15.7.12

8. பவ - தக்ஷிணாயனம்.



கைடர்யம், பூதி, எள் இவற்றைக் கொண்டு தயாரித்த தைலம் பைத்தியத்தைப் போக்கும். இதை மூக்கின் வழியாகச் செலுத்த வேண்டும்.

ஞாயல், நக்தமாலை மரங்களின் இலை, துளிர், பட்டைகளைக் கொண்டு தயாரித்தது குஷ்டத்தைப் போக்கும்.

ஞாயல், மஞ்சிஷ்டை, தகரம், லாஷா, மதுகம், மஞ்சள், தேன் இவற்றினால் தயாரிக்கப்பட்டது கயிற்றால் இறுக்கிக் கட்டியதாலோ, நீரில் அமிழ்த்தியதாலோ, விஷத்தாலோ, அடித்ததாலோ, உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலோ நினைவிழந்தவர்களுக்கு நினைவை வரவழைக்கும்.

- அர்த்தசாஸ்த்ரம் - பாகம் 14 - அத்யாயம் 4.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிவசைலம் கையால் ஒரு தரம் மருந்து சாப்பிட்டவன் அதற்குப் பின்னால் மருந்து சாப்பிடத் தேவையே இருக்காது. அவரை மிகவும் நேசிப்பவர்களும், வெறுப்பவர்களும் ஒரே குரலில் சொல்லும் கருத்து இது. ஒரு தரம் என்பது ஒரு தரம்தான். அவரிடம் போவதற்கு நேரம் காலம் அமைய வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக்கொள்வதுண்டு.

எல்லோரையும் போல அல்லோபதி மருத்துவராகவே தன் வாழ்க்கையைத் துவங்கினாலும் வெகு சீக்கிரமே தான் கற்றது அத்தனையும் பயனில்லாத சுமை எனவும், இந்தியர்கள் எந்தத் துறையிலும் சொல்லிவிடாததை வேறு யாரும் சொல்லிவிடவில்லை எனவும், கல்வி என்பது சுவர்களுக்கு வெளியே பரவிக்கிடப்பதைத் தான் தாமதமாகப் புரிந்துகொள்ள நேர்ந்ததாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்வார் சிவசைலம்.

ஒரு நாள் ஒரு கண்ணாடிவிரியன் கடித்த இரண்டாவது நிமிடம் ஒரு ரேக்ளா வண்டியில் கிடத்தப்பட்ட ஆறுமுகம் சாகக் கிடக்கையில் சிவசைலத்தின் முன் கொண்டுவரப்பட, அவன் கைவிரல் நகத்தைப் பார்த்த சிவசைலம் முணுமுணுத்தபடியே ஒரு மூலிகையின் சாற்றை ஆறுமுகத்தின் காதுக்குள் செலுத்த அவனைக் கடித்த கண்ணாடிவிரியன் கதறியபடி வந்து செலுத்திய விஷத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அவர் கொடுத்த மூலிகையின் உபரி உத்வேகத்தால் குணமடைந்த ஆறுமுகம், தன் நிழல் விரட்ட விரட்ட தான் கொண்டுவரப் பட்ட ரேக்ளா வண்டியை விடவும் மிக வேகமாக ஓடியே வீடு வந்து தனக்கு உண்டான அபூர்வமான பசியை விரட்டி சாப்பிட்டுமுடித்துக் கைகழுவும் போது, ஆறுமுகத்தோடு போட்டிபோட்டு அத்தனை வேகவேகமாய் ஓட்டப்பட்ட மாடுகள் காலிலும் வாயிலும் ரத்தம் கசியக் கசிய அப்போதுதான் வீட்டை அடைந்தன.

