நகரவாசியின் தனிமை


இந்தக் கவிதை
அழைப்பு மணியோ 
நாய்க்குரைப்போ
கதவின் க்றீச்சோ
எதுவுமில்லா
வலிந்த நிசப்தம் பற்றியது.

நீரறியாத முல்லைக் கொடிக்கும்
பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே
பின்னப்பட்ட வலை பற்றியது.

மூடப்பட்டே இருக்கும் கதவுகளில்
மோதித் திரும்பும் வௌவால்கள்
மற்றும்
முகவரி தேடியலைபவர்களின்
பதட்டம் குறித்தும்.

தோட்டத்துச் செடிகளின் கதறல் குறித்தும்-
திறக்கப்படாத சாளரங்களின்
மூச்சுத்திணறல் குறித்தும்
பதறுகிறது இந்த வரியில்.

முகம் பார்க்க யாருமற்ற 
கண்ணாடிகளின்
இழந்த வசீகரம் குறித்தும்-

தாம்பத்யமறியாத
மெத்தைகளின் தாபம் குறித்தும்
பரிதவிக்கிறது.

தாழிடாத அறைக்குளியலில்
கரையும் தனிமை குறித்தும்-

ஆடைகள் அணியத்
தேவையற்றவனின்
உதிரும் நிர்வாணம் குறித்தும்
உருகிச் சரிகிறது.

யாரென்றே இந்தக் கவிதையாலும்
கண்டுபிடிக்கமுடியாத-
அடர்கருப்புத் தாள் ஒட்டப்பட்ட
வாகனத்தில் பின்னிரவில் வந்து
அதிகாலை தொலைந்துவிடும்

மற்றொரு ஒற்றை நகரத்துவாசியின்
தனிமை மட்டுமின்றி
வாழ்க்கை பற்றியதும் கூட.

நன்றி - இனிய உதயம் - அக்டோபர் 2012.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
/// யாரென்றே இந்தக் கவிதையாலும்
கண்டுபிடிக்கமுடியாத-

அடர்கருப்புத் தாள் ஒட்டப்பட்ட
வாகனத்தில் பின்னிரவில் வந்து
அதிகாலை தொலைந்துவிடும் ///

வித்தியாசமான வரிகள் ஐயா... நன்றி...
இரசிகை இவ்வாறு கூறியுள்ளார்…
nallaayirukkunga sundarji.
நிலாமகள் இவ்வாறு கூறியுள்ளார்…
நிச‌ப்த‌மும் த‌னிமையும் பீதியுறும்ப‌டி.
vasan இவ்வாறு கூறியுள்ளார்…
ம‌ர‌ண‌த்தை விடக் கொடுமையான‌து நிராக‌ரிப்பு
நிராக‌ரிப்பை விட இருள்மையான‌து யாரும‌ற்றிருத்த‌ல்.
ஒவ்வொரு வ‌ரியும் ஒன்றை ஒன்று விஞ்சி ம‌ன‌தை
பிசைகிற‌து.....
(வாரா வார‌ம் த‌வ‌றாம‌ ப‌ஸ் ஏறுங்க‌)
அப்பாதுரை இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கவிதையும் வாசனின் பின்னூட்டமும் சேர்ந்து படிக்கும் பொழுது ஒரு sadomasochist பாணி தன்னிறைவு - இது பாவமா தெரியவில்லை.
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுந்தர்ஜி - கவிதை நன்று - வித்தியாசமான சிந்தனை - நல்வாழ்த்துக்ள் -நட்புடன் சீனா

பிரபலமான இடுகைகள்