28.9.12

வணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ - 5 -


பல நேரங்களில் நான் எழுதுவதை யாரெல்லாம் கவனிக்கிறார்கள், படிக்கிறார்கள், என்ன பின்னூட்டமிடுகிறார்கள், எழுதும் போது நமக்குள் கரைந்துபோகும் இந்த அனுபவம்  அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வைக் கொடுக்கும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு சரடு போல உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். எழுதிமுடித்தவுடன் அது மறந்து போய்விடும். அதற்குப் பின் என்றோ ஒரு நாள் படிக்க நேரும்போது இதை நாம் எழுதினோமா என்ற சந்தேகமே வந்துவிடும். எழுத்தின் வசீகரமும், போதையும் அதுதான்.

இந்த அனுபவத்தைத் தூக்கிச் சாப்பிடும் புதிய போதனையைப் புகட்டுகிறது பாவ்லோவின் இந்த அனுபவம்.

வணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் (The Pianist in the Shopping Mall) 

ஹங்கேரியில் பிறந்து, இன்றைக்கு உலகளாவிய இரு இசைக்குழுக்களில் முக்கியமான ஒரு புள்ளியான என் நண்பியும், வயலின் கலைஞருமாகிய உர்சுலாவுடன் ஒரு வணிக மையத்தில் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தேன். திடீரென்று அவள் என் கையைப் பற்றினாள்:

“ கவனி!”

நான் கவனித்தேன். இளையவர்களின் குரலோசை, ஒரு குழந்தை கத்தல், மின் சாதனங்களை விற்கும் கடைகளின் தொலைக்காட்சிகளின் இரைச்சல், டைல் பாவிய தரையில் ஹைஹீல்கள் உண்டுபண்டும் க்ளிக் சத்தம், உலகத்திலுள்ள எல்லா வணிக மையங்களிலும் இசைக்கப்படும் தவிர்க்கமுடியாத இசை- எல்லாவற்றையும் கேட்டேன்.

“அற்புதமாக இருக்கிறதில்லையா?”

அற்புதமானதோ அபூர்வமானதோ என் காதுகளுக்கு எட்டவில்லை என்றேன்.

“அந்தப் ப்யானோ. அதை இசைப்பவன் அசர அடிக்கிறான்” என்றாள் என்னை ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே.

“ஏதாவது பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்”

“உளறாதே”

இன்னும் உன்னிப்பாக உற்றுக் கேட்டபோது, உண்மையிலேயே அந்த இசை அப்போது இசைக்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் என்பதை உணர்ந்தேன். அந்தக் கலைஞன் சோப்பினின் (Chopin) சொனாட்டாவை வாசித்துக்கொண்டிருந்தான். இப்போது என்னால் கவனம் செலுத்தமுடிந்தது. அந்த இசைக் குறிப்புகள் (Notes), எங்களைச் சூழ்ந்திருந்த மற்றெல்லா சப்தங்களையும் மறைத்திருந்தது. மக்கள் நிரம்பிவழிந்த நடைபாதைகளையும்,  கடைகளையும், பேரங்களையும், அறிவிப்புக்களில் கூவிக்கொண்டிருந்த - என்னையும் உங்களையும் நீக்கி- எல்லோரிடமும் இருக்கக்கூடிய பொருட்களையும் கடந்தோம். உணவுக்கூடத்தை அடைந்தோம். சாப்பிட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும், செய்தித்தாள் வாசித்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு மத்தியில் எல்லா வணிக மையங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர ஏற்பாடு செய்யும் ப்ரத்யேகமான நிகழ்ச்சியும் ஒன்றும் இருந்தது.

 சிறப்பான அந்த ஏற்பாடுதான் ப்யானோவும், அந்தக் கலைஞனும்.

அந்த இசைக்கலைஞன் மேலும் சோப்பினின் இரண்டு சொனாட்டாக்களை வாசித்துவிட்டு, ஷூபேர்ட் (Shubert) மற்றும் மோத்ஸார்ட்(Mozart)டின் கீர்த்தனைகளை வாசித்தான். அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கலாம். மேடையில் அவனுக்குப் பின்னால் இருந்த சுவரொட்டி, அவன் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜ்யார்ஜியாவைச் சேர்ந்த ப்ரபலமான இசைக் கலைஞன் என்பதைச் சொன்னது. அவன் ஏதாவது வேலையைத் தேடியலைந்து, எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு, விரக்தியின் உச்சத்தில்  இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கவேண்டும்.    

அப்படியான போதும் உண்மையிலேயே அவன் இங்கில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இசை பிறக்கும் மாய உலகத்தில் அவன் கண்கள் நிலைத்திருக்கின்றன. அவன் கைகள் நம்முடன் அவன் அன்பை - அவன் ஆன்மாவை -  அவன் உற்சாகத்தை - அவனின் சாரத்தை - இத்தனை நாள் அவன் கற்றறிந்தவற்றை - கவனத்தை - ஒழுக்கத்தை பகிர்ந்து கொண்டன.

ஒருவர் -நிச்சயமாக ஒருவர் -கூட அவன் இசையைக் கேட்க அங்கில்லை என்கிற ஒரு விஷயத்தை மட்டும் அவன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் போயிருந்ததெல்லாம், அங்கே ஏதாவது வாங்கவோ- சாப்பிடவோ - வெறுமனே நேரத்தைக் கழிக்கவோ - வேடிக்கை பார்க்கவோ - அல்லது நண்பர்களைச் சந்திக்கவோதான். சிலர் எங்கள் அருகில் நின்று உரக்க ஏதாவது பேசிவிட்டு நகர்ந்தார்கள். 

அந்த ப்யானோக் கலைஞன் இதையெல்லாம் சட்டை செய்யாமல் மோத்ஸார்ட்டின் தேவதைகளோடு உரையாடிக்கொண்டிருந்தான். அவன் இசையை ரசித்துக்கொண்டிருந்த இருவரைப் பற்றியுமோ, அதில் ஒருவர் கண்களில் நீர் வழிய அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு அசாத்யமான வயலின் கலைஞர் என்பதையோ  கூட அவன் லக்ஷியம் செய்யவில்லை.

ஒருதடவை தேவாலயத்துக்குப் போயிருந்த போது, ஒரு இளம்பெண் கடவுளுக்காக இசைத்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. ஒரு ஆலயத்தில் இசை என்பதாவது பொருத்தமாக இருந்தது. இங்கோ யாரும் - ஏன் கடவுளே கூட - அதை ரசிக்கவில்லை.

இல்லை. அது பொய். கடவுள் கேட்டுக்கொண்டிருந்தார். தன்னை யாராவது கவனிக்கிறார்களா இல்லையா என்றோ, இதற்காகத் தனக்குத் தரப்படவுள்ள சன்மானத்தைக் குறித்தோ கூட அக்கறையின்றி, தன்னின் மிகச் சிறந்த இசையை இசைத்துக்கொண்டிருக்கும் அவன் ஆன்மாவில், அவன் கைகளில் கடவுள் நிறைந்திருந்தார். அவனோ மிலனில் உள்ள ஸ்காலா(Scala)விலோ, பேரிஸ்(Paris)ல் உள்ள ஆபெரா(Opera)விலோ தான் வாசிப்பதான பாவனையுடன் இசைத்துக்கொண்டிருந்தான். இதுவே தன் விதி, தன் ஆனந்தம், தன் வாழ்தலுக்கான காரணம் என்பது போல இசைத்துக்கொண்டிருந்தான். 

இந்தத் தருணத்தில் - நம் ஒவ்வொருவருக்கும் நமக்கேயான ஒரு அட்டவணை ஒன்றிருக்கிறது. அது மட்டும்தான் - என்ற ஒரு முக்கியமான மிக முக்கியமான போதனையை நினைவு படுத்திக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மேல் எனக்குள் வார்த்தைகளில் அடங்காத மதிப்பும், மரியாதையும் நிரம்பியிருந்தது. நாம் செய்வதை பிறர் ஆதரிக்கிறார்களா, விமர்சிக்கிறார்களா, மறந்துபோகிறார்களா, நம்மோடு வருகிறார்களா என்றெல்லாம் கவனிக்கத் தேவையில்லை. அதை நாம் செய்வதற்குக் காரணம் அதுதான் இந்த பூமியில் நம் விதி அல்லது ஆனந்தத்தின் ஊற்றுக்கண்.  

மோத்ஸார்ட்டின் இன்னொரு சங்கதியை இசைத்துவிட்டு, முதன்முறையாக எங்கள் வருகையைக் கவனித்தான் அந்த ப்யானோக் கலைஞன். எங்களைப் பார்த்து கண்ணியமாக, பணிவாக ஒரு தலையசைப்பு. அதை ஏற்று பதிலுக்கு நாங்களும் தலையசைத்தோம். பின்பு தன்னுடைய சொர்க்கத்துக்கு அவன் திரும்பிவிட்டான். 

இந்த உலகத்தின் கவனிப்பாலோ - கூச்சத்தில் தோய்ந்த எங்களின் கைதட்டல்களாலோ அவனைத் தொந்தரவு செய்யாதிருப்பது நல்லது. எங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அவன் தெரிந்தான். எப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும். அவன் தன் இசை மூலம் கடவுளோடு உரையாடிக்கொண்டிருந்தான். வேறெதுவும் அவசியம் இல்லை அவனுக்கு.

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

இந்தப் பதிவின் முதல் பத்தியைப் படித்தவுடன், எனக்கு நினைவுக்கு வந்தது , என் அனுபவங்கள். அதியும் வலையேற்றி உள்ளேன். ( இந்த வருட துவக்கத்தில் ) எழுதியது நானா என்னும் தலைப்பில். இசையை ரசிக்கும் எனக்கு அதன் நுட்பங்கள் தெரிவதில்லை. மோனோ, ஸ்டீரியோ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஓசைகளின் நுட்பம் சார்ந்தது அது என்று தெரிகிறது. அந்த வணிக வளாகத்தில் தன்னை மறந்து இசைக்கும் கலைஞனை என்னைப் போல் இருப்பவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. நிறையவே சிந்திக்க வைக்கிறது இந்தப் பதிவு சுந்தர்ஜி. எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பகிர்ந்து கொள்ளாததன் காரணம் அடக்கம் என்று சொல்லலாமா சுந்தர்ஜி.?....!

நிலாமகள் சொன்னது…

எப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும்.

vasan சொன்னது…

இதைத்தான் ர‌த்தின‌ச்சுருக்க‌மாக‌ ப‌க‌வான்
'க‌ட‌மையைச் செய்,
ப‌ல‌னை எதிர்பாராது'
என்றாரோ?
ஏமாற்ற‌ம் த‌விர்க்க‌ எதிர்பார்த்த‌லை த‌டை செய்வோம்.

சக்தி சொன்னது…

எப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும். அவன் தன் இசை மூலம் கடவுளோடு உரையாடிக்கொண்டிருந்தான். வேறெதுவும் அவசியம் இல்லை அவனுக்கு.
உங்களுக்கு மட்டுமல்ல
எனக்கு இனிமேல் ஒருவழிகாட்டியாக இருக்கப்போகின்றன இந்த வரிகள்
நன்றி சுந்தர்ஜி

ஆ.செல்லத்துரை. சொன்னது…

கோயெலோவின் ப்யானொ கலைஞனுக்குப்பின்னால் நம்மூர் வீதியோர ஓவியர்களின் வரிசை தெரிகிறது. இவர்கள் நலங்கெட புளுதியில் விழுந்த வீனைகளா?....... சூடுவார் இலரேனும் பூத்துக்குலுஙுகும் காட்டு மலர்களா?.....ஏதாகினுமொன்று.ஆயினும் இவர்கள் சாமான்யர்களன்று.

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator