24.10.10

மேய்ப்பன்


ஒரு மேய்ப்பனாய்க்
கற்றுக்கொண்டு விட்டேன்
என் கால்நடைகளின்
மொழி குறித்தும்-
மௌனம்-
வருத்தம் குறித்தும்.

பசியும் 
அதன் துள்ளலின் திசையும்
அறிவேன்.

பயணம் எந்தத் தடம்-
இளைப்பாறுதல்
எந்த மரநிழல்-
பூரணமாகத் தெரியும்
என் கைரேகை போல்.

அவற்றின் கலவி
யாரோடு எந்த நாளில்
என்பதும் எனக்கு வெளிச்சம்.

என் போலவே
அவற்றிற்கும் தெரியும்
கழுத்தின் மேலசையும்
கசாப்புக்கத்தி குறித்தும்
நெருங்கும் இறுதிநாள்
குறித்தும்.

இருந்தும்
ஒருபோதும்
கற்றுக்கொள்ள
முடியவில்லை
-மேய்ப்பன் என்னால்-
மரணத்தின் துயர்நிழல்
பூசிக்கொள்ளாத
அதன் ஞானத்தை.

11 கருத்துகள்:

santhanakrishnan சொன்னது…

மரணத்தின் நிழல்
பூசிக்கொள்ளாத
அதன் ஞானத்தை
அடைந்து விட்டால்
வாழ்வின் சுவாரஸ்யம்
குறைந்து போய்விடுமல்லவா?

நிலாமகள் சொன்னது…

அனைத்து அறிதல்களும் ஆறாம் அறிவிற்கு வசப்பட ,மரணத்தின் நிழல் பூசிக்கொள்ளாத அதன் ஞானத்தால் விஞ்சி விட்டதோ ஐந்தறிவு ...!

ஹ ர ணி சொன்னது…

Sundarji..

Very interesting poem. It writes unexpressable feelings in my mind by its simplicity with depthness. keep it up. congrats. Harani

ஹ ர ணி சொன்னது…

நிறைய தடவை கறிகோழிகளின் உதிர்ந்த இறக்கைகளையும் வெட்டப்பட்ட ஆடுகளின் உயிரற்ற உடல்களையும் அதிகாலை நேரத்தில் அவசரமாய் ரயில் பிடிக்க விரைகையில் இறுகக் கட்டப்பெற்ற ஆடுகளின் கடைசிக்குரல்களையும் இன்னும் மறக்க முடியவில்லை சுந்தர்ஜி. இவற்றைப் பல கவிதைகளில் கொட்டி தீர்ந்துபோய்க்கொண்டிருக்கிறேன். உங்கள் கவிதை என்னை மறுபடியும் ஒரு மௌன சோகத்தில் அமிழ்த்திவிட்டது. இன்னொரு வலைப்பூ தேன்சிட்டு தொடங்கியிருக்கிறேன் குறும்பா கவிதைகளுக்காக பாருங்கள் Theensittu@blogspot.com.

vasan சொன்னது…

மேய்ப்ப‌ர் அறிவ‌ர் அவரின் முடிவை,
ஏசுவுக்கு தெரியும் சும‌க்கும் சிலுவையும், காத்திருக்கும் Golgotha– (ஹேல்கொத‌)ம‌லையும்.
க‌ண்ண‌னும் அறிவான், காந்தாரி சாப‌த்தால், வேட‌னின் அம்பு குதிகாலில் குத்தும்மென‌.
தற்போதைய ஏய்ப்பர் அறியார், எது த‌ன் முடிவென‌, தேர்த‌ல் முடிவு போல்?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மதுமிதா.மரணத்தை நோக்கி இறுதி நாட்களை கழிக்கும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறைந்த வேறுபாடு இருக்கிறது மதுமிதா.அவை அது குறித்து எண்ணுவதோ கழிவிரக்கத்தின் வாயிலில் தவிப்பதோ இல்லை.வாழ்வின் சுவாரஸ்யம் எப்படிக் குறைந்துபோய்விடும் உதிர்வதைப் பற்றியே எண்ணாதிருக்கும்போது?மனிதனின் தவிப்பு மிருகங்களிடம் இல்லவே இல்லை.

சுந்தர்ஜி சொன்னது…

கவிதையின் மையத்தைச் சரியாகத் தைத்திருக்கிறது நீங்கள் எய்த அம்பு.ஒரு கவிதையில் உலவ வெற்றிடங்கள் நிறைய இருந்தாலும் மையத்தைச் சரியாய் அடைவது கவிஞனை ஆனந்தப்படுத்தும்.உங்களின் ரசனையும் என் ஆனந்தமும் அவ்வாறே நிலாமகள்.

சுந்தர்ஜி சொன்னது…

தொடரும் உற்சாகமான உங்களின் வார்த்தைகள் எனக்குப் படைப்பின் மீதும் எழுதப் பட வேண்டிய திசையையும் தெளிவு படுத்துகிறது ஹரணி.செழுமையான உங்களின் சிந்தனையும் வார்த்தையும் என்றும் எனக்குத் துணைவர விரும்புகிறேன் ஹரணி.

மிருணா சொன்னது…

கண்கள் முன்னால் தொங்கும் தழையைத் தின்றபடி, கயிற்றில் கட்டப்பட்டுள்ள ஆடு, தீனமாகப் புலம்புவதுபோல கசாப்புகடை தாண்டும் போதெல்லாம் தோன்றும். அதனாலேயோ என்னவோ கவிதையோடு முரண்படத் தோன்றுகிறது. ஆனால் மரணத்தை கொஞ்சம் வித்யாசமாக அணுகுவதை கற்றுக்கொள்வது பற்றி கவிதை நினைவூட்டவே செய்கிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சைக்கிள்.

இந்தக் கவிதை ஆடுகள் கசாப்புக் கடைகளில் தொங்குவது பற்றியல்ல. அந்த நொடி வரை அது வாழ்வை எதிர்கொள்வது பற்றியே.

ஆடுகள் மட்டுமல்ல எதுவுமே கொல்லப்படுவது ஏற்புடையதல்ல.அது வேறு தளம்.

ரிஷபன் சொன்னது…

மரணமற்று எதுவுமில்லை.. முடிவாக. பேச்சில் கூட.. இன்றைய தின பேச்சு முறிவது கூட ஒரு வார்த்தை அம்பில் நிகழும் மரணத்தால்..
நல்ல மேய்ப்பனுக்கு அந்த ஞானம் வாய்த்திருக்குமே.. கவிதை உள்ளே ஊறும் கருணையின் பதிவோ..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...