16.8.12

இறைவன் எங்கே இருக்கிறான்?

நான்கு ஆரக்கால்களுடன் சக்கரம் செய்கிறோம். என்றாலும் அச்சாணிக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள வெற்றிடத்தாலேயே அது இயங்குகிறது. நான்கு புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்கிறோம். எனினும் இடையே உள்ள வெற்றிடத்தில்தான் நாம் வசிக்கிறோம். உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகத்துக்குரியவை என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் தோன்றாப் பொருளில்தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது. 
-லா வோ த்ஸூ.
லா வோ த்ஸூவின் இந்த சிந்தனை இருப்பவற்றில் இருந்து இல்லாத பரம்பொருளைத் தேடும் ஞானத்தைத் தருகிறது. வெற்றிடத்தில் இருந்து பூரணத்தை அறியும் வழியைக் காட்டுகிறது. இரண்டல்ல ஒன்று எனும் விடையில் இருந்து ஒன்றில் எல்லாமும் என்ற நிறைவுக்கு இட்டுச் செல்கிறது.
திருவருட்செல்வர் திரைப்படம் பார்த்தவர்களும் இதைப் படிக்கலாம். 
சேக்கிழாரை நோக்கி சோழ மன்னன் கேட்டான்:
1. இறைவன் எங்கே இருக்கிறான்?
2. எந்தத் திசையை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறான்?
3. இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாருக்குக் குழப்பம். இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரியாத குழப்பம் இல்லை. ஆனால் எப்படி இதை சுருக்கமாக மன்னனுக்கு உணர்த்துவது என்ற குழப்பம்.
அவர் முகம் கண்டு கவலையின் காரணம் கேட்கிறாள் அவரது பத்து வயதுப் பேத்தி. மன்னன் கேட்ட கேள்விகளைச் சொன்னார் சேக்கிழார். இவ்வளவுதானா? கவலையின்றி உறங்குங்கள் தாத்தா. நான் போதுமே மன்னரின் கேள்விகளுக்குப் பதில் கூற என்று தன் தாத்தாவிற்கு ஆறுதல் கூறினாள் சிறுமி.
மறுநாள் மன்னனின் முன்னே நின்ற சிறுமியைக் கண்டதும் மன்னனுக்கு ஆச்சர்யம். சேக்கிழாரின் பேத்தி தன் கேள்விகளுக்கு விடை தர இருக்கிறாள் என்ற கூடுதல் மகிழ்ச்சி.
முதல் கேள்வியை அரசன் கேட்க, ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வரச் சொன்னாள் சிறுமி.
”அரசே! இந்தப் பாலில் மறைந்திருக்கும் தயிர்,மோர், வெண்ணெய், நெய் இவற்றை உங்களால் காட்ட முடியுமா?”
அரசனுக்குப் பொறி தட்டியது போல இருந்தது. 
”இறைவன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார்.மறைந்திருக்கிறார். நிறைந்திருப்பதைக் காண மறைந்திருப்பவற்றை அடைய வேண்டும். மறைந்திருப்பதை அடைய சில வழிகளும், அசைக்கவியலாத நம்பிக்கையும், உழைப்பும் தேவை.”
இரண்டாவது கேள்விக்கு ஒரு குத்துவிளக்கை ஏற்றச் சொன்ன சிறுமி, ”இந்த விளக்கின் சுடர் எந்தத் திசையைப் பார்க்கிறது?” எனக் கேட்டாள்.
மன்னன் புரிந்துகொண்டான்.ஆனந்தப் பட்டான்.
“ஒரு தீபத்தின் சுடர் எல்லாத் திசைகளையும் பார்க்கிறது.எல்லாத் திசைகளுக்கும் ஒளி தருகிறது- இறைவனைப் போல” என்றாள்.
மூன்றாவது கேள்விக்கு, தன்னை சிறிது நேரம் அரசியாக்கும்படி கேட்டாள். மன்னனும் சம்மதிக்க, அரசியான சிறுமி கட்டளையிட்டாள்.
“யாரங்கே? மந்திரி சபையில் உள்ள இவர்கள் எல்லோரையும் சிறையில் அடையுங்கள். சிறையில் இருப்பவர்களை எல்லாம் விடுவியுங்கள். இவர்கள் சொத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் கொடுங்கள்”
மன்னன் ஆச்சர்யமும் புதிரும் கலந்து சிறுமியைப் பார்க்க,
“இதைத்தான் கடவுள் செய்து கொண்டிருக்கிறார். மேலே இருப்பவனைக் கீழேயும், கீழே இருப்பவனை மேலேயும் கொண்டு வருகிறார். இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. பிறந்தவன் இறக்கிறான். இறந்தவன் பிறக்கிறான். உயர்ந்தவன் தாழ்கிறான். தாழ்ந்தவன் உயர்கிறான்.
சேக்கிழாரின் ஆனந்தத்தை அவர் விழிகளிலிருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்த கண்களை மூடிக் கைகளைக் கூப்பி இறைவனை மனதால் தொழுது நின்றார்.
சிறிது நேரம் அரசியான சேக்கிழாரின் பேத்தி, மன்னனின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்தாள்.மன்னன் மண்டியிட்டு அந்த மகளைக் கடவுளாய்க் கருதி வணங்கினான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது- நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
-இது நல்வழி தந்த ஔவையின் முதுமொழி.
இனிய சொல்லின் மேன்மைக்கு இதற்கு ஈடாக ஒரு தமிழ் பாட்டு இருக்கமுடியுமா என்பது, இதுவரை வாசித்த என் மிகக் குறுகிய அனுபவத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
வலிய யானையின் மீது எய்யப்படும் அம்பு அதன் உடலை உருவி உள்ளே பாய்வது போல பஞ்சு மூட்டையின் உள்ளே பாயாது. வலிய இரும்பினால் செய்யப்பட்ட கடப்பாரை கற்பாறையைப் பிளக்காது. கொஞ்சமும் அசைந்துகொடுக்காத கற்பாறை ஏதோ ஒரு பசுமரத்தின் வேருக்கு இடம்கொடுத்து பிளந்துபோகும். அதைப் போல கொடுமையான கடும் சொற்களால் ஒரு இம்மியளவும் பயன் நேராது.இனிமையான சொல்லே வெல்லும்.
எத்தனை எளிமை! எத்தனை அபூர்வமான ஒப்பீடும், உவமையும்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஔவையின் மூதுரையிலிருந்து ஒவ்வொரு செய்யுள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜா தாள்பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.

யாத்திரை போகும்போது என்னென்ன கொண்டுபோக வேண்டும் என்ற விலாவாரியான பட்டியல் போட்டு இந்தப் பாட்டை எழுதியது யார்? 


இதற்கு விடையைப் பின்னூட்டத்தில் சரியாகச் சொல்லாதவர்களுக்கு அப்புறமாய்ச் சொல்லுகிறேன்.


க்ளூ: உருவத்தில் தமிழ் ஹிட்லர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நூற்றி இருபத்தியொரு வருடப் பழமையான இந்தக் கடிதத்தைப் படியுங்கள். 

இது யாருக்கு எழுதியதென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?


Paris la May 7th 1891.
எனதன்பிற்குரிய மகாசாஸ்திரிகளே,
நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகிதமடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறேனென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிறதென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத்துப் பிரதியுண்டாவென்றும் கேட்கிறீர்.
அதற்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.
Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் list or cataloqueபண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.
பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப் பிரதியாக்கும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட் சிறுபுத்தகசாலையிலே வைக்க, ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பி யனுப்பலாம்.
நாமிங்குத் தமிழைப் படித்தோமல்ல. நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம்.
இங்ஙனம்,
அன்புடையவன்
Julien Vinson
க்ளூ: மூன்றெழுத்தில் இவர் பெயர் இருக்கும்.

