10.9.12

அசோகமித்திரன் - 82

விருட்சம் அழைக்கிறது.

அசோகமித்திரன் - 82

தலைமை : கி.அ.சச்சிதானந்தம்

உரை வழங்குபவர்கள்:
____________________________

இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, அம்ஷன்குமார், திலீப்குமார், ஞாநி, கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், பத்மா, ராஜாமணி, குரு, இரா.முருகன், ஆர்.ராஜகோபாலன், ம.வே.சிவக்குமார், ரவி சுப்பிரமணியன், பழ.அதியமான், சுந்தர்ஜி, க்ளிக் ரவி, அழகிய சிங்கர், திருப்பூர் கிருஷ்ணன் ( அமுதசுரபி ), ஆர்.வெங்கடேஷ் ( கல்கி ), தேவிபாரதி ( காலச்சுவடு ), பத்ரி ( கிழக்கு ), மனுஷ்யபுத்திரன் ( உயிர்மை) 

சிறப்புரை : அசோகமித்திரன்

கூட்டம் நடக்குமிடம் :

பாரதியார் இல்லம், துளசிங்கப்பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005

தேதி : 22.09.2012 ( சனிக்கிழமை )

நேரம் : மாலை 5 மணி முதல்.

கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் 5 நிமிடங்கள் அசோகமித்திரனைப் பற்றிப் பேச இசைந்திருக்கிறார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

*******************************************

நண்பர்களே-

அசோகமித்திரனின் எழுத்துக்களோடு எனக்குக் கிட்டத்தட்ட 30 வருட பந்தமுண்டு. சினிமா பார்க்கவென்று அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு , சினிமாவுக்குப் பதிலாக அசோகமித்திரனை வாங்கி வாசிக்கத் துவங்கிய தருணங்கள்தான் சங்கர்லால் மற்றும் இரும்புக்கை மாயாவிகளிடமிருந்து நான் பயணப்பட்டிராத வேறொரு மாய உலகுக்கு என்னைக் கூட்டிப்போயின. 

அவரின் ”வாழ்விலே ஒரு முறை”யை, குட்டி போட்ட பூனை போல நான் கழிப்பறையைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தூக்கிச் சுமந்திருக்கிறேன்.  அநேகமாக என்னுடைய பைபிள் என்று சொல்லும் விதத்தில் என் மீது ஆளுமை செலுத்தியது அது. ”ஒற்றன்”, ”இன்று”, ”கரைந்த நிழல்கள்”, ”18வது அட்சக் கோடு” ஆகிய நாவல்கள் அது எழுதப்பட்ட நாட்களிலேயே மிகப் புதுமையான முயற்சிகள். அவற்றின் மீதான என் வியப்பும், வாசிப்பும் இன்னும் தணியவில்லை.

அசோகமித்திரன் ஒரு நல்ல கவிஞர் என்பதையும், அங்கதச்சுவை சொட்டும் ஆழமான எழுத்தாளர் என்பததையும் அவரின் உரைநடை சாட்சி சொல்லும். ஆனாலும் அவர் தனியாக இதுவரை கவிதைகள் எதுவும் எழுதியதில்லை என்பது மட்டும்தான் இன்று வரை நான் அசோகமித்திரனிடம் பெற்ற ஒரே ஏமாற்றம். 

பல சிறுகதைகளையும், பல நாவல்களையும், ஏராளமான -சிறுகதைகளைத் தூக்கிச் சாப்பிடும்- கட்டுரைகளும் எழுதிய அ.மி.யிடம் நான் கற்றுக்கொண்ட பாலபாடம் சிக்கனமாக, வார்த்தைகளை விரயம் செய்யாது எழுதுவது என்பதைத்தான். 

மதச்சார்பின்மை என்ற ஒரு கெட்ட வார்த்தை அடிக்கடி புழக்கத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், தன் சுயநம்பிக்கைகளை, தன் சார்புகளை ஒரு இம்மியளவும் தன் படைப்புக்களில் திணிக்காத அ.மி.யிடம் தான் மதச் சார்பின்மை என்றால் என்ன என்பதோடு ஒரு எழுத்தாளனின் மூக்குநுனி எதுவரை  என்பதையும் நான் கற்றேன். 

அவரின் உடலுக்கு 82 வயது. அவரோடு எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டென்றாலும், பல தடவைகள் அவரோடு தஞ்சாவூரிலும், புதுச்சேரியிலும், சென்னையிலும் இருந்ததுண்டு என்றாலும், மேற்கண்ட நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு 5 நிமிடங்கள் பேசுகிறேன் என்பது எனக்குக் கிடைத்த பேறு.

என்னை விடவும் நல்ல எழுத்துக்களை எழுதும், அ.மி.யை நேசிப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு வாய்ப்பு என்பது ஒரு ப்ரகாசமான நாளில் எனக்குக் கிடைத்த லாட்டரிதானே? 

”நவீன விருட்சம்”  அழகியசிங்கருக்கு என் ப்ரத்யேக நன்றிகள்.

வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் நிகழ்ச்சிக்கு வாருங்கள். கிட்டாதவர்கள் அந்தக் கலைஞனை மனமார வாழ்த்துங்கள்.

இதுவரை அசோகமித்திரனை வாசிக்காதவர்கள் அதை வெளியில் சொல்லிக்கொள்ளாமல் இப்போதிலிருந்து வாசிக்கத் துவங்குங்கள்.

8 கருத்துகள்:

கோவை மு சரளா சொன்னது…

அவரின் எழுத்துகளுக்கு நானும் கூட அடிமைதான் நேரில் சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருகிறது என் சார்பாகவும் பேசி வாங்க வாழ்த்துகளோடு // கழிப்பறையைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தூக்கிச் சுமந்திருக்கிறேன். // நானும் கூட உங்கள் எழுத்தில் என்னை பார்கிறேன் ............நன்றி நண்பா

சே. குமார் சொன்னது…

அருமையான எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள்.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! 80 களின் துவக்கத்தில் த.மு.எ.ச சென்னையில் நாவல்பயிற்சி முகாம் நடத்தியது. நாவலாசிரியர்களை வரவழைத்து அவர்கள் முன்னால் அவர்கள் எழுதிய நாவலை விமரிசித்து அவர்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் பயிற்சியும் உண்டு அசொகமித்திரனின் "தண்ணிர்" என்ற நாவலை அடியேன் விமரிசித்தேன்.அசொகமித்திரன் வந்திருந்து தன் கருத்துக்களை சொன்னார்! ஆற்பாட்டமில்லாத எழுத்துக்கும்,பேச்சுக்கும் சொந்தக்காரர். திரப்படத்துறை பற்றியும் அவரால் சொல்லமுடியும்.அவர் ஆரோக்கியமான மன அமைதியோடு கூடிய நீண்ட ஆயுளொடு வாழ வாழ்த்துகிறேன். ---காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

அடேங்கப்பா -- எவ்வளவு பெரிய மனிதர்- மனிதர்கள்- அவர்களோடு பேசும் பழகும் வாய்ப்பு.
எனக்கு சுந்தர்ஜியை -- இல்லையில்லை சுந்தர்ஜிக்கு என்னைத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
வாழ்த்துக்கள்

ரிஷபன் சொன்னது…

தன் சுயநம்பிக்கைகளை, தன் சார்புகளை ஒரு இம்மியளவும் தன் படைப்புக்களில் திணிக்காத அ.மி.யிடம் தான் மதச் சார்பின்மை என்றால் என்ன என்பதோடு ஒரு எழுத்தாளனின் மூக்குநுனி எதுவரை என்பதையும் நான் கற்றேன்.

அவரின் எளிமை.. தம் பிராபல்யம் பற்றிய அலட்டல் இன்றி இயல்பாய் பேசும் தன்மை.. அவர் வீட்டில் எனக்குக் கிடைத்த சொர்க்கம்.

எல் கே சொன்னது…

சமீப காலமைதான் அவரது எழுத்துகளை வாசிக்கத் துவங்கினேன். கட்டிப்போடும் எழுத்து நடை

பத்மா சொன்னது…

miss pannave koodaathu ...god wills ..

RVS சொன்னது…

இப்படி ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நேரமிருப்பின் அவசியம் கலந்துகொள்கிறேன். உங்களது பேச்சைக் கேட்கவும் அவா!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...