4.9.12

இமயம்- அந்தரங்கத்தின் பகிரங்கம்- I - இசைக்கவி ரமணன்

                                                          ரமணனும், அவர் தந்தையும்

இசைக்கவி ரமணனோடு -2010லிருந்து -எனக்கு இரண்டு வருடப் பழக்கம். இந்த இரண்டு வருடங்களில் அவரை என் ஆன்மீக குருவாக வரிக்க அவர் எழுதிய ”எல்லோர்க்கும் தந்தை இறைவன்” என்ற தலைப்பில் கனடாவில் நால்வர் பற்றி நிகழ்த்திய உரையின் 50 பக்கங்களிலான தொகுப்பும், ”இமயம்-அந்தரங்கத்தின் பகிரங்கம்” என்ற தலைப்பில் தன்னுடைய இமயப் பயண அனுபவத்தைப் பற்றிச் சொல்லும் ஓர் 20 பக்க நூலும் எனக்குப் போதுமானதாக இருந்தது.

என்ன ஒரு கொடுப்பினை! என் அன்பு மகனும் ரமணன். ஆன்ம குருவும் ரமணன்.

தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்வது போல குரு எதுவும் சொல்லவில்லை. சிஷ்யனின் எல்லா சந்தேகங்களும் தீர்ந்தன என்பதுதான் என் ஆன்மீக அனுபவமும். ஒரு சிஷ்யன் உருவாகும்போது குரு உருவாகிறார் என்னும் முதுமொழிக்கு ஏற்றதாய் இருக்கிறது ஞானத்தின் வாயிலை நான் கண்டுகொண்டதாய்த் தோன்றும் இந்நிலை.

ரமணன் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளமாய் இருக்கிறது, தொடரும் இடுகைகளில் தொடர்ந்து எழுதுவேன் என்றாலும், எட்டு அத்யாயங்களில் எழுதிய ”இமயம்-அந்தரங்கத்தின் பகிரங்கம்” வாயிலாக ரமணனின் குரல் ஒலிக்கட்டுமே! நான் சொல்லவிடுபட்டதை அது சொல்லிவிடும்.

இந்த இடுகையில் முதல் அத்யாயம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.

“இமயத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை தோன்றினால், அங்கிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று புரிந்துகொள்” என்றோர் பழைய வாசகம் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் புரிகிறது. வினாக்குறியோடுதான் விதையும் முளைக்கிறது. அது, பதிலைத் தன் நெஞ்சில் சுமந்தபடிதான் பரந்த உலகத்தைப் பார்த்து விழிக்கிறது. கேள்வியால் விழிப்புற்றது; விரிகிறது; விடை எங்கோ பின்னணிக்குச் சென்று விடுகிறது. எழுந்த கேள்விக்குத் துளியேனும் விடை தெரியாமல் எந்தக் கேள்வியும் எழுவதில்லை. விந்தை என்னவென்றால், வினா என்பது விடையின் அறிகுறியே!

எனவே, எது அழைக்கிறதோ அதைத்தான் நாம் தேடுகிறோம். எது இருக்கிறதோ, அதைத்தான் நாம் கோருகிறோம்.

ஆன்மீகத்தின் துவக்கமும், முடிவும் இதுதான்! வட்டத்தில் எது முதல்? எது முடிவு? நின்ற இடத்திலிருந்து நேரே திரும்பினால் முதலேது? முடிவேது? அடையாளங்கள் தீர்ந்து, முகவரிகள் தொலைந்து, ஆள் என்னும் எண்ணம் தவிர்ந்து, அந்தரத்தின் சத்தியம் அம்பலமாகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி, வானில் பறந்து வரலாம் பழகு என்கிறது என் குறள்.

“பாதையைக் கோரிய கணமே தொலைவை நீயே ஏற்படுத்தி விடுகிறாய்” என்பார் என் குருநாதர்.

இந்த உண்மை முதலில் எண்ணமாய்த் தோன்றி, பின் இயல்பாய்ப் பரிமளிக்கும் வரை, யாத்திரைகள் அவசியமாகின்றன. உட்காரும் வரை, தேடிச் செல்லல் இயல்பே! உட்கார்ந்த பின்னர், உண்மையில் திளைத்திருத்தல் இயல்பே! இவையிரண்டுமே மாறிமாறி நிகழ்வது யாத்திரையில் இயல்பே!

ஊர் சுற்றுவது வேறு; யாத்திரை செல்வது வேறு. ஒன்று, பொழுது போக்குவதற்காக. மற்றொன்றோ, பூரணத்தை அறிவதற்காக. எனவே யாத்ரியின் மனநிலை தனித்துவம் வாய்ந்தது. ஒருமுனைப்பட்டது. முடிவை அறிந்து முன்னேறுவது.