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருவருட்செல்வர் - நடிகர் திலகம் சிவாஜியும், அந்தச் அழகு சிறுமியும் ஞாபகம் வந்தது... நன்றி...

ஔவையின் செய்யுளை பதிவிட்டதற்க்கும், பதிவிட நினைத்ததற்கும் பாராட்டுக்கள்...

1) பாட்டை எழுதியது : பாரதி தாசன் அவர்கள்...

2) கடிதம் எழுதியது : தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள்...

"சரியா...?" என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்...
தவறு இருந்தால் மன்னிக்கவும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

கே. பி. ஜனா... சொன்னது…

ஔவையின் அந்தப் பாடல்! ஆஹா!பொருளும் இனிமையும் பொருந்தி நிற்கிறது! நன்றி!

Ramani சொன்னது…

கடவுளுக்கான விளக்கம் அருமை
அந்த எழுத்தாள்ர் சுஜாதாவாக இருக்கலாம்
சுவாரஸ்யமான பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்

Matangi Mawley சொன்னது…

The explanation to "Which direction God's looking at now"-- is brilliant.. I had seen the movie-- but forgot about it.. Thanks for reminding!
Tamil Hitler? Bharathidasan has the Hitler mustache... But I don't know the answers.. They were a great read but! Esp. the letter written in 1891! I do not have the inputs to guess to whom it could have been written to... But to read such letters itself is a pleasure! Like the News paper report, that got published in Hindu about Tipu Sultan's surrender...

Paraphrasing what Karl Marx says about religion-- The history of this Country is an opiate for the present generation!

நிலாமகள் சொன்னது…

உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகத்துக்குரியவை என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் தோன்றாப் பொருளில்தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது. //

ரைட்டு.

க்ளூவெல்லாம் அறிவு ஜுவிக‌ளுக்கு! நாங்க‌ ரெண்டு நாள் க‌ழிச்சு திரும்ப‌ வ‌ந்து பார்த்துப்போமே...!

ப‌திவின் ப‌ல‌ செய்திக‌ளும் ப‌ல‌மான‌ விருந்து.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

வணக்கம்.

பாரதிதாசன் என்று நினைவில் இருந்தது காணாமல் போயிருந்தது.

இணையத்தில் இருந்து பார்த்துத் தெளிந்தேன்.நன்றி.

அழகான பதிவுகள்.அருமையான வாசிப்பு அனுபவம்.அழகு.அழகு.
வாழ்த்துக்கள்.

-எஸ் வி வி

தினேஷ்-பாரதி சொன்னது…

அருமை ♥♥♥பாரதிதாசனார் உவேசா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

சுந்தர்ஜி சொன்னது…

புதிர் 1: பாரதிதாசன்
புதிர் 2: உ.வே.சா.

வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் விடையளித்த தனபாலனுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் கடிதம் எழுதியது உ.வே.சா. அல்ல. பெற்றுக்கொண்டதுதான் உ.வே.சா.(கூகுளில் பிடிச்சிட்டீங்களோன்னு ஒரு சந்தேகம் தனபாலன்.)

(ஜூலியன் வின்ஸோனுடைய தந்தை காரைக்காலில் ஜட்ஜாக இருந்தார். அப்போது வின்ஸோன் தமிழ் படித்தார் என்றும்,அவர் பாரிஸ் ஸர்வகலாசாலையில் கீழைநாட்டு மொழிகளுக்கு ஆசிரியராக இருந்தார் என்றும் உ.வே.சா. குறிப்பிடுகிறார்).

நேரமொதுக்கி என்னையும் பொறுமையாய் வாசித்த ஏனையோருக்கும் நேரமின்மையால்-மன்னிக்கவும்-பொதுவான நன்றிகள்.

G.M Balasubramaniam சொன்னது…


நீங்கள் எழுதும் நேர்த்திகண்டு பொறாமைப் படுகிறேன் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...