28.5.11

நல்ல கவிதை-பகடை


மிருணா எழுதும் சைக்கிள் வலைப்பூவில் நேற்று இந்தக் கவிதையை வாசித்து அதிர்ந்து போய் நின்றேன்.

கடைசியாக என்னை இப்படியான அதிரும் உணர்வுகளில் மூழ்க வைத்தது கமலேஷின் கதவாயுதம்.

தெருவின் பகல்நேரப் பரபரப்பின் யாரும் பொருட்படுத்தாத உலகத்திலும் இரவின் யாருமற்ற தனிமையின் யாரும் காணாத சூன்யத்தின் வெளியிலும் நாட்களைத் தொலைக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்தவளின் உலகத்தைக் காண மனதில் எத்தனை கருணையும் பரிவும் வேண்டும்?

இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளும் திரும்ப வைக்கின்றன மொழியின் ஆளுமையாலும் புதிதான உவமைகளாலும்.

தனியே ஒரு கவிதைக்குப் பொழிப்புரை எழுதுவதை விட ஒரு கவிதையைப் பெரிதாக அவமதிக்க முடியாதென்பதால் பாராட்டுக்களுடனும் வாழ்த்துக்களுடனும் நேரே கவிதையின் அனுபவத்துக்கு இட்டுச் செல்கிறேன்.

பகடை.

வெளிச்சம் பற்றிய நினைவுகளறியா
பிறவி இருளெனக் கவிழ்கிறது காலம்
இருள் படிந்திருக்கும் தெருக்களில்
உத்தேசமாய் நடந்து செல்கிறாள் பிச்சி
திரை அரங்கின்  எதிர்பாராப் படிகளாய்
எந்த நேரமும் தட்டுப்படலாம்
நம்பிக்கையின் மின்னல் தடயங்கள்
எனக் காதுகளுயர்த்திய கால்களோடு.
 
திறந்து விடக் கூடிய ஜன்னல்கள்
எதிர்ப்பட்டுவிடக் கூடிய  பூக்கள்
காற்றில் ஒலிக்கும் மணிச்சரங்கள்
கடந்து  செல்லும் பட்டாம்பூச்சிகள்
அல்லது
மரணத்திலிருந்து மீண்ட உயிரின்
ஒரு ஜீவ பார்வை என்று
மீண்டும் மீண்டும் 
தனக்குள் உச்சரித்தபடி  நடக்கிறாள்.

நேற்றின் பச்சைய நினைவுகளை 
இன்றின் பாலை கருக்க
உற்றுப் பார்த்தபடித் தேடுகிறாள்
அவள் மட்டுமே அறிந்த சாலைகளின்
மறைந்து போன  சக்கரத் தடங்களை.
ஒரு மொழிபெயர்க்கப் படாத நூலை
இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும்
நரம்புகள் தெறிக்கும் விரல்களை
மரணம் ஒருக்கால் தளர்த்தலாம்.

உடையவர் கைவிட்ட மிரண்டு மெலிந்த
நாயொன்றும் அவளது இறுதி நினைவுகளில்
பின் தொடர்ந்தபடி இருக்கிறது.

ஒரு கனவு கூட அவளை
மீட்டு விடும் சாத்தியங்கள் இருக்க
புதிர் வட்டப் பாதையை
நினைவின் சரடு கொண்டு
கடக்கும் பிச்சியின் எத்தனிப்பைக்
கண்கொட்டாமல் பார்க்கிறது காலம்
மந்திரப் பகடையைச் சுழற்றியபடி.

13 கருத்துகள்:

பத்மா சொன்னது…

மிக்க நன்றி ஜி ....அருமையான கவிதை ...நானும் சைக்கிள் ரசிகை தான்
.

G.M Balasubramaniam சொன்னது…

முன்பே ஒரு முறை உங்கள் ப்திவில் படிக்கப்பட வேண்டிய வலைப் பதிவுகளில் சைக்கிளும் ஒன்று எழுதி உள்ளீர்கள். நானும் ஓரிரு முறை சென்று படித்ததாக நினைவு.ஏனோ தொடர்ந்து படிக்க முயலவில்லை.இனி தொடர முயற்சிக்கிறேன்.ஒன்றுக்கு நான்கு முறை படித்தால்தான் அதன் வீச்சத்தை உணர முடியும் என்று தோன்றுகிறது.

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பகடை உருட்டியது போல பளிச்சென்ற வரிகள். தாயம் விழுந்தது போல நல்ல அரிய கருத்துக்கள். சைக்கிள் குள்ளும் போய் ஏறி ஓட்டிப்பார்த்து வந்தேன்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மிக உண்மையான கருத்து அண்ணா
நேற்றே அவருக்கு பாராட்டை தெரிவித்தேன்
மீண்டும் உங்கள் வாயிலாக மனம் மகிழ்ந்த பாராட்டை பகிர்கிறேன்

ரிஷபன் சொன்னது…

இன்னொரு சபாஷ் உங்கள் கவிதை மனசுக்கு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

எப்படி ஐயா, தங்களுக்கு மட்டும் அந்தந்த இடத்தில், அந்தந்த வார்த்தைகள் ஜம்மென்று உட்கார்ந்து கொள்கிறது?

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

எல் கே சொன்னது…

அங்கேயே சொன்னேன். ஒரு இடத்தில எனக்கு சந்தேகம் "பச்சைய " என்பது சரியா

Harani சொன்னது…

நானும் அந்தக்கவிதையை வாசித்துவிட்டேன். மனம் பிறழ்ந்த பெண் குறித்தும் ஆண் குறித்தும் சில கவிதைகளும் சில கதைகளும் 1993 களில் எழுதிய நினைவு வருகிறது. ஒரு நல்ல ஆய்வுக்குரிய கவிதை. அப்பழுக்கில்லாத மனிதநேயப் பரிவின் வெளிச்சம் சைக்கிளின் கவிதை. அதை சூரியனாக பிரகாசிக்க வைத்தமைக்கு நன்றிகள் சுந்தர்ஜி.

மோகன்ஜி சொன்னது…

அற்புதமான கவிதை சுந்தர்ஜி.. நல்லைவை தேடி ரசித்து அதை பிறருக்கும் பகிரும் உங்கள் பூ உள்ளத்துக்கு பொலிவு சேரட்டும்.

சிவகுமாரன் சொன்னது…

மிக நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி

மிருணா சொன்னது…

வழக்கம் போல் நன்றி திரு.சுந்தர்ஜி. உண்மையில் இது நிறைய பேர் எழுதிய விஷயம்தான். தவிர ஒவ்வொரு மனதிலும் கொஞ்சம் பித்தும் இருக்கிறது அல்லவா? ஊக்கப்படுத்தியுள்ள மற்ற நண்பர்களுக்கும் நன்றி. கணினிப் பிரச்சனையில் இன்றுதான் தாமதமாகப் பின்னூட்டமிட முடிந்தது. மீண்டும் நன்றி.

நிலாமகள் சொன்னது…

நேரிடையாக‌ மிருணாவின் வ‌லைப்ப‌திவில் வாசித்து சிலாகித்து விட்ட‌தால் கூடுத‌ல் சிற‌ப்பாக‌ த‌ங்க‌ள் அறிமுக‌ம் ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...