27.1.12

யாத்ரா-II- துவக்கமும் முடிவும்


மற்றுமொரு வருடம்.
மற்றுமொரு பயணம்.

இம்முறை வானவில்மனிதன் மோகன்ஜியின் நட்பால் தூண்டப்பட்டு கார்த்திகை 1ம் தேதி மாலையிட்டு ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை சென்றிருந்தேன்.

இதுவரை பார்த்துப் பழகியிருக்காத எழுத்தாலும் குரலாலும் மட்டுமே பரிச்சயமான மோகன்ஜியை பயணத்துக்கு முன்பு ஒரு நாள் பதிவுலக நண்பர்கள் சூழ சென்னை நடேசன் பூங்காவில் சந்தித்ததோடு சரி.

கொஞ்சம் சாம்பார்த்தூள் பெருங்காயம் உப்பு ஒன்று சேர்த்து வயிற்றில் கரைத்த புளியுடன் ஜனவரி 10ம் தேதி சென்னை சென்ட்றல் ரயில் நிலையத்தை மிதித்தேன். கொல்கத்தாவிலிருந்து விதவிதமான வண்ண உடைகளுடனும் தாடிகளுடனும் தென்பட்ட தோராயமாய் முன்னறிமுகம் நிகழாத எழுபது ஐயப்ப பக்தர்களுக்கு நடுவில் மோகன்ஜியைத் தேடினேன்.

ஆளைக் காணோம். இதற்கு நடுவில் ஒவ்வொரு நண்பரும் தன் பெயரைச் சொல்லி என் பெயரைக் கேட்டு பரிச்சயப் படுத்திக்கொண்டிருந்தாலும் கண்கள் தேடுதலில் இருந்தன. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிதான 81 வயதைத் தொட்ட பால் தா எனும் முதியவர் சிரிக்கும் சுருக்கம் விழுந்த கண்களால் என்னை நெருங்கி தன் வசம் இருந்த கல்கண்டு ப்ரசாதத்தையும் மணிக்கட்டில் கட்டிக்கொள்ள கயிறு ஒன்றையும் கொடுத்து காலைத் தொட்டு வணங்கினார். பதறி விலகினேன் நான். துவக்கம் முதலே எனக்கு சிறிது அலர்ஜியாக இருந்த விஷயம் இது ஒன்றுதான். வயது பேதமின்றி கால்களில் விழுந்து நமஸ்கரிக்கும் முறை எனக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.

என் தோளில் தொங்கிய பையில் பத்து நாள் பயணத்துக்குத் தேவையான ரெண்டு வேட்டி-ரெண்டு துண்டு- ரெண்டு உள்ளாடைகள்-ஒரு புத்தகம்- இந்தப் பயணம் முழுவதும் மொபைல் ஃபோன் தொலைக்காட்சி செய்தித்தாட்கள் எதுவும் இருக்கப்போவதில்லை. இரைச்சல் தொலைந்த வனப் பகுதியில் மிகுதியான நாட்கள் எனும் எண்ணமே சுவாரஸ்யத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது.

ரயில் பெட்டியில் ஐயப்பனின் படத்தை அலங்கரித்து வண்ண வண்ண வாசனை மலர்கள் சூட்டி ஊதுவத்தி தசாங்க சாம்பிராணி மணம் கமழ பார்ர்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு நடமாடும் கோயில் போல இருந்தது. அடுத்தடுத்த இருக்கைகளுக்குப் பக்கத்தில் அத்தனை பேரின் உருப்படிகளும் சாப்பிடத் தேவையான் பொதியப்பட்ட உணவு வகைகளும் இலைக்கட்டுக்களுடன் ஒரு சிறிய பேண்ட்ரி வேனை நினைவுபடுத்தியது மணமும் அமைப்பும்.   

ரயில் கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எட்டிப்பார்க்க பச்சை நிற வேட்டியுடன் தொலைவில் வந்துகொண்டிருந்த மோகன்ஜியை அருகில் கண்டதும் அப்பாடா என்றிருந்தது. மனிதர் இரண்டு பைகளுடனும் மற்றொரு பையில் பூஜைக்குரிய இரண்டடி உயரமுள்ள ஐயப்ப விக்ரஹத்துடனும் வந்திருந்தார். பரஸ்பர குசலத்துக்குப் பின் ரயில் கூவியது. காலை 11.30க்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் சென்னையை விட்டுக் கிளம்பியது. அந்தக் குழுவினரோடு கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பரிச்சயப் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். கொல்கத்தாவிலிருந்து சுமார் 50 பேரும் ஹைதரபாத்திலிருந்து சுமார் 10 பேரும் புனாவிலிருந்து சுமார் 10 பேரும் சென்னையிலிருந்து 5 பேருமாக வந்துள்ளதாக புள்ளிவிவரங்களை அறிந்தேன்.

