23.3.12

பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்- ஓர் பார்வை.போன வாரம் தஞ்சாவூரில் எனக்குக் கிடைத்த எதேச்சையான அறிமுகம் பன்.இறை. என் நண்பன் செல்லத்துரை தஞ்சாவூருக்கு சென்றிருந்தபோது ”அவசியம் படி மக்கா. கவிதை நல்லா இருக்கு” என்று சொல்லி "பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்" என்ற தலைப்பிலான இந்த நூலைக் கொடுத்தான்.

முந்தைய நாளின் திட்டமிடப்படாத பேருந்துப் பயணத்தால் உடல் வலி மிகுந்து கண்கள் சோர்வுற்று சிறிது நேரம் தூங்கலாம் என நான் நினைத்தபோதுதான் செல்லத்துரை புத்தகத்தைக் கையில் கொடுத்தான். வேறெந்த வடிவத்தையும் விட எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் கவிதைகளாலான நூல் என்பது கிளர்வூட்டக் கூடியதானது எனக்கு.

சுவற்றில் சாய்ந்தபடியே மெலிதாய் இருந்த அந்நூலின் பக்கங்களில் நுழைந்தேன். எனக்கு மற்றொரு பழக்கம். எடுத்தவுடன் கடைசிக் கவிதையைத்தான் முதலில் படிக்கும் பழக்கம். வழக்கம் கைவிடவில்லை. இம்முறையும் முதன் முறையாக எனும் தலைப்பில் இருந்த கடைசிக் கவிதையை முதலில் வாசித்தேன்.

எனக்கு சட்டென்று க.நா.சு.வை வாசிப்பது போலத் தோன்றியது. அடுத்த நொடி என்னை நானே வாசிப்பது போலவும் உணர்ந்தேன். ஒரு அனுபவத்தை நான் பார்க்க விரும்பும் அதே கோணம் இவருக்கும் சித்தித்திருப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. இப்படி யோசித்தபடியே ஒவ்வொன்றாக இடுங்கிய கண்களால் வாசித்தபடியே பக்கங்களைக் கடந்தேன். பாதிப் புத்தகத்தை வாசித்துவிட்டேன். அசதி மிகுதியாகவே பாதியோடு நிறுத்திவிட்டு புத்தகத்தைக் கீழே வைத்தபோது பாதியில் கலவியில் இருந்து விலகிச் செல்வது போலவே இருந்தது.

தூங்கி எழுந்தபின் குளித்துமுடித்து மறுபடியும் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். மொத்தம் 57 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒரு சுகானுபவம்.

இந்தக் கவிதைகள் அச்சு அசல் இந்தியாவின் வேர்களிலிருந்து வந்தவை. தொன்மம் நிறைந்த தடத்தில் பயணிப்பவை. அதே சமயம் மிக நவீனமான மொழியாலும் ஓங்கி ஒலிக்காத குரலாலும் பிரமிப்பூட்டும் உவமைகளாலும் மிகவும் புதியவை.

வீட்டை இரவு நேரத்தில் காலி செய்து கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் தாயின் வலியை ஒரு கவிதை அற்புதமாகப் பதிவு செய்யும் தீராத இரவு நகர்ந்துகொண்டே இருக்கும் இருப்பிடம் அமையப் பெற்ற சோகத்தைச் சொல்லும் அதேபோது அங்கில்லாத அவள் கணவனைச் சொல்லாது உணர்த்துகிறது.

இந்த இரவு நேரத்தில்
கீழ்க் குடியிருப்பைக்
காலி செய்து கொண்டிருக்கிறார்கள்

தனக்கு நேர்ந்த அவமானங்களை
நீரில் அஸ்தியைக் கரைத்துவிடுவது போல
சலசலவென ஓடிக்கொண்டிருக்கும்
இந்த இரவின் மீது
கரைத்திட முயன்றுகொண்டிருந்தாள்
தன்னுடைய பொம்மைகளுக்கான
பாதுகாப்பான இடத்தைத்
தேர்ந்தெடுக்க இயலாதவளாய்
கட்டிக்கொண்டு உறங்கும்
தன் மகளை
அலுங்காமல் வாகனத்தில் படுக்கையில் ஆழ்த்துகிறாள்

ஒரு வீடு
இரவின் ஒரு பகுதி
நிலவின் ஒரு துண்டு
வாகனமேறுவதை சன்னல்வலை வழியாக
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வரிசைக்கிரமங்களேதுமற்ற
திணிக்கப்பட்ட பொருட்களோடு
விளிம்புகளைத் தாண்டி காற்றில் படபடக்கிறது
அவளின் சேலைத் தலைப்பு

எத்தனை அழகான கவிதை? ஊரோசை அடங்கிய ஒரு தெருவில் இரவின் வெளிச்சத்தில் அவள் விழுங்க முயலும் நினைவுகள் எத்தனையோ? எதுவும் அறியாது கை பொம்மையோடு உறங்கும் அந்தச் சிறுமியாய் இருந்துவிட மனம் விரும்புவதை மறுக்கமுடியவில்லை.

மரண வீட்டிற்குச் செல்லுதல் என்று இன்னொரு கவிதை.

மரண வீட்டிற்குச் செல்லும்
ஒவ்வொரு முறையும்
செத்தவர் திடீரென
கண் விழிக்கக் கூடுமோவென
திரும்பத் திரும்ப
கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது

அவருக்குக் கட்டும்
அழகான பாடையில்
திரும்பத் திரும்ப
பயணித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது

இறந்தவருக்கு வேண்டப்பட்டவர்கள்
தொலைதூரத்திலிருந்து வரும்வரை
அவரோடு காத்திருக்க வேண்டியுள்ளது

அவர் நீரில் கரைக்கப்படும்போது
நீரோடான கலவியையும் தடுமாற்றத்தையும் கண்டு
குமுறிக் குமுறி அழவும்
பின்பு
காலம் முழுக்க அவர் திரும்பி வரமாட்டார்
என்பதற்காகவே
வாழ வேண்டியதிருக்கிறது.

ஒரு பிணத்தைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லாமே அவர் பிணமானதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் இருக்கும் போது திடீரென அவர் கண்விழித்தெழ நேர்வதையும் சாத்தியங்களின் வரிசையில் அடுக்கிகொண்டே வந்து திரும்பிவரமாட்டார் என்பதற்காகவே வாழவேண்டியதிருக்கிறது என்று நிலையாமையில் நிலைக்கும் வாழ்வைச் சொல்லி முடிகிறது. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இறுதி மூன்று வரிகள் கவிதை உலகின் அதிகம் பேசப்பட்ட வரிகளாக இருக்கும். அற்புதமான கவிதை.

நீ சிரிப்பதற்கு என்ற இந்தக் கவிதையைப் பார்ப்போம்.

நீ சிரிப்பதற்கும் அழுவதற்குமான
ஒரு அறையாக
என்னைப் பயன்படுத்துகிறாய்
உன் கசங்கிய ஆடைகளை
மாற்றுவதற்கு
அந்த அறைக்குள்
மற்றுமொரு அறையை உருவாக்குகிறாய்

உன் கண்ணீர்த்துளிகளை
புத்தகங்களைப் போல் அடுக்கி வைத்திருக்கிறேன்
ஒவ்வொன்றும் ஓராயிரம் பக்கங்களைக் கொண்டது
ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் புத்தகங்களைக் கொண்டது
ஒவ்வொரு மழைநாளாலும்
உன் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன.

எத்தனை நேரடியாய் உள் உலகத்தைப் பார்க்கிறது இக்கவிதையின் மொழி? ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் புத்தகங்களைக் கொண்டது எனும் வரிகளில்தான் இக்கவிதையின் ஆணிவேர் கிளைவிட்டுப் பரவுகிறது. மற்றுமொரு நல்ல கவிதை.

காலம் என்றொரு கவிதையில் ஒளிந்திருக்கிறது கண்சிமிட்டும் ஓர் வைர நக்ஷத்திரம்.

பல நாட்களுக்கு முன்
நின்றுபோன கடிகாரம்
பார்க்கும்போது மட்டும் ஓடுகிறது
இப்போது அதை நிறுத்தவேண்டுமானால்
பார்க்காத போது ஓடவிட வேண்டும்.

பன்.இறையின் மொழி வாழ்வின் அற்புதங்களையும் அதன் வலிகளையும் தனிமையையும் அன்பின் நறுமணத்தையும் குழந்தைகளின் உலகத்தையும் நிராகரிப்பின் குருதியையும் மிக வசீகரமான சொற்களால் எழுதியபடியே இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கடக்கும் ஒவ்வொரு அபூர்வமான கணங்களையும் கவிதையாக மாற்றும் ரஸவாதம் எல்லோருக்கும் சித்திப்பதில்லைதான். இந்தக் கவிதைகளைப் படித்து முடிக்கையில் இனி நான் எழுதப் போகும் மற்றுமொரு கவிதையில் ஏதேனும் மாற்றம் தெரிய நேருமானால் வாய்க்குமானால் அது இந்தக் கவிதைகளால்தான் இருக்கும்.

வெகுநாட்களாய் எழுதாமல் தன் அனுபவங்களால் முதிர்ந்து எழுதத் துவங்குகையில் எதை எழுதக் கூடாது என்ற நேர்த்தி இயல்பாய் இவருக்கு அமைந்துவிடுகிறது. தவிர பன்.இறையின் ஆழ்ந்த தேர்ச்சியான வாசிப்பும் பலதரப்பட்ட ஆர்வங்களும் அவர் கவிதைக்குத் தூண்களாக நிற்கின்றன. தொடர்ந்து எழுதினால் அடுத்த தலைமுறைக்கான பெயர் சொல்லக் கூடிய ஒரு கவிஞராக இவர் நிச்சயம் இருப்பார்.

இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் வாசித்து அனுபவிக்கக் காத்திருக்கின்றன. நான் தொட்டுக் காட்டியிருப்பது ஒரு விள்ளல்தான். இந்தப் புத்தகத்தைத் தயக்கமின்றி வெளியிட்ட என் நண்பர், கடற்குதிரை வெளியீட்டகத்தின் முத்தமிழ்விரும்பி பெருத்த பாராட்டுதலுக்குரியவர். ரசனை ததும்பும் அட்டையும் வண்ணமும் எழுத்துருவும் வடிவமைப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை.

இந்தப் புத்தகம் நம் கையில் இருப்பது நமக்குக் கௌரவம். இப்படியான கவிதைகளை வாசித்து நல்ல ஒரு கவிஞரைப் பாராட்டுவது அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம்.

எதைச் சொல்வது எதை விடுவது என்ற ஓர் சுவாரஸ்யமான அயர்ச்சி ஏற்படுவதை இதை வாசிக்க நேரும் எல்லோராலும் உணரமுடியும். ஒரு புதிய கவிஞரை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு இவரது கவிதைகள் சவாலாய் இருக்கின்றன. வேறெந்தக் கவிஞரின் முதல் தொகுப்பும் இத்தனை முழுமையாய் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அறிமுகம் காலம் கடந்துபோய்விடக் கூடாது என்பதாலேயே இன்னும் விரிவாய் எழுத நினைத்தவற்றைச் சுருக்கி விரைவாய் முடித்துவிட்டேன். சற்றுக் கழித்து மீண்டும் இத்தொகுதியைப் பற்றி இன்னொரு பார்வையை எழுதும் (அ)வசியத்தை இக்கவிதைகளே மீண்டும் ஏற்படுத்தும்.

பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்

-பன்.இறை

-கடற்குதிரை வெளியீட்டகம், B37, ஹட்கோ, நேதாஜி நகர், பீளமேடு, கோவை. 0422-6561553. virumbi@yahoo.com  ரூ.60/= பக்கங்கள்-80. வெளியீடு: மார்ச் 2012

7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்தப் புத்தகம் நம் கையில் இருப்பது நமக்குக் கௌரவம். இப்படியான கவிதைகளை வாசித்து நல்ல ஒரு கவிஞரைப் பாராட்டுவது அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

venu's pathivukal சொன்னது…

அன்பு சுந்தர்ஜி

ஒரு கவிதைக் கடைவீதிக்குள் நுழைந்து
வாங்கித் திரும்பிய வசீகரமான உருப்படிகளை
ஒரு குழந்தை
ஏக்கத்தோடு பார்க்கும் இன்னொரு குழந்தை முன்
அடுக்கி அடுக்கி
அழகு பார்த்து
அப்புறம் திரும்பப் பார்க்கலாமா
என்று எதிர் இருக்கும் குழந்தையை
அகற்றி விட்டு
அப்பாடா என்று மீண்டும்
அடுக்க ஆரம்பிக்கத் துடிப்பது மாதிரி
இருக்கிறது உங்களது அழகு விமர்சனம்...

