6.9.12

சென்னையே! எழுந்து வா!

 

ஓரியண்டல் ஹோட்டல்
யோகோஹாமா
10 ஜூலை, 1893.

அன்புள்ள அளசிங்கர், பாலாஜி, ஜி.ஜி., மற்றும் சென்னை அன்பர்கள் அனைவருக்கும்,

எனது செயல்களைப் பற்றித் தொடர்ந்து உங்களுக்குத் தெரிவிக்காததற்காக என்னை மன்னியுங்கள். தினமும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கிறது. அதிலும் என்னைப் பொறுத்தவரை, பொருட்களைச் சொந்தமாகக் கொண்டு அவற்றைப் பாதுகாக்கின்ற வாழ்க்கை முற்றிலும் புதியது. எனது சக்தியில் பெரும்பகுதியை அது விழுங்கிவிடுகிறது. உண்மையிலேயே அது ஒரு பெருந்தொல்லைதான்.

பம்பாயிலிருந்து கொழும்பு போய்ச்சேர்ந்தோம். சிங்களர்களின் உடையும் முகமும் உங்கள் தமிழர்களுடையது போல்தான் இருக்கிறது. அவர்களது மொழி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மொழியைப் பொறுத்த வரையில், உச்சரிப்பைக் கேட்டால் அது உங்கள் தமிழ் போலவே உள்ளது.

ஜப்பானியரைப் பற்றி என் மனத்திலுள்ள அனைத்தையும் இந்தச் சிறு கடிதத்தில் எழுதி முடிக்க இயலாது. ஒரு விருப்பம் மட்டும் எனக்கு உண்டு; நம் இளைஞர்கள் ஆண்டு தோறும் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போக வேண்டும். இந்தியா சிறப்பும் நன்மையும் நிறைந்ததோர் கனவுலகம் என்றே ஜப்பானியர் இன்னும் கருதியிருக்கின்றனர்.

ஆனால், நீங்களோ, நீங்கள் என்ன மக்கள்!...வாழ்நாள் முழுவதும் வெட்டிப் பேச்சு, வீண் பிதற்றல், நீங்கள் என்ன மக்கள்! வாருங்கள், இந்த மக்களை வந்து பாருங்கள், திரும்பிப் போய் வெட்கத்தில் உங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள். வெறும் கிழட்டு இனம், வெளியே வந்தால் உங்கள் ஜாதி போய்விடுமே! பல நூற்றாண்டுகளாக, உருண்டு திரண்டு பெருகிக்கொண்டே போகின்ற மூடநம்பிக்கைச் சுமை உங்கள் தலையை அழுத்திக்கொண்டிருக்கிறது. 

இந்த உணவா? அந்த உணவா? இது தீண்டத் தக்கதா? தீண்டத்தகாததா? என்றெல்லாம் வாதம் செய்வதிலேயே ஆற்றல் முழுவதும் விரயமாகிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துள்ள சமுதாயக் கொடுமை உங்கள் மனிதத் தன்மை முழுவதையும் நசுக்கிப் பிழிந்தெடுத்து விட்டது. 

நீங்கள் என்ன மக்கள்! இப்பொழுதும்தான் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் புத்தகங்களை ஏந்திக் கடற்கரையில் உலவியபடி, ஐரோப்பியரின் மூளை கண்டுபிடித்த துணுக்குகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள்; முப்பது ரூபாய் சம்பளத்திற்கான குமாஸ்தா வேலைக்காக, மிஞ்சிப்போனால், இளைய இந்தியாவினுடைய ஆசையின் உயர்வரம்பான ஒரு வழக்கறிஞன் ஆவதற்காக முனைந்து நிற்கிறீர்கள். 

இதில் நமது ஒவ்வொரு மாணவரின் காலடியிலும் ‘சோறு போடு’ என்று கேட்டவாறு நெளிகின்ற பட்டினிக் குழந்தைகளின் கும்பல் வேறு. இது அல்லவா உங்கள் லட்சணம். உங்களையும், உங்கள் புத்தகங்களையும், கோட்டுகளையும், பல்கலைக் கழகச் சான்றிதழ்களையும் மூழ்கடிக்கக் கடலில் போதிய அளவு தண்ணீரா இல்லாமல் போய்விட்டது? 

வாருங்கள், மனிதர்கள் ஆகுங்கள்! முன்னேற்றத்திற்கு எப்போதும் முட்டுக்கட்டையாக நிற்கின்ற புரோகிதக் கூட்டத்தை உதைத்துத் தள்ளுங்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள், அவர்களது இதயம் ஒருபோதும் விரிந்து பெரிதாகாது. பல நூற்றாண்டுகளின் மூட நம்பிக்கை மற்றும் கொடுங்கோன்மையின் வாரிசுகள் அவர்கள். முதலில் புரோகிதத்துவத்தை வேருடன் பிடுங்கி எறியுங்கள். 