திட்டப்படி இரவு பாலக்காடு அடைந்து இரவு தங்கலுக்குப் பின் மறுநாள் செவ்வாய்க்கிழமை அபிஷேகம் பூஜைகள் முடிந்து இருமுடி கட்டி நள்ளிரவில் பயணம் துவங்குவதாக இருந்தது.

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. மனதிலும் பல்வேறு எண்ணங்களும் அசைபோடலும்.

என் பத்து வயதில் அப்போதைய நெல்லை மாவட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ சங்கர கனபாடிகளிடம் யஜுர் வேதங்களின் வேரான தைத்ரியோபனிஷத்தைக் கற்று கோயில்களில் அதிருத்ர ஹோமங்களிலெல்லாம் பங்கேற்று வருடா வருடம் ராதாகல்யாணம் தீபப் ப்ரதக்ஷிணம் டோலோத்ஸவம் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டு ஆடிப் பாடித் திரிந்த நாட்களும் 1977ல் முதல்முறை 1979ல் இரண்டாவது முறை சபரிமலை போனதும்-மார்கழி மாத ராப்பத்து பகல்பத்து அதிகாலை தெருத்தெருவாக பஜனை என பெருமாளே கதியென்று கிடந்த என் பள்ளி நாட்களும் -

அதன் பின் ஒவ்வொன்றிற்கும் காரணமும் பொருளும் தேடித் திரிந்து அத்தனை நாள் கற்றவற்றையும் பரிசோதனைக்குள்ளாக்கி கோயில்களுக்குப் போவதைத் தவிர்த்து கடவுள்களின் இருப்பை விமர்சிக்கும் இயக்கங்களில் கலந்துகொண்டு யாரை வென்றோம் என்று தெரியாது மமதையோடு திரிந்த நாட்கள்-

பின் எழுத்து இலக்கியம் ஓவியம் இசை என்று மானசீகமாக வேறொரு வடிவில் தேடியலைந்து கடவுளைக் கண்டடைந்த நாட்கள்-

எல்லாம் சுழன்று வட்டவடிவில் மறுபடியும் நாம சங்கீர்த்தனத்துடன் கடவுளை அழைக்கும் முதல் படியை தொட்டுக்கொண்டிருக்கிறேன்.

மாலை விழத் தொடங்கியது. இரவு எழத் தொடங்கியது. எல்லோரும் குளித்து கடவுளை வழிபட யத்தனித்தார்கள்.

இவ்வுலக இன்பமும் 
மேலுலக இன்பமும் அன்பும் 
அதனால் ஏற்படும் ஆசையும் 
அவ்வாசையின் அனுபவமும் 
மனதிற்கினிய உற்றாரும், 
சீரான இவ்வுலக வாழ்வும், 
மங்களமும் உயர் நலமும் 
நல்ல இருப்பிடமும், புகழும், 
பொன்னும் செல்வமும், 
தவ வலிமையும், 
அதனால் கிடைக்கப்ப்பெற்ற பலனைக் 
காப்பாற்றும் திறனும், 
வழிகாட்டும் ஆசிரியரும், 
தந்தை போன்று தாங்குபவனும் - 
மேன்மை பொருந்திய பெரியவர்களும், 
நல்லொழுக்கத்தை போதிப்பவனும் - 
என்னைச் சரியான பாதையில் 
வழிநடத்திச்செல்பவனும், 
மனஉறுதியும், 
எல்லோருடைய உதவியும், 
வெகுமானமும், வேள்வியும் 
வேள்வியின் பாதையில் செல்ல 
வழிகாட்டும் நூலும், அதன் அறிவும், 
நான் கற்றறிந்தவற்றைக் 
கற்றுக்கொடுக்கும் திறனும், 
மக்களை ஏவும் திறமையும், 
பணியாட்களையும் 
மற்றவர்களையும் நடத்தும் திறமையும் 
மேழிச் செல்வமும், 
பயிர்த்தொழிலில் ஏற்பவும் 
இடையூறுகளின் ஒழிவும், 
வேள்வி முதலிய நற்கருமமும், 
அதன் பலனும், 
நீடித்த குடல் முதலிய 
நோயின்மையும் 
குறுகிய காய்ச்சல் முதலிய 
நோயின்மையும், 
நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும், 
என்வாழ்வின் நாட்களைக் கூட்டும் 
மூலிகை மருந்துவகைகளும், 
நீண்ட ஆயுளுடன் கூடிய 
எதிர்பாராத மரணமின்மையும், 
நண்பர்களில்லாதமையும், 
அச்சமின்மையும், நன்னடத்தையும், 
நல்ல தூக்கமும், 
கடவுளின் திருவுள்ளத்துடன் கூடிய 
விடியற்காலையும், 
வேள்வி, மறைஒதுதல், வேள்வி பயிலுதல் முதலிய 
நல்ல செயல்களினால் ஒளிரும் பகற்பொழுதும், 
ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் 
எனக்குக் கிடைககட்டும்.