தொகுப்பு அசாத்திய நம்பிக்கைகளைக் கருக் கொண்டிருப்பது
உங்களது அறிமுகத்திலேயே தெறிக்கிறது..
பிணத்தின் அருகிருந்து புறப்படும் கவிதை
கால காலமான வாழ்வின் புதிருக்குள்
நுழைந்து சமாதானமாகி வெளியேறும்
எதார்த்தத்தின் அற்புத கவித்துவம்.

நீ சிரிப்பதற்கு கவிதை சொற்களைக் கடந்த
பாராட்டுக்கு உரியது..

கடிகாரம் கவிதை
மீண்டும் வாழ்வின் புதிர் விளையாட்டுக்குள்..

பன். இறை அன்பருக்கு வாழ்த்துக்கள்..

எஸ் வி வேணுகோபாலன்

கீதமஞ்சரி சொன்னது…

\\இனி நான் எழுதப் போகும் மற்றுமொரு கவிதையில் ஏதேனும் மாற்றம் தெரிய நேருமானால் வாய்க்குமானால் அது இந்தக் கவிதைகளால்தான் இருக்கும்\\

கவியதிர்வுகளின் தாக்கம் மனங்களைக் கலங்கடிக்கும் ஆர்ப்பரிப்புகளாக இருக்குமென்பதில் ஐயமில்லை. நன்றியும் பாராட்டும்.

ரிஷபன் சொன்னது…

ஒரு வீடு
இரவின் ஒரு பகுதி
நிலவின் ஒரு துண்டு
வாகனமேறுவதை சன்னல்வலை வழியாக
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

அழகான கவிதை!

ப.தியாகு சொன்னது…

பன்.இறை அவர்களின் "பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்" (தலைப்பே அருமை)
நூலை படிக்கத்தூண்டுகிறது உங்களின் நேர்த்தியான மதிப்புரை.

"இந்தப் புத்தகம் நம் கையில் இருப்பது நமக்குக் கௌரவம்.
இப்படியான கவிதைகளை வாசித்து நல்ல ஒரு கவிஞரைப் பாராட்டுவது
அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம்" - இந்த மனம் தான் சுந்தர்ஜி சார் உங்களின் அருகாமையை
நான் விரும்பக்காரணமாவது.

நண்பர் பன்.இறை கொடுத்துவைத்தவர்தான், அவரின் நூல் உங்கள் பார்வையில் படுவதற்கும்.

அவருக்கும் எனதன்பு வாழ்த்துகள்!

ஹ ர ணி சொன்னது…

என்ன சுந்தர்ஜி...

இப்படி. பன் இறை கவிதைகளை அவசரமாக என் மகனுக்கான கடிதங்களை விரைவு அஞ்சலில் அனுப்பு வரிசையில் காத்திருந்த தருணத்தில் கொடுத்தார். அழகான கருகருவென வளர்ந்த தாடியிலான பன் இறையின் முகம் ஒருகணம் ப்ரகாஷை ஈரப்படுத்தி மறைந்தது.

வரிசையில் நின்றிருந்த நேரம் கொஞ்சம் வாசித்தேன். மனசுக்குள் ஏதோ நெருடியது. இன்றைக்கு முழுவதும் படித்துவிட்டேன். எழுதுங்கள் என பன் இறை சொன்னார். அவருக்கு எழுதுவற்கு முன் உங்களைத் தொடர்ந்து நானும் எழுதிவிடுகிறேன்.

நன்றி. அழகு.

அப்பாதுரை சொன்னது…

புத்தக அறிமுகத்துக்கு நன்றி சுந்தர்ஜி.
காலம் கவிதை.. சொக்கிப் போனேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator