26.3.12

அப்பாவின் நாட்குறிப்பு.
























எப்போதோ வந்த ஒரு ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து
அப்பா இந்த நாட்குறிப்புகளை எழுதி வந்திருக்கிறார்.

முதன்முதலில் செய்த சாகசங்கள்-
பிரத்தியேகமாய்த் தயாரிக்கப்பட்ட விருந்துக் குறிப்புகள்-
யாரிடமோ பெற்ற அவமானங்கள்-
தோற்றுப்போன ஒரு கால்ப்பந்தாட்டப் போட்டி-
சைக்கிள் புதிதாய் வாங்கிய செலவுக்கணக்கு.

நிறைவேறாத தீர்மானங்கள்-
அலுவலக அரசியலின் காழ்ப்பு-
பாதியில் அறுந்து போன கனவுகள்-
குடும்பத்தின் சுற்றுலாத் திட்டக் குளறுபடிகள்-
எதிர்பாராத(?) மரணங்களின் தாக்குதலகள்.

எழுத எதுவுமில்லாது போன பக்கங்களில்
பழைய சினிமாப்பாடல்களின் முதல்வரியையும்
அந்தமாதத்து மளிகைசாமான்களின் பட்டியலையும்
எழுதிவைத்திருக்கிறார்.

அம்மாவைப் பற்றியும் என்னைப் பற்றியும்
மனதில் எழுதப்பட்ட குறிப்புகள் எந்தப் பக்கத்திலும் இல்லை.
அவசரநிலைப்பிரகடனமும்
இந்திரா சுடப்பட்டதும் சீக்கியர்கள் அழிக்கப்பட்டதும்
அவரது விமர்சனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது

சில வாரங்கள் எழுதாமல் இருந்து பார்க்கலாம்
என்று இருந்துவிட்டது போலத் தெரிகிறது.
சில வாரங்கள் எழுவதற்குத் தயக்கமூட்டக்கூடிய
மொழிக்குப் பயந்து தவிர்த்திருக்கலாம்.

எழுதாமல் விடப்பட்ட சில பக்கங்கள்
மிகவும் கிளர்ச்சியூட்டுவதாயும்
எட்டமுடியாத நினைவின் சுவர்களைக்
எவ்விப்பார்ப்பதாயும் இருக்கிறது..

நாட்குறிப்பின் மொழி உண்மையானதாக இருக்கவேண்டும்
மற்றவர்களின் நாட்குறிப்புக்குள் அத்துமீறி நுழையக்கூடாது
என்று நாட்குறிப்பு தொடர்பான நிபந்தனைகள்
அச்சமூட்டுபவையாகவே இருக்கின்றன என்பதாலும்
அப்பாவைப் போல நான் நாட்குறிப்புகள் எழுதமுயலவில்லை.

அதிலும் ஒரு ஆதாயம் இருக்கிறது.
அப்பாவின் நாட்குறிப்புகளைப் படித்தபின் கிளர்ந்து
இப்படி ஒரு கவிதைக்கு முயன்றது போல்
அநாவசியமாக
என் மகன் வேறொரு கவிதைக்கு முயலவேண்டியதில்லை.

8 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

நாட்குறிப்புகள் எழுதப்படாவிட்டால் என்ன? கவிதைகளென அவதரிக்கும் மனக்குறிப்புகள் என்றேனும் எவரையும் கிளர்ந்தெழச் செய்யக்கூடும் நாட்குறிப்பெழுதவோ கவிதையொன்றை எழுதவோ!

Matangi Mawley சொன்னது…

Diary எழுதுவதும் ஒரு art தான்... நமக்கு அது என்னிக்கும் எழுத முடிஞ்சது கிடையாது...
கடேசி வரி class !!!

raji சொன்னது…

உங்கள் மகன் உங்கள் நாட்குறிப்பு பார்த்து வேண்டுமானால் வேறொரு கவிதைக்கு முயல வேண்டாம்.ஆனால் உங்கள் எழுத்துக்களின் தாக்கம் என்றேனும் வேறொரு கவிதைக்கோ எழுத்துக்கோ வித்தாகலாம்.எழுத்துக்கள் என்றுமே பிறரின் எண்ணங்களை கிளர்ந்தெழ செய்பவையே

G.M Balasubramaniam சொன்னது…

1957- முதல் சுமார் ஏழு ஆண்டுகள் டைரி எழுதி வந்திருக்கிறேன். அந்தக் காலத்திய என்னை மறக்காமல் இருக்க முடிகிறது. மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன். ஆனால் தினக் குறிப்பாக இல்லை. இப்போது படித்துப் பார்க்கும்போது எழுதியவை அநேகமாக மனம் சஞ்சலத்தில் இருக்கும் போது எழுதியவை. இப்போது நிறைய வலைப் பூக்களில் வரும் பதிவுகளை விட சுவையாகவே இருக்கிறது.இதைப் படித்தபிறகு மீண்டும் என் டைரியை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது சுந்தர்ஜி.

Ramani சொன்னது…

எழுத்தாளர்களின் எண்ண வோட்டங்கள் எல்லாம்
எழுத்துக்களாக பரிமளிக்கையில் நாட்குறிப்பில் எழுத
என்னதான் மிச்சமிருக்கும்.அப்படி ஒருவேளை
எழுதப்பட்டாலும் அது வண்ணான் கணக்குப் போல
எதற்கும் ஆகாததாகத்தான் இருக்கும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

ரிஷபன் சொன்னது…

எழுதாமல் விடப்பட்ட சில பக்கங்கள்
மிகவும் கிளர்ச்சியூட்டுவதாயும்
எட்டமுடியாத நினைவின் சுவர்களைக்
எவ்விப்பார்ப்பதாயும் இருக்கிறது..

என் மகன் வேறொரு கவிதைக்கு முயலவேண்டியதில்லை

ஆஹா!

ஹேமா சொன்னது…

என் அப்பாவின் நாட்குறிப்பை ஒளிச்சு வச்சு வாசிச்சது ஞாபகம் வருகிறது.பொக்கிஷக் குறிப்புகள் !

Er.Rajkumar P.P சொன்னது…

நெகிழ வைக்கும் வரிகள்! அருமை!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...