9.9.12

வேண்டாம் 71 (அல்லது) உலக நீதி ( I )


எப்படியெல்லாம் தலைப்பு வெச்சுப் படம் போட வேண்டியிருக்கு தூண்டில் போட்டு மீனைப் பிடிக்க?

இந்த வேண்டாம் 71- பற்றிச் சொல்லச் சொல்ல உங்களால் நம்பவே முடியாது . நீங்கள் போன தலைமுறையில் கூரைக்குக் கீழே கைகளைக் கட்டிக்கொண்டு  காது கிழிய ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என்று பள்ளிக்கூடக் கூரைக்கட்டிடத்தையே கிடுகிடாய்க்க வைத்த அதே விஷயம்தான் இந்த வேண்டாம் 71.

கிட்டத்தட்ட உங்களுக்குப் புரிஞ்சு போச்சு. எந்தக் காலமென்றும், எந்த ஊரில் வாழ்ந்தார் என்ற சுவடுகளை எதுவும் விட்டுச் செல்லாத திரு.உலகநாதன், பிள்ளையார் சுழி போட்டு காப்பெழுதினாலும், தான் ஒரு அசைக்கமுடியாத முருக பக்தன் என்பதை,  அவர் எழுதிய பதிமூன்று எண்சீர் விருத்தச் செய்யுள்களின் ஈற்றடிகளிலும் மறவாமல் அடையாளம் காட்டுகிறார்.

எனக்கென்னவோ அவரின் பெயரும், அவரின் முருக பக்தியும் அவரை திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்தவராகவே அடையாளப்படுத்துகிறது என்றாலும் அவர் நம் அழகான தமிழுக்குச் சொந்தமானவர்.

ஒவ்வொரு செய்யுளிலும் தோராயமாக ஆறு ஆறு வேண்டாம்களை அவரது அனுபவத்தாலும், ஆழ்ந்த தத்துவச் செழுமையாலும் இன்றைக்கு வாசிக்கும்போது எப்படி இத்தனை தீர்மானமாக ஆணியடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இவரின் நதிமூலம் மட்டுமல்ல தமிழ்ச் சிந்தனையின் நதிமூலமும் சென்றடைவது 2000 வருஷத்துக்கு முந்தைய பாட்டன் வள்ளுவனின் வீட்டை நோக்கித்தானே!     

இனி உலகநீதியின் 71 வேண்டாம்கள் என்னென்ன என்று புகுந்து பார்க்கலாம். பயப்படவேண்டாம். ஒரு இடுகைக்கு 20 வேண்டாம்கள்.

வேண்டாம்-71

1. கற்றதையும், கற்க இருப்பவற்றையும் -மீண்டும் மீண்டும்- ஒவ்வொரு நாளும் படிக்காமல் இருக்க வேண்டாம்.

2.  யார் மீதும் வீண்பழி சுமத்தி சங்கடப்படுத்த வேண்டாம்.

3. தாயை எந்தச் சூழ்நிலையிலும் மறக்கவோ கைவிடவோ வேண்டாம்.

4. சொல்லும் செயலும் பொருந்தாத கயவர்களோடு சேர வேண்டாம்.

5.  செல்லத் தேவையில்லாத இடங்களுக்குப் போக வேண்டாம்.

6. ஒருவருக்குப் பின்னால் அவரைப் பற்றிய அவதூறுகள் சொல்லவேண்டாம்.

7.  பொய் என்று தெரிந்தும் அதைச் சொல்ல வேண்டாம்.

8. நிலையற்ற செயல்களை நிலைநிறுத்த முயலவேண்டாம்.

9. விஷத்துடனும், அதற்கு ஒப்பானவர்களோடும் பழக வேண்டாம்.

10. ஒத்த சிந்தனையும், நட்பின் தரமும் அறியாதவர்களோடு பழக வேண்டாம்.

11. தகுந்த துணையில்லாமல் நீண்ட பயணம் போகவேண்டாம். 

12. நம்பி வந்தவர்களை ஒருபோதும் கெடுக்க வேண்டாம்.

13. காலும், மனமும் போன போக்கில் போக வேண்டாம்.

14. முன்பின் தெரியாத மாற்றானை உறவாக நம்ப வேண்டாம்.

15. உழைத்து உண். உபரி செல்வத்தைப் பயன்படாது புதைத்து வைக்க வேண்டாம்.

16. தர்மங்களை போதி. கடைப்பிடி. ஒருபோதும் கைவிட வேண்டாம்.  

17. கோபத்தால் பெரும் துன்பங்களைத் தேடிக்கொள்ள வேண்டாம். 

18. நம்மீது நெடுநாள் கோபமாயிருப்பவர்கள் வாசலை மிதிக்கவேண்டாம்.

19. பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி வாழ வேண்டாம்.

20. கொலை, களவு செய்யவோ, செய்பவர்களோடு பழகவோ வேண்டாம். 

( சொச்சம் 51ம் தவணைகளில்- வரும் இடுகைகளில்)  

இந்த இடுகையின் தொடர்ச்சியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.


http://sundargprakash.blogspot.in/2012/09/71-ii.html

5 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

எப்படியெல்லாம் தலைப்பு வெச்சுப் படம் போட வேண்டியிருக்கு தூண்டில் போட்டு மீனைப் பிடிக்க?


:)))

அறிய‌க் கிட‌ப்ப‌வை ஆயிர‌மாயிர‌ம் அட்ச‌ய‌பாத்திர‌மாய்... த‌ங்க‌ள் கைவிர‌ல்வ‌ழிக் க‌சியும் துளிக‌ள் எம‌க்கு பிர‌ம்மாண்ட‌மாய்... ச‌க்ர‌வாக‌ப் ப‌ற‌வையாய்க் காத்திருக்கிறோம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


வேண்டும்...வேண்டும்..என்று மீண்டும்..மீண்டும் ..கேட்கத் தூண்டுகிறது உங்கள் வேண்டாம் 71!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேண்டாம்,, வேண்டாம்.. அல்ல
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தூண்டிலல்லவா நீங்கள் போட்டது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன அனைத்தும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்...

இன்றைய இருபதும் சேமித்து வைத்தேன்.... அடுத்த பகுதிக்காய் காத்திருப்புடன்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டாங்(ம்)கள்...
சேமித்துக் கொண்டேன்... நன்றி சார்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...