மேலும், யாத்திரையில் பலவற்றையும் கற்க வாய்ப்பிருக்கிறது. மாறும் மொழிகள், தட்ப வெப்ப நிலைகள், இயற்கை வளங்கள், விலங்கினங்கள், சரித்திரம், மனித குணச்சித்திரத்தின் விசித்திரங்கள் இன்னும் பலப்பலவற்றையும் புலனாக்கும் யாத்திரை. மேலோட்டமான வேறுபாடுகளும், அடிநாத ஒருங்கிணைப்பும் சேர்ந்த அதிசயமே பாரதத்தின் பண்பாடு என்பதைப் புரிய வைப்பது யாத்திரை. அந்தப் பண்பாட்டுக்கு மறுபெயர் ஆன்மீகம்.”பிறநாடுகளில், பண்பாடு மதத்தின் ஒரு பகுதி; பாரதத்திலோ மதங்கள் பண்பாட்டின் பகுதிகளே” என்பார் என் குருநாதர்.

ஆம்; ஆன்மீகம் மதங்கள் தோன்றத் தோதாயிருக்கலாம். ஆனால், அது மதங்களுக்கு அப்பாற் பட்டது, முரணானதல்ல என்றாலும்! “ எங்கே மதம் முடிகிறதோ, அங்கே ஆன்மீகம் தொடங்குகிறது”. பாரதம் வெறும் மண்ணல்ல.அது திருக்கோயில். ஆதியந்தமற்ற அறமே அதில் உறையும் தெய்வம். இந்த உணர்வுடன் நாட்டை வலம் வருவோன் யாராயினும், அவன் விடுதலை எய்துகிறான்.

அகவேட்கையின் புறவிளைவே யாத்திரை. எண்ணங்களின் ஏற்ற இறக்கங்களைப் போலவேதான், புற யாத்திரையும்! காடுமலை மேடுகள்! கடக்கத் தொடரும் தொலைவுகள்! கால் துவண்ட போதும், கண்பனிக்க வைக்கின்ற காட்சிகள்! இறுதி இலக்கு அமைதி என்று குறித்த பின்பு, இன்பத்தையும், துன்பத்தையும் யார் பொருட்படுத்தப் போகிறார்கள்?

இன்பம் நிலையற்றது எனில் துன்பம் மட்டும் நிலையானதோ?

இந்த மனநிலையோடு பயணித்து, அதுவே இயல்பாகி மனை திரும்புகிறான் யாத்ரி.

(தொடரும்)

இந்த இடுகையின் தொடர்ச்சியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://sundargprakash.blogspot.in/2012/09/ii.html

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள் சார்...

போன ஞாயிறு அன்று (02.09.2012) பொதிகை தொலைக்காட்சி பார்த்தேன்... நகைச்சுவையுடன் சிறப்பாக இருந்தது... அதையும் (கண்ணொளி) பதிவில் சேர்க்கலாமே...

vasan சொன்னது…

எப்ப‌டி ப‌திவில் தோன்றும், த‌ல‌ங்க‌ளும், த‌ள‌ங்க‌ளும். தாள‌ங்க‌ளும் ஒரு சிறு உறுத்த‌லும் இன்றி இய‌ல்பாய் உருமாறிக் கொள்கின்ற‌ன?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


இசைக் கவி ரமணனின் ரசிகன் நான் ....இப்பதிவை ஆழ்ந்து அனுபவித்து ரசித்தேன் ....

நன்றிகள் பல....சுந்தர்ஜி !

ரிஷபன் சொன்னது…

எது அழைக்கிறதோ அதைத்தான் நாம் தேடுகிறோம். எது இருக்கிறதோ, அதைத்தான் நாம் கோருகிறோம்.

வித்தியாசமான பயணத்திற்குத் தயாராகி விட்டோம்

ரவிஉதயன் சொன்னது…

நல்ல பதிவு சுந்தர்ஜி. இசைக்கவிரமணர் அருமையான மனிதர்,
அன்பான ஆத்மா அவரைப்பற்றி நாம் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதன் மூலம் அது ஈடு ஏறட்டும். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பகிர்வு...

யாத்திரை மூலம் நமக்குக் கிடைப்பன என்ன என்று படம்பிடித்துக் காட்டிய வரிகள்....

தொடரட்டும் பதிவுகள். தொடர்கிறேன் நானும்.

மோகன்ஜி சொன்னது…

அமைதியான நதியின் மெல்லிய நகர்வினைப் போல் அடக்கமாய்ப் பதிகிறது ரமணன் அவர்கள் பதிவு. குருவருள் நிறைக!

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator