14.6.11

பாவனை




















1.
முதலாவது
சொன்னபடிக்குப்
பாடம் படிக்கவில்லை.
அடுத்ததோ
சாப்பிடுவதற்குப்
பிடிவாதம்.
-’இரண்டையும்
வைத்துக் கொண்டு
எப்படித்தான்
சமாளிக்கப்போகிறேனோ’-
அலுத்துக்கொண்டது
அம்மா வெளியில்
போயிருந்தபோது
பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்.

2.
மூடிக்காட்டிய
குழந்தையின்
விரல்களைப் பிரிக்க
ஒண்ணுமில்லியே
என்று சிரித்தது.
குழந்தைகளால்
மட்டும்தான்
இயலுகிறது
ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும்.

3.
பூவா தலையா
என்றான் பெரியவன்.
பூ என்றதும்
தலை விழ
இல்லையில்லை
தலை என்றான்
சின்னவன்.
பூவும் தலையும்
ஒரு பாவனைதான்
எப்போதும்
சின்னவன்
ஆடத் துவங்குமுன்.

18 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

இந்த‌க் குழ‌ந்தைக‌ளின் பாவ‌னை ர‌சித்து மாளாது. குழ‌ந்தைக‌ளைப்ப‌ற்றி பேசினால், எழுதினால்... நினைத்தால் கூட‌ குதூக‌ல‌ம் வ‌ந்து ஒட்டிக் கொள்ளும் ந‌ம்மோடு.

நிலாமகள் சொன்னது…

இந்த‌ பிளாக‌ர் சேட்டைக்கார‌ன் தூங்க‌ப் போயிருக்கிறானோ... பின்னூட்ட‌ங்க‌ள் இடையூறின்றி போட‌ முடிகிற‌தே!!!!!

க ரா சொன்னது…

குழந்தைகளாக மாறிவிட துடிக்கிறது மனசு... அருமையான கவிதைகள் சுந்தர்ஜீ ... நன்றி...

Ramani சொன்னது…

இந்த பாவனைகளுக்காகவாவது
குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா
என ஏக்கம் மனதில் எழுகிறது

A.R.ராஜகோபாலன் சொன்னது…

முதலாவது
சொன்னபடிக்குப்
பாடம் படிக்கவில்லை.
அடுத்ததோ
சாப்பிடுவதற்குப்
பிடிவாதம்.
-’இரண்டையும்
வைத்துக் கொண்டு
எப்படித்தான்
சமாளிக்கப்போகிறேனோ’-
அலுத்துக்கொண்டது
அம்மா வெளியில்
போயிருந்தபோது
பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்.

குழந்தை
தன் தாயின்
பிம்பத்தை
தனதாக்கி கொண்ட
கனம் அது
ஆண்டவைப்போலே
எல்லாக்
குழந்தைகளும்
ஒரே மாதிரியே ...............

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மூடிக்காட்டிய
குழந்தையின்
விரல்களைப் பிரிக்க
ஒண்ணுமில்லியே
என்று சிரித்தது.
குழந்தைகளால்
மட்டும்தான்
இயலுகிறது
ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும்.

ஒன்றும்
அறியாத போதுதான்
ஒவ்வொன்றையும்
அழகாய்
ரசிக்க முடியும்
என்பதை அழகாய் சொல்லி இருக்கீங்க அண்ணா

A.R.ராஜகோபாலன் சொன்னது…

பூவா தலையா
என்றான் பெரியவன்.
பூ என்றதும்
தலை விழ
இல்லையில்லை
தலை என்றான்
சின்னவன்.
பூவும் தலையும்
ஒரு பாவனைதான்
எப்போதும்
சின்னவன்
ஆடத் துவங்குமுன்

விட்டுக்கொடுத்தலின்
துவக்கம்
தன் இளையவனிடம் தான்
தொடங்குகிறது இல்லையா அண்ணா
என்னை நீங்கள் ரசிப்பது போல.........

கே. பி. ஜனா... சொன்னது…

'The Child is the Father of the Man..' என்ற அழகிய வோர்ட்ஸ்வொர்த் கவிதை வரி நினைவு வருகிறது உங்கள் அழகிய கவிதையைப் படித்ததும்.

ரிஷபன் சொன்னது…

குழந்தையின் மன நிலை கைவரப் பெற்றுவிட்டால்!
நிலாமகளை அப்படியே ஆமோதிக்கிறேன்..
//குழ‌ந்தைக‌ளைப்ப‌ற்றி பேசினால், எழுதினால்... நினைத்தால் கூட‌ குதூக‌ல‌ம் வ‌ந்து ஒட்டிக் கொள்ளும் ந‌ம்மோடு.//

G.M Balasubramaniam சொன்னது…

காணும் நிகழ்வுகள் எப்போதுமே வெறும்
நிகழ்வுகள் அல்லாமல் சூட்சுமமாக வாழ்வை உணர வைப்பதை உணர்ந்து எழுதும் சுந்தர்ஜி, உங்கள் கவிதைக்கு ஒரு பெரிய “ ஓ”. வாழ்த்துக்கள்.

மிருணா சொன்னது…

படமும், பாவனைகளும் அருமை. மூன்றாவது கவிதை மிகவும் அருமை.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

//குழந்தைகளால் மட்டும்தான்
இயலுகிறது ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும்//
அழகு

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்
அலுத்துக்கொண்டது அருமை

ஆம் ஒன்றுமில்லாததைப்
பார்க்கவும் சிரிக்கவும் குழந்தைகளால் மட்டுமே முடியும்.

பூவா தலையாவும் ஜோர் தான்.

குழந்தைகள் என்றாலே எது செய்தாலும், பேசினாலும் அது குதூகுலம் தான். நல்ல பதிவு.

ஹேமா சொன்னது…

குழந்தைகளோடு குழந்தகளாக மாறி ரசித்து எழுதியிருக்கிறீகள் சுந்தர்ஜி.கள்ளமில்லாச் செல்வங்கள் !

RVS சொன்னது…

கதையா ... கவிதையா என்றது மனசு...
கவிதையாய் கதையும்...
கதை போல கவிதையும்....
எங்கே கிடைக்கும்... கேட்டது புத்தி..
சுந்தர்ஜிடம் என்றது மனஸ்.

ச்சும்மா... ஒரு ட்ரை.... பினாத்தலாக இருந்தால் அந்தக் குழந்தைகளைப் போல மன்னித்துவிடுங்கள்... ;-)

சமுத்ரா சொன்னது…

மூன்றும் அருமை..

கமலேஷ் சொன்னது…

மூன்றுமே ரொம்ப எதார்த்தமா இருக்கு சுந்தர் சார்..
உங்களின் இரண்டாவது கவிதையை படிக்கும் போது
அதை போலவே எழுதிய பா.ராவின் பழைய கவிதை ஒன்றும் நினைவிற்கு வந்தது.
-----------------------------------
இறுக மூடிய கைகளை நீட்டி
"கைக்குள்ள என்ன சொல்லு பார்போம்?"
என்றாள்.

கைகளை தொட்டுத் தடவி
இன்னதென்றேன்.

இன்னது, இன்னது என்றேன்.

ஒருவேளை இன்னதோ என்று கூட
சொல்லிப் பார்த்தேன்.

"ஒண்ணுமே இல்லையே.." வென
கைகளை விரித்து
சிரித்துப் போனாள்.

ஒன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?

- பா.ராஜாராமன் -

Matangi Mawley சொன்னது…

முதல் கவிதை- அருமை...
குழந்தை மனத்தை குழந்தை உள்ளம் படைத்தவர்களே அறிவர். ரசிப்பார். இப்படி அறிபவர்களையும், ரசிப்பவர்களையும்- அழகாக கவிதை மூலம் இணைத்து விட்டீர்கள்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...