23.5.11

முளை



















குருவும் சீடனும் ஒற்றையடிப்  பாதையொன்றில் நடந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் துளிர்விட்டிருந்த சின்னஞ்சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல அவனும் சட்டென அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.

சற்றுத் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி பணித்தார். சீடன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப் பிடுங்கி எடுத்தான்.

இன்னும் சற்றுத் தொலைவு சென்ற பிறகு, ஒரு சிறு மரமாய் வளர்ந்திருந்த செடி ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தை உபயோகித்தும் அசைக்கக் கூட முடியாமல் போய்விட்டது.

அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு சொன்னார்-

”பிரச்சினைகளும் இப்படித்தான்!”

உடனே சீடன் கேட்டான்-

“பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன சம்பந்தம்?”

குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி சொன்னார்:

“பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம். அதை வளர விட்டால் அது மரம்போல வளர்ந்து பெரிதாகி விட்டால் அப்புறம் அதை அகற்ற ஆயுதங்களும் பெரும் முயற்சியும் தேவைப்படலாம்”.

ஐந்தில்
வளைக்கப்படாதது
மட்டுமல்ல
பிடுங்கப்படாததும்
ஐம்பதில்
வளைக்கப்படவும்
பிடுங்கப்படவும்
முடியாது.
ஐம்பதில்
முடியாதென்றால்
ஆயுசுக்கும் முடியாது.

13 கருத்துகள்:

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நீதிக்கருத்துக்கு உடனடியாக முதல் பின்னூட்டம் அளிக்க நினைத்தும், முயன்றும், முடியாமல் திரு. ரத்னவேல் சார் முதல்பதிவாக முந்திக்கொண்டுவிட்டதால், செடியான நிலையிலாவது என்னால் என் பின்னூட்டத்தை என்னிடமிருந்து பிடுங்கி, உங்களிடம் சேர்க்க முடிந்துள்ளது. கொஞ்சம் தாமதித்தாலும், வேறு யாராவது புகுந்து, செடி மரமாகிவிடுமல்லவா! தப்பித்தேன்.

நல்ல பதிவு - பாராட்டுக்கள் ஜி !

A.R.ராஜகோபாலன் சொன்னது…

நீதியை சொல்லும் கதையும் அதை
தொடரும் கவிதையும் மிக நன்று
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் , அது போலே முளையிலே பார்த்து பிரச்சனைக்கான தீர்வு காணுதல் மிக அவசியம்
நல்ல பதிவு அண்ணா

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல கருத்துக்களை சீரிய முறையில் பகிர்ந்து கொள்கிறீர்கள். அவ்வப்போது பழைய சுந்தர்ஜியையும் காண விரும்புகிறேன்(றோம்)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல நீதிக்கதை. ஐந்தில் வளையாதது… ஐம்பதில் வளையாது என்பதன் கூடவே இன்னுமொன்றை அழகாய் புரிய வைத்து இருக்கீங்கஜி! பகிர்வுக்கு நன்றி.

vasan சொன்னது…

A stitch in time,
saves nine.

'கிள்ளிப் போடுற‌ விச‌ய‌த்தை வ‌ள‌ர‌ விட்டு,
கோட‌லியால வெட்டுற‌ மாதிரின்னு'
என ஒரு கிராம‌ வ‌ழக்கும் உண்டு.

மோகன்ஜி சொன்னது…

பிரச்னைகள் பெரிதாகும் முன் செயல்படுதல் எனும் உயரிய மேலாண்மைத் தத்துவத்தை எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி!

அப்பாதுரை சொன்னது…

கதைகள் சுவை - குறிப்பாக, குருடன் லாந்தர் விளக்கு (அரிக்கேன் விளக்கு என்பார்களே, அதா?)

குருபீடம் என்று படம் போட்டிருக்கிறீர்களே? யார் அவர்? விவரம் சொல்வீர்களா?

ஹேமா சொன்னது…

கதைக்கொரு கவிதையும் நீதியும் வித்தியாசமான பதிவு !

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி அப்பாதுரை.

லாந்தர் விளக்கும் ஹரிக்கேன் விளக்கும் ஒன்றுதான்.

தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ப்ரகாஷ் தஞ்சாவூரின் இலக்கியப் புதையல். எனக்கு இவருடன் 1985ல் முதல் தொடர்பு.


என் பல்வேறுபட்ட ரசனைக்கு இவர் உரமிட்டவர்.போஷித்தவர்.தமிழில் எழுதும் பிரபலங்கள் ஒவ்வொருவரோடும் ஜி.நாகராஜன் முதல் சுந்தரராமசாமி வரை வண்ணதாசன் முதல் தி.ஜானகிராமன் வரை,பிரபஞ்சன் முதல் மாலன் வரை, பாலகுமாரன் முதல் வண்ணநிலவன் வரை, அசோகமித்ரன் முதல் ப.சிங்காரம் வரை, க.நா.சு. முதல் வெங்கட்சாமிநாதன் வரை, ந.முத்துசாமி முதல் எம்.வி.வி. வரை இவரின் தொடர்போ உதவியோ நட்போ பெறாதவர்கள் தமிழில் இல்லை.

பரந்த வாசிப்பனுபவமும் ரசனையும் கற்பனையும் மிக எளிமையான வாழ்க்கையும் வாழ்ந்தவர்.

நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் மொழிபெயர்ப்புகள் என்று இவரின் படைப்புகள் விரிந்தாலும் எழுதியதை விடவும் உரையாடல்களிலும் பேச்சுக்களிலும் அதிக விருப்பம் கொண்டவர்.

இவரைப் பேசாமல் தமிழ் இலக்கியம் ரசனை துவங்கவும் முடியவும் செய்யாது.

2000ல் மறைந்தார் அகாலமாய்.

இவரைப் பற்றியும் ஒரு இடுகை திட்டமிட்டிருக்கிறேன்.

அரசன் சொன்னது…

மிக துல்லியமாக விளக்கிய உங்களுக்கு நன்றி

நிலாமகள் சொன்னது…

ஐந்தில் வ‌ளையாத‌த‌ன் தொட‌ர்ச்சி அழ‌கு. குருபீட‌ம் ப‌ற்றிய‌ முன்னோட்ட‌மாய் அப்பாதுரைக்கான‌ விள‌க்க‌ம், முழுப்ப‌திவுக்கு ஆர்வ‌மெழுப்புமாறு. சுக‌னிட‌ம் வாங்கி வைத்திருகும் குருபீட‌த்துக்கார‌ரின் 'க‌ள்ள‌ம்' நாவ‌லில் த‌ங்க‌ள் ப‌ங்க‌ளிப்பை அறிந்தும் ப‌டிக்க‌ ச‌ம‌ய‌ம‌ற்று திரிகிறேன், குறுகுறுக்கும் ஆர்வ‌ம் சும‌ந்து.

அப்பாதுரை சொன்னது…

தஞ்சை பிரகாஷ் பற்றி அறியாமல் போனதில் வருத்தம். விவரங்களுக்கு நன்றி. சரியான அந்தஸ்தைத் தந்திருக்கிறீர்கள்.

மரணம் என்றால் திக்கென்கிறது. பிரகாஷ் பற்றிய உங்கள் இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...