26.9.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 4 - இசைக்கவி ரமணன்

ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமின்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலை வாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர்- அனைத்துக்கும்; த்வார்- வாயில்). எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள்   உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா!

எத்தனையோ படித்துறைகள் இருந்தாலும் ’ஹர் கி பௌடி’ அதாவது ‘ஹரியின் பாததூளி’ என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத் திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. இடப்புறம், பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்ட், செல் கம்பெனிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்து கொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்ல வேண்டும்.

எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரும்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமின்றி, ஜோடிஜோடியாகக் கைகோர்த்துக்கொண்டு சாலையைக் கடந்து கொண்டிருந்தன. யாரும் சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை. எவன் வாயைத் திறப்பான்? குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலே பிச்சை கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லை பாட்டில், ‘பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்’ என்றொரு வரி வருகிறது. நம் நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல் ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டை விட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு.

பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது. அதை நாம் ஊக்குவிக்கக் கூடாது, அது ஒரு எத்து வேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம். கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டு விடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே ‘சிறுகுலத்தோர்’ அல்லவா?

இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய் இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம் நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒரு காலத்தில், அரசர்கள் ஒரு கட்டத்தில், ஆட்சிப் பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம் புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் - கவனித்தால் - காணலாம்.

ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்சினையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்று மூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா?

ஒரு டீக்கடைக்குப் பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையில் கால் நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என் கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்து போன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்ல மெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்ல மெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன்.

(தொடரும்)

2 கருத்துகள்:

ஆ.செல்லதுரை சொன்னது…

கங்கை நதியோரம் கைபிடித்து அழைத்துசெல்கிறது கவிமொழி.அவ்ர் கரையும் இடங்களில் நாம் தொலைந்து போகிறோம்.

ஈதல்,இரத்தல் குறித்தவிசாரம்,துறவுக்கும் காவிக்கும் பின்விரியும் காரணங்கள்.ஞானத்தேடலுடன் கூடவே காட்சிப்படுகிறது சமூக ஞானம்.

சில்லிடுகிற்து அந்தரங்கம்.

நிலாமகள் சொன்னது…

பிச்சையெடுப்ப‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ புதிய‌ கோண‌ம் விய‌ப்புட‌ன் த‌லைய‌சைக்க‌ச் செய்த‌து. இர‌க்க‌ம் மேலிட்ட‌து அவ‌ர்க‌ள்பால். க‌டைசி ப‌த்தி வாசிப்போர் கால்க‌ளிலும் கொலுசு போட்ட‌து. அருமையாக‌ எழுதுவ‌து ம‌ட்டும‌ல்ல‌ ... எழுதுப‌வ‌ர்க‌ளையும் தேடித் தேடி எம்மையும் திளைக்க‌ச் செய்யும் த‌ங்க‌ள் நோக்க‌ம் உய‌ரிய‌து ஜி!

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator