எதுவுமில்லை.
யாரின் படமோ-
ரசம் போன
ஒரு கண்ணாடியோ-
நாட்காட்டியோ-
தொங்கியிருக்கலாம்
அறையப்பட்ட ஆணிகளில்.
வௌவால்களோ பல்லிகளோ
எட்டுக்கால் பூச்சிகளோ
எதுவும் இங்கில்லை.
யாரோ வைத்த
பறவைகளற்ற
புங்கமரமும்
என்றோ கட்டப்பட்ட
இற்ற கொடிக்கயிறும்
இருக்கின்றன இன்னும்.
சமையலறைப்
புகைக்கருப்பும்
மோர்க்காரியின்
புள்ளிக்கணக்கும்
எஞ்சிய நிழலாய்.
வீடுகள்
சொந்தமாக இருக்கட்டும்.
வாடகைக்கு இருக்கட்டும்.
ஒருநாளும்
பறவைகளாலோ
மனிதர்களாலோ
நிராகரிக்கப்படாது
இருக்கட்டும் கடவுளே.
நன்றி- கல்கி- 08-01-2012
40 கருத்துகள்:
ஒருநாளும்
பறவைகளாலோ
மனிதர்களாலோ
நிராகரிக்கப்படாது
இருக்கட்டும் கடவுளே.
எங்கள் கிராமத்து வீட்டை-அதன் இடிந்த கோலத்தில் பார்க்க நேர்ந்த அந்த வினாடி.. அடிவயிறு கலங்கி.. பழைய நினைவுகள் பீரிட்டுக் கிளம்பிய அந்த நாள்.. இந்தக் கவிதை படித்ததும்.
கைவிடப்படுதலின் வலி எல்லாவற்றிற்கும் பொதுவானதுதான்
யாருமற்ற வீடாக இருக்கக்கூடாதுதான். இதை மனித மனத்திற்கென்றும் பொருத்திக் கொள்கிறேன். ஒரு மனித மனத்தைக் குறியீடாகக் கொண்டும் இக்கவிதை பரிணாமெடுக்கிறது. வாழ்த்துக்கள்.
நல்ல வேளை. என் மனைவி பார்க்கவில்லை இந்த கவிதையை. என்னால் தேற்ற முடியாது அவளை. அவள் வாழ்ந்த வீடு எங்கள் திருமணத்திற்காக விற்கப்பட்டு , இன்று தரை மட்டமாய். மத்திய தர வர்க்கத்தின் மாறாத வலியை
சொல்கிறது கவிதை
நன்பன் sn (s.narayanan) வீட்டுக்கு போற போதெல்லாம் அம்மா அருமையான காஃபி தருவார்கள். வாடா குட்டையா என சித்ராக்கா சிரிப்பார்கள். ரௌடி என்பார் குமார் அண்ணா. எப்படா ப்ராக்ரஸ் ரிப்போர்ட் என்பார் அப்பா.
இப்ப எல்லோரும் usa-வில்.
sn வீடும், நானும் மட்டும் இன்னும் சிவகங்கையில். யாரும் இல்லையே என்பதற்காக வீட்டை பார்க்காமல் திரும்ப முடியுமா சுந்தர்ஜி?
வீடு பூட்டியே இருக்கிறது. பழசு எதுவுமே கிடைக்கல. வீடும் ஒன்னும் சொல்லல. நானும் ஒன்னும் சொல்லல.
யாருமற்ற வீடாகவே இருக்கட்டும் அழியாமல் நினைவுகளைச் சுமந்தபடி.அகதிப் பதிவு தொலைய நிச்சயம் வீடு நிறையும் மீண்டும் !
வீடு காலி பண்ண வேண்டிய சூழலில் இந்த கவிதை ஏதோ ஒரு வலி நரம்பை தொட்டுச் செல்கிறது.
'வீடு பேரடைதல்' எனும் வார்த்தையின் தாக்கம், இந்த கவிதைக்குப் பின் வேறாய் தோன்றுகிறது. 'யாருமற்ற', "யாருமேயற்ற" தன் தாக்கம் என நானே அர்த்தம் கொள்கிறேன். அருமை.
இதைச் சொல்லும் (எழுதும்) போது என்ன மனநிலையில் இருப்பீர்கள் சுந்தர்ஜி?
வாசன்.. வீடுபேறு அடைதல் என்பதுதான் சரி.
ஏதும் இல்லையென்றாலும், யாரும் இலலையென்றாலும், நினைவுகள் நிச்சயம் இருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு. ஆனால் அவர்களே இல்லையென்றால்..?
மறக்கமனம் கூடுதில்லையே ரிஷபன் மண்ணோடும் மனதோடும் நம் பந்தம்?
ஆமாம் பழனிசாமி.
நான் சொல்ல நினைத்ததும் சொல்ல விரும்பாது மூடி மறைத்ததும் அதைத்தான்.
அடுத்த அடி வெச்சுட்டீங்க ஹரணி.அடுத்த கவிதையை இன்னும் கொஞ்சம் நகர்த்த வழி பண்ணிட்டீங்க.நன்றி ஹரணி.
வலியை உணர்ந்தமைக்கும் வலியை யூகித்தமைக்கும் நன்றி சிவா.
//வீடு பூட்டியே இருக்கிறது. பழசு எதுவுமே கிடைக்கல. வீடும் ஒன்னும் சொல்லல. நானும் ஒன்னும் சொல்லல.//
இத விட வேறென்ன சொல்லிடமுடியும் பா.ரா?
யாருமற்ற வீடாக அதை நினைக்கமுடியவில்லை.
நினைவுகளைத் தோண்டும் பதிவு.
ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் ஊர் மாறும்போதும் அழாமல் என்னால் பிரிய முடிந்ததில்லை.
இந்த அளவுகோல்தான் நம்மை வழிநடத்திச் செல்கிறதாக உணர்கிறேன் சைக்கிள்.
ஆண்டு அனுபவித்த குடும்பம் எதுவெனத் தெரியாத பயண நடுவில் பார்த்து வலியுணர்தலும்-
பாலய கால நாட்கள் தேடியலைந்து காரணம் தெரிந்தே கலங்கி அழ வைத்த வீடுகளின் பாழும்-
இதை எப்படிச் சொல்வது வாசன்?
இதைச் சொல்லும் போது உள்ளுக்குள் உடைந்தும் அழுதும் கொண்டிருப்பேன் வாசன்.
உங்கள் வார்த்தைகளின் வலியையும் உணர்கிறேன் காமராஜ்.
நாமிருக்கிறோமே பாலு சார்?
ஒருநாளும்
பறவைகளாலோ
மனிதர்களாலோ
நிராகரிக்கப்படாது
இருக்கட்டும் கடவுளே.
நிராகரிக்கப் படுவதின் வலி சொல்லொண்ணாதது... வாழ்ந்து விலகி வந்த வீடோ, பழகி பிரிந்து போன உறவோ, வலிக்கிறது தான் வாசிக்கையிலேயே...
கவிதை சிந்திய வலியைச் சரியாக ஏந்தியிருக்கிறது உங்கள் கிண்ணம்.
அற்புதமான ரசனைக்கு நன்றி கிருஷ்ணபிரியா.
1969ம் ஆண்டு மதுரையில் வீடு கட்டினேன்.என் வகையிலும்,துணைவியார் வகையிலும் எந்த உதவியும் எதிர்பார்க்க முடிரயாத நிலை. தீபாவளி அட்வான்ஸ்,சைக்கிள் அட்வான்ஸ், என்று 150 ரூ வாங்கி கொடுப்பேன் தெருவில் நொங்கு வந்தால் கூட நானும் மனைவியும் தின்னமாட்டோம்.மகனுக்கு மட்டும் ஒன்றை வாங்கிக்கொடுப்போம்.சிமெண்ட் 5ரூ.செங்கல் லோடு(2000கல்) 60ரூ.மணல் லோடு 20ரூ.விழி பிதுங்கிவிடும்.மொத்தம் 13.900 ரூ ஆயிற்று..2004 ம் ஆண்டு நகப்பூர் வரும் முன்.வீட்டை விற்று விட்டேன்.எல்லொரிடமும் விடை பெற்றுக்கொண்டு வந்தேன் .தோழன் ஜோசஃப் அவர்களிடம் விடைபெற்றேன்.ஏனோதெரியவில்லை கட்டியணத்துக்கொண்டேன்விம்மல் சத்தம் கெட்டது."அழாதப்பா!" என்று ஜோசஃப் அணைத்தார்..இன்றும் மதுரை சென்றால் தூரத்தில் நின்று கொண்டு அந்த வீட்டை, ""என்வாழ்க்கை" சாதனையை பார்ப்பென். ஒரு குழந்தயை அனாதையாக விட்டுச் செல்வதுபோல் பார்ப்பேன். இங்கு அனாதை யார்? நானா? வீடா?---காஸ்யபன்
பூங்கொத்து சார்!!!
