27.9.12

ஒரு பட்டத்தின் முக்யத்வம் - பாவ்லோ கோயெலோ - 4 -


ஒரு பட்டத்தின் முக்யத்வம் (The Importance of a Degree):

ஃப்ரான்ஸின் ஒரு சிறிய கிராமத்தில், என்னுடைய பழைய ஆலை இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு பண்ணையையும் என் ஆலையையும் வரிசையாக நிற்கும் மரங்கள்தான் பிரித்தன.

ஒரு நாள் என் அண்டைவீட்டுக்காரர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு அநேகமாக எழுபது வயதிருக்கும். அவரும், அவருடைய மனைவியும் வயல்களில் வேலை செய்வதைச் சில தடவைகள் பார்த்திருக்கிறேன். இப்போது வயல்வேலைகளை நிறுத்திவிட்டார்கள்.

அவர் ஒரு இனிமையான மனிதர். ஆனால் அவருடைய கூரைகளில் என் மரத்தின் இலைகள் விழுந்துகொண்டே இருப்பதால் மரங்களை வெட்டிவிடுமாறு சொன்னார்.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. தன் முழு வாழ்நாளையும் இயற்கையுடன் நெருக்கமாகச் செலவழித்த ஒரு மனிதர், ஒருவேளை அடுத்த பத்து வருஷங்களில்  வரப்போகிற ஒரு ப்ரச்சனைக்காக, வெகு காலமாக வளர்ந்திருந்த இவற்றை எப்படி அழிக்கச் சொல்லமுடியும்?

அவரைக் காஃபிக்காக அழைத்தேன். அவரின் கூரையில் விழும் இலைகள் ( எப்படியானாலும் காற்றாலும், கோடைக்காலத்தாலும் அகற்றப்பட்டுவிடும் ) ஏதாவது சேதத்தை உண்டுபண்ணுமானால் புதிய கூரைக்கான செலவை நான் ஏற்பதாகவும், அதற்கான பொறுப்பு முழுவதும் என்னுடையது என்றும் சொன்னேன். அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அந்த மரங்களை வெட்டிவிடுவதையே விரும்புவதாகவும் சொன்னார் அண்டைவீட்டுக்காரர். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அவரின் பண்ணையைக் கூட வேண்டுமானால் வாங்கிக்கொள்வதாகவும் சொன்னேன்.

“ என் நிலம் விற்பனைக்கு அல்ல “ என்றார் அந்த மனிதர்.

“ அந்தப் பணத்தில் நகரத்தில் அழகான ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு, கடும் பனிக்காலத்தாலோ விவசாயம் பொய்த்துப்போகுமோ என்ற கவலையில்லாமலோ உங்கள் மனைவியுடன் மீதி நாட்களைக் கழிக்கலாமே”

“என் பண்ணையை விற்பதாக இல்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும் இந்த மண்ணில்தான். எனக்கும் வயதாகிவிட்டதால் இதை விட்டுப் போக மனமில்லை”

நாம் நகரத்திலிருந்து ஒரு நிபுணரை வரவழைப்போம். இந்த விஷயத்தை அவர் பரிசீலித்து ஒரு முடிவு சொல்லட்டும். நமக்குள் ஒருவர் மீது ஒருவர் கோபப்பட வேண்டாம். என்ன இருந்தாலும் நாமெல்லாம் அண்டைவீட்டுக்காரர்கள் இல்லையா என்று யோசனை சொன்னார்.

அவர் கிளம்பியபின் பூமித்தாயை மதிக்காதவர் எனவும், மழுங்கிய புத்திக்காரர் எனவும் அவரின் மேல் முத்திரை குத்தினேன். அவர் நிலத்தை விற்க மறுக்க என்ன காரணம்? என்றறிய எனக்குள் ஆர்வமாக இருந்தது. அதன் காரணம் அவர் வாழ்க்கையில் நிலைத்திருப்பது ஒரே ஒரு கதைதான் என்பதும், அதை மாற்ற என் அண்டைவீட்டுக்காரர் விரும்பவில்லை என்பதும்தான் என்று அன்றைய நாளின் முடிவில் உணர்ந்தேன். ஒரு நகரத்தில் வாழ்வது என்பது முன்பின் அறிந்திராத, வெவ்வேறுவிதமான சூழல்களிலும் மதிப்பீடுகளிலும் தன்னை மூழ்கடித்துக்கொள்வது என்பதனாலும், தான் அவற்றை எல்லாம் கற்றுக்கொள்ளும் வயதைக் கடந்துவிட்டதாகவும் அவர் நினைத்திருக்கலாம்.

