகிறேன்.

பிரபலமான இடுகைகள்