மற்றுமொரு கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.
விம்மலின் ஒலி கவிதையைப் பிளக்கிறது காஸ்யபன் சார்.
இங்கு அனாதை நீங்களும் இல்லை.வீடும் இல்லை.இரண்டையும் இணைக்கும் நினைவுகளைச் சுமந்த கடந்த காலம்தான்.
நன்றி அருணா.
அடிக்கடி வாங்க.
திருமணமானதும் எல்லோருக்கும் உரிய வலியோடுதான் நானும் என் மனைவியும் தனிக்குடித்தனமாக நாங்கள் இருந்த தெருவிலேயே சற்று தள்ளியிருந்த வீட்டிற்கு குடிவந்தோம். தெருக்குத்தல் வீடு வேல் பதிக்கவேண்டுமென்றார்கள். அப்படியே செய்துவிட்டு வந்தோம். அந்த வீடுதான் நாங்கள் முதலும் கடைசியாக வாடகைக்கு இருந்த வீடு. அதன்பின் புதுவீடு சொந்த வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டைப் பார்க்கிறபோதெல்லாம் ஏக்கம் கொப்பளிக்கும். ஏனென்றால் அந்த வாடகை வீட்டில் வறுமை இருந்தது. வாழ்க்கையும் இருந்தது. போராடிப் போராடித்தான் ஒவ்வொன்றையும் சேகரித்தோம். ஆனால் அளவிடற்கரிய நிம்மதி இருந்தது. குறிப்பாக அது நீண்ட திண்ணையும் சிறிய திண்ணையும் இருந்த வீடு. மாலை ஆகிவிட்டது என்றால் வாசலில் நாற்காலி போட்டு குடும்பமே உட்கார்ந்துகொண்டு எல்லாமும் பேசுவோம். நாங்கள் வெளியேறி வந்தபின் பத்தாண்டுகள் அந்த வீட்டிற்கு யாரும் வரவில்லை. என் மகள் மட்டும் அடிக்கடி அப்பா அந்த வீட்டை வாங்கிடுங்கப்பா என்று மந்திரம் போல் சொல்லிகொண்டே இருந்தாள். அந்த வீட்டைப் பலரும் வாங்கப் போட்டி நடந்தது. கடைசியில் ஒருநாள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வீட்டை விற்கப்போகிறீர்களா என்று கேட்டேன். அவர் சொன்ன பதில். நீங்கள் கேட்கவேண்டுமென்றுதான் எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தேன். எடுத்துக்கொள்ளுங்கள் என்று குறைந்த விலைக்கு (மற்றவர்கள் கேட்ட விலையை விடமிகக் குறைவாக) கொடுத்தார். இப்போது அது வீடல்ல எங்கள் குடும்பத்தில் ஓர உறவு.
ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வீட்டை விலைக்கு வாங்கியதும் எனக்குள் தோன்றியது இதுதான். யாருமற்ற வீடாக அது பத்தாண்டுகள் இருக்கவில்லை. என் மகளுக்காக அது காத்திருந்தது என்பதுதான் சத்தியம். நன்றி சுந்தர்ஜி.
சொந்த வீடு இல்லாட்டியும்
கவிதையாலே கட்டி வச்சிருக்கேன் அண்ணா.
நம்ம வலை-வீட்டுப்பக்கம் கொஞ்சம் வாங்கண்ணா
கண்கள் கலங்கியது ஹரணி.
வரவர உங்களின் பின்னூட்டம் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்னு போட்டுர வேண்டியதுதான்னு நினைக்கிறேன்.
சாரி சிவகுமார்.
ஒவ்வொரு வீடா முடிச்சுட்டு வர்றதுக்குள்ள சில சமயம் லேட்டாயிடுது.
சில சமயம் தொடர்பு இல்லாமல்.
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது கதைதான்.
தப்பா எடுத்துக்காதீங்க.இனி தவறாமல் வந்துடறேன் உங்க வீட்டுக்கு.
வீடு யாருமற்றதாக எப்போதும் இருக்க இயலாது என்று நான் நினைப்பேன் ..
வாழ்ந்த கணங்கள் அதில் மறைந்து நிற்கின்றன ..
எந்தன் நெஞ்சில் நீ பாடும் என்ற பாட்டில் என்று நினைக்கிறேன் கமலஹாசன் தன் பழைய வீட்டிற்கு போய் தூசி தட்டி நெகிழ்ந்து நிற்பார் ..
பார்த்து வந்த உணர்வு ...இதில் படித்தாலே வருகிறது
சபாஷ்
இன்னும் மூன்று மாதங்களில் பிரியப்போகும் என் வீட்டிற்காக இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்
வீடு காலிசெய்யும் தேதி உறுதியான பின் அந்த வீட்டில் வசிக்கும் தண்டனை போல எதுவுமில்லை என்று தோன்றும் எனக்கு.
உங்களைப் பிரியப் போகும் அந்த வீட்டின் புத்தக அறை உங்களை மறக்காது பத்மா.
கல்கி-யாருமற்ற வீடு-வாழ்வின் பேரவலம்.
பாட்டி வீடு நினைவிற்கு வருகிறது. விற்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்... வீடு- வீடு மட்டும் அல்லது- வாழ்வின் நினைவுகள் சுமக்கும் பேழையாக விளங்குகிறது. அதை பராமரிக்காது விடுவது- நினைவுகளை விட்டுச் செல்வது போன்று தோன்றுகிறது... நினைவுகளில்லாத மனிதனுக்கு 'identity' இருக்க முடியாது... ரொம்பவே அழகான கவிதை... அந்த "தயிர் காரி கணக்கு"... "ரசம் போன கண்ணாடி"-- அருமை!
கல்கியில் பிரசுரமானதர்க்கு வாழ்த்துக்கள்!!
Wish you and your family a very happy New Year!!!
ஜி.கல்கி கவிதையும் சூப்பர் ஜி.
படிக்க படிக்க முன்னரே படித்த மனதை பெரிதும் பாதித்த கவிதையாச்சேன்னு நினைத்தேன். பின்னூட்டங்களைப் பார்த்தால் ... நானும் வந்து போயிருக்கிறேன் இந்த வீட்டுக்கு.
கல்கியில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.
கல்கி 20 வருடங்களுக்கு முன்னர் என்னை அழைத்துப் பரிசளித்து பாராட்டிய தருணங்கள் மனதில் நிழலாடுகிறது.
ஏனோ தங்கள் கவிதைகளை படிக்கும் போதெல்லாம் நானும் பெருமிதப்படுகிறேன்.
நிர்கதியான நிராகரிப்பின் வலி இம்சையானது. கவிதை கிளறிவிட்டது என்னையும்.
உணர்ந்த வலிகளை உணர்த்திய வரிகள். வாழ்த்துக்கள் சார்.
உங்களின் இந்தக் கவிதை
கைவிடப்பட்டு கிடக்கும்
வீடுகளுக்கு வீடு
அளித்திருக்கும்.
பாடுபொருளை பிரத்தியேகமற்று
அடைகிறீர்கள் பின் அதுவே பாடப்படும்
பொருளாகிவிடுகிறது சார்.
-இயற்கைசிவம்
நம்மை விட்டு வெளியேற்ற முடியாத வெளியேறிய வீடு!!
கருத்துரையிடுக