மாதம் ஒருமுறை பௌர்ணமியன்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கும் நாட்களில், குறித்த நேரத்துக்கு முன்னமே கூட்டத்துக்கு வந்து சேரும் ஊர்ப்பெரியவர்கள் சிவசைலத்தைப் பற்றிப் பேச நேர்கையில் ஆறுமுகத்தின் ரத்தம் கசிந்த மாடுகளின் கதையைப் பேசாது விட்டதாக தனக்கு நினைவில்லை என்று குணசேகரன் தன் நண்பனிடம் சொன்னான். ஒரு முறை ஏதோ நினைவின்றி அந்தக் கதை பேசப்படாது போக முழுநிலவு உதிக்காது போனது.

அன்றைய இரவு இருள் நிறைந்த அமாவாசையாகப் போனது கிருத யுகத்தில் நான்கு முறைகளும், திரேதா யுகத்தில் மூன்று தடவைகளும், துவாபர யுகத்தில் இருமுறைகளும், கலியுகத்தில் ஒரே முறையும் நிகழ்ந்த அதிசய சம்பவம் என்றும் அவன் சொன்னான்.

சிவசைலத்தின் அணுகுமுறை அவரை ஒரு மருத்துவராய் எல்லோர் கண்ணுக்கும் காட்டாது. அவரே ஒரு நோயாளி போலக் காட்சியளிப்பார். என்னென்ன வியாதிகளோடு அவரைப் பார்க்க வந்திருப்பவர்கள் இருக்கிறார்களோ அவர்களைப் போல அவரும் உருக் கொண்டுவிடுவார். அதனால் சிவசைலம் ஒரு சுவரில் ஆணி அடித்து மாட்டப்படாத நிலைக்கண்ணாடி என்று மேலே நான்காவது பத்தியில் சொல்லப்பட்ட அதே ஊர்ப்பெரியவர்கள் சொல்வார்கள்.

மனநிலை சரியில்லாத சிலர் அவரிடம் வந்து அமர்ந்து சிகிச்சை பெறுவது ஒரு நாடகக் காட்சி போல இருக்கும். எதிரில் வந்தமரும் நோயாளியிடம் அவர் எதுவும் கேட்காமல் உற்றுப் பார்த்தபடியே இருப்பார். அவர்கள் இந்த நிலையை அடையக் காரணம் சுற்றியிருப்பவர்களின் அளவுக்கதிகமான சம்பாஷணைகளே என்றும், மெதுவாய் அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அத்தனை சொற்களும் வடியும் வரை காத்திருப்பதுதான் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் முதல்படி என்றும், அவர்களுக்குள் மறுபடி நிரப்பப் படவேண்டியது அழகான நிசப்தம் மட்டுமே என்பதை நோயாளியின் உற்றார்கள் உணர்வது சிகிச்சையின் இரண்டாவது படியெனவும் சிவசைலம் சொல்வதுண்டு.

இப்படி சொற்கள் எல்லாம் வடிந்தபின் நோயாளியைப் படுக்கச் சொல்லி ஒரு மூலிகைத் தைலத்தை உடல் முழுதும்பூசி  கால்கள் இரண்டையும் மெதுவாக அமுக்கி விடுவார். அப்போது நோயாளியின் உடல் நிவாரணத்தின் கதிர்களால் மின்னுவதை ஆஸ்ப்ரின், மெட்டாசின், டோலோபார், ஃப்ரூபென் என்று -தன் நாய்க்குட்டிகளுக்கு இடப்பட்ட செல்லப்பெயர்களை உச்சரிக்கும் ஸ்வபாவத்துடன்- தீவிரமாக விழுங்கியபடி இருக்கும் மிகச் சாதாரண அடித்தட்டு வியாதியஸ்தர்கள் கூடக் கண்டு வியக்கமுடியும்.  

அதன் பின் நோயாளி பேச ஆரம்பிப்பார். நோயாளி தன் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் நடுவே தட்டாமாலை சுற்றத் துவங்கியபின் சிவசைலம் சின்னச் சின்ன கேள்விகளைப் போட்டு பெரிய பெரிய திமிங்கிலங்களைக் கரை சேர்ப்பார். 