என்ற ப்ரார்த்தனைகளை உள்ளடக்கிய 

சஞ்ச மே மயச்ச மே ப்ரியஞ்ச மேனுகாமச்ச மே காமச்ச  மே ஸௌமனஸச்ச மே பத்ரஞ்ச மே ஸ்ரேயச்ச மே வஸ்யச்ச மே யசச்ச மே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தா ச மே தர்த்தா ச மே க்ஷேமச்ச ம த்ருதிச்ச மே விச்வஞ்ச மே மஹச்ச மே ஸம்விச்சமே க்ஞாத்ரஞச மே ஸூச்ச ம ப்ரசஸூச்ச மே ஸீரஞ்ச மே லயச்சம ருதஞ்ச மேம்ருதஞ்ச மேயக்ஷ்மஞ்ச மேநாமயச்ச மே ஜீவாதுச்ச மே தீர்க்காயுத்வஞ்ச மேநமித்ரஞ்ச மேபயஞ்சமே ஸுகஞ்ச மே சயனாஞ்ச மே ஸூஷா ச மே ஸுதினஞ்சமே ||” 


என்று செல்லும் சமகம் பாராயணம் செய்யப்பட்ட படியிருந்தது. எத்தனை தெளிவாயும் நுணுக்கமாயும் இருந்திருக்கின்றன நம் வேண்டுதல்கள்? 

யஜூர் வேதத்தின் மிக முக்கியமான பாகங்களாகக் கருதப்படுபவை ஸ்ரீருத்ரமும் சமகமும். இவற்றின் மொழிபெயர்ப்போடு இவை பற்றியும் நேரம் அமைகையில் ஓர் இடுகை இட வேண்டும். இரண்டின் மேலும் சாம்பல் பூக்கும் அளவிற்கு நான் விலகிப் போய்விட்டிருந்தேன். சமகத்தின் பயிற்சியை இழந்த என் நாவிற்கு மறுபடியும் அந்தத் தடங்களில் பயணிக்க ஆசை பிறந்து சமக தண்டவாளங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. 

அதற்குப் பின் இசை தொடங்கியது. டோலக்கும் ஜால்ராவும் தாளத்துக்குத் துணைபுரிய நான் கேட்டிராத தற்போது பிரபலமாகியிருக்கும் பல்வேறு பஜனைப் பாடல்களும் வெவ்வேறு குரல்களில் பாடப்பட்டன. கூடவே பயணம் செய்து கொண்டிருந்த பல பயணிகளும் இப்போது ஒன்றாய்க் கலந்து இசையில் நனைந்தபடி இருந்தார்கள். கிட்டத்தட்ட ஆடிக்கொண்டே பயணச்சீட்டைப் பரிசோதித்துக்கொண்டிருந்த டிடிஈ ஒரு கட்டத்தில் பார்க்க மற்றொரு ஐயப்ப பக்தரைப் போலக் காட்சியளித்தார். கற்பூர ஆரத்தியுடன் அன்றைய கிரமங்கள் முடிவுக்கு வந்தன.

என்னுடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் பேசியபடி வந்தார்கள்.அன்னா ஹஸாரே தொன்மையான இந்தியாவின் பெருமை இசை எழுத்து அவரவர் அனுபவங்கள் என்ற வட்டத்தில் சுற்றி வந்தது. அந்தப் பெட்டி முழுவதும் வங்காள மொழி சிந்தியபடி இருந்தது. வ்யது வித்யாசம் பாராமல் எல்லாரும் எல்லாரோடும் பழகியதும் உதவிகள் செய்துகொண்டதும் அபூர்வமான காட்சியனுபவங்கள். 

பசிக்கத் துவங்கிய போது சப்பாத்தியும் தக்காளி தொக்கும் தயிர்சாதமும் வயிற்றை நிரப்பியது. விஜயவாடாவில் வாங்கிய மோர் கோவையில் தாகம் தணித்தது. மோகன்ஜி ஒரு இடைவெளிக்குப் பின் அனைவரையும் சந்திப்பதால் எல்லோரிடமும் விகிதாச்சார அடிப்படையில் கடலை போட்டபடியிருந்தார்.

