1.11.10

ஹரித்வார்-II


நீள்வாக்கில் கண்ணுக்கெட்டிய தூரம் கங்கையின் பிரவாகம். பார்த்தவுடன் பிரமிக்கவைக்கும் மலைத்தொடரின் பசும்போர்வை. என்னை எப்போதும் அசைத்துப்பார்க்கும் மலையடிவாரத்தின் நீளும் நெடிய கரம். வெயில் இருந்தும் பனிமூட்டம் பரவும் தட்பம். நல்ல குளிர். விதவிதமான வண்ணங்களில் விதவிதமான பக்தர்கள். மொட்டை போட்டுக்கொண்டு-தாடியுடன்-ஊடுருவும் ஞானப்பார்வையுடன்-சிடுக்கு விழுந்து புறத்தோற்றம் குறித்த கவலை ஏதுமின்றி நிர்வாணத்துடன்-ஹூக்கா புகைத்தபடி- கைரேகை பார்த்தபடி-என்று சாமியார்கள்- ஹரித்வார்.

மறுவருடம் கும்பமேளா வர இருப்பதால் இப்போதிருந்தே அதற்கான விரிவாக்கங்கள். கங்கையைத் தூரெடுக்கும் பணி மும்முரமாயிருந்தது.வழியெல்லாம் கூடாரங்கள். கடைகள்.வினோதமான பெயர்களுடன் இனிப்புவகைகள்-சிலைகள்-பழங்கால நாணயங்கள்-முடி திருத்தும் கடைகள்-பழங்கள்-சாமியார்கள் குறி சொல்லும் ஸ்தலங்கள்-யாரையும் பொருட்படுத்தாது சிறுநீர் கழிக்கும் மக்கள்-கும்பல் நிரம்பிய உணவு விடுதிகள்.

திடீரென வேற்றுலகுக்கு வந்தது போலத்தோற்றம் தந்தது மறைந்த பேரமைதி. சுழித்தோடும் கங்கையைப் பார்த்தபடி உட்கார்ந்த வேளையில் என் பிறப்பிலிருந்து இந்த நாற்பத்தைந்து வயது வரை வந்த பாதையை அசை போடத்துவங்கியது மனம்.

பிறந்ததிலிருந்து வாழ்ந்த மிக எளிமையான சூழல்-அப்பாவின் மோசமான உடல்நிலையுடன் தொடர்ந்த என் இளம்பிராயம்-இசைக்கடிமையாய்த் திரிந்த பொழுதுகள்-தாமிரபரணி-கவிதை எழுதி திருப்தியுறாது கவிதையைத் தேடித் திரிந்த வேளைகள்- ப்ரகாஷின் தொடர்பு புரட்டிப்போட்ட என் தலையெழுத்து-பயணங்கள்-யாருக்கும் அமையாத என் அன்பு மனைவி-அவள் அளித்த அன்பின் ரசாயனம்-என் இரு உயிர்க்கொடையான மகன்கள்-என் வேகமும் பொறுமையும் கொடுத்த கொடைகள்-தத்துவவிசாரணை-உதிர்ந்துகொண்டிருக்கின்றன என் மரத்தின் பழுத்த இலைகள்.

எல்லா வெளிகளையும் சூழும் அதே வானம். எல்லா வெளிகளிலும் ஓடும் அதே நதி. ஆனாலும் இந்தக் காற்றிலும் நீரிலும் எங்கும் காணாத ஏதோ மனதை அசைக்கும் ஓர் ரகசியமும் விடை தெரியாத ஒரு புதிரும் கலந்திருப்பதாயும் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் கரைபுரண்டோடும் நீரில் கரைத்துவிட வேண்டும் போலவும் தோன்றியது.

மாலை மெல்ல அவிழத்தொடங்கி இருளின் நிழல் வீழத்தொடங்கிய வேளை. பல பெயர்களும் பல ஜாதிகளும் கொண்ட அந்திப்பறவைகள் தங்கள் கூடு திரும்பும் செய்தியை விதவிதமான கூவல்களில் தெரிவித்துகொண்டிருந்தன. மலையடிவாரங்களில் பொழுதுசாயும் சூழ்நிலையை என்னால் தாங்கமுடிவதில்லை.

மாலை தினமும் மானஸாதேவிக்கு ஆரத்தி எடுக்கும் வைபவம் மிகவும் ப்ரசித்தி நிறைந்தது. தில்லியின் திக்குமுக்காடும் போக்குவரத்து நெரிசலால் ஹரித்வாரின் மலைமேல் வின்ச்சில் பயணித்து மொத்த அழகையும் பருகும் வாய்ப்பை கைநழுவ விட்டிருந்தேன். ஆரத்தியையும் தவற விட்டுவிடக்கூடாதென்று எழுந்தேன். ஓடும் நதியின் உள்ளே அமிழ்ந்தேன். உருக்கும் குளிர் மனமெங்கும் நனைக்க மெல்ல எழுந்தேன். கண்கள் சிவப்பேறும்வரை நீரில் தங்கியிருந்தேன். கண்முன்னே தீபங்கள் மலர்கள் சூழ மிதந்து போய்க்கொண்டிருந்தன.

இருள் மெல்ல படரத் தொடங்கிய வேளை. ஆரத்திப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அந்த இசை மலையடிவாரம் முழுதும் நிறைந்திருந்தது. நதியெங்கும் தீபம் நிறைந்து ஒளிவெள்ளத்தால் மூழ்கியிருந்தாள் கங்காதேவி. கணீர் கணீரென்ற மணியொலியும் பறவைகளின் கூவலும் ஆரத்திப்பாடலும் ஓடும் ஒளிநதியும் என்னைக் கொல்லத் தொடங்கின. என்னை இழந்திருந்த ஒரு கணத்தில் விசும்பி விசும்பி அழத் தொடங்கினேன். என் தோள்களில் கைபோட்டிருந்த என் மகன் என் உடல் உணர்வுகளால் அதிர்வதை உணர்ந்து அழறியாப்பா? என்றான். நான் அழுதுகொண்டிருந்த போது என் மனம் பெற்றிருந்த அமைதியை இத்தனை நாளில் நான் உணர்ந்தவனில்லை. வேண்டுகோளற்ற ப்ரார்த்தனையாய் என் கண்ணீரை உணர்ந்தேன்.

வாழ்வின் புதிர்களையும், விடைகளையும் எனக்குள் நிரம்பச் செய்திருந்தது இயற்கையின் பேருரு. அந்த ரகசியத்தைத் தாகமடங்கா தாகத்துடன் பருகித் திளைத்திருந்த போது இருள் வெளியேயும் ஒளி உள்ளேயும் நிறைந்திருந்தது. இதுவரை உணராத புதுஉணர்வுடன் ரிஷிகேஷில் இரவு தங்கும் திட்டப்படி  பயணத்தைத் தொடர்ந்தேன்.

(அடுத்த பதிவில் ரிஷிகேஷ் அனுபவம்)

7 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

காலம்,வெளி,காட்சி,மனிதர்,மனம் என கவிதையின் சாரம் சரம் சரமாய் பூக்கும் மொழி.அனுபவம் - விகாசமாய்.அழகிய பதிவு.

vasan சொன்னது…

//இருள் வெளியேயும் ஒளி உள்ளேயும் நிறைந்திருந்தது//
உங்கள் எழுத்து என்னையும் இழுத்து, நதியில் முழ்க‌ வைத்த‌து.
திருதிராஷ்ர‌னுக்கு, ச‌ஞ்ச‌ய‌ன் போல் ஹ‌ரித்வார், கங்கை தரிச‌ன‌ம் க‌ண்டேன்.
குளிரில்லை, ஆனால் நடுக்க‌ம் உண‌ர்கிறேன் சுந்த‌ர்ஜி.

Harani சொன்னது…

சுந்தர்ஜி..

பயணப் பதிவுகூட ஒரு கவிதையைப் போலவே சொல்லுகிற திறன் கண்முன்னே காட்சியாக விரிகிறது தானே கண்டது போல. வாழ்த்துக்கள்.

நிலா மகள் சொன்னது…

அதிக உணர்தல்கள் உதிரும் பழுப்பிலைகளைக் கனப்படுத்தி விடுகின்றன... கவித்துவமான பயண அனுபவங்களால் தென்றலென வருடிச் செல்லும் கனமற்றிருப்பது சுகம். மறுபடி மறுபடி துளிர்த்தலில் உயிர்த்திருக்கும் மரமாவது பரம சுகம்.

நிலா மகள் சொன்னது…

சைக்கிளின் யானை உண்மையிலேயே அற்புதம்! ஞானபுத்திரனின் உயிரிலை சாட்டை சொடுக்கல்! உத்தமமான ரசனைக்கு சல்யுட் !

ரிஷபன் சொன்னது…

அந்த கடைசி பாரா..
பர்வத மலையை விட்டு மூன்றாவது நாள் இறங்கிய போதும் அதே அழுகை எனக்குள். இயற்கையின் அரவணைப்பில் போனதும் விட்டு வர மனசில்லை. இதனால்தான் அந்த நாட்களில் வனப்ரஸ்தம் போனார்களோ..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சைக்கிள்.

ஆழ்ந்த ரசனை உங்களது வாசன். நன்றி.

கவிதையைக் கண்ட ஹரணிக்கு என் நன்றி.

பாராட்டுக்கு நன்றி நிலாமகள்.

வானப்ரஸ்தம் நம் லௌகீக பந்தங்களை உதறவும் தத்வார்த்தமாக நம்மை இயற்கையுடன் பிணைத்துக்கொள்ள மிகவும் உதவியிருக்கக் கூடும்.அது வாழ்வின் இறுதி நாள் சிக்கல்களையும் பெருமளவில் தீர்த்துவைத்திருந்திருக்கும்.நன்றி ரிஷபன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...