நோயாளியின் மனதில் ஏதோ ஒரு நாள் மாலையில் வீசிய காற்றில் மிதந்துவந்த மிக நுண்ணிய அவமானத்தின் துகள்களோ அல்லது தோல்வியின் கறையோ யாரும் கவனியாது  படிந்திருக்கஅதற்கு மேல் அதற்கும் மேல் என்று கொட்டிய சொற்கள் ஒரு பெரும் புற்றாய் வளர்ந்து போனதையும், மெதுமெதுவே புற்றைக் கரைத்து மனதின் அடிமட்டத்தில் ஒளிந்து கிடந்த ம்ருதுவான அந்தத் துகள்களை வெளியில் எடுப்பதும், கறைகளை நீக்குவதும்தான் தன் சிகிச்சை எனவும் சொல்வார். 

இதைத் தாண்டி வேறெந்த மருந்தும் கொடுக்கத் தேவையில்லை என்றும் ஆணித்தரமாக சிவசைலம் சொல்வது லக்ஷக் கணக்கில் பணத்தைச் செலவு செய்து தாளில் செய்த பட்டத்தை வாங்கியபின் ராப்பகலாய் பெரும் வசூல் வேட்டையில் மும்முரமாய் இருக்கும் எந்த நவீன மருத்துவருக்கும் புரிந்ததில்லை. 

சிகிச்சைக்குப் பின் இலைகளின் ஓசையும், ஓடும் நீரின் ஓசையும் மட்டுமே  நன்கு கேட்கும் ஏதாவது ஒரு தபோவனத்துக்கோ சோலைக்கோ மலைப்ரதேசத்துக்கோ கூட்டிச்சென்று ஒருவாரம் தங்கி அவருக்கு விருப்பமானவற்றைப் பேசி கலகலப்பூட்டித் திரும்பினால் எல்லாம் அதனதன் இடத்துக்குத் திரும்பும் என ஆலோசனை சொல்வார். 

அவர் பெயரை மனோதத்துவத் துறை, முடநோக்கியல் துறை, அறுவை சிகிச்சைத் துறை, ஹ்ருதயவியல் துறை, சிறுநீரகத் துறை, மகப்பேறுத் துறை போன்ற ப்ரபலமான எந்தத் துறையின் கீழ் கொண்டுவருவது என்று ஒருமுறை ஜஸ்ட் டயல், யெல்லோ பேஜஸ் போன்ற நிறுவனங்களின் தகவல் தொகுப்பாளினிகள் விசாரித்தபோது, நகரில் உள்ள பூங்காக்களின் பட்டியலோடு தன் மருத்துவ நிலையத்தின் பெயரை இணைக்குமாறும், உண்மையில் பூக்களும் காற்றும் தரும் இளைப்பாறல் தன் மருத்துவசாலைக்குள் நிரம்பியபடி இருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் சொல்ல, மிக வித்யாசமாக நகரின் 68 பூங்காக்களுடன் சிவசைலத்தின் மருத்துவ நிலையத்தின் பெயரும் இணைக்கப்பட்டு மொத்தம் 69 பூங்காக்கள் என்பதாய் முடிந்தது அந்த வருட தகவல் தொகுப்பு. 

இதில் வேடிக்கை என்னவென்றால் சமயங்களில் பெரிய பெரிய குடும்பங்களோடு வரும் மக்கள் தங்கள் குழந்தைகள் சறுக்கி விளையாடவும், ஆடி மகிழ ஊஞ்சல் மற்றும் சீசாப் பலகைகள் இருக்கும் என்று தேடி சிவசைலத்தின் மருத்துவ சாலைக்கு வந்ததாகவும் ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு ஓலைக் குடிசையுடன் தென்படும் இவ்விடம் ஒரு துறவியின் மடாலயம் போல இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும் குறிப்பிட்டு தாங்கள் இளைப்பாறிய பின் உண்ண எடுத்து வந்த வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் மறைந்திருக்கும் சித்ரான்னங்களைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மற்றுமொரு பூங்காவில் பயத்துடனும், தயக்கத்துடனும் நுழைவதும் நடப்பதுண்டு. 

சிவசைலத்துடன் ஒரு நாள் தங்கும் அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது. குணசேகரனுக்கு அது வாய்த்தது. குணசேகரன் ஒரு பேட்டியாளர். அநேகமாக தமிழகத்தின் எல்லாப் ப்ரமுகர்களையும் பேட்டி கண்டுவிட்ட சாதனையாளர். இதுவரை வலையில் விழாத நபர் இந்த சிவசைலம்தான். பலமுறை முயற்சி செய்த போதும் தான் பேசும் நிலையில் இல்லை. இப்போதெல்லாம் வாயைத் திறந்தால் தனக்கு போதேந்திர சத்குருவின் பாடல்களோ, கபீர்தாஸரின் பஜன்களோதான் வருவதாகவும் சொன்னார் சிவசைலம்.

தான் பேட்டியெடுத்த இசை மேதைகள் பலரும் பேட்டியின் போது பேசவே செய்தார்கள் எனவும், சிவசைலத்தின் வாயிலிருந்து பாடல்கள் வெளிப்படுவது நிற்கும் போது தனக்குத் தெரிவித்தால், தான் எந்த மூலையில் இருந்தாலும் சிவசைலத்தின் முன்னே வந்து சேர்ந்து விடுவதாயும் குணசேகரன் தெரிவித்தார்.

சிவசைலமும் பாடல்கள் நின்றுபோன தகவலை ஒரு பகலில் குணசேகரனிடம் கொண்டு சேர்த்து விடும்படிக் கேட்டுக்கொள்ள, அவரின் உதவியாளர் மூலம் நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைமை குருவுடன் உரையாடிக்கொண்டிருந்த குணசேகரனிடம் தகவல் சென்றடைய எதிர்வரும் ப்ரதோஷ காலத்தில் அவரைச் சந்திப்பதான பதிலுடன் பேட்டிக்கான அஸ்திவாரம் அமைந்தது.

அந்தப் பேட்டியை அப்படியே தந்துவிடுகிறேன். படித்துப் பாருங்கள்.

கு.சே: நீங்கள் பிறந்தது எந்த ஊர்? உங்களின் ஆளுமையில் ஆதிக்கம் செலுத்தும் மண் எது?

சி.சை:  கல்லிடைக்குறிச்சி. திருநெல்வேலி.

கு.சே: நீங்கள் கொஞ்சம் விரிவாக பதில் சொன்னால் பேட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

சி.சை: உங்கள் கேள்வியிடம்தான் இருக்கிறது பதில்களை வரவழைக்கும் சாமர்த்தியம்.இன்னுமொரு விஷயம். என் தொழில் சார்ந்த கேள்விகளை நான் விரும்புவதில்லை. அவை என் தவம். பொதுவான கேள்விகளை நான் விரும்புகிறேன்.

கு.சே: நீங்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரா? தத்துவ அறிஞரா?

சி.சை: நான் துறவும் தத்துவமும் விரும்பும் மருத்துவர். உண்மையில் எல்லோரிடமும் வியாதியும் நலமும் இணைந்தேதான் இருக்கின்றன. ஆனால் அதை நாம் உணர்வதுமில்லை. ஒப்புக்கொள்வதுமில்லை.

கு.சே: உங்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் ஏதுமுண்டா?

சி.சை: என்னடா எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வி வந்திருக்கவேண்டுமே என எதிர்பார்த்தேன். மறக்கமுடியாத சம்பவங்கள் எதுவும் கிடையாது. எனக்கு மறதி அதிகம். தவிர நான் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ள முயல்வதில்லை.

கு.சே: சரி. உங்களுக்கு மிகவும் பிடித்த இரு விஷயங்களோடு ஒரு தீவில் ஒரு வருடம் இருக்கவேண்டும் என்று சொன்னால் எதை எடுத்துச் செல்ல விரும்புவீர்கள்?

சி.சை: மஹாபாரதம், திருக்குறள்.

கு.சே: உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை?

சி.சை: நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை.ஆனாலும் கல்லாப்பெட்டி சிங்காரம், முனுசாமி மற்றும் நீலுவை சில சந்தர்ப்பங்களில் ரசித்திருக்கிறேன்.

கு.சே: பிடித்த இசை?

சி.சை: பாலசந்தரின் வீணை, எங்கள் கிராமத்தில் என் சிறு வயதில் அபாரமாக நாதஸ்வரம் வாசித்த பொன்னையா பிள்ளை, யாருக்கும் தெரியாத வயலின் மேதை ஷண்முகசுந்தரம் ஆகியோரைப் பிடிக்கும்.

கு.சே: உங்களுக்கு சிறு வயதில் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒரு முயற்சி அமைந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி?

சி.சை: அது பற்றிக் கூற எதுவுமில்லை. தவிரவும் பிறரின் அறைக்குள் எட்டிப் பார்க்கும் சபலத்தை உங்களைப் போன்றவர்கள் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கு.சே: விரும்பி சாப்பிடும் பானம்?

சி.சை: பதனீர், இளநீர். ஆனால் இப்போது எதுவும் குடிப்பதற்கான சுவையோடு இல்லை.

கு.சே: சாப்பிட ஆசைப்படுபவை:

சி.சை: நுங்கு, வேகவைத்த பனம்பழம், தேனில் ஊறிய பலாப்பழம்.

கு.சே: உங்களால் மிகவும் விரும்பி செலவிடப்படும் பொழுதுகள் எவை?

சி.சை: நோயாளிகளின் மனது திறந்து கொள்ளும் தருணங்கள், ஓடும் நீரில் இரு கால்களும் நனைய உட்கார்ந்திருப்பது, யானையை வேடிக்கை பார்ப்பது மற்றும் ரயில் பயணம்.

கு.சே: மழையில் நனைவது பிடிக்குமா?

சி.சை: நல்ல கேள்வி. பிடிக்கும். சில போது குடையோடு செல்வதும் பிடிக்கும்.

கு.சே: ஒரு நாளில் எந்த நேரம் மிகப் பிடிக்கும்? பிடிக்காது?

சி.சை: பிடித்தது சூர்யோதயத்துக்கு முந்தைய இரு மணி நேரம்.மிகவும் துயரமானது சூர்யாஸ்தமனமும் இருளும் சேரும் அந்த ஒரு மணி நேரம். அந்த நேரம் தனிமையில் இருப்பதும் பிடிக்காது.

கு.சே: செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிடிக்குமா?

சி.சை: நாய்கள் வளர்ப்பது பிடிக்கும். நம்மிடம் மிக அற்புதமாகப் பேசத் தெரிந்தவை நாய்கள்தான். நாய்கள் கொஞ்சுவதையும், அவை புகார் அளிப்பதையும் பார்த்திராதவன் துர்பாக்யசாலி.

கு.சே: கடலில் கால் நனைப்பது பிடிக்குமா?

சி.சை: பிடிக்காது. காலை அரிக்கும். ஆனால் நண்டுகள் ஓடி ஒளிந்துகொள்வதைப் பார்க்கப் பிடிக்கும். அதிக நேரம் கடற்கரையில் இருப்பதையும் நான் விரும்புவதில்லை. உப்புக்காற்றில் கண்ணாடிகள் மாசடைந்து விடுகின்றன.

கு.சே: அதிகமாக பொதுமேடைகளில் பார்க்க முடிவதில்லையே?

சி.சை: ஒலிபெருக்கியின் முன்னால் நிற்பதைப் போல பயங்கரமான காட்சி வேறெதுவும் இல்லை. தவிர பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

கு.சே: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

சி.சை: உண்டு. நம்பிக்கைதான் வாழ்வை சுவாரஸ்யமாக்குகிறது. தத்துவம், கவிதை, இசை, ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற எல்லாக் கலைகளும் நம்பிக்கையின் கைகளைப் பிடித்தபடிதான் நடக்கிறது. இருளை விட ஒளி என்னை ஈர்க்கிறது.

கு.சே: இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா?

சி.சை: இல்லை. இயலாது. இது அவரவர் தனிப்பட்ட உள் அனுபவம். எனக்கு ஒரு அகலில் அசையும் சுடர் போதும். சிலருக்கு திருவண்ணாமலையின் தீபஜோதி வேண்டும்.

பேட்டி நடந்துகொண்டிருந்தபோதே வாசலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியுடன் சிவசைலத்தின் மருத்துவ சாலையை அடைந்தார்கள் சிலர். குணசேகரனிடம் எதுவும் சொல்லாமலே மிக வேகமாக சிவசைலம் விரைந்தபோது அந்த நோயாளி இறந்துபோனார்.

இறந்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உயிர்ப்பிக்க மருந்து இருப்பதாக அவர்களிடம் சிவசைலம் சொல்லிக்கொண்டிருந்தபோது வாசலில் பெரிதாக மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

7 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

மெதுவாய் அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அத்தனை சொற்களும் வடியும் வரை காத்திருப்பதுதான் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் முதல்படி என்றும், அவர்களுக்குள் மறுபடி நிரப்பப் படவேண்டியது அழகான நிசப்தம் மட்டுமே என்பதை நோயாளியின் உற்றார்கள் உணர்வது சிகிச்சையின் இரண்டாவது படியெனவும் சிவசைலம் சொல்வதுண்டு.

சிவசைலம் மனசில் பதிந்து போய்விட்டார்.

ஹரணி சொன்னது…

சுந்தர்ஜி.. சுவை. நுங்கு. வேகவைத்த பனம்பழம். தேனிய ஊறிய பலா. இவ்வாரமும் அப்படியே.

வாசன் சொன்னது…

சிவ‌சைல‌த்தின் இன்னுமொரு நாம‌க‌ர‌ண‌ம் சுந்த‌ர்ஜியா, சுந்த‌ர்ஜி? உங்க‌ளின் உரையாட‌லாய் ப‌ரிண‌மிக்கிற‌து இந்த‌ பேட்டி.

Matangi Mawley சொன்னது…

இதைப் பற்றி எழுதலாம்-- என்று படிக்கையில் நினைத்துக் கொண்டிருந்த வரியை மறக்கச் செய்தது அடுத்த வரி. ஒவ்வொரு வரியும் நீ நான் என்று போட்டி போட்ட படி ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ரிஷபன் சுட்டிக் காட்டியிருக்கும் வரிகள் என்னையும் கவர்ந்தன. அதைத் தவிர- "பிறரின் அறைக்குள் எட்டிப் பார்க்கும் சபலத்தை உங்களைப் போன்றவர்கள் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்". நல்ல பதில்.
அகல் ஒளியின் தெய்வீகத்தையும், திருவண்ணாமலை ஜோதியின் உத்வேகத்தையும் ஒரு சேர அளிக்கும் தங்களது எழுத்திற்கு ஒரு சலாம்!

சிவசைலத்தின் பேட்டியைப் படித்த அப்பா- "It reflects the verisimilitude of truth" என்றார்!

Annamalai சொன்னது…

good one

Annamalai சொன்னது…

அற்புதம்

சிவகுமாரன் சொன்னது…

பாம்புக்கடி வைத்தியம் சிலிர்க்க வைத்தது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...