கோயம்புத்தூரில் தன் தம்பி ஒருவேளை தன்னைப் பார்க்க வரக் கூடும் என்று மோகன்ஜி சொன்னார். கோயம்புத்தூர் வ்ந்தது.அவர் தம்பி வரவில்லை. அதற்குப் பின் பாலக்காடு வந்தது.

இனி எழுதப் போகும் இடுகைகள் வரிசைக்கிரமமாக நாட்காட்டியின் ஒழுங்கில் எழுதப் படப் போவதில்லை. என் கையும் மனமும் போகும் பாதையில் எழுத்து போகும். பொறுத்துக் கொள்ளுங்கள். 

9 கருத்துகள்:

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! 50ம் ஆண்டுகளாக இருக்கலாம்.திருநெல்வேலி டவுண் தெப்பகுளத்தெருவில்எஸ்.ஆர்.துரைசாமி அவர்களிடம் சமகம்,வியாகரணம், பகவத் கீதை பயின்றேன் . பின்னர் பாதை மாறியது. இருந்தாலும் என்ன அற்புதமான அனுபவம்.உங்கள் பதிவை ஆவலொடு படிக்கவிருக்கிறென். ---காஸ்யபன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சமகத்தின் தமிழ் விளக்கம் படித்ததும் எனக்கும் விட்டுப்போன விஷயங்கள் நினைவுக்கு வந்தது....

சுகமாகத் துவங்கியிருக்கிறது பயணம்... உங்கள் பாணியில் நீங்கள் எழுதுங்கள். தொடர நாங்களும் காத்திருக்கிறோம்...

ரிஷபன் சொன்னது…

பயணம் அருமையாய் உங்கள் வலிமையான எழுத்தின் சக்தியோடு ஆரம்பித்துவிட்டது..
தொடர்கிறோம் நாங்களும்,

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என்னவென்று சொல்வதம்மா//

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.

நிலாமகள் சொன்னது…

ச‌ம‌க‌த்தை ச‌ம‌ஸ்கிருத‌ உச்ச‌ரிப்பில் ப‌ல‌நூறு த‌ட‌வை காதுக‌ளால் உள்வாங்கியிருக்கிறேன். வேத‌ விற்ப‌ன்ன‌ர்க‌ளின் ஸ்ப‌ஷ்ட‌மான‌ உச்ச‌ரிப்பில் ம‌ன‌ம் ல‌யித்திருக்கிறேன். த‌ங்க‌ள் த‌மிழாக்க‌த்தால் அறிவின் க‌ண்க‌ள் ஒளிய‌டைந்த‌ன‌.

வ‌ன‌த்தில் மேய்ந்து இன‌த்தைய‌டைந்திருக்கிறீர்க‌ள்.

உங்க‌ள் பார்வையில் ப‌ட்ட‌தை ம‌ன‌தில் தைத்த‌தை ப‌கிர்ந்து கொள்ள‌ப் ப‌சியோடிருக்கிறோம்.

G.M Balasubramaniam சொன்னது…

WAY BACK IN 1970, I BOUGHT A TAPE RECORDER, AND I REQUESTED A FRIEND OF MINE TO SAY SOMETHING FOR ME TO RECORD. HE RECITED " SAMAKAM" AND THAT WAS THE FIRST TIME I HEARD A IT. SWAYED BY THE TEMPO OF IT ,LATER I BOUGHT A CASSETTE AND STILL LISTEN TO IT WITHOUT KNOWING THE MEANING.THANKS A LOT SUNDHARJI

அப்பாதுரை சொன்னது…

சுவாரசியமாக இருக்கிறது. உங்களைச் சந்திப்பதற்கு முதல் நாளன்று மோகனுடன் பேசினேனென்று நினைக்கிறேன். உங்களைச் சந்திக்கப் போவதாகச் சொன்னார். சபரிமலைப் பயணமா.. சபாஷ்! அத்தனை எழுதியிருக்கிறீர்கள்.. படித்தாலும் மனம் சப்பாத்தி தக்காளித் தொக்கில் நின்று தொலைக்கிறதே..!
சமகம் என்பது வேண்டுதல் என்பதை விட ஆசீர்வாதம் போன்றது என்று சிறுவயது சம்ஸ்க்ருத வகுப்புக்களில் சொல்வார்கள். விருப்பம் போலத் தொடருங்கள். சுவாரசியமாக இருக்கிறது.

Kalai சொன்னது…

Thanks a lot Sunderji for sharing. It has been a while since I read such a flow of uniterupted natural flow words. I have just started chanting some Mantras now and have a few doubts on how to pronounce symbols such as : and ;

Do you know of any web resource that will help me?

Thanks again,
KC

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...