28.10.10

ஹரித்வார்-I


மாபெரும் காமன்வெல்த் ஊழலுக்கான ஆயத்தங்களில் தன்னைக் கூர்படுத்தியபடி சோம்பேறியின் மெத்தனத்தோடு தயாரானபடியிருந்தது போன வருஷம் புது தில்லி-நான் என் அக்டோபரைச் செலவழித்தபோது.

அங்கங்கு இஷ்டப்படி பள்ளம்தோண்டி இஷ்டப்படி பாலம் கட்டி இஷ்டப்படி செலவுக்கணக்கு எழுத பிஹாரித் தொழிலாளர்கள் உதவினார்கள் கல்மாடி தொடங்கி மொட்டைமாடி வரைக்கும்.
ஒரு சின்னத் தூறலுக்கே ’நசநச’ என்ற வார்த்தையை இந்த இடத்தில் உபயோகிக்க வேண்டியிருந்தது.
எல்லா இடங்களிலும் போலியான பரபரப்போடு பாதுகாப்புக் காவலர்கள் இயங்க ஜனாதிபதி மாளிகை ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்திருந்தது.
தண்ணீர்ப் பிரச்சனை தலைக்கு மேல் விஸ்வரூபமெடுத்திருக்க யாரும் அதைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் அழுக்குத் துணியால் துடைத்த தட்டில் சப்பாத்தியையும் ருசி கெட்ட தாலையும் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
பூங்காக்களின் ஓரங்களில் வெட்டிய கொய்யாப்பழம்-வறுத்த கடலை-பொய்ங் பொய்ங் என்று எதையோ அமுக்கி சத்தமெழுப்பும் பொம்மை என்று வியாபாரிகள் சில்லறை பார்த்துக்கொண்டிருந்தபோது ஜனாதிபதியைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் ஹரித்வார் போகும் பாதையில் பயணம் தொடங்கினேன்.
வழியெங்கும் கனரக வாகனங்கள் பாதையின் எல்லா இடங்களையும் ஆக்ரமித்தபடி உறுமிக்கொண்டிருந்தன. உத்தர்ப்ரதேஷை உடைத்து உத்தராஞ்சலைத் துவங்கி முதலீடு செய்பவர்களை வரிச்சலுகை கொடுத்து கூவியழைத்துக்கொண்டிருந்ததால் சகல முதலாளிகளும் மற்ற ப்ரதேசங்களை விட்டுவிட்டு உத்தராஞ்சலுக்கு சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ ட்ரக்குகளை அனுப்பியிருந்ததால் சாலையோரத்தில் அங்கங்கே எத்தனை பேர் குளிக்காமல் சாயா குடித்துக்கொண்டிருந்தார்கள் என்றெண்ண முடிந்தது.
ஒரு பானையில் தயிரை எடுத்துப்போனால் ஹரித்வாரில் இறங்கும் போது வெண்ணையெடுத்து விடுமளவுக்கு பல்லாங்குழியைத் தோற்கடிக்கும் நெடுஞ்சாலைப் பள்ளங்கள். குலுங்கிக் குலுங்கி (சிரிக்கவில்லை) சிரமப்பட்டோம். தில்லியின் வறட்சியைத் தாண்டி வழியெங்கும் கங்கையின் செழிப்புக்கூறும் கரும்புக்கொல்லைகள்.வேர்க்கடலைப் பயிர்கள்-கொழுத்த மாடுகள்-பால் வியாபாரம்-திரும்பிய இடமெல்லாம் முள்ளங்கி சாகுபடி.முரட்டு மனிதர்கள்-பசுஞ்சோலை நிறைந்த சூழல்.கரும்பை கிலோமீட்டருக்கு ஒரு ஆலை என்ற வகையில் பிழிந்து பாகு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள்.விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாததால் விவசாயத்தை எல்லாரும் ரசித்துச் செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
பாபா ராம்தேவ் ஒரு பெரிய விளம்பரத்தில் சட்டென்று புரியாத கோணத்தில் சிரமமின்றி ஒரு ஆசனத்தைப் போட்டபடி என்னையும் கற்றுக்கொள்ள அழைத்தார்.நேரமில்லை என்று சொல்லி அந்த விளம்பரப்பலகையைத் தாண்டிச்சென்றேன். தில்லியிலிருந்து ஆறு மணி நேரம் செலவழித்து மெல்ல நிமிர்கையில் ஹரித்வாரின் பெரும்பாலம் கண்முன் விரிந்தது.
(முடியல.நாளைக்கு மிச்சம்)

7 கருத்துகள்:

vasan சொன்னது…

உரைந‌டை, ச‌ர‌ள‌மாய், எல்லாவற்றையும் தொட்டுத் த‌ழுவி,சீண்டி, உருட்டி,விடுபட்டு, தன் போக்கில் சுழித்தோடும் பிர‌வாக‌மாய் ஓடுகிற‌து. குலுங்கி குலுங்கிச் சிரித்து புரையேறுகிற‌து எங்க‌ளுக்கு.
தொட‌ருக்காய், பிளாக்கை கிளிக்கிய‌ப‌டி.....

பத்மா சொன்னது…

புதிய எழுத்து ....
நகைச்சுவையில் ஊறியபடி
காத்திருக்கிறோம்......

santhanakrishnan சொன்னது…

ஜனாதிபதி மாளிகை உறக்கத்தில்
வீழ்ந்திருந்தது...
மாளிகை மட்டும் தானா?
உரைநடையும் வசீகரிக்கிறது சுந்தர்.

நிலா மகள் சொன்னது…

அப்பாடா... உங்க புண்ணியத்துல ஹரித்துவாரைப் பார்ப்போம். உங்க பார்வையில எல்லாமே ரசிக்கும்படியாத்தான் இருக்கு.சுருதி கூட்டும் அழகே, கச்சேரிக்கான ஆவலை அதிகப்படுத்துது. பண்டிகை வேற நெருங்குது. நேரமிருக்கனும்டா கடவுளே ப்ளாக் பார்க்க...!!

சைக்கிள் சொன்னது…

பயணம் தரும் அனுபவம் தனிதான். உங்கள் கவனிப்பும் மொழிநடையும் கவனிப்போடும் சுதந்திரமாகவும் இருப்பதால் இருப்பதால் பதிவு அருமையாக இருக்கிறது.

ரிஷபன் சொன்னது…

கூடவே பயணம்.. இனிமையான மொழியோடு

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வாசன் ரசனைக்கு.

காத்திருப்புக்கு நன்றி பத்மா.

பாராட்டுக்கு நன்றி சந்தானக்ருஷ்ணன்.

பரபரப்பாய் தீபாவளியை அணுகிக்கொண்டிருப்பதற்கிடையிலும் இந்தப் பக்கம் வந்து ஹரித்வாரைப் பார்த்ததற்கு நன்றி நிலாமகள்.

நன்றி சைக்கிள்.

கூடவே பயணிக்கும் ரிஷபனுக்குத் தனியாய் நன்றி சொல்லணுமா?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...