வாருங்கள், மனிதர்களாக ஆகுங்கள். உங்கள் குறுகிய வளைகளில் இருந்து வெளியேறி, பார்வையை விரியுங்கள். நாடுகள் முன்னேறுவதைப் பாருங்கள். மனிதனை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள், உயர்ந்த சிறந்த விஷயங்களுக்காக நாம் பாடுபடுவோம்.

பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள், அது மட்டும் வேண்டாம். மிக அன்புக்குரியவர்கள், மிக நெருங்கியவர்கள் புலம்புவதைக் கண்டாலும் திரும்ப வேண்டாம். பின்னால் பார்க்காதீர்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.

குறைந்தது ஓர் ஆயிரம் வாலிபர்களின் பலியையாவது இந்தியா வேண்டி நிற்கிறது- வாலிபர்களையே தவிர மிருகங்களையல்ல என்பதை மனத்தில் கொள்ளுங்கள். இறுகிப்போன உங்கள் நாகரீகத்தை உடைத்தெறிய இறைவனாலேயே கொண்டு வரப்பட்டுள்ள கருவியாக இருந்து வருகின்றது ஆங்கிலேயர் அரசாங்கம். அந்த ஆங்கிலேயர் காலூன்ற இடம் அளிக்க உதவிய முதல் மக்களைத் தந்தது சென்னைதானே?

அந்தச் சென்னை இப்போது எத்தனை பேரைத் தரத் தயாராக உள்ளது? சுயநலமற்றவர்களான, முழு ஆற்றலுடன் பணி செய்யவல்ல, ஏழைகளிடம் அனுதாபம் கொள்கின்ற, பசித்துக் கிடப்பவர்களின் வாய்க்குச் சோறு தருகின்ற, பொதுமக்களுக்கு அறிவுக்கல்வி தருகின்ற- உயிரைக் கொடுத்தாவது இத்தகைய புதிய சமுதாய நிலையை உருவாக்கப் பாடுபடத் தயாராக உள்ள எத்தனை பேரை சென்னை தரப் போகிறது? உங்கள் மூதாதையரின் கொடுங்கோன்மையால் மிருக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களை மனிதர்களாக்குவதற்காக உயிர்போகும் வரையில் பாடுபடத்தயாராக உள்ள எத்தனை பேரைத் தந்துதவச் சென்னை ஆயத்தமாக உள்ளது?

உங்கள்,
விவேகானந்த.

(குறிப்பு: அமைதியாக, பரபரப்பின்றி உறுதியாக செய்யப்படுகின்ற செயலே வேண்டியது. பத்திரிகைப் பாராட்டுகளும், பெயரைப் பிரபலப்படுத்துகின்ற ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை- இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்)    
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புக்குரிய நண்பர்களே! 

விவேகானந்தர் அளசிங்கருக்கும் ஏனைய நண்பர்களுக்கும், 119 வருடங்களுக்கு முன் எழுதிய கடிதத்தின் கனல் இன்னும் அணையாமலும், இன்று நமக்கே நமக்காக எழுதப்பட்டதாகவும் தோன்றி எழுச்சியூட்டுகிறது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கிலேய அரசாங்கத்துக்குப் பதிலாக- தன் சொந்த நாட்டின் ரத்தத்தையே ருசித்துக் கொழிக்கும்  அரசியல்வாதிகளையும், செல்லரித்துப்போன அதிகாரிகளையும், சுயநலம் மிகுந்த நம்மையும் கொண்ட - இந்திய அரசாங்கம். மற்றபடி நம் கலாச்சாரத்தை- நம் வேர்களின் மகத்துவத்தை மறந்த- எடுத்துச் சொல்லும் தலைவர்கள் இன்றி வறண்ட பாலைவனமாகவே கண்களுக்குப் படுகிறது.

வெறும் வார்த்தைகள் எந்தப் பலனையும் தராது. செயல். அமைதியான முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் சுயநலமற்ற செயல் என்பதே விவேகானந்தரின் உரத்த குரல் சொல்லும் தொனி.

நாம் எங்கு இருக்கிறோம்? என்னவாக இருக்கிறோம்? இப்போதும் கூட விழிக்காது போனால் எதிர்காலம் என்னவாக இருக்கும்? 

நூறு வருடங்களுக்கு முன்னால் ஆயிரம் இளைஞர்கள் என்னும் கணக்கு இன்றைக்கு ஒரு லட்சம் என்று மாறலாம். ஒரு லட்சத்துக்குப் பின் ஒரு கோடி என்பது மிக எளிது. மிகப் பொறுமையாக, மிக உறுதியாக, வன்முறையற்ற, மொழி, ஜாதி, மதம் கடந்து ஒருமித்த வகையில் முன்செல்லும் விதத்தில் நம்மால் இயங்க முடியும். 