இது என் அண்டை வீட்டுக்காரருக்கு மட்டுமேயான ப்ரத்யேகமானதா? இல்லை. இதுபோல எல்லோருக்கும் நிகழலாம். சில சமயங்களில், நாம் நமக்குப் பழக்கமான வாழ்க்கையோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, அற்புதமான சந்தர்ப்பங்களைத் - அவற்றோடு எப்படி நம்மை இணைத்துக்கொள்வது என்றறியாமல் - தவிர்த்துவிடுகிறோம். இவரைப் பொறுத்தவரையில் அவரின் பண்ணையும், அந்தக் கிராமமும் அவருக்குப் பரிச்சயமானவை. அவற்றை மீறி வேறெந்த ஆபத்தையும் விலைக்கு வாங்குவதில் அர்த்தமில்லை. நகரத்தில் வாழும் மக்கள் அனைவரின் நம்பிக்கையுமே ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம், திருமணம், குழந்தைகள், அவர்களும் பட்டம் பெற்றுவிடுதல் என்று ஒரேமாதிரியாய் உழல்வதில்தாகத்தான் இருக்கிறது. யார் ஒருவரும் “ நான் புதிதாய் வேறேதாவது செய்துபார்க்கலாமா?” என்று தங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

தன் மகள் சமூகவியலில் ஒரு பட்டம் வாங்கிவிடுவதற்காக இரவுபகலாக உழைத்த என் நாவிதரை எனக்கு நினைவிருக்கிறது. அவளும் கடைசியில் பட்டம் பெற்று விட்டாள். பல கதவுகளைத் தட்டி அலுத்துப்போய், ஒரு சிமெண்ட் ஆலையில் காரியதரிசியாக வேலையில் அமர்ந்தாள். ஆனபோதும் என் நாவிதர் பெருமையோடு “என் மகள் பட்டம் பெற்றுவிட்டாள்” என்று சொல்லிக்கொள்வார்.

என் அநேக நண்பர்கள், அவர்களின் குழந்தைகள் எல்லோருமே பட்டம் பெற்றவர்கள். அதற்காக அவர்கள் விரும்பிய விதத்தில் அவர்களின் பணிவாழ்க்கை அமைந்துவிட்டது என்று பொருள் இல்லை. நிச்சயமாக இல்லை. ஒரு காலத்தில், பல்கலைக்கழகங்கள் அவசியமானதாக இருந்த காலத்தில், இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு ஒருவர் பட்டம் பெறவேண்டும் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கக் கூடும். இந்த விதமாகத்தான் உலகம் அபாரமான தோட்டக்காரர்களையும், ரொட்டி சமைப்பவர்களையும் (bakers), பழங்காலப் பொருட்கள் சேகரிக்கும் வியாபாரிகளையும் (antique dealers), சிற்பிகளையும், எழுத்தாளர்களையும் இழந்துபோயிருக்கிறது. அநேகமாக இந்தச் சூழலை மறுபரிசீலனை செய்ய இதுதான் தருணம். மருத்துவர்களும், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், வழக்கறிஞர்களும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அதற்காக எல்லாருமேயா?

ராபர்ட் ஃப்ராஸ்டின் இந்த வரிகள் சொல்லும் பதிலை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Two roads diverged in a wood, and I-
      I took the one less travelled by,
And that has made all the difference.

இரு வேறு சாலைகள்
பிரியும் புள்ளியில்
யாரும்
அதிகம் பயணிக்காத
பாதையை நான்
தேர்ந்தெடுத்தேன்.
யாரும் அடைந்திராத
இலக்கை
அது பரிசளித்தது.

என் அண்டை வீட்டுக்காரர் கதையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நிபுணர் வந்தார். எந்த ஒரு மரமும் மற்றவரின் சொத்தின் எல்லையிலிருந்து மூன்று மீட்டர் இடைவெளியுடன் நடப்பட்டிருக்கவேண்டும் என்ற எதிர்பாராதபடியான ஒரு ஃப்ரென்ச் சட்டத்தைச் சுட்டிக் காட்டினார். நான் நட்டிருந்தவை இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்ததால் எல்லா மரங்களையும் வெட்டும் படியாயிற்று.

5 கருத்துகள்:

RVS சொன்னது…

அடாடா..அருமை சுந்தர்ஜி... மொழிமாற்றம் செய்த அந்தக் கைக்கு தங்கக்காப்பு போட வேண்டும். :-)

ஆ.செல்லதுரை சொன்னது…

பாவ்லோ கோயெலோவின் விருட்ச்சம் என் வீட்டு மரத்தையோ,உஙகள் வீட்டுக் கூரையையோ நினைவூட்டுகிறது.

மாநகரங்களை நோக்கி மனிதர்கள் அர்ததமின்றி விரியும் இக்கரும்பொழுதில்,எல்லோருக்குமாக அவ்ர் உரக்கக் கூவுகிறார்.

இனிமையும் அமைதியும் நிறைந்த வாழ்வை நோக்கிய திரும்புதலை நினைவூட்டுகிறார்.ப்ரஸிலில் மாத்திரமா? எதிர்வீட்டு முருங்கை காய்த்துக் கிடப்பதில் எத்தனை பேருக்கு சந்தோஷம்?

சாளரங்களில் தெறிக்கும் மழை நீரை நம்மில் எத்தனை பேர் அநுமதிக்கிறோம்?

நம் உடைமையையும், அது குறித்த அகம்பாவத்தையும் ஒரு சிறு புல்பூண்டிற்காகக் கூட நாமும், நம் சட்டங்களும் விட்டுத் தருவதாயில்லை- நகரும் கதியற்ற, அறியா அம்மரங்கள் நம் கூரைகளில் பூச்சொறிந்தாலும் கூட.

பாவ்லோ கோயெலோவின் இதயம் சுந்தர்ஜியின் சொற்களில் துடிக்கிறது.

G.M Balasubramaniam சொன்னது…


எனக்கும் அந்த மாதிரியான அனுபவம். என் வீட்டுக் காம்பௌண்ட் ஓரம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தென்னங்கன்று நட்டேன். வீட்டை அடுத்த இடத்தில் ஒரு சிறிய வீடு இருந்தது. என் மரம் வளர்ந்து பெரிதாகும் சமயம் அடுத்த வீட்டுக்காரர் அவர் வீட்டில் இரண்டு நிலைகள் ஏற்ற விரும்பினார். அதற்குத் தடங்கலாக இருந்த என் தென்னை மரத்தை வெட்டச் சொன்னார். அவர் வீடு கட்ட இடைஞ்சல் இல்லாதபடி அவ்வப்போது தென்னை மட்டைகளை வெட்டிக் கொடுத்தேன். இப்போது என் மரம் அவர்கள் வீட்டை விட்டு விலகி நிற்க பிரச்சனைகள் தடுக்கப் பட்டன. பாவ்லோ கொயாலாவின் பதிவு சில நினைவுகளை மீட்டது. நம் ஊரில் அந்தமாதிரி சட்டம் ஏதாவது இருப்பதாகத் தெரியவில்லை சுந்தர்ஜி.

அப்பாதுரை சொன்னது…

மொழியாக்கம் சுவையாகவே இருக்கிறது.
//கொய்லோவின் இதயம் சுந்தர்ஜியின் சொற்களில் துடிக்கிறது//
இது அற்புதம் செல்லதுரை.

நிலாமகள் சொன்னது…

பாவ்லோ கோயெலோ>சுந்த‌ர்ஜி>ஆ.செல்ல‌துரை... சொல்ல‌ வார்த்தைக‌ளின்றி பார‌மாகி மெள‌னித்த ம‌ன‌ம் சிந்தையை துருவுகிற‌து. நாம் உருவாக்கிய‌தை ந‌ம்மில் ஒருவ‌ரே அப்புற‌ப்ப‌டுத்த‌ ஆய‌த்த‌மாய்... இச்ச‌ட்ட‌ங்க‌ளெல்லாம் த‌ன்னிச்சையாய் திரியும் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நூறு ச‌த‌ம் செல்லுப‌டியாகிற‌தா என்ன‌...?!

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator