6.7.11

எறும்பு



நீதிபதி உள்ளே நுழைந்தவுடன் பேச்சொலி குறைந்து அமைதி அறை முழுவதும். அந்தக் குற்றவாளியின் மீதான குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவனுக்காக வாதாட அவன் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவனுடைய கடந்த காலத்தை மட்டுமே அவன் சாட்சியாகக் கொள்ள விரும்பினான். அதை மட்டும் எடுத்துக் கொள்ளச் சட்டம் தயங்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.

தீர்ப்பளிக்கும் நாள் வந்தது.

எதுவும் சொல்ல விரும்புகிறாயா எனும் இறுதிக் கேள்விக்கும் மௌனத்தைப் பதிலாய் அளித்து நீதிபதியளித்த ஐந்து வருட தண்டனையைச் சுமந்து சிறைக் கதவுகளைக் கடந்து சிறையை அடைந்தான்.

யாருமில்லாத் தனி அறை. பத்துக்குப் பத்து அளவு. அவனை மிகவும் துளைத்தெடுத்தது பகிர யாருமில்லாத் தனிமை. அதன் அழுத்தம் இரவின் இருளை விடவும் அடர்த்தியாய் இருந்தது.

கண்ணீரால் நனைந்தபடியே முதல் வாரம் கரைந்தது. பேசவும் யாருமற்று தனக்குத் தானே தோன்றிய சிந்தனைகளோடு நாட்கள் சென்றன.

மெதுவாய் தன்னைக் கடந்து போகும் காலடிகளின் ஓசை-சிறைகளில் நிலவும் அமைதி-சாப்பாட்டு நேர மணியோசை-மாலை வீழும்போது சிறையின் நடுவிலிருந்த பிரும்மாண்டமான ஆலமரத்திற்குத் திரும்பும் பறவைகளின் கூச்சல் இவை அவனுக்கு அட்டவணை போலப் பழகியிருந்தன. பறவைகளின் சிறகசைப்பின் படபடப்பும் குஞ்சுகளோடு அவை கூவும் கூச்சலுமே அவனை மிகவும் சரித்தன.

மற்றுமொரு நாள். கையைத் தலைக்கு மடித்து வைத்து உறங்கியபடி இருக்க முதுகில் ஏதோ குறுகுறுக்க எழுந்து கையால் மெல்லத் தட்ட தரையில் ஒருகட்டெறும்பு தரையில் விழுந்தது. ஏதோ தோன்ற அதைக் கையில் பிடித்து முகத்துக்கு நேரே வைத்து உற்றுப் பார்த்தான்.

”ஐயோ!என்னை நசுக்கிக் கொன்றுவிடாதே!”என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பெரிய ஆச்சர்யம். எறும்புதான் பேசியது.

“என்ன நீயா பேசுவது? எப்படி இது சாத்தியம்?” என்றான்.

”இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு முனிவருக்குச் செய்த உதவியால் எங்கள் குலத்துக்கு அவர் அளித்த வரம்.அது எதற்கு உனக்கு? என்னைக் காரணமில்லாமல் கொன்று விடாதே காரணமில்லாமல் நீ தண்டனை அனுபவிப்பதைப் போல” என்று சாதுர்யமாகப் பேசியது.   

பேசும் எறும்பு.இனித் தனிமையில்லை. அதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.தினமும் தனக்குத் துணையாய்ப் பேசுவதற்கு பகல் பொழுதுகளில் வரவேண்டும். அதற்குப் பதிலாகத் தன் உணவில் ஒரு பங்கை அதற்குத் தருவதாக அவர்களுக்குள் உடன்பாடு.

மெதுவாய் அந்தக் கைதியின் நாட்கள் அர்த்தமுள்ளதாய்க் கழிந்தது. எறும்பின் ஞானம் அவனை ஆச்சர்யப் படுத்தியது. அதற்குத் தெரியாத விஷயங்களே இல்லை. பழங்கால நாணயங்கள்-சோழர்களின் ஆட்சி-ஹிந்துஸ்தானி இசை- அர்த்தசாஸ்திரம்-சித்தர்களின் வாழ்க்கை-ஐன்ஸ்டீனின் மூன்றாவது விதி என்று அவனுக்குப் பாடம் போதித்தது கிடைத்த நேரமெல்லாம்.

அவன் யோசித்தான். இப்படி ஒரு எறும்புடன் வெளியே சென்று இதை வைத்தே ஒரு கண்காட்சி தொடங்கிவிடலாம். “பேசும் எறும்பு” என்று விளம்பரப் படுத்தினால் கூட்டம் அள்ளிக் கொண்டுபோகும். எறும்பிடமும் இந்த யோசனையைச் சொன்னான்.

அதற்கு எறும்பு சொன்னது-

“மனிதர்களிடம் தான் விலங்குகளை வேடிக்கை பார்க்கிற பழக்கம் இருக்கிறது. எல்லா விலங்குகளுக்கும் மிருகக் காட்சி சாலை- செத்தவற்றிற்கு அருங்காட்சியகம். சிங்கம்-புலி-குரங்கு-யானை-நாய்-கரடி-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் விருப்பப் படி ஆட்டுவித்து உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் நீங்கள் எந்த விலங்கை விட்டு வைத்திருக்கிறீர்கள்? எது எப்படியோ உன்னுடன் சமமாகப் பழகிவிட்டேன்.உன் யோசனையையும் செயல்படுத்திப் பார்ப்போம்”.

ஏதோ ஒரு மந்திரியின் பிறந்த நாளுக்கு விடுதலை செய்யப்பட்ட கைதிகளுடன் அவனும் விடுதலை ஆனான். தன் கைகளில் எறும்பைச் சுமந்தபடி வெளியுலகத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கத் தொடங்கினான்.

அந்த நாளை சூடான ஒரு தேநீருடன் துவங்கலாம் என்றெண்ணியபடியே ஒரு விடுதிக்குள் நுழைந்தான். தேநீரும் வந்தது. முதன் முதலாய் பேசும் எறும்பை அந்த தேநீர் கொடுத்த ஊழியருக்குக் காட்டுவோம் என்ற நினைப்பில் இங்க பாத்தியாப்பா? என்ற படியே மேஜையில் எறும்பைக்காட்டினான்.

”அடச் சே! இப்பத்தான் துடைச்சிட்டுப் போனேன். எப்படி வந்தது இந்தச் சனியன்?” என்று ஒரே அடியில் அதை நசுக்கி விட்டு ”சாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று அடுத்த மேஜைக்கு நகர்ந்தான்.

எறும்பு பேசலாம்.
யானை பறக்கலாம்.
பசுவும் நீந்தலாம்.
குதிரை ஆடலாம்.
சிங்கம் சிரிக்கலாம்.
மனிதன் மட்டும்
மனிதனாகவே.
மாறுவதும் இல்லை.
விரும்புவதும் இல்லை.         

34 கருத்துகள்:

Ramani சொன்னது…

என்றேனும் ஒரு நாள் இது போல்
ஒரு படைப்பையாவது கொடுத்து விட வேண்டும் என்ற ஆவல்
பெருகிக்கொண்டே போகிறது
கதையைப் படித்துவிட்டு கவிதையைப் படிக்கையில்
நிறையச் சொல்லிப்போகிறது
வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான கதை சார்.

பாவம் சார், அந்த பேசும் எறும்பு.

விடுதலை பெற்ற மனிதனை நம்பிச் சென்ற அதற்கு ஒரு நொடியில் விடுதலை கொடுத்து விட்டானே, இந்த உலகைவிட்டே.

மனிதனை நம்புவது இந்த(அப்)பிராணிகளுக்கு மஹா கஷ்டம் தான்.

நல்ல பதிவு தந்ததற்கு இந்த அப்பிராணியின் பாராட்டுக்கள்.

எல் கே சொன்னது…

யதார்த்தம்

raji சொன்னது…

மிகவும் சரியே

மோகன்ஜி சொன்னது…

ஆஹா! பேசும் எறும்பைஃப் படைத்து அதை நசுக்கியும் போட்ட உம்மீது வரும் கோபம் இருக்கிறதே எனக்கு..

ஒரு நல்ல சிந்தனையை கிளர்த்தி விட்டீர்கள் சுந்தர்ஜி..

எனக்கு எறும்பை ரொம்பப் பிடிக்கும்... வேடிக்கை பார்த்தபடி இருப்பேன். நீரும் நம்மைப் போலத்தனோ!

A.R.ராஜகோபாலன் சொன்னது…

எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
என் இதயத் தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா

அமர்க்களமான கருத்துகக் கடல் அண்ணா
மனிதனின் இரு வேறு மனநிலையை
அருமையாக சொல்லி உள்ளீர்கள்
நன்றி பகிர்ந்ததற்கு

ஹேமா சொன்னது…

அடக்கடவுளே....!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

அர்த்தமுள்ள கதை. அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் கவிதையைப் போல.

நிலாமகள் சொன்னது…

அந்த‌ ம‌னித‌ன் மேல்தான் அதிக‌ப் ப‌ரிதாப‌மென‌க்கு. இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ளுட‌ன் இனி வாழ்ந்தாக‌ணுமே... அய்யோ பாவ‌ம்!

சுந்தர்ஜி சொன்னது…

இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளவுதான் ரமணியண்ணா.

உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது நானும் இப்படி உணர்வதுண்டு.

சுந்தர்ஜி சொன்னது…

அப்புராணி(!) கோபு சார்.ரொம்ப நன்றி சார் பாராட்டுக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி எல்.கே.

Vel Kannan சொன்னது…

வட .... போச்சே ... !!!!!!!!!!!!!!!!!!!