ஒவ்வொருவரும் நமக்கு நம்பிக்கையளிக்கும் ஒவ்வொரு பத்துப் பேரிடமும் பகிர்ந்து, இந்த வட்டத்தைப் பெரிதாக்க முடியும். வாழ்வதும், மடிவதும் ஒரு முறை. இறந்த பின்னும் வாழ்வது எப்போதோ ஓர் முறைதான். யாரோ வெகு சிலர்தான். அந்தச் சிலராய் நாம் இருப்போம். 

நமக்குத் தலைவர்கள் யாரும் தேவையில்லை. சுயநலம் தவிர்த்த, தியாகத்துக்குத் தயாரான நாம் எல்லோருமே தொண்டர்களாய் இருப்போம். சிறு பொறி ஊழித்தீயாக எழக்கூடிய சாத்தியம் இன்றைய தொழில்நுட்பத்தில் எளிதானதாக இருக்கையில்  விடாப் பிடியாய் நாம் செயல்படுகையில், காலம் நம் தலைவனைத் தேடிக் கொண்டுவரும்.    

ஒரு இந்தியனின் ஒட்டுமொத்தக் குரலாக- என் கிராமம், என் நகரம், என் மாவட்டம், என் மாநிலம் எனும் எல்லைகளைக் கடந்து - நம் குரல் ஒலிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

12 கருத்துகள்:

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! விவேகானந்தரின் சொற்களை தேடிபிடித்து தந்தமைக்கு நன்றி! அந்த விவேகனந்தரையே ஸ்தாபனப்படுத்தி பிழைக்க வழிவகுத்துக் கொண்டுவிட்டார்களே ஐய்யா!! குறைந்தது பத்து பேராவது இதனை படித்து திரிந்தினால் நல்லது! ---காஸ்யபன்.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் பின்னூட்டத்துக்கு நன்றி காஸ்யபன் ஐயா!

நமக்கு விவேகானந்தர் கூடத் தேவையில்லை. அவரின் வார்த்தைகளின் சுடர் மட்டும் நமக்குப் போதும்.

நமக்கு வேண்டியது எதிர்காலமே தவிர அவரை வைத்து யார் பிழைத்தால் நமக்கென்ன?

நம்மைப் போன்றவர்கள்தான் இதைச் செய்ய முடியும்.செய்ய வேண்டும்.

இன்னுமெத்தனை நாள்தான் சாக்கடையின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு தூர் வாராமல் மூக்கைக் கைக்குட்டையால் மூடியபடிக் கடப்பது.

இரசிகை. சொன்னது…

சார்! கலக்குங்க!

உமா மோகன் சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி,

உங்கள் முயற்சிக்கு முதல் வந்தனம்.

இதுபோல் தவிப்பில் இருக்கும் பலரும் ஒருங்கிணைக்கப் படாத புள்ளிகளாய்...

சிந்திப்போம்.நன்றி.

அன்பின்,
உமாமோகன்.

ஜி.எம்.பாலசுரமண்யம் சொன்னது…

அன்பின் சுந்தர்ஜி, என் டேஷ் போர்டில் இப்பதிவு கண்டு படித்தும் விட்டேன். உங்களுக்குத் தெரியும் நான் ஆரம்ப முதலே என் பதிவுகளில் என் ஆதங்கங்களையே என் பாணியில் எழுதி வருகிறேன். அந்தக் கருத்துக்ளுடன் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். பாரதி ,விவேகாநந்தர் போன்றோரின் கருத்துக்களை சிறு வயது முதலே படித்து அதனால்தானோ என்னவோ கொஞ்சமாவது அந்த தாக்கம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். நீங்கள் என் எழுத்துக்களை பரவலாக படித்து இருக்கிறீர்கள் என்பதால் இவற்றை எழுதுகிறேன். அவர்களது எழுத்துக்கே கிடைக்கத் தவறிய ஒப்புதல்கள் என் எழுத்துக்கா கிடைக்கப் போகிறது. .நல்ல எழுத்துக்களையும் சிந்தனைகளையும் தேடிப் பிடித்து வெளியிடும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

இசைக்கவி ரமணன். சொன்னது…

நிச்சயம் நாம் கூடி நம் பங்கைக் கொடுத்தேயாக வேண்டும்.

மிக அருமையான உணர்ச்சிப்பூர்வமான கடிதம் விவேகானந்தரது.

விரைவில் கூடி ஆலோசிப்போம்.

(தொலைபேசியில் முதலில் அழைத்து வாழ்த்துத் தந்த இசைக்கவி ரமணின் செய்தி.)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! விவேகானந்தரின் சொற்களை தேடிபிடித்து தந்தமைக்கு நன்றி! இவை இன்றைக்கும் பொருந்தும் வாசகங்கள்தான்.

நிலாமகள் சொன்னது…

சுயநலமற்றவர்களான, முழு ஆற்றலுடன் பணி செய்யவல்ல, ஏழைகளிடம் அனுதாபம் கொள்கின்ற, பசித்துக் கிடப்பவர்களின் வாய்க்குச் சோறு தருகின்ற, பொதுமக்களுக்கு அறிவுக்கல்வி தருகின்ற- உயிரைக் கொடுத்தாவது இத்தகைய புதிய சமுதாய நிலையை உருவாக்கப் பாடுபடத் தயாராக உள்ள //

இப்ப‌டிப்ப‌ட்ட‌ நூறு இளைஞ‌ர்க‌ளைக் கேட்ட‌ அவ‌ர் க‌ண்ட‌டைந்திருந்தால் ...?! ஆண்டுக‌ள் ப‌ல‌நூறு க‌ட‌ந்தாலும் எழுச்சியூட்ட‌க்கூடிய‌ வ‌லிமை அவ‌ர்த‌ம் சொற்க‌ளுக்கு நிர‌ம்ப‌ உண்டு.

அப்பாதுரை சொன்னது…

தூங்கத் தயாரானவனைத் தட்டி எழுப்பிட்டீங்க. என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா இருந்தா அதையும் சொல்லுங்க சாரே.

சுந்தர்ஜி சொன்னது…

”நீ விரும்பும் மாற்றமாக எதுவோ, அதை முதலில் உன்னிலிருந்து துவங்கு” என்ற காந்தியின் வாசகங்கள்தான் எனக்குத் தென்படுகின்றன அப்பாதுரை.

ஆகவே நம்மிடமிருந்து, நாம் கூடும் தெருக்களில் இருந்து நம் போன்றோர் பொது உபயோகங்களில் நமது அக்கறை, சுற்றுச் சூழல் பராமரிப்பு, பிறருக்குத் தேவையான சட்ட உதவிகளுக்கு சட்ட மையம் மூலமாக உதவிகள் செய்தல்,மருத்துவ வசதி-நோய் குறித்த விழிப்புணர்வு, வறுமையானவர்களுக்குக் கல்வி பயில்வித்தல், திறமையுள்ளவர்களுக்கு வங்கிகள் மூலமாக நிதி உதவி பெற்றுத் தருதல், ஜாதி, மதங்களின் பெயரால் எல்லாக் கட்சிகளாலும் சுரண்டப்படுவதை அறிவுறுத்தல், புதிய கண்டுபிடிப்புக்களைத் தேடியடைந்து ஊக்குவித்தல்,லஞ்சம்-ஊழல்- அளவற்ற குடி போன்றவைகளுக்குத் துணை போவதால் உண்டாகும் ஒட்டுமொத்த சீரழிவை விடாமல் பிரச்சாரம் செய்தல் போன்றவற்றைத் துவக்கமாகவும், தொடர்ந்தும் செய்து மக்களுடன் நம் கருத்துக்களை இணைக்கவும், அவர்களையும் நம்முடன் இணைத்துக்கொள்வதும் சாத்யமாகும் என நினைக்கிறேன்.

இதுதான் முதல் படி எனவும்,இதற்கடுத்த படியை அந்த உண்மையான இயக்கமே கொண்டு செல்லும் எனவும் நம்புகிறேன்.

உங்களுக்குள் தோன்றும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

பாதி படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு குற்ற உணர்ச்சி மனதை தாக்கியது. இத்தனை வருட மாகியும் . நிலைமை இன்னும் மோசமாகித் தானே போயிருக்கிறது. விவேகானந்தரின் கனல் வாட்டுகிறது.

vasan சொன்னது…

(குறிப்பு: அமைதியாக, பரபரப்பின்றி உறுதியாக செய்யப்படுகின்ற செயலே வேண்டியது. பத்திரிகைப் பாராட்டுகளும், பெயரைப் பிரபலப்படுத்துகின்ற ஆர்ப்பாட்டங்களும் தேவையில்லை- இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்)

இதைக் குறித்துக் கொள்ள‌த் த‌வ‌றிய‌தில் தான் அண்ணா ஹ‌சாரேவும், கூட‌ங்குளம் உதய‌க்குமாரும் இந்த‌ நிலைக்கு (ச‌ரியான‌ காரிய‌மாயினும்) ச‌ரிய‌க் கார‌ண‌மோ!!
இந்த‌த் தீர்க்க‌தரிசிக‌ளான‌, பார‌தியையும், விவேக‌ான‌ந்த‌ரையும் இள‌மையிலேயே இழ‌ந்த‌து ஒவ்வொரு இந்திய‌னின் துர‌திர்ஸ்ட‌ம் த‌விர்த்து வேறு என்ன‌ கார‌ண‌மிருக்க‌ முடியும்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...