சுந்தர்ஜி சொன்னது…

சரி சொன்ன ராஜிக்கு ஒரு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

சின்ன வயதில் என் தோழர்களே எறும்புகள் தான்.சுவரை ஒட்டிப் படுத்தபடி அது போகும் திசைக்கேற்ப நானே கதையை சிருஷ்ட்டிப்பேன்.பழக்க தோஷம் இன்னும் அப்படியே இருக்கு மோஹன்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

அற்புதமான பாடலை நினைவுக்குக் கொணர்ந்த ராஜுவுக்கு சிறப்பு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

ஹேமாவின் வாயிலிருந்து அடக்கடவுளேயா?

சுந்தர்ஜி சொன்னது…

கதையைக் கவிதையாய்ப் பார்த்த வித்யாவின் கவிதை மனதுக்கு நன்றி.

RVS சொன்னது…

நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனி! எறும்புக் கதை இரும்பாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் இருந்தது.. நன்றி. ;-)

சுந்தர்ஜி சொன்னது…

இத்தனை நாள் தலைமறைவாய் இருந்தால் வடை என்ன எல்லாமேதான் போயிடும் வேல்கண்ணன்.

விளையாட்டுக்குச் சொன்னேன். நல்லா இருக்கீங்களா வேல்கண்ணன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வி.எஸ்.

கவிதைகளில் அடங்காத சமாச்சாரங்களை இந்த மாதிரிக் குட்டிக் கதைகளில்தான் அடக்கமுடிகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அர்த்தமுள்ள கதை மற்றும் கவிதை. ஒரு நொடியில் அந்த பேசும் எறும்பின் கதை முடிந்தாலும் அந்த எறும்பு சொல்லிப்போன கதை மறக்க முடியாது ஜி!...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அருமை..
மனித வாழ்வியலை இதைவிட எப்படிச் சொல்லமுடியும்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

எறும்பு பேசுவது மனிதனுக்கு வியப்பு!!

ஏன் பேசக்கூடாது..

மரங்கள் கூட தங்களுக்குள் தகவல் தொடர்பு செய்துகொள்கின்றன.

மனிதனின் பார்வையில் தாம் மட்டும் தான் தலைசிறந்த உயிரினம் என்பதே பொதுவான மனப்போக்காக உள்ளது.

சுந்தர்ஜி சொன்னது…

தங்கள் சிலாகிப்புக்கு நன்றி வெங்கட்.தொடர்ந்த வாசிப்புக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன அழகாச் சொல்லிட்டீங்க குணா? நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன நிலாமகள்? ரொம்பவே வேலை போலிருக்கு. அல்லது மகனைப் பிரிந்த சோகமோ?

அடிக்கடி வாருங்கள்.கருத்துக்கு நன்றி

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

எறும்பு பேசலாம்.
யானை பறக்கலாம்.
பசுவும் நீந்தலாம்.
குதிரை ஆடலாம்.
சிங்கம் சிரிக்கலாம்.
மனிதன் மட்டும்
மனிதனாகவே.
மாறுவதும் இல்லை.
விரும்புவதும் இல்லை.

ஐயா ஐயா அருமை கவிதை
பொய்யா அல்ல புகல்வது உண்மை
கொய்யா போல மணமிகு தன்மை
கையால அள்ளி வழங்கினீர் நீரும்

புலவர் சா இராமாநுசம்

VELU.G சொன்னது…

உண்மை தான். கதை அருமை

சுந்தர்ஜி சொன்னது…

பாத்திரம் கொள்ளாத
பாத் திறம் உங்களது ராமாநுசம் ஐயா.

வாசிப்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

வேலுஜிக்கு நன்றியும் தொடர்வருகையை விரும்பியும் இது.

Matangi Mawley சொன்னது…

கதை -- கடேசீல ரொம்ப வருத்தமா இருந்துது... அந்த முடிவ நான் எதிர்பாக்கல... என்னால அந்த எறும்போட sudden முடிவை உள் வாங்கிக்க முடியல... கதைய ரொம்ப நன்னா கொண்டு போனதுகூட ஒரு காரணம், இதுக்கு...

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.

மனிதன் மனிதனாகவே இருப்பதுதான் வருத்தத்துக்கும் கதையின் திடீர் முடிவுக்கும் காரணம்.

G.M Balasubramaniam சொன்னது…

மனிதன் மாற வேண்டிய இடத்தில் மாறாமலும் மாறக்கூடாத இடத்தில் மாறியும் . ஹீ இஸ் எ பண்டில் ஆஃப்
காண்ட்ராடிக்‌ஷன்ஸ். கண்ணதாசன் மனிதன் மாறிவிட்டான் என்று புலம்புவார். சுந்தர்ஜி மனிதன் மாறவில்லை என்று ஏங்குகிறார். கற்பனையும் கவிதையும் செறிவுடன் இருக்கிறது சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...